“நீங்கெல்லாம் அமைப்பா ஒன்னா இருந்திங்கன்னா அவங்க உங்க கால் தூசிக்கும் சமமில்ல” – விடுதலை இரண்டாம் பாகத்தின் திரைப்பட வசனம்
தற்பொழுது வெளிவந்து பல்வேறு அரசியல் உரையாடல்களை உருவாக்கி இருக்கும் விடுதலை திரைப்படம் பொதுவுடமை மற்றும் தமிழ்த்தேசியம் குறித்தான விவாதங்களை எழுப்பியுள்ளது. இத்திரைப்படத்தில் ”அதிகார வர்க்கம் பற்றியும், மக்கள் ஒன்றுபடுதல் பற்றியும், தத்துவங்களின் முக்கியத்துவம் பற்றியும், அமைப்பாய் மாறுதல் பற்றியும்” பல்வேறு நுணுக்கமான கருத்துக்கள் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. அந்த வகையில் விடுதலை திரைப்படம் சொல்லும் அரசியல்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது பொதுவுடமை மற்றும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு நன்மையாக இருக்கும்.
விடுதலை திரைப்படம் மக்கள் ஒற்றுமையாக, ஓர் அங்கத்தினராக, ஓர் அமைப்பாக மாற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. தனி முதலாளியோ, தனித்த தொழிலாளியோ அவர்கள் நினைப்பவற்றை முழுமையாக சாதித்து விட முடியாது என்பதை பல காலம் நமக்கு வரலாறு உணர்த்தி வருகிறது. எனவேதான் முதலாளித்துவம் எத்தகைய முரண்கள் இருந்தாலும் ஒற்றை அமைப்பின் வழியாக தங்கள் முடிவுகளை தொழிலாளர் சமூகத்தின் மீது திணித்து வருகின்றனர்.
விடுதலை திரைப்படத்தில் இரண்டு வகையான சங்கங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று கருப்பன் என்றும் பெருமாள் என்றும் அழைக்கபட்ட தோழர் வாத்தியார் மற்றும் தோழர் கே.கே ஆகிய கதைப்பாத்திரங்கள் முன்னெடுக்கும் ’விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆலைத் தொழிலாளர் சங்கம்’. மற்றொன்று முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உருவாக்கும் முதலீட்டாளர் ’உற்பத்தியாளர் பாதுகாப்பு சங்கம்’. இவை இரண்டையும் அரசு வர்க்கம் எப்படி கையாள்கிறது என்பதை இயக்குனர் வெற்றிமாறன் மிகச் சரியாக காட்சிப்படுத்தியுள்ளார்.
முதலாளிகளின் சங்கங்களைப் பற்றி பேசும் காவல்துறை அதிகாரி “முதலாளிகள் அவர்களை ‘பாதுகாத்து’ கொள்ள சங்கம் அமைக்கின்றனர்” என்று தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் கூறுகிறார். மேலும் “அவர்களுக்கு சட்டப்படியும், சட்டத்தை மீறியும் உதவிகள் (Officially and Unofficially) செய்யவேண்டும்” என்று கூறுகிறார். மேலும் “ஆயுதம் (துப்பாக்கி) வைத்துக்கொள்ள உரிமம் கேட்டால் தாராளமாக கொடுங்கள்” என்றும் சொல்கிறார்.
அதே நேரம் அக்கூட்டத்தில் பங்கெடுக்கும் அதிகாரி ஒருவர் தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் “தொழிலாளர் சங்க நபர்கள் புகார் கொடுத்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதியாதீர்கள், தாமதமாக்குங்கள்” என்று சொல்கிறார்.
சமூகத்தில் இருந்து இரண்டு சங்கங்கள்; அரசிடம் இருந்து இரண்டு பாரபட்ச பார்வைகள் ஏன்?
புரட்சியாளர் மாவோ மக்கள் புரட்சி பற்றி பேசும் போது ‘நிறுவன ஒழுங்கமைப்புப் பெற்ற பாட்டாளி வர்க்கம்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். தனி ஒரு மனிதனால் சில கொள்கைகளை வேண்டுமானால் சிந்தித்து கூற முடியும். ஆனால் மக்களின் கூட்டு சக்தியே செயல்திட்டமாக மாறும் வல்லமை கொண்டது. மக்கள் கூட்டமைப்புகளும், சங்கங்களும்தான் தீர்வை நோக்கி நகரக்கூடியது. இதுவே இடது இயக்கத்தின் அடிப்படை மூலக்கூறு.
