உலகெங்கும் தொடரும் இனப்படுகொலைகளில் தற்போது சூடானிலும்

உலகெங்கும் தற்போது நடக்கும் இனப்படுகொலை நிகழ்வுகளுக்குத் தொடக்கப்புள்ளியாக இலங்கை இருக்கிறது. தற்போது சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்தும் ஈழ இனப்படுகொலை நடந்த போது பார்ப்பன இடதுசாரிகள் இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்தது குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அக்டோபர் 30, 2025 அன்று செய்த முகநூல் பதிவு.

சூடானில் இனப்படுகொலை வலதுசாரி அரசுகளின் இனப்படுகொலைகள் உலகெங்கும் தொடர்கின்றன. ஈழத்தில் நடந்த நாட்களில் அமைதிகாத்தவர்கள் தற்போது அச்சமடைகிறார்கள். இனப்படுகொலை போர் என்பது தொற்றுநோயை போன்றது. அது ஓரிடத்தில் நிற்பதில்லை. நோய்கிருமிகளை அழிக்காவிடில், இனப்படுகொலைகள் தொடரும்.

ஹிட்லர் தொடங்கிய நோயை, ஜோசப் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டுவந்தார். நாஜி, பாசிஸ்ட் படைகளை துடைத்தெறிந்தார்.

இலங்கை சிங்கள படைகளால் நடத்தப்பட்ட இனப்படுகொலை போரை இந்திய அரசும், அதன் தேசிய கட்சிகள் அனைத்தும் ஆதரித்து நின்றது. ரொஹிங்கியா, பாலஸ்தீனம், சிரியா சிறுபான்மையினர் இனப்படுகொலையை தொடர்ந்து சூடானில் இனப்படுகொலை என தொடர்கிறது பாசிச போர். இதன் தொடக்கப்புள்ளி இலங்கை.

‘வலதுசாரி’ராஜபக்சே, ‘லிபரல்’ரணில், ‘நடுநிலை’ மைத்ரிபால, தற்போதய ‘கம்யூனிஸ்ட்’ அனுரா என அனைவரும் சிங்கள பேரினவாதத்தை கொண்டாடுபவர்கள். ராஜபக்சேவை போரில் தள்ளிய பெருமை தற்போதைய அதிபர் ‘அனுரா’விற்கு உண்டு. அமெரிக்க அரசு திட்டமிட்ட பெரும்போருக்கான அடித்தளத்தை ஜெ.வி.பி உருவாக்கியது. விக்கிலீக்ஸை தேடினால் இலங்கை இடதுசாரிகளும், அமெரிக்க உளவுத்துறையும் நெருங்கி இயங்கியது ஆவணமாக இருப்பதை அறியலாம். (விரைவில் மே17 இயக்கம் இவற்றை அம்பலப்படுத்தும்)

சிங்கள-தமிழர் அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முதல் குரல் ‘அனுராவின்’கட்சியுடையது. JVP- US கைகோர்த்தலை சுனாமிக்கான சர்வதேச நிதிப்பங்களிப்பு விடயத்திலேயே காண இயலும். சந்திரிகா அரசு, சுனாமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஈழப்பகுதிக்கான சர்வதேச நிதியை அனுமதித்ததை எதிர்த்து நிறுத்தியது JVP. இந்த போலி-இடதுசாரிகள் தான் பாலஸ்தீனத்திற்காக குரல் எழுப்புவதாக நடிக்கிறார்கள். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை போல போலித்தனமான லிபரல் அரசை உருவாக்கிய NPP-JVP கட்சியை போன்றவர்கள்தாம் உண்மையான போர்-எதிர்ப்பு கூட்டணி உருவாவதை தடுத்தவர்கள்.

