உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக நீர் திறக்க வேண்டும் – திருமுருகன் காந்தி

உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான 58 கிராம பாசன கால்வாயிலிருந்து உடனடியாக நீரை திறந்துவிட்டு அம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வேண்டும் எனவும், வைகை அணையின் நீர்த்தேக்க அளவை குறைத்து நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்தி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் அக்டோபர் 26, 2025 அன்று தனது சமூகவலைதளத்தில் பதிவு செய்தது.

இந்த செய்தியை நீங்கள் அறிவீர்களா என தெரியவில்லை..

உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான பாசனத் திட்டம் 58 கிராம பாசன திட்டம். வைகை அணியிலிருந்து 67 அடிக்கு மேலாக தேங்கும் நீரை இக்கால்வாய் வழியாக வெளியேற்றுவதன் மூலம் 58க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயம் வளர்ச்சியடைகிறது, நிலத்தடி நீர் உயர்கிறது, இதனால் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் வைகை அணையில் இந்த உயரத்தை கொள்ளளவு அடிக்கடி எட்டாது. மிகக்குறைந்த அளவு நீர் இந்த கால்வாய் வழியே சென்றாலும் உசிலம்பட்டி பகுதிகள் வளம் பெற்றுவிடுகின்றன. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. மழைக்காலத்தின் உச்சத்தில் இதுபோல நீர்வெளியேற்றப்படுகிறது. அச்சமயத்தில் மழைக்காலம் என்பதால் கிட்டதட்ட அனைத்து வானம்பார்த்த பூமியும் மழைநீரால் வளம்பெற்று விவசாயம் நடந்துவிடுகிறது. இருந்தும், இக்கால்வாய் நீர்கிடைத்தால் தமது கண்மாய்களை அம்மக்கள் நிரப்பிக் கொண்டுவிடுவர். இதனால் நீண்ட காலம் தாக்குப்பிடித்து மேலும் ஒருபோகம் விவசாயம் காணமுடியும் எனும் நிலை.

இந்த 58 கிராம கால்வாய் திட்டத்தை 18 ஆண்டுகளாக சிறிதுசிறிதாக ஆமை வேகத்தில் பல ஆட்சிகள் மாறி செய்து முடித்தார்கள் தமிழக திமுக-அதிமுக ஆட்சியாளர்கள். ஆனால் இந்த தண்ணீரால் நலமடையும் மக்கள் வாழ்வாதாரம் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் கூர்தீட்டப்படவில்லை. வானம்பார்த்த பூமியை விட்டு வெளியேறிச் சென்றே வேலை பார்க்கும் நிலை இம்மக்களுக்கு. இந்த நிலையை இந்த கால்வாய் மாற்றிவிடும்.

70 அடி எனும் அளவில் வைகை அணையின் உச்சபட்ச கொள்ளளவு இருக்கும் எனும் நிலையில், 67 அடி கொள்ளளவு எனும் நிலை அடைந்தால் தான் நீர் திறப்பு நடக்குமென்றால் இந்த கால்வாயால் என்ன பயன்? மேலும் கடைமடை பகுதிகள், மேலூர் உள்ளிட்ட பாசனப்பரப்புகளுக்கான கண்மாய்கள் நிறைந்த பின்னரே இப்பகுதியில் நீர்திறப்பு நடக்கிறது. அதுவும் தொடர்ந்து போராட்ட அழுத்தம் நடந்தால் மட்டுமே திறப்பு நிகழ்கிறது. திமுக அரசு இக்கால்வாய் குறித்து கடந்த 4 ஆண்டுகளில் உரிய ஆய்வு செய்து கொள்கைத்திட்டத்தை வடிவமைத்திருக்க வேண்டும். இதுவரை நடக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வைகை கொள்ளளவு போதிய உயரத்தை அடைந்தாலும் ராமநாதபுர பாசனப்பகுதிகளுக்கான கண்மாய் நிறைந்த பின்னரே 58 கால்வாய் திறக்கப்படும் என்றார்கள். ஆனால் மேற்கு தொடர்ச்சி, முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துவிட்டது. இதனால் உபரிநீர் திறக்கப்படுகிறது. கொள்ளளவும் போதிய உயரத்தை அடைந்துவிட்டது. ஆயினும் 58 கால்வாய் திறந்தபாடில்லை. இச்சமயத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உசிலம்பட்டி சுற்றுவட்டார கிராமமக்களின் வாழ்வாதாரத்திற்கான பாசன திட்டத்தை உறுதி செய்யும் வகையில் கொள்கை முடிவெடுக்க வேண்டும். பொதுப்பணித்துறைக்கு முறையான வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். கடந்த ஆண்டும் இதற்காக நடந்த போராட்டங்களை கவனிப்பவர்களுக்கு புரியும். இவ்வாண்டில் கடந்த ஆகஸ்டு 1ம் தேதியே வைகை அணையின் கொள்ள்ளவு 68 அடியை எட்டினாலும் குறைந்தளவு நீர்கூட இக்கால்வாயில் இன்றளவும் திறக்கப்படவில்லை. 2025 ஆகஸ்டு முதல் 24 அக்டோபர் 2025 வரையிலான வைகையின் கொள்ளளவு 67 அடிக்கும் மேலாக இருந்தும் நீர் திறக்கப்படவில்லை. 58 கிராம கால்வாய்க்கான வழிகாட்டுதல் கொடுக்கும் அரசு உத்தரவு என ஏதுமில்லாமல் இப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

இச்சிக்கல் குறித்து இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களை சென்று மே17 இயக்க தோழர்கள் சந்தித்தார்கள். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். 58 கிராம பாசன கால்வாய் சங்கத்தின் செயலாளர் மதிப்பிற்குரிய தோழர்கள் சிவப்பிரகாசம் அவர்களையும், பொருளாளர் செந்தில் அவர்களை நானும் மே17 இயக்க தோழர்களும் நேரில் சந்தித்தோம். இக்கால்வாய் குறித்து விரிவான அறிக்கைகளையும், 10 ஆண்டுகால போராட்ட விவரங்களையும் எடுத்துரைத்தனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சி , இயக்க பொறுப்பாளர்களுடன் மே17 இயக்கமும் கைகோர்த்து போராடும். பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மூத்த தலைவர் அய்யா கதிரவன் அவர்கள் மற்றும் இக்கோரிக்கைக்காக குரல் கொடுத்த அனைவரோடும் மே17 இயக்கம் கைகோர்த்து களம்காணும்.

உசிலம்பட்டி சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிறக்க இத்திட்டத்தின் மீதான மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு, பாசனத்தை அதிகரிக்கும் வகையில் நிரந்தர அரசு வழிகாட்டுதல் உத்தரவையும் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளுக்காக மே பதினேழு இயக்கம் வரும் நாட்களில் விரிவான களப்போராட்டத்தை அறிவிக்கும். போராடும் அப்பகுதி மக்களுடன் துணை நிற்கும்.

பெருங்காமநல்லூர் எழுச்சிக்காலம் தொட்டு அடிப்படை உரிமைகளுக்காக போராடும் உசிலம்பட்டி மக்களின் சனநாயகக் கோரிக்கைகளை வலுப்படுத்த அனைவரும் குரல் கொடுப்போம்.

*திருமுருகன் காந்தி*

மே பதினேழு இயக்கம்

26-10-2025

https://www.facebook.com/share/v/1DLzfaqWVL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »