தனியார்மயமாகும் தமிழ்நாடு வழித்தட தொடர்வண்டிகளை ஏன் தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும்?

தனியார்மயமாகும் தமிழ்நாடு வழித்தட தொடர்வண்டிகளை ஏன் தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும்?

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் அமைப்புகளும் தென்னக இரயில்வேயில் ‘தனியார்மயமாகும் தமிழ்நாடு வழித்தட தொடர்வண்டிச் சேவை’ ஏலத்தை கைவிட கோரிக்கை வைக்கும் போது மே பதினேழு இயக்கம் மட்டும் தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த கோரிக்கை வைக்கிறது? ஏனென்றால், தொடர்வண்டி போக்குவரத்தை ஏழை எளிய நடுத்தர மக்களின் அன்றாட தேவையாகவும் சேவையாகவும் கருதுகிறது மே பதினேழு இயக்கம்.

இக்கட்டுரையின் முதல் பாகம், தனியார்மயமாகும் தமிழ்நாட்டு வழித்தட இரயில்களை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்திடு! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாடம் கல்வி கற்க மற்றும் வேலைக்காக செல்வதில் தொடங்கி, விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வது வரை எல்லாவற்றுக்கும் பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்றியமையாததாக உள்ளது. இந்த பொதுப் போக்குவரத்து சிக்கலை தீர்க்கும் இடத்தில், ஏழைகளின் நண்பனாக இருக்கும் சேவை தான் தொடர்வண்டி போக்குவரத்து. மேலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொருளாதார தேவைக்காக நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும், நகரத்திலிருந்து மாநகரத்திற்கும் செல்வதற்கு இன்றியமையா காரணியாக இருப்பது தொடர்வண்டி பயணம் தான். சென்னை போன்ற பெருநகரங்களில் அதிக வாடகை கொடுத்து வசிக்க முடியாதோர், அருகிலுள்ள நகரங்களில் குறைந்த வாடகையில் வசித்து, நாள்தோறும் தொடர்வண்டி பயணம் மேற்கொண்டு பணிக்கு செல்வோரும் உண்டு.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகவின் சிறு பகுதியை உள்ளடக்கிய 5081 கிலோ மீட்டர் தொடர்வண்டி வழித்தடங்களை கொண்டது தென்னக இரயில்வே. இவற்றுள் 3850 கிலோ மீட்டர் தொடர்வண்டி வழித்தடங்கள் தமிழ்நாட்டில் செல்கிறது. அதாவது கிட்டத்தட்ட தென்னகவே இரயில்வேயின் 75 விழுக்காடு வழித்தடங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே தென்னக இரயில்வேயின் வருவாயில் மிக அதிக பங்களிப்பை தமிழ்நாட்டு வழித்தட தொடர்வண்டிகள் தருகிறது. இந்த வழித்தடங்கள் நாட்டின் முக்கிய நகரங்களை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையுடன் இணைப்பதால், தொழில் முனைவோர் இலகுவாக தொழில் செய்ய முடிகிறது. ஆகையால், இந்த வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகள் எப்போதும் முழு கொள்ளளவில் இயக்கப்படும்.

இந்த நிலையில், கடந்த சூன் மாதம் சென்னையிலிருந்து இயக்கப்படும் 1052 கிலோ மீட்டர் வழித்தடங்களை உள்ளடக்கிய முக்கியமான 11 வழித்தட தொடர்வண்டிகளை தனியாருக்கு ஏலம் விடப்போவதாக இரயில்வே வாரிய முதன்மை தலைவர் சுனீத் சர்மா (Suneet Sharma) அறிவித்துள்ளார். அந்த முக்கியமான வழித்தடங்கள் பின்வருமாறு:

  • சென்னை – மதுரை
  • சென்னை – திருச்சி
  • சென்னை – கோயம்புத்தூர்
  • சென்னை – திருநெல்வேலி
  • சென்னை – கன்னியாகுமரி
  • சென்னை – மும்பை
  • சென்னை – டில்லி
  • சென்னை – மங்களூர்
  • சென்னை – செக்கிந்திரபாத்

இந்த வழித்தடங்கள் தனியாருக்கு விடப்போவதால், அதனை ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்கள், தரத்தை உயர்த்துகிறோம், சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று இந்த வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகளின் பயணக்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தும். இது, குறைவான பயணக்கட்டணத்திற்காகவே தொடர்வண்டி பயணங்களை மேற்கொள்ளும் ஏழை எளிய நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும்.

தொடர்வண்டி பயணங்களை ஏழை எளிய நடுத்தர மக்கள் விரும்புவதற்கு அதன் குறைவான கட்டணம் என்பது, பொதுப் போக்குவரத்து பயணக்கட்டணங்களை ஒப்பிடுகையில் அறிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம், பேருந்து மற்றும் தொடர்வண்டி வழியாக பயணிக்க செலவாகும் பயணக் கட்டணத்தை கீழ்காணும் அட்டவணையில்  ஒப்பிட்டு பார்ப்போம்.

அட்டவணை-1

(சென்னைக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு 462 கிலோ மீட்டர்)

போக்குவரத்து பயண வகுப்பு ஒருவருக்குகான பயணக் கட்டணம் (ரூபாய்) ஒரு கிலோ மீட்டருக்கான பயணக்கட்டணம்
விமானம் * (பொதுவான வகுப்பு -Economy Class) ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்வது 2000 4.33 ரூபாய்/கிமீ
இப்போதைய பயணத்திற்கு 3200 6.93 ரூபாய்/கிமீ
தனியார் பேருந்து * இருக்கை வசதி 500 – 750 1.08-1.62 ரூபாய்/கிமீ
குளிர்சாதன இருக்கை  வசதி 800-1000 1.73 – 2.16 ரூபாய்/கிமீ
குளிர்சாதனப் படுக்கை வசதி 1050-1200 2.27 – 2.60 ரூபாய்/கிமீ
அரசு  பேருந்து இருக்கை வசதி 459 0.99 ரூபாய்/கிமீ
குளிர்சாதன இருக்கை  வசதி 630 1.36 ரூபாய்/கிமீ
குளிர்சாதனப் படுக்கை வசதி 880 1.90 ரூபாய்/கிமீ
தொடர்வண்டி இருக்கை வசதி 190 0.41 ரூபாய்/கிமீ
படுக்கை  வசதி 325 0.70 ரூபாய்/கிமீ
குளிர்சாதனப் படுக்கை வசதி 835 1.81 ரூபாய்/கிமீ

* விடுமுறை மற்றும் விழா நாட்கள் உட்பட பயணத் தேவை அதிகரிக்கும் நேரங்களில் விமானம் மற்றும் தனியார் பேருந்து பயணக்கட்டணம், மேல குறிப்பிடப்பட்ட வழக்கமான பயணக் கட்டணத்தை விட அதிகமாகும். அட்டவணையில் வணிக வகுப்பு விமான (Business class flight) பயணக்கட்டணம் ஒப்பிடப்படவில்லை.

முதல் அட்டவணையின் படி, பயணிகள் தொடர்வண்டி இருக்கை வசதி பயணத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 41 பைசாவும் , படுக்கை வசதி பயணத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 70 பைசா மட்டுமே செலவழிக்கிறார்கள். இந்த பயணச் செலவு விமான மற்றும் பேருந்து பயணச் செலவை விட குறைவு. இதனால் தான் தொடர்வண்டி பயணம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இப்படியான தொடர்வண்டி சேவையை தான் பாஜக மோடி அரசு தனியார்மயப்படுத்துவது மட்டுமல்லாமல் பயணக் கட்டணத்தை நிர்ணயம் செய்கிற உரிமையையும் தனியார் நிறுவனத்திடமே கையளித்து உள்ளது.

2019-ஆம் ஆண்டு இறுதியில் டெல்லி – லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மும்பை – அகமதபாத் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு தொடர்வண்டிகளை இயக்குவதற்கு மட்டும் ஐஆர்சிடிசி-யிடம் (IRCTC) வழங்கப்பட்டது. இந்த இரண்டு தொடர்வண்டிகள் அறிமுகமான சில நாட்களின் பயணக்கட்டணத்தை கடுமையாக உயர்த்தி பயணிகளை அதிர்ச்சியாக்கியது ஐஆர்சிடிசி.

ஐஆர்சிடிசி இயக்கிய தொடர்வண்டிகளின் பயணக்கட்டணம் கீழ்க்காணும் இரண்டாவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வழித்தடத்தில் இயங்கும் பிற சாதாரண தொடர்வண்டிகளின் பயணக்கட்டணத்துடன் ஐஆர்சிடிசி இயக்கிய தொடர்வண்டிகளின் பயணக்கட்டணத்தை ஒப்பிடும் போது, அதிலிருக்கும் மாபெரும் வித்தியாசத்தை அறிந்துகொள்ள முடியும்.

அட்டவணை -2

வழித்தடம் பயண வகுப்பு தேஜஸ் எக்ஸ்பிரஸ் பயணக் கட்டணம் (ரூபாய்) சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணக் கட்டணம் (ரூபாய்) மற்ற விரைவு தொடர்வண்டி பயணக் கட்டணம் (ரூபாய்)
டெல்லி – லக்னோ முதல் தர குளிர்சாதனப் படுக்கை வசதி (EC-1AC) 2450 1935
இரண்டாம் தர குளிர்சாதனப் படுக்கை வசதி (2AC) 1280 970
மூன்றாம் தர குளிர்சாதனப் படுக்கை வசதி (3AC) 825
படுக்கை  வசதி 325
இருக்கை வசதி 190
மும்பை- அகமதபாத் முதல் தர குளிர்சாதனப் படுக்கை வசதி (EC-1AC) 2384 1665
இரண்டாம் தர குளிர்சாதனப் படுக்கை வசதி(2AC) 1289 785
மூன்றாம் தர குளிர்சாதனப் படுக்கை வசதி (3AC) 825
படுக்கை  வசதி 320
இருக்கை வசதி 190

 

ஐஆர்சிடிசி-யிடம் மேல குறிப்பிடப்பட்ட இரண்டு தேஜஸ் தொடர்வண்டியை இயக்குவதற்கு மட்டும் இரயில்வே கொடுத்த போது கிட்டத்தட்ட 25 மடங்கு பயணக்கட்டணத் தொகை உயர்த்தியது.

இப்போது சென்னையை மையமாக கொண்ட 11 வழித்தடங்களில் தொடர்வண்டிகளை  இயக்குவது மற்றும் பராமரிப்பது போன்ற அனைத்தையும் தென்னக இரயில்வே தனியாரிடம் ஏலத்திற்கு கொடுத்தால் பயணக்கட்டணம் எவ்வளவு உயரும் என்று எண்ணிப் பாருங்கள். மேலும் இந்த வழித்தடங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலைப்பற்றி எதுவும் சரிவர குறிப்பிடப்படவில்லை.

சொகுசு, குறைந்த நேரப் பயணம் மற்றும் பிரம்மாண்ட வசதி என்று விளம்பரம் செய்து மேட்டுக்குடி மக்களுக்காக இலாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து இயங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்வண்டி பயணக்கட்டத்தை அதிகரித்தால் சாதாரண மக்களுக்கு தொடர்வண்டி பயணம் என்பது விமானப் பயணம் போன்று எட்டாக் கனியாகிவிடும். இந்த தேஜஸ் தொடர்வண்டியில் இரயில்வே விதிமுறைக்கு எதிராக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பயணக்கட்டணம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமகன்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், ஊனமுற்றோர்கள், கண் பார்வையற்றோர்கள், மனநலம் பாதித்தவர்கள், காதுகேளாதவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஆகியோர்களுக்கு இரயில்வேயில் வழங்கப்படும் பயணக்கட்டண சலுகை உள்ளடக்கிய சமூக நீதி நலத்திட்டம் தனியார்மயத்தால் தடை செய்யப்படும் ஆபத்தும் உள்ளது.

கிராமப்புற மக்கள் நகரத்துடன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற எப்படி தமிழ்நாடு அரசு பேருந்துகள் பயன் உள்ளதாக இருக்கிறதோ அதேபோல் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும், நகரத்திலிருந்து மாநகரத்திற்கும் தொடர்பு கொள்ள தொடர்வண்டி சேவை மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தனியாரிடம் இருந்த பேருந்து சேவையை அரசின் நிர்வாகித்திற்குக் கீழ் கொண்டு வந்ததால் தான் இன்று கிராம மக்கள் நகரத்துடன் தொடர்பு வைத்து கல்வி மற்றும் வேலை பெற்று சமூக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளார்கள். குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி வளர்ச்சியில் அரசு பேருந்துகள் இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையாகது. எனவே தான், தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வரும் தொடர்வண்டி  சேவையை தமிழ்நாடு அரசே எடுத்து நிர்வகிக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

அதானி-அம்பானிகளின் நிறுவனங்கள் விமானம், கப்பல் மற்றும் தொடர்வண்டி வேவை நிர்வகிக்கும் போது ஏன் 8 கோடி மக்களின் பிரதிநிதியான தமிழ்நாடு அரசு தொடர்வண்டி சேவையை நிர்வகிக்க கூடாதா? பொதுத்துறை நிறுவனங்களால் தொழில் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை, இப்போது பாஜக மோடி அரசின் தனியார்மயக் கொள்கையால் சுரண்டுவதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இந்திய ஒன்றியத்திற்கு மாநில உரிமை, மாநில சுயாட்சி, சமூக நீதிக்கு முன்மாதிரியாக செயல்படுகிற தமிழ்நாடு அரசு, தென்னக இரயில்வேயில் தனியார்மயமாகும் தமிழ்நாட்டு வழித்தடங்களை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஏற்று நிர்வகிக்கவும் அதற்கு தேவையான வேலை வாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் மக்களின் குரலாக மீண்டும் கோரிக்கை வைக்கிறது.

இக்கட்டுரையின் முதல் பாகம், தனியார்மயமாகும் தமிழ்நாட்டு வழித்தட இரயில்களை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்திடு! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »