தமிழ்த்தேசத்தின் எதிரி யாராக இருக்க முடியும்? அதன் வடிவம் என்ன? அந்த வடிவம் எப்படி தேசிய இனங்களை அழிக்கிறது? எப்படி மடை மாற்றுகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? யார் சிதைக்கிறார்கள்? என்பதை விளக்கும் புத்தகம் ‘தமிழ்த்தேசத்தின் எதிரி யார்?’
”ஒரு இனம் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் தன் இறையாண்மையை மீட்டுக்கொள்ள வேண்டும். அது தான் இலக்காகவும் இருக்க முடியும்! தமிழ் தேசியம் என்பது இனத்திற்கான விடுதலை கருத்துகளை கொண்டது. தமிழ் தேசிய இன இறையாண்மை அரசியலை முன்னெடுப்பது தமிழ் தேசியம். தமிழ் தேசிய விடுதலை அரசியலை மறுப்பது தமிழ் தேசியத்தின் எதிரியை அடையாளம் காட்டும்” என அழுத்தமாக சொல்லியுள்ளது இப்புத்தகம். (இந்நூலின் ஆசிரியர் பேரா.ஜெயராமன் அவர்கள்)
இந்திய தேசிய அரசியலையும் தமிழ் தேசிய அரசியலையும் வேறுபடுத்திக் காட்டும் பல பத்திகள் இந்த புத்தகத்தில் விளக்கமாக உள்ளன. “இந்திய அரசியல் சட்ட கருத்துக்கள் ஒரு அலகாக அளிக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் கட்டுப்பட்டு, பதவி அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால், அது தமிழ் தேசிய அரசியல் அல்ல. தமிழர்களின் வாழ்வும், வளமும், நிலமும், மொழியும், அடையாளமும் அற்று போய்விடும் வகையில், ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே வரி, ஒரே உரம், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒற்றைத் தன்மையை நோக்கி நாடை இந்திய பார்ப்பனியம் விரைவுப்படுத்துகிறது”. இவ்வாறு தமிழ் தேசிய அரசியலுக்கும் ஆரிய பார்ப்பனியதிற்குமான வேறுபாட்டை இந்நூல் குறிப்பிடுகின்றது.
தொடர்ந்து மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும் நம் தமிழ் தேச அரசியலில் வகிக்கும் முக்கியமான பங்கை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். ஒரு மாநில அரசுக்கு அதிகார வரம்பு இருக்கிறது. முதல்வராக வந்தாலே எதையும் செய்துவிட முடியும் என்று நினைக்க கூடாது. மிகக் குறைந்த அதிகாரங்களே இந்திய அரசு சட்டத்தால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதனையும், இதுதான் உண்மை நிலை, இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவரது வரிகள் உணர்த்துகின்றன.
இந்திய அரசியல் சட்டத்தில் கூட்டாட்சி என்ற சொல் கூட கிடையாது. இங்கே பல தேசிய இனங்கள் உள்ளன. இந்திய அரசியல் சட்டம் சாதிகளை ஏற்கிறது, மதங்களை வெறுப்பை ஏற்கிறது, ஆனால் மொழி வழி தேசிய இனங்களை ஏற்கவில்லை. இந்திய குடியுரிமை என்ற ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாநில குடியரிமை என்பது இங்கே கிடையாது. மேலும் மக்கள் தொகை அடிப்படையில் மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது கூட்டாட்சிக்கு எதிரானது.
“ஒரு நாட்டின் அதிகாரங்களை சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்று மூன்றாகப் பிரிப்பார்கள். அதாவது சட்டம் இயற்றும் துறை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறை, சட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் துறை என்பனவே அந்த மூன்று அதிகாரப் பிரிவினைகள். இவை தேசிய இனத்திற்கு மிக சொற்ப அளவிலான அதிகாரங்களை கொடுக்கும் என்றும், ஆளுநர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீறி மாநில அரசு என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வி மூலம் இன்றும் மாநிலங்கள் ஒன்றியத்தின் அதிகாரத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுவதை விளக்குகின்றார் ஆசிரியர். மேலும் ஒன்றிய அதிகாரிகளுக்குரிய அதிகார வரம்புகள் குறித்தும் விளக்கியுள்ளது இந்நூல்.
மாநில உரிமையில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் கல்வி, இன்று ஒன்றியத்தின் கீழ் செல்வதால் நம் மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றது என்பதையும் இதற்கடுத்த பக்கங்களில் கூறுகின்றார் ஆசிரியர். உதாரணத்திற்கு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலை பிரகடனம், அப்போது மாநில அதிகாரத்திலிருந்து கல்வி பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதைக் கூறலாம். நீட் தேர்வு, இந்துத்துவ தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை அதன் விளைவுகளாக இப்போது வரை தொடர்கின்றன.
