மணிப்பூர்: பா.ஜ.க.வின் சனாதன மாடல்

manipur kuki meiti violence

அரசியல் ஆதாயத்துக்காக குக்கி – மெய்டி இனக் குழுக்களிடையே பிரிவினையை எற்படுத்தி   கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல்  மணிப்பூர் கலவரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது பாசிச பா.ஜ.க. அரசு. பாசிச கட்சிகள் ஒர் இடத்தில் தன் அரசியல் ஆதிக்கத்தை நிருவ விரும்பினால், அவர்களின் சனாதன கொள்கைகளை பயன்படுத்தி, அங்கே உள்ள மக்களுக்குள் பிரிவினையை எற்படுத்தி அதன்மூலம் தன் ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்கின்றன. இவர்களின் இந்துத்துவ தர்மத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் யாராயினும் அவர்கள் தங்கள் எதிரிகள் என்றும் இந்தியா இந்துக்களுக்கானது என்றும் தீவிர பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 

ஒரு மாதத்திற்கு மேலாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரத்தினால் எரிந்துக்கொண்டிருக்கிறது. பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் பலியாகி உள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். கிறிஸ்துவ தேவாலயங்கள் குறிவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. குக்கி இன மக்களின் தேவாலயங்கள் மட்டுமல்ல, மெய்டி இனக் கிறிஸ்துவர்களின் 247 தேவாலயங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சம்மந்தப்பட்ட தேவாலயங்களின் நிர்வாகிகளிடம் “இனி திரும்பி வர போவதில்லை” என இந்துத்துவாதிகளால் கையெழுத்து வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. குக்கி இன மக்கள் அளித்த புகாரையும் எடுத்துக்கொள்ளாமல் காவல்துறை முழுவதுமே இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி – மெய்டி சமூகத்தினர் மட்டுமின்றி தமிழர்கள், நேபாளர்கள், ராஜஸ்தானியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில் இந்த கலவரத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகி அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நகரத்தை விட்டு வெளியேறி அண்டை நாடான மியான்மரில் தஞ்சமடைந்துள்ளனர். 

இந்து தேசியம் அமைக்க “இந்து மக்களுக்கு ஆபத்து” “இந்துக்களுடைய பண்பாட்டை முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அழிக்கின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ் , விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் முன்னெடுத்த இது போன்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு எழுதப்படாத சட்டமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இதே நோக்கத்துடன் தான் சிறுபான்மையினரான முஸ்லீம் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்க கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் இந்துத்துவாதிகளால் அரங்கேற்றப்பட்டது.  அதை வைத்து 1200க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதில் பெரும்பான்மையானோர் முஸ்லீம் மக்கள்.

2008ம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் நடந்த கலவரமும் இதனை அடிப்படையாக கொண்டதுதான். கிறித்தவர்களை குறி வைத்து 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டன, 5,600 வீடுகள் எரிக்கப்பட்டன, 54,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். குறைந்தபட்சம், 39 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 232 தேவாலயங்கள் அழிக்கப்பட்டன என ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான தேசிய மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, “கிறிஸ்துவ மதத்தை விட்டு விடுங்கள், நீங்கள் ஒரு இந்து என்று சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டு சொல்லியே கிறிஸ்துவர்களை தாக்கியுள்ளனர். இதே போன்ற வெறுப்பு பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்டதுதான் மணிப்பூர் கலவரமும் அரங்கேறி வருகிறது.

மலைப் பிரதேசமான மணிப்பூர், 30க்கும் மேற்பட்ட பழங்குடி இனக்குழுக்களின் பூர்வீகமாகும். 90% மலைப்பகுதியையும் 10% சமவெளி நிலப்பகுதியையும் (பள்ளத்தாக்கு) கொண்ட மணிப்பூரில் மலைபிரதேசமெங்கும் பழங்குடி மக்கள்தான் வசிக்கின்றனர். சமவெளி நிலப்பகுதியில் (பள்ளத்தாக்கு) பழங்குடிகள் அல்லாத மேட்டுக்குடியான மெய்டி இன மக்கள் வசிக்கின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மலைப்பகுதியில் உள்ள குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர்கள் சுமார் 43 சதவீதமாகவும், சமவெளி (பள்ளத்தாக்கில்) வசிக்கும் மெய்டி இன மக்கள் 57 சதவீதமாகவும் உள்ளனர்.

மணிப்பூரில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநிலத்தின் மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மெய்ட்டி சமூகத்தினருடைய அரசியல் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. இதன் காரணமாக, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மணிப்பூரின் பழங்குடி (பெரும்பாலும் நாகாக்கள் மற்றும் குக்கிகளால்) மக்கள் மீது ஒரு சந்தேக பார்வையுடனே இருந்துவந்துள்ளது.