இலங்கையின் இனப்படுகொலை போருக்கு ஆதரவாக இருந்த இந்தியாவின் இடதுசாரி சிந்தனையாளர் விஜய் பிரசாத், என்.ராம் போன்றவர்கள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் அம்பலப்படாமல் போர்-எதிர்ப்பு கூட்டணி உருவாகாது. இசுரேலுடன் இராணுவ உறவு கொண்ட இலங்கையை கொண்டாடிய இந்த போலிகள், இந்தியாவிற்குள்ளாக இனப்படுகொலை போர்-எதிர்ப்பு, பேரினவாத எதிர்ப்பு உருவாவதை 2009ல் தடுத்தார்கள். இந்தியாவின் பார்ப்பன இடதுசாரிகள், இந்திய அளவில் 2009ல் உருவாகிக்கொண்டிருந்த போர் எதிர்ப்பு ஐக்கியத்தை தனிமைப்படுத்தியவர்கள்.

இந்திய இடதுசாரிகளான பேராசிரியர் சாய்பாபா, கெளதம் நவ்லாகா, ஜக்மோகன்சிங், சிம்ரஞ்சித்சிங்மான், வரவரராவ், கிலானி, அருந்ததிராய், வி.ஆர்.கிருஷ்ணய்யர், பாலகோபால், நினான்கோஷி போன்ற செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக 2009ல் போர்-எதிர்ப்பு குரலை எழுப்பிய போது, அதை தனிமைப்படுத்தியவர்கள் இந்தியாவின் பார்ப்பன இடதுசாரிகள்.

2009ல் போர் நடந்து கொண்டிருந்த பொழுது போருக்கு எதிரான கருத்தரங்கு லயோலா கல்லூரியில் நடந்தது. இதில் பங்கெடுக்க வந்த அருந்ததிராயை தடுத்தது என்.ராம் என்பது அனைவரும் அறிந்ததே. 2009 போரின் பொழுது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை அறிவிக்காமலும், ஐ.நா பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்காமலும், ஐ.நாவின் Mandateகளை நிறைவேற்றாமலும் மேற்குலகிற்கும், ராஜபக்சேவிற்கும் ஆதரவாக இயங்கியவர் கார்டன்வைஸ் எனும் இலங்கைக்கான ஐ.நா humanitarian அதிகாரி. இதை ஐ.நாவின் (ஐநா தோல்வி குறித்தாக ஆய்வு செய்த) உள்ளக விசாரணைக் குழு ’சார்லஸ் பெட்ரி’ எனும் மூத்த ஐ.நா அதிகாரி கொண்டு நடத்திய விசாரணையின் பொழுது கண்டறிப்பட்டு குற்றம்சாட்டப்பட்டார். இவர் எழுதிய ’The Cage’ எனும் புலிகள் எதிர்ப்பு நூலை காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்தது. இந்த நூலை வெளியிடுவதற்காக அருந்ததிராயை அழைத்திருந்தது காலச்சுவடு. இந்நூல் பற்றிய விவரம் அறியாமல் அவரும் பங்கெடுத்தார். இந்நிகழ்வினை எதிர்த்து மே17 இயக்கம் முற்றுகை போராட்டம் நடத்தியது. பின்னரான காலத்தில் காலச்சுவடும், தி இந்துவும் கைகோர்த்தார்கள்.

ஈழப்போரை நடத்திய இந்திய அதிகாரியான எம்.கே நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோரோடனான நட்பு என்.ராம் வழியே காலச்சுவடுக்கு கிடைத்தது. சீன தூதரை வைத்து நூல் வெளியிடுமளவு காலச்சுவட்டை ப்ரொமோட் செய்தது ‘தி இந்து’. பூணூலால் இணைக்கப்பட்ட தமிழின எதிர்ப்பு அரசியல் அது. இதன் பின்னர் ஐ.நா தீர்மானம் குறித்து கருத்தரங்கு நடத்துவதாக காலச்சுவடு கண்ணன் ஜனநாயக முகமூடி அணிந்தபோது அதை மறித்து நிறுத்தியது மே17 இயக்கம். பின்னர் எம்.கே நாராயணனை கொண்டு மியூசிக் அகடமியில் ‘ஈழ தமிழர்’ குறித்து என்.ராம், தி இந்து நடத்திய கருத்தரங்கிற்கு எதிராக போராடி கைதானது மே17 இயக்கம்.

இவ்வாறாக நுணுக்கமாக வேலை செய்தார்கள். இயன்ற அளவில் தமிழ்நாட்டிற்குள்ளாக மே17 இயக்கம் இவற்றை அம்பலப்படுத்தியது.

இந்திய அளவில் கூட்டமைப்பு உருவாவதை இந்தியதேசியவாத பார்ப்பனிய இடதுசாரிகள் நிராகரித்தார்கள், ஊடகங்களில் இருட்டடிப்பு செய்தார்கள். Congress-BJP ஆகியோருடன் இந்திய பார்ப்பன கம்யூனிஸ்டுகள் கைகோர்த்த வரலாற்று துயரம் அது. இதனாலேயே தந்தை பெரியார் இந்திய அளவிலான பார்ப்பன அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தி, எதிர்த்து போராடினார். இவர்களில் மராத்தியத்தின் பேராசிரியர்.சாய்பாபா சிறைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார், ஆந்திராவின் புரட்சிகவிஞர் வரவராவ் நீண்டநாள் சிறைவாசியானார்.

இலங்கையின் போரை இந்தியாவிலிருந்து நடத்திய அதிகாரிகள் பெரும்பாலானோர் தென்னிந்திய பார்ப்பனர்கள். இவர்களே அமைதிப்படையை அனுப்புவதை முடிவு செய்தவர்கள் என ராஜஸ்தானை சேர்ந்த முன்னால் அமைதிப்படை இராணுவ அதிகாரி வெளிப்படையாக டிவிட்டரில் எழுதினார். அமைதிப்படையின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிராத் சிங் தென்னிந்திய பார்ப்பனர்களின் தமிழின வெறுப்பை ஆவணமாக புத்தகமாக எழுதிவெளியிட்டார்.

இந்திய அளவில் இந்த பாசிச கூட்டணிக்கு எதிராக ஜனநாயக-இடதுசாரி கூட்டணி உருவாவதை சில இடதுசாரி பார்ப்பனர்களே தடுத்தனர். CPI (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மட்டுமே போருக்கு எதிராக பேரணியை டில்லியில் நடத்தியது. அதன் தலைவர் தோழர் து.ராஜா, 2009 டிசம்பரில் பாராளுமன்றத்தில் ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை’ என அறிவித்தார். காங்கிரஸும், பாஜகவும் அதை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வைத்தனர். 2009க்குபின் ஈழப்படுகொலை குறித்த எந்த சர்வதேச ஆவணமும் இந்தியாவிற்குள்ளாக விவாதம் ஆவது பார்ப்பன ஊடகம், பார்ப்பன லிபரல் அறிஞர்கள், பார்ப்பன இடதுசாரிகளால் தடுக்கப்பட்டது. இவர்களுடன் திமுக தலைமையும் இணைந்தது. தமிழ்நாட்டிற்குள்ளாக ‘தெலுங்கு சதி’ என பார்ப்பன கைகூலிகளால் மடைமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ‘இனப்படுகொலை’ போரை நடத்திய பார்ப்பன கும்பல் காப்பாற்றப்பட்டது. இதை கேள்வி கேட்டவர்களை ‘தெலுங்கர்’ என முத்திரை குத்துவது தொடர்கிறது. எமது போராட்டமும் இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக தொடர்கிறது.

சூடானில் நடக்கும் அவலம் குறித்த காணொளியை கீழே கமென்டில் இணைத்திருக்கிறேன். அவசியம் காணவும். சூடான் குறித்த விரிவான கட்டுரை எமது குரல் இதழில் வெளியாகும்.

https://www.facebook.com/share/p/1BssqWW9WJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »