இன்று பாசிசத்தின் மூலக்கூறுகள் என பல அடையாளங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் “இனப்படுகொலை, இன அழிப்பு மற்றும் இன ஆக்கிரமிப்பு” போன்றவற்றை மிகவும் ஆபத்தானவையாக நாம் கருத வேண்டும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு அல்லது இன அடையாளங்களை ஆக்டோபஸ் போல் சூழ்ந்து கொள்ளும் பாசிசம், அதை சில நாட்களில் சிறிது சிறிதாக விழுங்கிவிடும். இதைப்போன்றே மணிப்பூர் வரலாற்றில் நாடோடிகளாக உள்நுழைந்து அங்கிருந்த பழங்குடி சமூகத்தை கைப்பற்றிய பார்ப்பனியத்தை விவரிக்கும் கட்டுரை இது.
மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மியான்மருடன் (பர்மா) சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரு மாநிலம். ஒரு புறம் செல்வமும் பகட்டும் நிறைந்துள்ள அதன் நீண்ட வரலாறு, மறுபுறம் துக்கம் நிறைந்தது. வடகிழக்கு மாநிலங்களின் பொதுக்குணமான இயற்கை வளத்தைக்கொண்ட மணிப்பூர் மாநிலம், பல்வேறு காலகட்டங்களில் வந்த பல இனக்குழுக்களால் கட்டமைக்கப்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் கிழக்கு (நோங்போக் ஹராம்) மற்றும் மேற்கு (நோங்சுப் ஹராம்) ஆகிய இரண்டு திசைகளிலிருந்தும் மக்கள் மணிப்பூருக்கு வந்து குடியேறியுள்ளனர். கிழக்கிலிருந்து வந்த மக்கள் ‘நோங்போக் ஹராம்’ என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் ஆவா (மியான்மரேஸ்), கபாவ் (ஷான்ஸ்), காக்கி (சீனர்கள்), பாங் (மாவோ ஷன்ஸ்) போன்ற மங்கோலாய்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். நோங்போக் ஹராம் மக்களின் கூற்றுப்படி, இம்மக்கள் கபாவ், சென்பி மற்றும் காகி (சீனா) போன்ற பகுதிகளிலிருந்து கி.பி. 663-763 காலக்கட்டத்தில் மணிப்பூருக்கு நாடோடிகளாக வந்துள்ளனர்.
மேற்கில் இருந்து வந்த மக்கள் ‘நோங்சுப் ஹராம்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் இந்திய-ஆரிய இனங்களான பாமன் (பிராமன்), க்ஷேத்ரிமயம், லைரிக்யெங்பாம், மெய்டி பங்கல் (இஸ்லாமியர்), தகேல் (திரிபுரி), அசாமி, மயங்க் (கச்சாரி) போன்ற பல இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். மணிப்பூரில் பூர்வகுடிகள் வழங்கிய ஆதாரங்களின்படி திங்கோன்லிக்மாபா என்ற மன்னன் (கி.பி. 891) குமானின் அரசராக இருந்தபோது மயங்க் இனத்தவர் (அந்நிய நாட்டினர்) மணிப்பூருக்குள் வந்திருக்கின்றனர்.
மெய்டி மக்களின் “சனாமாஹி” வழிபாடு
15ஆம் நூற்றாண்டில் வைணவ இந்து மதத்தின் நுழைவுக்கு முன்பு மெய்டி மக்கள் ‘சனாமாஹி’ என்கிற பழங்குடி வழிபாட்டு முறையை பின்பற்றி வந்துள்ளனர்.
“சனாமாஹி” என்பது முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மூதாதையர் வழிபாட்டு முறையாகும். சனாமஹி நூல்கள் மெய்டி மொழியில் எழுதப்பட்டவை. இவை “புயா” என்று அழைக்கப்படுகின்றன.
15ஆம் நூற்றாண்டின் ‘கியாம்பா’ என்ற மன்னரின் ஆட்சியின் போதுதான் “வைணவ இந்து” மதம் மணிப்பூருக்குள் கால்பதிக்கிறது. மன்னர் கியாம்பா அண்டை நாட்டு அரசன் கெகோம்பாவுடன் நட்புறவை ஏற்படுத்துகிறார். அரசன் கெகோம்பா கியாம்பாவுக்கு கல் சிலை ஒன்றை பரிசாக அளிக்கிறார். (இந்த சிலை பின்னாட்களில் விஷ்ணுவின் சிலையாக பார்ப்பனர்களால் மாற்றிக் கூறப்பட்டது.)
இந்த சிலைக்கு வழிபாடு செய்யும் பார்ப்பனர்களை தேடும் பணியை கியாம்பாவின் நிர்வாகிகள் மேற்கொண்டனர். சில பார்ப்பனர்கள் இம்பால் ஆற்றின் பௌனம் என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து அரசரிடம் அழைத்துச் சென்றனர் அந்த நிர்வாகிகள். பார்ப்பனர்கள் அந்தச் சிலையை ‘விஷ்ணு பகவான்’ என்றும் இந்துக்களின் உச்சக் கடவுள் என்றும் கூறினர். இதை நம்பிய மன்னர் கியாம்பா அந்தப் பார்ப்பனர்களிடம் விஷ்ணுவின் வழிபாட்டை ஒப்படைத்தார்.
இதன் விளைவாக, மன்னரின் அரண்மனையில் விஷ்ணு வழிபாடு வழக்கமாக தொடங்கியது. மேலும், லாமங்டாங்கில் எனும் இடத்தில் (இன்று “பிஷ்ணுபூர்” என்று அழைக்கப்படுகிறது.) ஒரு விஷ்ணு கோயில் கட்டப்பட்டது. இப்படி விஷ்ணு வழிபாடு நீடித்தாலும், மன்னர் இந்த புதிய இந்து மத நம்பிக்கையில் ஈடுபடவில்லை. கி.பி.1635ல் காகெம்பாவின் ஆட்சியின்போது (1597-1652) ஆண்டுதோறும் நடைபெறும் படகுப் போட்டிகளில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் விஷ்ணுவின் படத்துடன் ஒரு தனி படகு ஒதுக்கப்பட்டது. (கடவுள் விஷ்ணு இந்த படகுத் திருவிழாவை காண்பார் என்றும் கூறப்பட்டது.)
கி.பி.1516ல் (லாம்கியம்பா ஆட்சியில்) செய்தரோல் கும்பபா என்ற பார்ப்பனர், தெகாவோவிலிருந்து மணிப்பூருக்கு வந்தார். மணிப்பூருக்கு பார்ப்பனர்கள் வந்ததற்கான முதல் பதிவு இதுவே. இதன்பின் பார்ப்பனர்கள் மணிப்பூருக்கு சிறு குழுக்களாகவும் அதனையடுத்து சிறிதுகாலத்தில் அலை அலையாக இடம்பெயரத் தொடங்கி இருக்கிறார்கள். மெய்டி பெண்களை மணந்த இந்த பார்ப்பனர்களின் வழித்தோன்றல்கள், “மெய்டி பாமன்கள்” (மணிப்பூரி பார்ப்பனர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு, கிழக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து எட்டு பார்ப்பன குடும்பங்கள் மணிப்பூருக்குள் நுழைந்த நுழைவாயில் ‘பாமன் குந்தோக்லோன்’ என்று குறிப்பிடப்படுகிறது. அரிபம் விஷ்ணு லட்பம், அரிபம் சகோல் லை லட்பம், அரிபம் டம்பக் லை லட்பம், சாமுராய் லட்பம், சங்க்லக்பம், ஹிடாங்மேயும், ஹிடாங்மேயும், கோங்பிரைலட்பம், தொங்ககேபம் என்று அவர்கள் வணங்கிய தெய்வங்களின் அடிப்படையில் அவர்களுக்கு குடும்பப்பெயர்கள் வழங்கப்பட்டன.
பார்ப்பனர்கள் அறிஞர்களாகக் கருதப்பட்டு மணிப்பூரிகளின் வாழ்க்கை முறையில், குறிப்பாக ஜோதிடத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக ஆட்சியாளர்கள், பார்ப்பனர்களை நிர்வாக மற்றும் மத விடயங்களில், குறிப்பாக சடங்குகளை நிறைவேற்றும் பணிகளில் அமர்த்தினர். இவ்வாறு மெய்டி இன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே மதம் இந்து மதம் (குறிப்பாக, வைணவ பிரிவு). இவ்வாறு பார்ப்பனர்களின் இடப்பெயர்வு காரணமாக மணிப்பூரில் (ஆரிய-பார்ப்பன) ‘இந்து’ வழிபாட்டு முறை ஊடுருவியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
18ஆம் நூற்றாண்டில் ஆரிய வம்சாவளியும் மற்றும் அதன் அடையாளங்களும் மெய்டி இனமக்கள் மீது முழுவதும் திணிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக பழங்கால மெய்டி மக்களின் களஞ்சியமான புயா எழுத்துக்கள், பழங்கால மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் தேய ஆரம்பித்தன.
1715ஆம் ஆண்டில், மெய்டி அரசர் கரிப்னிவாஸ் (கி.பி.1709-1748) ஆட்சியின் போது ராமர் வழிபாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. குரு கோபால் தாஸ் தலைமையிலான அஹோம் அரச சபையிலிருந்து 39 பார்ப்பனர்கள் குழு மணிப்பூர் அரசவைக்கு வந்தது. மெய்டி மக்கள் சனாமாஹி மதத்திலிருந்து இந்து வைணவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர். 1717ஆம் ஆண்டில், கரிப்னிவாஸ் அவரது ஆதரவாளர்கள் பலருடன் இந்து வைணவ மதத்திற்கு மாறினார். பின்னர், அதை அரசு மதமாகவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து சனாதன சாதிய பாகுபாடு இழிவுகள் மணிப்பூருக்குள் நுழைந்தது.
ஒரு பார்ப்பன மதகுருவின் ஆலோசனையின் பேரில் மன்னர் கரிப்னிவாஸ், மெய்டி எழுத்துக்களால் ஆன புத்தகங்களை தீயிட்டு எரிக்க உத்தரவிட்டார். கி.பி.1780ல் மன்னர் பாக்யச்சந்திராவின் ஆட்சியின் போது, வைணவ வழிமுறை அதன் உச்சத்தை எட்டியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் கம்பீர் சிங் ஆட்சியில் வைணவம் மேலும் கோலோச்சியது. அதுவரை ‘மீத்ராபக்’ மற்றும் ‘காங்லீபக்’ போன்ற பழங்குடி பெயர்களால் அழைக்கப்பட்ட மாநிலம் சமஸ்கிருதப் பெயரான ‘மணிப்பூர்’ என்று வழங்கப்படத் தொடங்குகிறது. அந்நிலத்தின் பண்பாட்டு பண்டிகைகள் இந்து பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டன.
பார்ப்பனர்களுக்கு அரச ஆதரவு இருந்தபோதிலும், மெய்டி மக்களின் நம்பிக்கையை முழுமையாக வைணவத்திற்கு மாற்ற முடியவில்லை. மெய்டிகள் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஒவ்வொரு வீட்டிலும் பழங்குடி கடவுளான சனமாஹிக்கு ஒரு இடம் இருந்து வந்தது.
இவ்வாறு கி.பி.15 முதல் 19ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் குடியேறிய பார்ப்பனர்களால் இத்தகைய பண்பாட்டு ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. இப்படியாக ஆரிய பார்ப்பனீய சனாதனம் வேரூன்றிய நிலமாக மணிப்பூர் மாறிய பிறகு, பிற பழங்குடிகளுடனான உள் முரண்கள் பார்ப்பனர்களால் கூர்மை படுத்தப்பட்டது.
மணிப்பூரில் மலைவாழ் பழங்குடி மெய்டி – கூகி இன மக்களிடையே பல காலமாக வளர்த்து வந்த விரோதத்தை அடித்தளமாக கொண்டு இன்று இன அழிப்பு வேலையை இந்திய பார்ப்பனீயம் பாஜக அரசு அரங்கேற்றி வருகின்றது. இதன் விளைவாக, அடுத்த பல தலைமுறைகளுக்கு இரு பழங்குடிகளுக்கிடையே சமரசம் உருவாகாதவாரு விரோதம் வேரூன்றப்பட்டுவிட்டது. (மணிப்பூர்- பாஜக சனாதன மாடல் கட்டுரை வாசிக்க. )
மணிப்பூரின் வரலாற்றில் ஆரிய பார்ப்பனியத்தின் பங்கை தமிழ்நாட்டு வரலாற்றுடன் தொடர்புப்படுத்தி நோக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் உள்ளோம். கி.பி.7ஆம் நூற்றாண்டு பிறகான காலக்கட்டத்தில் ஆரிய பார்ப்பனர்கள் தீபகற்ப இந்தியாவிற்குள் நுழைந்தனர். பல்லவர் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தின் அருகில் நகர்ந்த ஆரிய பார்ப்பனர்கள், 10ம் நூற்றாண்டு வாக்கில் சோழர்கள் ஆட்சியில் அரசனுக்கு அடுத்த இடத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக அமர்ந்தனர். இதன்மூலம் தமிழர்களின் சைவம் மற்றும் மாலியம் (வைணவ) சமயங்களை ஆக்கிரமித்து தமிழ் மொழியை கோயில் கருவறையைவிட்டு வெளியேற்றி சமஸ்கிருத மந்திரங்களை முழுவதுமாக புகுத்தினர். அன்று தொடங்கிய ஆரிய பார்ப்பன ஆக்கிரமிப்பின் காரணமாக இன்றுவரை தமிழர் கடவுள்களுக்கு தமிழர்களுக்கு தெரியாத சமஸ்கிருத மொழியில் பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்து வருகின்றனர்.
பார்ப்பனீயம் இயல்பாகவே ஒரு சமூகத்தின் அதிகார மையத்தின் மீது ஒட்டுண்ணியாக தன்னை அமர்த்திக் கொண்டு; பிறகு அச்சமூகத்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்று விழுமியங்களை உண்டு செரித்து அவற்றை ஆரிய-பார்ப்பன கூறுகளாக மீண்டும் வெளிப்படுத்தும் தன்மையுடையது. தமிழர்களின் விழுமியங்களாக போற்றப்படும் திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோருக்கு சனாதன காவி உடை அணிவிப்பதும் இந்த போங்கில் தான். இன்று தமிழர்களின் அறநெறி, வழிபாடு, பண்பாடு கூறுகளை விழுங்கி ஆரிய பார்ப்பனீயம் வலுவாக காலூன்றி நிற்கிறது.
இதனையடுத்து, தமிழர்களிடையே “ஆண்ட பரம்பரை” பெருமை பேசி சாதிவெறி மோதல்களை வளர்ப்பதும்; பிற மதம் தழுவிய தமிழர்களை தேச விரோதிகளாக கட்டமைப்பதும்; தமிழ் நாடு வாழ் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் சொந்த திராவிட இன மக்களை வந்தேறிகள் என்று தமிழர் எதிரிகளாக திரிப்பதும் என தமிழர்களிடையே பல்வேறு உள் முரண்களை பார்ப்பனீயம் திட்டமிட்டு கூர் தீட்டி வருகின்றது. இந்த உள்முரண்களை பயன்படுத்தி மணிப்பூரை போலவே தமிழ்நாட்டிலும் பார்ப்பன பாஜக கூட்டம் கலவரத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை வேகமாக வளர்த்து வருகிறது.