இந்திய ஒன்றியத்திலும் இடதுசாரி இயக்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் மூலமே தமது அரசியலை முன்வைத்தன. மார்க்சிய-லெனினிய இயக்கங்களும் அதையே முன்மொழிந்தன.
இடதுசாரி இயக்கங்களின் அடிநாதமாக விளங்குவது சங்கங்களே. கட்சி அமைப்பு இடது உணர்வு மேலோங்கிய தோழர்களை ஒன்றிணைத்து விடக்கூடியது. ஆனால் அன்றாட வாழ்வில் உழைக்கும் மக்களின் ஒன்றிணைப்பு சங்கங்கள் வழியே மட்டுமே சாத்தியம். அங்கிருந்து மட்டுமே புரட்சிகர தோழர்கள் மற்றும் தலைமைகள் தோன்ற முடியும்.
“சங்கமாய் சேருங்கள்!
சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது,
சங்கமாய் சேருங்கள்!
வேலைக்காரர் சங்கமாய், கூலிக்காரர் சங்கமாய்
போராடும் சங்கமாய், புரட்சிகர சங்கமாய்
சங்கம் சங்கம் என்று சொல்லி
எங்கெங்கும் பொங்கி எழ!
சங்கமாய் சேருங்கள்!
சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது,
சங்கமாய் சேருங்கள்!”
இது மறைந்த மா-லெ இயக்கத் தோழர் கத்தார் அவர்கள் மேடைகளில் சங்கங்களின் முக்கியத்துவம் குறித்துப் பாடிய பாடல்.
எனவேதான் உலகெங்கும் இடது இயக்கங்கள் அந்தந்த தேசத் தன்மைக்கு ஏற்றாற்போல் உழைக்கும் வர்க்க சங்கங்களை உருவாக்கத் தொடங்கின. சோவியத் ரஷ்யாவில் தொழிற்சாலை உழைப்பாளர்களின் சங்கங்களாகவும், சீனாவில் விவசாயிகளின் சங்கங்களாகவும் உருவெடுத்தன.
இதே முயற்சி இந்திய ஒன்றியத்திலும் முன்னெடுக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகையால் தொழிற்சாலைகளின் தோற்றம் ஏற்பட்டிருந்தாலும், அடிப்படையில் வேளாண்மை தேசமாக இருந்ததால் இரண்டு வகையான சங்கங்களின் தேவையும் இங்கு இருந்தன. நிலத்தோடு பின்னப்பட்ட, பண்ணை அடிமைகள் போல் நடத்தப்பட்ட மக்களிடம் அவர்களின் உழைப்பிற்கும் உற்பத்திக்குமாக தொடர்பை இடது இயக்கங்கள் திறம்பட விளக்கினார்கள். அதன் விளைவாகவே கடலூர், தர்மபுரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய சங்கங்கள் தோன்றின. இச்சங்கங்களே தமது கட்டமைக்கு ஆபத்தாக இருக்கும் என்று அரசு அவற்றை ஒடுக்கும் திட்டங்களுடன் அணுகியது.
அரசு என்றால் என்ன என்பதை புரட்சியாளர் லெனின் மிக நுணுக்கமாக விளக்கியுள்ளார். “பகைமை கொண்ட வர்க்கங்கள் (அதாவது உழைக்கும் வர்க்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கம்) இடையே முரண்பாட்டை தீர்க்க இயலாத தருணத்தில் அங்கே அரசு என்ற அமைப்பு உருவாகும். மற்றொரு வகையில் சொன்னால் அரசு ஓரிடத்தில் இருக்கிறது என்றால் அங்கே வர்க்கப் பகைமை தீராமல் இருக்கிறது என்று பொருள்” என்று அரசின் தோற்றம் பற்றி கூறுகிறார். ஆனால் இது வர்க்கங்களுக்கிடையே இணக்கத்தை அல்லது சமாதானத்தை ஏற்படுத்தும் அமைப்பாக இருந்ததில்லை. புரட்சியாளர் மார்க்சின் வரிகளில் சொல்வதானால், “வர்க்க ஆதிக்கத்துக்கான உறுப்பே, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை சுரண்டுவதற்கான ஒரு உறுப்பே அரசு”.
