‘விழாக்காலம்’ என்ற ஒரு அடைமொழியுடன் பெண்களை சமலையறைக் கைதிகளாக மாற்றும் பிற்போக்குத்தன சொல்லே இன்று நாம் பார்க்கும் ‘பண்டிகைக்கால கொண்டாட்டங்கள்.’ இந்த விழாக்களில் ஒன்பது நாட்களாக பெண்களை பரபரப்பாக வைப்பதோடு கொலு பொம்மைகள் பற்றியும் சுண்டல் வகைகளை பற்றியும் மட்டுமே பேச வைக்கிறது நவராத்திரி.
பார்ப்பனர் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இன்று மெல்ல பரவி, ஆன்மீக கருத்துருவாக்கங்களை மிக வேகமாக பெண்களிடத்தில் உருவாக்குகிறது. ஐம்பூத சக்திகளையும் தெய்வீகசக்தியையும் கொண்டு வருவதாக சொல்லி, பெண்களின் உடல் உழைப்பை உறிஞ்சும் விழாவாகவே செயல்படுகிறது.
நவராத்திரி விழாவை மைசூரில் ‘தசரா திருவிழா’ என மிகவும் கொண்டாடிவருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயிலில் ஒன்பது நாட்களாக பக்தர்கள் அம்மன் வேடமிட்டு கொண்டாடுவது வழக்கமாகி இருக்கிறது.
வடநாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா தமிழ்நாட்டில் நுழைந்து சில ஆண்டுகளே ஆகின்றன. 1970-களில் பார்ப்பனர்கள் வீட்டில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த பண்டிகை நடைபெறும் போது மற்ற சாதியினரை அழைத்து “பாருங்க, நாங்க கடவுள்களையை பொம்மையாக்கி படிகளில் உட்கார வைத்திருக்கிறோம்” என்று பெருமையாகப் பேசி, பாடல்களை பாடிக் கொண்டே கையில் விபூதி குங்குமமும், சுண்டலும் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். நம் தமிழர்களும் இதன் பின் உள்ள தந்திரம் அறியாமல் அப்பாவிகளாக சுண்டல் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள்.
ஆனால் காலம் செல்ல செல்ல இந்த பழக்கம் ஒன்பது நாட்களும் பிரம்மாண்டமாக, பார்ப்பன முலாம் பூசப்பட்ட தமிழ்ப் பண்டிகையாக மாறி விட்டது. தமிழ்நாட்டிலும், நம் அண்டை மாநிலங்களிலும் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்களூம் நவராத்திரி கொலு வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் பூசை செய்து, விளக்கு ஏற்றி வைக்கவண்டும். பெண்கள் விதவிதமான வளையல்கள் நகை அலங்காரங்களுடன், பட்டுப்புடவைகளுடன் பவனி வர வேண்டும். விதவிதமான சுண்டல், பலகாரங்கள் செய்து கடவுளுக்கு படைப்பது, காலை மாலை கோவிலுக்கு செல்வது, வீட்டை சுத்தப்படுத்தி பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது, விளக்கேற்றுவது, கடவுள் பாடல்களை பாடுவது போன்ற வேலைகளில் தங்களை தாங்களே நியமித்துக்கொண்டு சுழலுகின்றனர். ‘உண்மையில் பெண்கள் தங்கள் இல்லத்தை தூய்மையாக வைத்திருக்கும் இயற்கை குணத்தை, பக்தி என்ற போர்வையில் ஆன்மீகப் பழக்கமாக மாற்றுவதுதான்‘ இன்று பல வீடுகளில் நடைமுறை நிகழ்வாக இருக்கிறது.
வட இந்தியாவில் கொண்டாடும் இந்த பண்டிகையை தமிழ்நாட்டில் போட்டிப்போட்டு கொண்டு கொண்டாடுவதன் பின்னணியில் சில வணிக நோக்கங்களும் இருக்கின்றன. நடுத்தர வர்க்க மக்கள் இதை கொண்டாடுவதை ஒரு கௌரவ நிகழ்வாகவே பார்க்கத் துவங்கியுள்ளனர். ஒன்பது நாட்களும் ஆடை, நகைகள் வாங்குவதற்கு தங்கள் பொருளாதார நிலையையும் மீறி செலவு செய்யத் திட்டமிடுகின்றனர். மிகவும் எளிமையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு செலவு செய்வதை விட மூன்று/நான்கு மடங்கு செலவு செய்வதும் நிகழ்கிறது.
மேலும் பார்ப்பன பண்டிகைகளின் இலக்கு பெண்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பெண்களை இந்தக் கொண்டாட்டங்களில் அதிகளவு ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. வீட்டுவேலைகளில் சோர்ந்திருக்கும் பெண்களை ஈர்க்கவே கோவில்களில் இந்த ஒன்பது நாட்களிலும் பஜனைகள், பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனாலேயே அங்கு பெண்கள், பெண்குழந்தைகள் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிகிறது. பெண்கள் ஒருவருக்கொருவர் உரையாடும்போது, “நாங்க கொலு வச்சுட்டோம், நீங்க வைக்கலையா?” என்று ஏளனமாகப் பார்க்கும் பார்வை உருவாகி இருக்கிறது. இதனாலேயே முன்பு ஓரிரு வீடுகளில் மட்டுமே கொலு வைக்கும் வழக்கம் மாறி, இன்று ஓலை வேய்ந்த வீடுகளில் வசிக்கும் பெண்களும் இது போன்ற கொலு வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சரசுவதியை வழிபட்டால் கல்வி சிறக்கும், லட்சுமி வழிபாடு செல்வத்தை கொழிக்கும் என்ற வாய்ச்சொல்லில் மயங்கும் ஏழை குடும்பத்துப்பெண்கள், தனது குடும்பமும் செல்வ செழிப்புடன் வாழும் ஆசையில் மிக எளிதான இலக்காக மாறி விடுகிறார்கள். கல்வி, செல்வத்தை போல் வீரத்திற்கு ஒரு கடவுளையும் பார்ப்பனர்கள் பரப்பும் போது, “கணவனிடம் அடி உதை வாங்கும் போது இந்த வீரம் வெளிவராதது ஏன்?” என்பதை சிந்திக்க இந்தப் பெண்கள் தவறி விடுகிறார்கள். இத்தகைய பகுத்தறிவுக் கேள்விகளை ஆன்மீக கொண்டாட்டங்கள் மழுங்கடிப்பதால் தான் தந்தை பெரியார் “பக்தி வந்தால் புத்தி போய்விடும்” என்று கூறினார்.
சுண்டல், சர்க்கரைப் பெங்கல், தாமரை பூ வைத்து வழிபாடு செய்தால் நவராத்திரி தினங்களில் அம்மன் குழந்தைகள் ரூபத்தில் அவர்களின் வீட்டுக்கு வருவார் என்றும், இந்த “ஒன்பது நாட்களும் திருமணமான சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு தாலி கயிறு, பூ, மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற பொருட்கள் கொடுப்பதால் தானும் வாழ்நாள் முழுக்க தீர்க்க சுமங்கலியாகவே இருக்க முடியும் என்று சொல்லி பெண்களை எப்படி உளவியல் ரீதியாக கவரமுடியுமோ அதையே மையமாக வைத்து பரப்பப்பட்ட செய்திகளால் பெண்கள் இது போன்ற நவராத்திரி கொலு என்ற செய்முறை அடிமைத்தனத்திற்கு ஆளாகியுள்ளனர்” என்றே பார்க்கமுடிகிறது.
கொலுவில் அம்மன் முதல் எலி வரை அனைத்து பொம்மைகளும் இடம்பெறும். முதல் படி கொலுவில் தெய்வங்களைக் குறித்த பொம்மைகளும் இரண்டாம், மூன்றாம் படிகளில் அய்யர், மாமி, செட்டியார், வணிகர் பொம்மைகள் இருக்கும். அதற்கும் கீழே பழ வியாபாரி, கீரை விற்பவர், பானை செய்பவர் குறித்த பொம்மைகள் இருக்கும். மேலும் பழங்கள், காய்கறிகள், விளையாட்டு சாமான்கள், பிறகு பூங்கா, வீடு, கோழி, ஆடு, மாடு, நாய், பூனை, சிங்கம், மான், புலி, கரடி, குதிரை, யானை என அனைத்து விலங்கினங்களைக் கூட பொம்மைகளாக வைத்து இருப்பார்கள். ஆனால் மீன்விற்பவர், கறிக்கடை வைத்திருப்பவர், செருப்பு தைப்பவர், டெய்லர், சலவை தொழிலாளி, துப்புரவு தொழிலாளர், கழிவுநீர்தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் இடம்பெறுவதில்லை. இவ்வாறு ‘வர்ணாசிரமத்தின் சாதிய அடுக்குகளை காட்சிப்படுத்தி, அதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் நிகழ்வே கோலாகலமாக நடைபெறுகிறது‘.
இந்த நவராத்திரி கொலு பொம்மை விழாவில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை அழைப்பதில்லை. மேலும் இதில் ஆண்கள் பங்களிப்பு என்பது கிடையாது. ஆக இந்த பண்டிகைவிழா என்பது பெண்களை ‘பக்தி, மங்களகரம், குடும்பவிருத்தி, புண்ணியம்’ என பழைய பஞ்சாங்கங்களை சொல்லி மீண்டும் பழைமைவாதத்திற்குள் கொண்டு அடைக்கும் சனாதன செயல்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.
சமீபத்தில் கொடைக்கானலிலுள்ள தனியார் பள்ளிக்கு சென்ற ஆளுநர் ரவி, அங்குள்ள மாணவ- மாணவியரிடம் “எத்தனை பேர் கல்விக் கடவுளான சரசுவதியின் படத்தை படிக்கும் மேசையில் வைத்து உள்ளீர்கள்?” எனவும், இனிவரும் காலங்களில் படிக்கும் மேசையில் கடவுள் சரசுவதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” என்று கூறியிருக்கிறார். மேலும் சரஸ்வதி வந்தனம் பாடல், பள்ளியில் பாடப் பழக்கப்படுத்த வேண்டும் என பேசியுள்ளார். இந்த ’கருத்துக்களெல்லாம் மாணவர்களை அறிவியலிருந்து விலக்கி வைக்கும், சுயமாக சிந்தனையோட்டம் வரக்கூடாது என்கிற பார்ப்பனியத்தின் திணிப்பாக இருக்கிறது’.
பார்ப்பனியம் கற்பிதத்தில் கடவுளாக்கப்பட்டிருக்கும் சரசுவதிக்கும், படிப்புக்கும் என்ன சம்பந்தம்? சரசுவதி என்ன படித்திருக்கிறார்? எதாவது ஆசிரியர் வேலையாவது பார்த்துள்ளாரா? என்கிற கேள்விகளை மாணவிகள் கேட்டிருக்க வேண்டும். ”கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பெண்கள் படிக்காத போதும், குழந்தை திருமணம் நடக்கும் போதும், கைம்பெண் கொடுமைகள் நடக்கும் போதும், உடன்கட்டை ஏறும் போதும் என்ன செய்து கொண்டிருந்தார் சரசுவதி?” என்கிற கேள்விகளை எழுப்பும் சிந்தனைத் திறனையே வளர விடாமல், பார்ப்பனியம் பெண்களை அவர்களின் பண்டிகைக்குள் அழுத்திக் கொண்டிருக்கிறது.
“எந்த நாட்டில் போர் நடந்தால் என்ன, மக்கள் மாண்டால் என்ன, நம் வீட்டில் விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால் தெய்வ குற்றமாகிவிடும்” என்பதிலேயே பெண்களின் கவனம் குவிக்கப்படுகிறது. இத்தகைய பண்டிகைக் கொண்டாட்டங்களினால் பெண்கள் சமூக அரசியல் விவரங்களோ, பகுத்தறிவு சிந்தனைகளோ பெறாமல் ஆன்மீகத்திற்குள் மூழ்கும் நிலை ஏற்படும். இதனால் பெண்கள் தங்களை தாங்களே அடிமைபடுத்திக்கொள்ள பக்தி கொண்டாட்டங்கள் வழிவகுக்கும்.
இன்று திராவிட மண்ணில் சனாதனத்தை புகுத்தி அதை வெற்றி பெற வைக்க பார்ப்பனியத்தின் தூண்டிலில் மாட்டியிருப்பது இடைநிலை சாதியினர்தான். கடவுள் பெயரைச் சொல்லி பார்ப்பனர்க்கு பல்லக்கு தூக்கவும், சாதி என சொல்லி பிரிவினை செய்ததும், நமக்குள் நம்மை சண்டையிட வைப்பதும் தான் இந்துத்துவத்தின் வேலைத்திட்டமாக இருக்கிறது. இதனைக்கண்டு தான் பெரியார் கடவுள் மறுப்பை பகிரங்கமாக முன்வைத்தார்.
கல்வி அமைச்சர் சட்டையில்லாமல் கோவில் தேர் இழுப்பதையும், இந்து அறநிலையத்துறையை சார்ந்தவர் வெளிர்காவி நிறத்திலேயே உடை அணிந்துகொண்டு வலம்வருவதையும் பார்க்க முடிகிறது. திராவிட கொள்கைப் பின்னணியில் வளர்ந்த அரசியல்வாதிகள் நவராத்திரி விழாவில் குத்து விளக்கு ஏற்றுவதும் நடக்கிறது.
உத்திரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இந்துத்துவ பண்டிகை கொண்டாட்டங்களின் போது பெண்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் நாம் அறிந்ததே. இத்தகைய வன்கொடுமைகள் நிகழாவண்ணம் தமிழர்களின் ஒற்றுமையை மட்டும் பறைசாற்றியது பொங்கல் போன்ற தமிழர் விழாக்களே. ஆனால் இத்தனை ஆண்டுகால தமிழர் மரபினை நீர்த்து போகச் செய்யும் இந்த ‘புதிய’ பண்டிகை கொண்டாட்டங்கள் நம் திராவிட ஆளுமைகள் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்களைக் காலப்போக்கில் கற்பனைக்கதைகளாக்கி விடும்.
நம் தமிழர் பண்பாடு, நமது முன்னோர்களை உளவியல் தேவைக்கு வணங்கும் தெய்வங்களாக்கியது. ஆனால் பார்ப்பனியம் பல சடங்குகளை, மூடநம்பிக்கைகளை நிலைநாட்டி, அதற்குள் பெண்களை சுழல விட்டிருக்கிறது. எனவே ”பெண்களுக்காகவும் அவர்களது உரிமைக்காகவும், சூத்திரர்களாக சொல்லப்படுகிற நமக்காகவும் இறக்கும் வரை போராடிய தந்தை பெரியாரும், அனைவருக்கும் சமமாக சட்டம் வகுத்த அம்பேத்கரையும் மறந்து பார்ப்பன பண்டிகைகளில் நாட்டம் கொள்ளாமல் வாழ்வோம்”.
தமிழர்களின் வழிபாடு என்பது இயற்கை சார்ந்தது. தனக்கு வாழ்வளித்த இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாக்களே தமிழர் விழாக்களாக இன்று வரை இருந்து வருகிறது. அப்படிப்பட்ட விழாக்களில் ஒருபொழுதும் வன்முறையோ பிரிவினையோ எதுவும் எந்த காலத்திலும் வந்ததில்லை. வருவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட தமிழர் பண்டிகையை நாம் மறந்து போனதால்தான் இன்று பார்ப்பன பண்டிகைகளில் மெய்மறந்து போயிருக்கிறார்கள் தமிழர்கள். பண்டிகைகளில் வன்முறை மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பித்திருக்கிறது ஆக இந்த வன்முறை கலாச்சாரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் இயற்கையைப் போற்றி, சாதி மதம் கடந்து நாம் கொண்டாடிய தமிழர் விழாக்களை நினைவு கூர்வோம்.
பார்ப்பன சடங்குகளை புறக்கணித்து, தமிழர் நிலத்தில் தமிழர் பண்டிகையை உயர்த்தி பிடிப்போம்.