மேலும் வரி பங்கீடு, மொழித் திணிப்பு, கல்வித்துறை, காவல்துறை, நிர்வாகத்துறை, தொல்லியல்துறை என அனைத்திலும் பார்ப்பனிய இந்துத்துவ உணர்வாளர்களைப் பதவியில் நிரப்புகிறது ஒன்றிய அரசு. ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைக் கொண்டவர்களே ஆளுநராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
நிர்வாகத்துறை என்பது இந்திய அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நீதித்துறையிலும் மாநிலங்கள் எதுவும் செய்ய முடியாது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை குடியரசுத்தலைவர் மூலமாக இந்திய உள்துறை அமைச்சகமே தேர்வு செய்கிறது. இதனாலேயே பல ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும்போது “அவர்களை காப்பாற்றுங்கள்” என்று இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழக அரசால் கடிதம் மட்டும் எழுத முடியும்.
மாநில சட்டமன்றம் ஒன்றுதான் ஒரு மொழி இனத்திற்கான பொருளாக இருக்கிறது. சட்டமன்றத்தில் கூட ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு முடிந்து விட்டது என்று கருத முடியாது. ஆளுநரிடம் கொண்டு போய் கொடுத்து ஒப்புதல் கூறி கைகட்டி நிற்க வேண்டும். அந்த கையெழுத்துக்காக காத்திருக்க வேண்டும். இது இன்று வரை தொடர்வதை பார்க்க முடிகிறது. இவ்வாறு மாநில அரசுக்கு குறைவான அதிகாரங்களே அல்லது சொற்ப அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளதை இப்புத்தகம் அறிவுப்பூர்வமாக வாசகர்களுக்கு விளக்குகின்றது.
ஆங்கிலேயர் இந்திய துணை கண்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, பழைய வர்ணாசிரம கட்டமைப்பு நிறுவ இந்துராஷ்டிரம் என்ற பாராயத்தை படைத்துவிட பார்ப்பனியம் இடையறாது முயற்சிக்கிறது. இந்துராஷ்டிரம் படைக்கும் நோக்கத்துடன் கைகோர்த்து நிற்கும், பார்ப்பனியத்தின் வெளிப்படையான மற்றும் மறைமுக கூட்டணிகள் தமிழ் தேசிய இனத்தின்/ தமிழ் தேசத்தின் எதிரிகள் என்பதை விளக்கியுள்ளது இப்புத்தகம்.
தேசிய இன விடுதலை பற்றி பேசியவர்களுக்கு நமது எதிரி யார் என்று முதல் முறையாக அடையாளம் காட்டியவர் பெரியார் தான். பார்ப்பனியம் என்றால் என்ன? இந்தியன் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை முதன் முதலில் கூறியவர் பெரியார் தான். “தமிழர்களுக்கு திராவிடர் என்ற பெயரை கொடுத்து தமிழர்களின் அடையாளத்தை கெடுத்து விட்டார் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு” என்பதற்கு பல வரலாற்று தகவல்களை கொடுத்துள்ளார் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள்.
இன்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் திராவிடம் குறித்து பரப்பும் அவதூறுகளுக்கும் பதிலடி கொடுக்கிறது ‘தமிழ்த்தேசத்தின் எதிரி யார்?’ புத்தகம். திராவிடர்கள் என்றால் யார்? வெகு காலத்திற்கு முன்பு தென்னிந்தியாவிற்கு வந்த ஆரிய பார்ப்பனருக்கு எதிராக ‘திராவிடர்’ என்ற சொல்லை சமஸ்கிருத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதன் மிச்ச சொச்சம் தான் ’ராகுல் டிராவிட்’ போன்ற பெயர்கள்.
1856க்கு முன்பு திராவிட என்ற சொல்லுக்கு வேறு சொல் இருந்தது. பழைய சொல்லுக்கு புதிய சொல் வழங்கியவர் இராபர்ட் கால்டுவெல். கிபி ஏழாம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் எழுதிய ’தந்திரவார்த்திகா’ என்ற நூலிலும் திராவிட என்ற சொல் வருகிறது. இது திராவிட பாஷா என்று பேசப்படுகிறது. இதையெல்லாம் இராபர்ட் கால்டுவெல் கண்டார். ”தென்னிந்திய மொழிகளில் தமிழ் வளமார்ந்த மொழி என்றும், சமஸ்கிருதம் இல்லாமலே அது இயங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆரிய பிராமணர்கள் வந்தேறிகள் என்றும் இங்குள்ள மக்களுக்கு சூத்திரப் பட்டதை கொடுத்தார்கள் என்றும் கூறினார்”. 1816-இல் சென்னை மாவட்ட ஆட்சியர் வைட் எலிஸ் இது பற்றி கூறியிருந்தாலும் விரிவான மொழியியல் ஆய்வை வெளியிட்டவர் கால்டுவெல்தான்.
1885-இல் ஒரு திராவிட கழகம் இருந்தது, அயோத்தி தாசர் பண்டிதரும் ரெவரண்ட் ஜான் ரத்தினமும் சேர்ந்து அதை உருவாக்கினார்கள். ‘திராவிட தீபிகை, திராவிட வர்த்தமானி, திராவிட ரஞ்சனி, திராவிட பாண்டியன், திராவிட மஞ்சரி’ போன்ற பத்திரிகைகளும் தொடங்கப்பட்டன.
1899-இல் யாழ்ப்பாணத்து தமிழர் அறிஞர் சபாபதி நாவலர் தமிழ் வரலாறு குறித்து எழுதினார். அந்த வரலாற்றுக்கு ‘திராவிட பிரகாசிகை’ என்று பெயர் வைத்தார்.
1891-இல் இரட்டைமலை சீனிவாசன் ’பறையர் மகாஜன சபா’ என்ற அமைப்பை, ’ஆதிதிராவிட மகா சபா’வாக பெயர் மாற்றம் செய்தார்.
1912-இல் டாக்டர் நடேசனார் அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உணவு விடுதியை ‘சென்னை திராவிடர் சங்கம்’ என்று பெயர் மாற்றினார்.
1922-இல் எம்.சி.ராஜாவால் “‘பறையர்’,’பள்ளர்’ என்ற சாதிப்பெயர்களை நீக்கிவிட்டு ’ஆதிதிராவிடர்’ என்று அடையாளப்படுத்த வேண்டும்” என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அது ஏற்கப்பட்டது. இதன் பின்பு நீதிக்கட்சி 1917-இல் திராவிடர் என்ற இதழைத் தொடங்கியது.
‘திராவிடம்’ என்ற ஒரு சொல்லுக்குப் பின்னால் இருக்கும் இத்தகைய வரலாற்றை இப்புத்தகம் வாயிலாக வாசகர்கள் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு திராவிடத்தைக் கொச்சைப்படுத்தும் இந்துத்துவவாதிகளுக்கும், பார்ப்பனியத்தின் அடிவருடிகளுக்கும் நாம் பதிலடி கொடுக்க இந்த புத்தகத்தின் வாசிப்பு நமக்கு உதவியாக இருக்கும்.
திராவிடர் என்ற சொல்லில் ஒரு எதிர்ப்பு தன்மை இருப்பதாக ஒடுக்கப்பட்ட மக்கள் கருதினார்கள் என்பது தான் வரலாறு. ’திராவிடன்’ என்றால் ‘பார்ப்பான் அல்லாதவன்’, ‘ஆரியன் அல்லாதவன்’ என்று பொருள். பார்ப்பன எதிர்ப்பு களத்திற்கு வந்தவர்கள் ‘திராவிடர்கள்’ என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள். தமிழக திராவிடர் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டார்கள். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில் வாழ்நாள் முழுவதும் அவர்கள் கேடயமாகப் பயன்படுத்திய சொல்தான் திராவிடம்.
உலகம் முழுவதும் உள்ள 195 நாடுகளில், 193 நாடுகள் ஐ.நா.வில் உறுப்பு வகிக்கின்றன. தமிழ்நாட்டை விட நிலப்பரப்பில் சிறிய நாடுகள் 107 இருக்கின்றன, தமிழ்நாட்டை விட மக்கள் தொகையில் குறைந்த நாடுகள் 178 இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரிய நாட்டிற்கும் தகுதி அடிப்படையில் சமமானவை. அதாவது ”நான் ஒரு தேசிய இனம், எனக்கு ஒரு மொழி இருக்கிறது, எங்களுக்கும் ஒரு வாழ்நிலப்பரப்பு இருக்கிறது, பண்பாட்டு அடிப்படையில் ஒரு உளநிலை ஓர்மை இருக்கிறது, எனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. என்னுடைய இறையாண்மை எனக்கு வேண்டும்” என போராடி தங்கள் விடுதலையை பெற்றுக் கொண்டவை பல இனங்கள். தங்கள் உரிமையைக் கேட்டு பெற்றுக் கொண்ட இந்த நாடுகள் தான் இன்று ஐ.நா. அவையில் சமமானவர்களாக உறுப்பு வகிக்கின்றன.
உலகின் எல்லா நாடுகளுக்கும் இணையான இறையாண்மையோடு, ஒரு சுதந்திர தேசத்தை படைத்து கொண்டு, விடுதலை பெற்ற இனமாக வாழ வேண்டும் என்பதன் கதவு தேசிய இன அரசியலே. அந்த தேசிய இன அரசியலின் வெளிப்பாடு இப்படித்தான் இருக்க முடியும் என்பதையும், அதை நடைமுறைப்படுத்தும் அரசியல்தான் தமிழ் தேசிய அரசியல் என்பதையும் இப்புத்தகம் எடுத்துரைத்துள்ளது.