இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் போராட்டக்களத்தில் நுழைவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், தங்களின் அடுத்த தலைமுறையைப் பாதிக்கக் கூடிய காரணிகள் இருப்பின், பெண்கள் போராட்டக்களம் காண்பதை எவரும் தடுக்க இயலாது.
இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் உள்ளன. தங்கள் குடும்பங்களை மட்டுமே கவனித்து வந்த பெண்களை பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்த 1789 பிரெஞ்சுப் புரட்சி போல் பல போராட்டக்களங்களை பெண்கள் கண்டுள்ளனர். பிரெஞ்சுப் புரட்சியில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராடத் துவங்கிய பெண்கள், பின்னர் தங்கள் சொத்துரிமைக்காகவும் வாக்குரிமைக்காகவும் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கினர். அதேபோல் இன்றும் பல போராட்டங்களில் பெண்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக களத்தில் முன்னணியில் இருப்பதை நாம் காண்கிறோம்.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசின் தனியார் சார்ந்த மற்றும் சிறுபான்மையினரைக் குறி வைக்கும் சட்டங்களுக்கு எதிராக எழும்பும் குரல்களில் பெண்களின் குரல் தனித்துவமானது. இதற்குச் சான்றாக CAA எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களைக் கூறலாம். டில்லியின் ஷாஹீன்பாக் பகுதியில் நடைபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் பரவத் தொடங்கியதற்கு காரணம், பெண்கள் அதில் பெருமளவு பங்குபெற்றதே. இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குவது முதல் ஊடகங்களை நிர்வகிப்பது வரை ஒழுங்கமைத்து அறவழியில் போராடினர் பெண்கள்.
டிசம்பர் 2019 தொடங்கிய இந்தப் போராட்டம் மார்ச் 2020 வரை அமைதியான முறையில் நடைபெற உதவியவர்கள் பெண்கள். அரச ஒடுக்குமுறையின் விளைவுகளை அறிந்தே போராட்டக்களத்தில் குதித்த அவர்கள், வழக்குகளுக்கு அஞ்சாமல் இன்றும் தங்கள் எதிர்ப்புக்குரலை பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.
இதே போன்று கடந்த 2020-ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தனியார் சார்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதில் முன்னணி வகித்தவர்கள் பெண் விவசாயிகளே. குறிப்பாக இந்தப் போராட்டக்களம் பெண்களின் அறவழி போராட்டத்திற்கு சான்றாக உலகளவில் ஊடகங்களால் பாராட்டப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராடிய முதியவர்கள் மற்றும் பெண்களை போராட்டத்தை கைவிடுமாறு இந்திய தலைமை நீதிபதி கேட்ட போது, முடியாது என்று ஒற்றைக்குரலெழுப்பி தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள் பெண்கள். இவர்களின் இந்த மனஉறுதியே வேளாண் சட்டங்கள் ரத்தாகக் காரணமாக அமைந்தது.
தங்களின் வாழ்வாதாரமோ உரிமைகளோ பறிக்கப்படும் போது போராடத் துணியும் பெண்களுக்கு சில நேரங்களில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டுவதில்லை. தங்களின் நேர்மையான நோக்கங்களுக்காக அத்தகைய சூழ்நிலைகளையும் சமாளித்துக் களம் காண்பவர்கள்தான் இன்றைய பெண்கள்.
அதே வேளையில் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்று, அவர்களையும் களத்திற்கு அழைத்து வந்த பெண்களும் உண்டு. தமிழ்நாட்டில் இப்படி தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து போராடியவர்கள்தான் இடிந்தகரை பெண்கள். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிய இவர்கள், வழக்கமாக ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் மீன்பிடிப் படகுகளில் ஏறி கடல்வழிப் போராட்டம் நடத்தியவர்கள். இவர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைக் கலைக்க அரசும் காவல்துறையும் ஏவிய பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டு போராட்டத்தை தங்கள் தோளில் சுமந்தனர் இடிந்தகரை பெண்கள். கண்ணீர்புகை, தடியடி, சிறை சித்திரவதைகள் அனைத்தையும் எதிர்கொண்ட இடிந்தகரை பெண்கள், அணு உலைக்கு எதிரான விழிப்புணர்வை உலகிற்குக் கொடுத்தவர்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட 7 தமிழர்கள் விடுதலைக்காக தமிழ்நாடெங்கும் குரல் எழுப்பிய இயக்கங்களுக்குத் துணை நின்றதும் பெண்களே! கடந்த 2011-ம் ஆண்டு பொய்குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மூவரையும் தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடியின் இன்னுயிர் தியாகத்தால் மூவர் மரண தண்டனைக்கு எதிரான முன்னெடுப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்தது. மேலும் சட்டப் போராட்டம் மூலம் அவர்கள் தூக்கில் போடப்படுவது தடுக்கப்பட்டது. தோழர் செங்கொடியின் மரணத்துக்கு பின்னர் எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற வேட்கை பலதரப்பு மக்களையும் வேகமாக சென்றடைந்தது. இன்று விடுதலைக்காற்றை சுவாசிக்கும் எழுவரோடு தமிழ்நாடும் தோழர் செங்கொடியின் ஈகையை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது.
நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மருத்துவர் அனிதாவும், நாசகார ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிர் இழந்த தங்கை ஸ்நோலினும் இன்று பதின்பருவ பெண்களையும் அரசியல் வயப்படுத்தியிருக்கின்றார்கள். இவர்களால்தான் தமிழ்நாட்டில் பெண்களும் தற்கால அரசியலைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருக்கின்றார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எதிப்புப் போராட்டங்களும் பெண்களாலேயே முன்னெடுக்கப்பட்டன. காவல்துறையின் கடுமையான அச்சுறுத்தலையும் மீறி இந்தப் போராட்டங்கள் பெண்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.
இத்தகைய போராட்டங்களை நீர்த்து போக செய்வதற்காக காவல்துறையும் அரசு அதிகாரிகளும் திட்டமிடும்போது எத்தகைய சிக்கல்களையும் சமாளித்தவர்கள் நம் தமிழ்நாட்டுப் பெண்கள். பெண்கள் போராடும் இடங்களில் அதிகாரிகள் கழிப்பறைகளை பூட்டி சென்ற நிகழ்வுகள் நடந்த போதும், உறுதி குறையாமல் போராடியவர்கள் பெண்கள்.
தற்போது நடைபெறும் திமுக ஆட்சியிலும் பணிநிரந்தரம் கோரி போராடிய ஒப்பந்த செவிலியர்களும், ஊதிய உயர்வுக்காகப் போராடிய ஆசிரியர்களும் பல்வேறு வடிவங்களில் தங்கள் போராட்டங்களை முன்னகர்த்தினர். அவர்களின் போராட்ட முறைகள் மக்களின் ஆதரவைப் பெற்றன.
இவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய பெரும்பான்மை பெண்கள் அடிதட்டுக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். கிராமங்களில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து தங்கள் குடும்பத்தை உயர்த்தப் போராடிய செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் போராட்டக்களம் கண்டவர்கள்.
இன்று ஒவ்வொரு நாளும் நாம் கவனிக்கும் செய்திகளில் பெண்களின் போராட்டங்கள் வாடிக்கையாகி விட்டன. ஈரானிலிருந்து பரந்தூர் வரை அனைத்து இடங்களிலும் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக அணியமாகத் துவங்கி விட்டனர். இவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியில் முடிந்ததா என்பதைவிடவும் அப்போராட்டத்தின் குறிக்கோள் மிகவும் முக்கியமானது. தங்கள் கோரிக்கைகள் மக்கள் செவிகளில் விழ வேண்டும் என்பதே இப்பெண்களின் குறிக்கோள். எனவே தங்களுக்காக மட்டுமின்றி நாளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவும் போராடும் இவர்களை வாழ்த்துவோம்.