இன்று மணிப்பூரில் நடந்துக்கொண்டிருக்கும் வன்முறைக்கு தூண்டுதலாக அமைந்தது என்பது 10 ஆண்டுகளுக்கு முன்னரே மெய்டி சமூகத்தினரின் “பட்டியலின பழங்குடி” அந்தஸ்துக்கான கோரிக்கையாகும். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மெய்டி மக்களின் கோரிக்கையை ஆளும் பாஜக இந்துத்துவாதிகள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணிப்பூர் மக்களை மதங்களாகவும் இனங்களாகவும் துண்டாடுகின்றனர் என்பது தான் இன்றைய மணிப்பூர் கலவரத்தின் அரசியல். மெய்டி மக்களின் கோரிக்கையை காரணம் காட்டி இப்படிப்பட்ட வன்முறையை நிகழ்த்துவதற்கு பின்னால் மற்றொரு திட்டமும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருந்து பழங்குடி கிராமவாசிகளை வெளியேற்றுவதற்காகவும் மெய்டி சமூகத்தினருடைய கோரிக்கையை பா.ஜ.க தலைமையிலான மணிப்பூர் அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.

குக்கி இன மக்கள் மீதான தன் வெறுப்புனர்வை மெய்டி மக்களிடம் விதைத்து மட்டுமின்றி மெய்டி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்த்து வழங்குவதன் மூலம் மணிப்பூரில் அனைத்து மக்களுமே பழங்குடி மக்களாகிவிடுவார்கள். பழங்குடிகள் என்று அங்கீகரிப்பதன் மூலம் பழங்குடிகளுக்கான பிரத்தியேக உரிமைகளை மேட்டுக் குடியினருக்கும் பங்கிட்டுத்தந்து பழங்குடிமக்களை ஒடுக்குவதே பா.ஜ.க வின் அரசியல் திட்டமாகும். 

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை குறிப்பாக 1700 க்கு முன்பு மெய்டி பிரிவு மக்கள் சனமாயி/மெய்டி என்ற மதத்தையே பின்பற்றி வந்துள்ளனர். அதன் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். சுமார் 1704 காலகட்டத்தில் வைணவ மத போதகர்களின் போதனைகளை ஏற்றுக்கொண்டு, அப்போது மன்னராக இருந்த சாராய்ரங்போ (Charairongba, 1697- 1709) வைணவத்தை தழுவி தனது பெயரையும் பீத்தாம்பர் சிங் (Pitambar Singh) என்று மாற்றிக்கொண்டார். “மன்னர் எவ்வழியே மக்களும் அவ்வழி” என மன்னரை பின்பற்றி மக்களும் வைணவ மதத்தையே தழுவினர். ஆனால், இச்சம்பவத்திற்கு முன்பிலிருந்தே மணிப்பூரில் இஸ்லாமிய மக்கள் இருந்துள்ளனர். 1993 பங்கல் மக்களுக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பங்கல் இஸ்லாமிய மக்கள் மெய்டி இந்துவாதிகளின் வன்முறைக்கு பலியாகினர்.

மணிப்பூர் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்பு மெய்டி சமூகத்தினர் ஒரு காலத்தில் பட்டியலின பழங்குடி (எஸ்.டி) சமூகத்தினராக இருந்தாகவும், அந்த அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மெய்டி வகுப்பை சேர்ந்தவர்களால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்டி சமூகத்தினர் பழங்குடி மக்கள் என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு மணிப்பூர் மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. வன்முறை நிகழ்வதற்க்கு முக்கிய காரணமாக அமைந்த இந்த தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றலாகி இப்போது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி முரளிதரன் ஆவார்.