இத்தகைய அரசு கட்டமைப்பு எப்படி ஒரு தொழிலாளர் அணியத்தை வரவேற்கும்? இதுவே காலம் காலமாய் தொழிலாளர் சங்கங்களை அரசுகள் முடக்க காரணமாக இருக்கின்றன. கடந்த மாதங்களில் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பெரிய தொழிலாளர் போராட்டம் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டமே. கடும் போராட்டங்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் தயாரானாலும் ஒரு கோரிக்கையை மட்டும் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. ஒட்டு மொத்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடையும் நிலை ஏற்படவும் அது காரணமாக இருந்தது. அந்த கோரிக்கை ‘தொழிலாளர் சங்கம்’ அமைப்பதற்கான கோரிக்கையே.
தொழிலாளர்கள் இந்த கோரிக்கையை கைவிட முடியாது என்று சொன்னவுடன் (இது போன்ற தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட) தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்க வேண்டும்? “சங்கம் அமைப்பது தொழிலாளர்களின் உரிமை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. சாம்சங் நிறுவனம் இதை தடுக்க நினைப்பது சட்டத்திற்கு புறம்பானது” என்று அறிவித்திருக்க வேண்டுமல்லவா!
ஆனால் அதற்கு மாற்றாக தமிழ்நாடு காவல்துறை, போராட்டத்தில் முன்களத்தில் நிற்கும் தொழிலாளர்களை வீட்டிற்கே சென்று கைது செய்தது. போராட வருபவர்களை நடுவழியில் பேருந்தில் ஒரு குற்றவாளியை தேடிப்பிடித்து கைது செய்வது போல் கைது செய்தது. அதுதான் அரசு.
அதே நேரம் முதலாளிகளுக்கான கூட்டமைப்புகள் தங்கு தடையின்றி செயல்பட்டு வரும். அவை தொழிலாளர் சங்கங்களை கடுமையாக முடக்கவும், அவதூறு பரப்பவும் பயன்படுத்தப்படும். இதைத்தான் கீழ்வெண்மணியில் நெல் உற்பத்தியாளர் சங்கம் செய்தது.
10ம் நாள் டிசம்பர் 1968 அன்று கீழ்வெண்மணி படுகொலை குற்றவாளி கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் வெளிவந்த நெல் உற்பத்தியாளர் சங்க அறிவிப்பில் கீழ் கண்டவாறு தெரிவித்தனர்.
“நாளது 15.12.1968 ஞாயிற்று கிழமை மாலை 5 மணி அளவில் நமது சங்கத்தின் சார்பில் ஓர் பொதுகூட்டம் கீழ் வெண்மணியில் நடைபெறும். அந்த சமயம் கீழ்க்கண்டவர்கள் சங்கத்தின் நடைமுறைகளை குறித்தும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் அராஜகப் போக்கு பற்றியும் சொற்பெருக்காற்றுவார்கள்”
விசாயிகளின் உரிமைகளை கேட்பது முதலாளிகளுக்கு அராஜகப் போக்காக தெரிந்தது. அதேநேரம் கோபாலகிருஷ்ண நாயுடு அப்பாவிகளை சுட்டுக் கொல்ல துப்பாக்கி வைத்துகொள்ள அனுமதி உண்டு. ஒரு கடைநிலைக் காவலர் சங்கம் வைக்க அனுமதி இல்லை. ஆனால் IAS மற்றும் IPS அதிகாரிகள் சங்கம் வைத்துக் கொள்ளலாம் என்பதே அரசின் கொள்கை.
உள்ளூர் என்று அல்லாமல் உலகளாவிய அளவில் முதலாளித்துவத்தின் கூட்டமைப்புகளே அரசுகளை தீர்மானிக்கின்றன. IMF (International Monetary Fund) என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம், BRICS போன்ற வர்த்தக கூட்டமைப்புகள், NATO போன்ற இராணுவக் கூட்டமைப்புகளே சர்வதேச அரசியல் போக்குகளையும், ஒரு தேசத்தில் யார் ஆளவேண்டும் எத்தகைய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்று தீர்மானிக்கின்றன.
இதை மிக நுணுக்கமாக விடுதலை திரைப்படம் காட்டியுள்ளது. அரசும், அரசு வர்க்கமும் முதலாளிகளின் நலனுக்காகவே என்பதை எல்லோருக்கும் புரியும்படி கூறியுள்ளது.
மேலும் பேசுவோம்…