
உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் உமர்காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோரின் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணை வழங்காமல் விசாரணை கைதிகளாக வைத்திருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த கேள்விகளை கேட்காமலும், திருப்பரங்குன்ற விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதித்து பற்றியும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் சனவரி 7, 2026 அன்று பதிவு செய்தது.
தோழர்கள் உமர்காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோரின் பிணையை மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். கிட்டதட்ட 5 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் மீதான குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல், நீதிமன்ற விசாரணைக் கைதிகளாக வைத்திருப்பதைக் குறித்து எவ்வித வெட்கமும் இந்திய நீதிமன்றங்களுக்கு இல்லை. வழக்கு விசாரணை தொடங்கவும் இல்லை, இவர்கள் குற்றவாளிகளென சாட்சிகளைக் கூட விசாரிக்கவில்லை. இவர்கள் மீது மோடி அரசின் குற்றச்சாட்டுகளை வைத்து மட்டுமே உச்ச நீதிமன்றமே பிணை வழங்காமல் தண்டிக்குமெனில் இந்தியாவில் நீதித்துறை செத்துவிட்டதென அர்த்தம். இந்த நாடு குடியரசு நாடாக சொல்லிக் கொள்வதற்குரிய தகுதியை இழந்துவிட்டது.
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை ஆகியோரின் சட்டவிரோத அடக்குமுறையிலிருந்து சாமானிய மக்களை பாதுகாக்க வேண்டியது நீதித்துறையின் கடமை.
ஆனால், சாமானியன் மீதான வன்முறையை அங்கீகரித்து நீதியை மறுத்து, வெள்ளையன் ஆட்சியை விட மோசமான அடக்குமுறையை நடத்துகிறது.
இதைப்போல மோசமான தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறான இடத்தில், இந்துத்துவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தீபம் ஏற்ற அனுமதித்து அராஜகத்திற்கு வழிகோலியுள்ளது மதுரை உயர்நீதிமன்றம். மதவாத ஆற்றல்களுக்கு துணைபோகும் வேலையை வெட்கமின்றி நீதிமன்றம் செய்துள்ளது. இரு சமூகங்களுக்கிடையே பகையை தூண்டிவிடும் வழக்குகளை இந்த தீர்ப்பின் மீது ஏவமுடியுமெனும் அளவில் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்து-முஸ்லீம் மக்களிடையே சண்டையை மூட்டிவிட முயலும் மதவாத குண்டர்களுக்கு வெட்கமின்றி மதுரை நீதிமன்றம் ஆதரவாக செயல்பட்டுள்ளது.
நீதிமன்றங்களைக் காட்டிலும் தமிழ்ச்சமூகம் பழமையானது, பன்மைத்துவமானது, மதச்சார்பற்றது. இந்த தீர்ப்புகள் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படும். தமிழர்களுக்கிடையே ஒற்றுமையை மதரீதியாக சிதைக்கும் மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை புறந்தள்ளி, மக்களின் ஒற்றுமைக்கு குரல்கொடுக்க ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.
நீதிமன்ற வன்முறையை எதிர்கொள்ளும் காலத்தில் வாழ்கிறோம் நாம்.