பழங்குடி மக்கள் அல்லாதவர்களை பழங்குடி மக்கள் என அங்கீகரிக்க இந்த உத்தரவு அமைகிறது என பழங்குடித் தலைவரான தின்காங்க்லுங்க் காங்க்மேய் (Dinganglung Gangmei) அவர்களும், பழங்குடி மாணவர் அமைப்பும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர்.  இந்த உத்தரவினை எதிர்த்து பழங்குடி மக்கள் பெருந்திரளான ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மே 3 ஆம் தேதி 10 மலை மாவட்டங்களில் “ஆதிவாசி ஏக்தா மார்ச்” (பழங்குடியினர் ஒற்றுமை பேரணி) என்ற பழங்குடி மக்களும், மாணவர்களும் முன்னெடுத்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது உருவாக்கப்பட்ட  கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வன்முறை வெடித்து மோதல்கள் பல இடங்களுக்கு பரவியது. இரு தரப்பினரிடமும் பயங்கரமான அதிநவீன ஆயுதங்கள் உள்ளதாகவும் அசாம் ரைஃபில்ஸ் என்ற படைப் பிரிவினரிடமிருந்தும், காவல் நிலையங்களில் இருந்தும் துப்பாக்கிகளை பறித்து சென்றுள்ளனர் என்றும், அவற்றை மீண்டும் மணிப்பூர் அரசாங்கத்திடமே ஒப்படைத்து விடுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், துப்பாக்கிகளையும் பயங்கர ஆயுதங்களையும் மணிப்பூர் அரசே மெய்டி குழுக்களுக்கு வழங்கி உதவுகின்றனர் எனவும்; இந்த கலவரங்களுக்கு முக்கிய அடிப்படை காரணமாக இருப்பது மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த ராஜ்யசபை உறுப்பினர் சானா சோபா என்று பழங்குடி மக்கள் கூட்டமைப்பை  சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து பழங்குடியினரின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று தெரிவித்துள்ளார். மேலும், “நீதிமன்றத்திற்கும், மாநில அரசுக்கும் பழங்குடி அந்தஸ்த்து வழங்கும் அதிகாரம் இல்லை” என்று நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பழங்குடி மக்கள் “கஞ்சா” பயிரிடுகின்றனர், சர்வதேச போதை பொருள் மாஃபியாவுடன் தொடர்பில் உள்ளார்கள், தேசவிரோத செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் இவர்கள் அந்நியர்களின் மதத்தை பின்பற்றுபவர்கள் என பல வெறுப்பு பிரச்சாரங்கள் குக்கி இன மக்களுக்கு எதிராக பாஜக இந்துத்துவ கைப்பாவை ஊடகங்கள் கட்டமைத்து வருகின்றன. இது போன்ற பொய் பிரச்சாரங்களின் வெளிப்பாடாகவே மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் மாநில பார் கவுன்சிலின் பழங்குடிகளுக்கு எதிரான தீர்மானமும் விளங்குகிறது. இவற்றையே, மணிப்பூர் அரசு உச்ச நீதிமன்றத்தில் கலவரத்திற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, மணிப்பூருக்குள் ரோகிங்யா (இஸ்லாமியர்) மக்கள் ஊடுருவலை தடுக்க  அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக தான் இனக் கலவரங்களை ஏற்படுத்தி உள்ளனர். மெய்டி மக்களுக்கு பட்டியலின பழங்குடி (எஸ்.டி) அந்தஸ்த்து வழங்குவது இவர்களின் பிரச்சனை இல்லை என்று வன்முறைக்கான காரணத்தை மடைமாற்றி உள்ளது.

கலவரம் வெடித்து இருபது நாட்கள் கழித்து மணிப்பூர் வந்த உள்துறை அமைச்சர் அமீத்ஷா கூறியதாவது, “கலவரத்திற்கான காரணம் மணிப்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான். ஆகவே எந்த தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலை நாட்டுவோம்.” என்று தனது பாஜக கட்சியின்  வெறுப்பு பிரச்சாரத்தை கண்டிக்காமல் குக்கி இன மக்களிடம் 15 நாட்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஒரு மாதத்திற்கு மேலாக மணிப்பூர் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. தில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பாஜக அமைச்சர் தங்களுக்கு இழைத்த பாலியல் தொல்லைகளுக்கு நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை பற்றிய எந்தவித அக்கறையும் கவலையும் இல்லமால் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி சர்வதேச யோகா தின நிகழ்விற்க்கு தலைமை தாங்கி யோகா செய்து வந்தார்.

சூரசந்த்பூருக்கு அமித்ஷா வந்தபோது, பலர் மனித சங்கிலி அமைத்து, “எங்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும்”, “தனி நிர்வாகம் பெறும் வரையில் ஓயமாட்டோம்”, “மணிப்பூரிலிருந்து பிரிவது மட்டுமே உயிர்வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இருப்பினும், மணிப்பூரில் தங்கள் தேர்தல் அரசியல் ஆதாயத்திற்கு பழங்குடி அல்லாத மக்களை பழங்குடிகள்  ஆக்கும் வேலைகளை செய்வது தான் பா.ஜ.கவின் திட்டமாக உள்ளது. “வன்முறை வெடித்து நாடே பற்றி ஏரிந்து மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை, பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்.” அதற்காக பழங்குடி அல்லாத மக்களை  பழங்குடிகள் என்று சொல்வதற்கு பாஜக தயங்காது என்பது மணிப்பூர் கலவரத்தில் தெளிவாக தெரிகிறது.

மே 3, 2023 முதல் ஜுன் 5, 2023 வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மாநிலத்தில் இணைய முடக்கத்தை மேலும் ஜூன் 20, 2023 வரை மணிப்பூர் மாநில அரசு நீட்டித்துள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் வன்முறையால்  பாதிக்கப்பட்ட பகுதியில் இந்திய ராணுவம் ஜூன் 17 ஆம் தேதி தேசிய கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. மேலும், 144 வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை எத்தனையோ பிரச்சனைகள் இருப்பினும், ஒற்றுமையாக இருந்த மணிப்பூர் மாநிலத்தில் பாஜக கலவரம் உண்டாக்கி, அம்மக்களை இரு கூறுகளாக ஆக்கிவிட்டது. வரும்  2024 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க வெற்றி பெறுமானால், இந்தியாவை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் கலவர பூமியாக மாற்றி  பல கூறுகளாக உடைத்து, பங்கு பிரித்து விடும்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பிரிவினைகளை செய்து கொண்டிருக்கும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்சின்  பார்ப்பனிய சூழ்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் தேர்தல் அரசியல் வழியே பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »