பெண்களும் புரட்சியும்

பெண்களும் புரட்சியும்

சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பால்புதுமையினர் ஒன்றிணைந்தெழுந்த புரட்சிகர வரலாறு.


மதம் போன்ற பிற்போக்கு கட்டுமானங்கள் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக “ஆதிக்கப் பாலீர்ப்பு” (Cisgender) கோட்பாட்டை தனது அதிகார ஆதிக்கத்தின் மூலம் சமூகத்தின் சட்டங்களாக்கின. தனது அடுத்த தலைமுறை விருத்திக்காக மட்டும் பெண்ணை விட்டு வைத்ததுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தின் வரலாறு.

தொழிற்புரட்சி காலம் வரையிலும் ஆணாத்திக்கச் சமூகத்தினால், வெறும் சதைப்பிண்டமாக மட்டுமே காணப்பட்ட பெண்கள், சோவியத் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இயந்திரமயமாகி தொழில் உற்பத்தி முறைக்கான மனிதவளத் தேவையால் கல்வி வாய்ப்பு பெற்று, பெண்கள் தமக்கான உரிமைகளுக்காக தாமே குரலெழுப்ப வலுபெற்றனர். மறுக்கப்படும் உரிமைகளுக்கு எதிரான பெண் பாட்டாளிகளின் (Women Proletariat) எழுச்சி 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இருந்தே தொடங்குகிறது.

புரட்சிகர வரலாறு
புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க் (Rosa Luxemburg), கிளாரா செட்கின் (Clara Zetkin), மற்றும் அலெக்சாண்ட்ரா கொள்ளொன்டாய் (Alexandra Kollontaï) போன்ற சமவுடைமை கொள்கையுடைய தோழர்களின் அரும்பணிகளால் மார்ச் 8, சர்வதேச பெண்கள் நாளாக இன்றும் அந்த பெண் பாட்டாளிகளின் எழுச்சிமிகு பெண் விடுதலைப் புரட்சி நினைவு கூறப்படுகிறது.

கிளாரா செட்கின், ரோசா லக்சம்பர்க், அலெக்சாண்ட்ரியா கொள்ளொன்டாய்

கடந்த நூற்றாண்டில் பெண் விடுதலைக்காக ஒலித்த குரல்களும், ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்களின் எழுச்சியும், பிற்போக்குகளால் பூட்டப்பட்டிருந்த பாலியல்பு (Sexuality), பாலீர்ப்பு (Sexual Orientation), பாலினம் (Gender), பாலின அடையாளம் (Gender Identity), பாலின வெளிப்பாடு (Gender Expression) உள்ளிட்ட பால் பண்புகள் (Sex Characteristics) குறித்துப் பேச மறுக்கப்பட்டிருந்த கருத்து வெளியைத் திறந்து விட்டது என்று கூறலாம். மேலும், கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் திருநர் (Transgenders, Transpersonal), ஒருபாலீர்ப்பு உடையோர் அல்லது தன்பாலீர்ப்பு உடையோர் (Homosexual persons), இருபாலீர்ப்பு உடையோர் (Bisexual persons), அனைத்து பாலீர்ப்பு உடையோர் (Pansexual persons), ஊடுபால் பண்புடையோர் (Intersex persons), பாலீர்ப்பற்றோர்(Agender person) என இன்னும் மென்மேலும் பரந்து விரிந்து வளரும் பாலினம் குறித்த விவாதங்கள் எழுந்து வருவதற்கு தலை திறவுகோலாக இந்த சோசலிசப் பெண்களின் புரட்சியைக் கூறலாம்.

மார்க் ஆஷ்டன், மைக் ஜாக்சன்

பால்புதுமையினர், சுரங்கத்தொழிலாளர்கள் ஒன்றிணைந்த வரலாறு
மார்க்சியப் பார்வையில் தமக்கு இழைக்கப்படும் சமூக புறக்கணிப்பிற்கான காரணத்தை ஆய்ந்து புரிந்துகொண்டது தான் மார்க் ஆஷ்டனை (Mark Ashton) தம் தோழமை மைக் ஜாக்சனுடன் (Mike Jackson) சேர்ந்து பால்புதுமை சமூகத்தின் வரலாற்று சிறப்புமிக்க புரட்சியை செய்யத் தூண்டியது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணியில் (Young Communist League – YCL) செயல்பட்ட அவர், அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடை கோரும் ஒப்பந்தத்தின் (Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) முக்கியப் பரப்புரை நிகழ்வான “அணு ஆயுதக் குறைப்பு பரப்புரையில்” (Campaign for Nuclear Disarmament – CND) வீரியமாக களமாடியவர்.

“தன்பாலீர்ப்பு உடைய பெண்களும் , ஆண்களும் சுரங்கத் தொழிலாளர்களை ஆதரிக்கிறோம்” இயக்கம்.

தன் சகத்தோழமைகளுடன் ஆஷ்டன் முன்னெடுத்த “தன்பாலீர்ப்பு உடைய பெண்களும் , ஆண்களும் சுரங்கத் தொழிலாளர்களை ஆதரிக்கிறோம்” (Lesbians and Gays Support the Miners – LGSM) என்ற இயக்கம் தான் அன்று சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட மார்கரட் தாட்சர் (Margaret Thatcher) அரசின் கொடுங்கோன்மை வீழ்த்தியதற்கான ஆணிவேர் என்றால் அது மிகையல்ல! ஏனெனில், ஒடுக்கப்படும் இரு கடைமட்டச் சமூகங்களான பால்புதுமையினரும், சுரங்கத் தொழிலாளர்களும் இணைந்து அரங்கேற்றிய போராட்ட நிகழ்வுகள் சமூகத்தின் பால்புதுமை வெறுப்புணர்வையும், முதலாளித்துவத்தின் சுரண்டலையும் ஒருசேர எதிர்த்த, சம உடமையின் மிக முக்கிய வரலாற்றைத் தாங்கி நிற்கின்றன.

1980-களின் தொடக்கத்தில் முதலாளித்துவ தாட்சர் அரசு தொழிலாளர் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் பலச் சுரங்கங்களை மூடும் வேலையை செய்தது. இந்த சுரங்க தொழிலாளர்களின் உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்சின் சுரங்கத் தொழிலாளர்கள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர். சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கிட பிரிட்டனின் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பிற்கு (National Union of Mine Workers – NUM) வரும் அனைத்து பொருளாதார வழிகளையும் அன்றைய தாட்சர் அரசு ஒடுக்கியது.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் மற்றொரு ஒடுக்கப்படும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதே இரு சமூகங்களிற்குமான சமூக விடுதலையை அடைய வழி செய்ய முடியும் என்ற ஆஷ்டனின் நோக்கத்தில் தொய்வின்றி உழைத்த LGSM தோழமைகள், தொழிலாளர் கூட்டமைப்பிற்கு உதவுவதற்கான நிதி பங்களிப்பில் பெரும் பங்காற்றி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறத் துணை நின்றனர்.

தமக்காக உடன் நின்ற பால்புதுமை சமூகத்தினரின் உரிமைகளுக்கான திறவுகோலாய் அந்த சுரங்கத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட 1985 ஆண்டின் “பால் புது சுயமரியாதை பேரணி” (LGBTQIA+ Pride / Queer Pride), நெகிழ்வூட்டத்தக்கதோர் நிகழ்வு ஆகும்.

1985 ஆண்டின் “பால் புது சுயமரியாதை பேரணி”

சுரங்கத் தொழிலாளர் அமைப்புகள் பங்கேற்ற இந்தப் பேரணி மூலம் பால்புதுமையினருக்கு பொதுமக்களிடம் பெருகிய ஆதரவு தான் 1985-இல் பால்புதுமையினர் உரிமைகளை உறுதி செய்யும் சட்டங்கள் முன்மொழிந்திட வழி செய்தது. அதே ஆண்டு தேசிய தொழிலாளர் கூட்டமைப்பின் ஆதரவுடன் அவை சட்டமாக்கப்பட்டது. இந்த வரலாற்றின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரைடு (Pride – 2014) என்கிற பிரிட்டன் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்ததுடன், மேலை நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றதென்பதை, பால்புதுமையினருக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் கொடுத்த அங்கீரகாரமாகவே கருதிட வேண்டும்.

இன்று, பால்புதுமையினரின் உரிமைகள் பல நாடுகளாலும் மதிக்கப்படத் தொடங்கியிருப்பது மகிழ்வூட்டும் செய்தி ஆகும். ஆனால், 21ஆம் நூற்றாண்டிலும் தற்போது 71 நாடுகள் சட்டப்பூர்வமாக தன்பாலீர்ப்பு தடை விதித்துள்ள கவலைக்குரிய செய்தி நாம் மானுட விடுதலை குறித்த புரிதல் ஏற்பட இன்னும் எவ்வளவு வீரியமாக களமாட வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது. இமயமலையில் அமைந்துள்ள உலகில் மக்கள் மகிழ்வாக வாழக்கூடும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பூடான், மத்திய ஆப்பிரிக்க நாடான கபானும் ஓர்பாலீர்ப்பிற்கு எதிரான சட்டங்களைச் சமீபத்தில் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாலின வெறுப்பு மட்டுமின்றி பார்ப்பனிய மேலாதிக்கத்தின் தாக்குதலையும் சேர்த்துத்தான் இந்தியத் துணைக்கண்ட தேசிய இனங்களின் பால்புதுச்சமூகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பால்புதுமை சமூகத்திற்குள்ளும் பார்ப்பனிய மேலாதிக்கத்தின் கையோங்கல் இருப்பதையும், அதை எதிர்த்து சாதிய முரண்களை களைந்தெறிய விரும்பும், சமவுடமையை விரும்பும் ஆற்றல்களின் எதிர் எழுச்சிகள் பால்புதுநருக்குள்ளும் நடந்து வருவதை மறுத்துவிட முடியாது.

இன்றைய தமிழ்ச்சூழல்
பெண்களின் பங்களிப்பினால் வென்ற பல வரலாற்று நிகழ்வுகளை கொண்டது தமிழின வரலாறு. சமகால வரலாற்றை எடுத்துக் கொண்டால் கூட, மூன்றாண்டுகளுக்கு மேலாக போராடிய வீரியமிக்க கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம், உலகிற்கு எப்படிப் போராட வேண்டுமென்ற போராட்ட வழிமுறையை கற்றுத்தந்தவர்கள் நம் இடிந்தக்கரை கிராமத்துப் பெண்கள்.

பெண்கள் அரசியல் விழிப்புணர்வு அடைந்தால் மதம், அரசதிகாரம், பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பு என அனைத்து பிற்போக்கு கட்டமைப்புகளையும் தகர்த்தெறிய முடியும். அது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், எட்டு வழி சாலை எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இன்று திருவண்ணாமலை பாலியப்பட்டில் நடந்து வரும் விவசாய வாழ்வாதார நில உரிமைக்கான சிப்காட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் போராட்டம் வரை பெண்கள் கையிலெடுக்கும் போராட்டம் எத்தகு வலிமையானவை என்று தமிழின வரலாறு பறைசாற்றி வருகின்றது.

பெண்ணியத்தின் அடுத்த பரிணாமம் என்பது பால்புதுமையினர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும், பால்புதுமை குறித்த புரிதல்கள் நம் சமூகத்தில் விரிவடைவதற்கான கருத்துவெளியை உறுதி செய்ய வேண்டியதன் தேவை இருக்கிறது. சமீபகாலங்களில் வலதுசாரி பிற்போக்குத்தனங்களால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் பால்புதுமையினருக்கு எதிரான வெறுப்பு பரப்புரைகளும், வன்சொற் தாக்குதல்களும் சமூக ஊடகங்களில், குறிப்பாக பெண்ணியம் பேசக்கூடிய இடதுசாரி கருத்து கொண்ட ஊடகவியலாளர்கள் வரையிலும் அதிகரித்து வந்துள்ளதை சமூகப் பார்வையில் அணுகினால் அது புலப்படும்.

இதனை எதிர்கொள்ள நம் சக பெண்களும் பால்புதுநர்களும் பாதுகாப்பாக உணரும் படியாக சமூக ஊடகங்களிலும் கருத்துவெளியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. சமூக ஊடகம் என்பது மனிதனின் வாழ்வின் பிற்போக்கு தனங்களை கலைந்திடும் வகையில், வாழ்வை எளிதாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படியான ஒரு ஊடக வெளியாக இருக்க வேண்டிய சமூக ஊடகங்கள், மனிதன் வாழ்வில் இத்துணை உளவியல் சிக்கல்களை உருவாக்குகிறது என்றால், இந்தத் தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நம் தமிழ் மண்ணுக்கான மார்க்சியத்தை தன் வாழ்நாள் முழுவதும் பெண் விடுதலைக்கான களத்தைத் தாங்கி எழுப்பிய தந்தை பெரியார் கூறுவதாவது,

“ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி –
ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி –
ஓர் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை –
ஓர் ஆணின் கண் அழகுக்கு ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் –
பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.”

இது போன்ற வரிகளில் பெண் விடுதலைக்கான கருத்துவெளியை வலுப்படுத்துவது நம் சமூகத்திற்கு எத்தனை தேவையானது என்பதை உணர முடிகிறது. இங்கு ஆதிக்கம் கொண்டுள்ள “ஆண்மைத் தவறேல்” எனும் ஆதிக்கக் கருத்தாக்கத்தை நாம் அழித்தொழிக்க வேண்டியுள்ள தேவையும் உணர்ந்திட முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »