கொரோனாவும் தொடரும் ஈழ இன அழிப்பும்

உலகையே இந்த கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையால் மக்கள் குவியல் குவியலாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் இந்தப் பேரிடரைப் பயன்படுத்தி திரைமறைவில் முதலாளித்துவ நாடுகள் சில, தங்களது ஆதாயத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிற அமெரிக்கா, சிரியாவுக்கு அருகில் புதிய இராணுவத் தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இங்கிலாந்தும் அமெரிக்காவும் பொருளாதார உடன்படிக்கைகளுக்காகப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இப்படியாக சொந்த மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது அதிகாரத்தை உலகில் நிலைநிறுத்தும் வேலைகளைச் செய்து வருகின்றன.

இதில், ஆசியாவில் இருக்கிற இந்தியாவும், இலங்கையும் வித்தியாசமானவை. கொரோனா தொற்றைச் சமாளிக்க முடியாமல் சொந்த மக்களில் ஒரு பகுதியினரான (இஸ்லாமியர்களையும், தமிழர்களையும்) எதிரிகளாக்கி இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தையும், இலங்கையில் சிங்கள பவுத்த ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இலங்கையைப் பொருத்தவரை அங்கு மார்ச் 20 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கண்டி, கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகள் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதில் தமிழர் பகுதிகளில் முறையாகச் சோதனை செய்யாமலும், உரிய நிவாரணம் கொடுக்காமலும் தனது தமிழின வெறுப்பைக் காட்டி வருகிறது சிங்கள அரசு.

ஏப்ரல் 6 ஆம் தேதி வரை அங்கு ஒரு நாளைக்கு 750 -லிருந்து 1000 பேர் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 166 பேருக்குச் சோதனை செய்தால் அதில் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, சோதனையை அதிகப்படுத்த வேண்டுமென்று ’இலங்கை அரசு மருத்துவர்கள் சங்கம்’ அறிக்கை விடுமளவுக்கு மெத்தனமாக இனப்படுகொலை இலங்கை அரசின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. ஆனால், இதனைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் தமிழர் பகுதிகளில் இராணுவத்தைக் குவிப்பது, தமிழர்களின் பூர்வீக இடங்களை அபகரிப்பது, அதில் சிங்களக் குடியேற்றங்களை அமர்த்துவது எனத் தமிழின அழிப்பைத் தொடர்ந்து சிங்கள அரசு செய்து வருகிறது.

தமிழர் பகுதிகளில் இராணுவக் குவிப்பு:

இந்தப் பேரிடரைப் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் அதிகளவு இராணுவத்தைக் குவிக்கும் வேலையில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, 2009-க்குப் பிறகு முல்லைத்தீவு பகுதிகளில் நான்கு ஈழத்தமிழருக்கு ஒரு இராணுவ வீரர் என்றிருந்த நிலை தற்போது இரண்டு ஈழத் தமிழருக்கு ஒரு இராணுவ வீரர் என்று மாறியிருப்பதாக ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நெட் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், இந்த இராணுவக் குவிப்பு மூலம் தமிழ்ப் பகுதிகளில் அனைத்து அரசு வேலைகளும் அரசு அதிகாரிகளிடமிருந்து இராணுவத்திற்கு மாறி விட்டதாகவும், அதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் அரசு கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட யாரையும் அவர்களது வேலைகளைச் செய்யவிடாமல் இராணுவம் தடுப்பதாகவும் யாழ்ப்பாண அரசு அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் மனு அளிக்கும் கொடுமை நடந்திருக்கிறது.

தமிழர் பகுதிகளில் நிலைபெற்றிருக்கும் இந்த சிங்கள இராணுவ வீரர்கள் தான் நிவாரணப் பொருள்களை வீடு வீடாக விநியோகித்தல், தடுப்பு முகாம் அமைத்துக் கண்காணித்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதிலும், தமிழர் பகுதிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் கொடுக்கும் நுழைவுச் சீட்டைக் கொண்டு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கும் இராணுவம், தனியாக இராணுவத்திடமும் அனுமதி வாங்க வேண்டுமென்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறதாம். இதே கெடுபிடியைத்தான் கடல் வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்தல் உள்ளிட்ட வேலைகளிலும் இராணுவம் செய்கிறது.

அதுமட்டுமில்லாமல், இலங்கையில் தமிழர் அல்லாத பகுதிகளில் குறிப்பாக தெற்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 1100 பேரை உள்ளூர் அதிகாரிகளுக்கு எந்தவித அறிவிப்பும் செய்யாமல் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் ’தனிமைப்படுத்தும் முகாம்கள்’ இலங்கை இராணுவத் தளபதி இனப்படுகொலை குற்றவாளி சவேந்திர செல்வாவின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, 2009 போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளைச் சித்திரவதை செய்து கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரகசிய அறைகள் போல இந்த பேரிடர் காலத்திலும் இரகசிய அறைகள் அமைக்கப்படுவதாக யாழ்ப்பாண அரசு சாரா நிறுவனம் மனித உரிமை அமைப்புக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. இந்த இரகசிய அறையில் என்ன நடக்கிறதென்று வெளியுலகத்திற்குத் தெரியவில்லை. ஆகவே, இந்த முகாம்களைக் கண்டறிந்து அகற்ற வேண்டுமென்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் ’தனிமைப்படுத்தும் முகாம்களில்’ எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், அனைவரும் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஒரே ஒரு டைனிங் டேபிள் மற்றும் அனைவரும் கைகழுவுவதற்கு ஒரே ஒரு ’வாஷ் ரூம்’ மட்டுமே இருக்கிறது; இப்படி இருக்கக்கூடாது; இதனாலேயே தொற்று அதிகமாகும் என்றும் இங்கிலாந்தில் படித்த சிறந்த மருத்துவரும் இலங்கை அரசின் சிறப்பு ஆலோசகருமான தமிழர் ‘முரளி வள்ளிபுரநாதன்’ ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய இரு தினங்களிலும் அறிக்கை கொடுத்திருந்தார். இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத இலங்கை அரசு, ஏப்ரல் 17 ஆம் தேதி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜேவைக் கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், வள்ளிபுரநாதன் தமிழர் என்பதால் இனப்பகையுடன் நடந்து கொள்கிறார் என்று ஆதாரமற்ற தமிழின வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

டாக்டர் முரளி வள்ளிபுரநாதன்

இதன்பின் இந்த உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு, சிங்கள இராணுவத்தால் தமிழர் பகுதிகளில் இருக்கும் 50 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரிகள் ’தனிமைப்படுத்தும் முகாம்களாக’ மாற்றப் பட்டிருக்கின்றன. அங்கு என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்குமென்பதை நாமே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். ஏற்கனவே 2013-லிருந்து தமிழர் பகுதிகளில் இருக்கும் மழலையர் பள்ளிகளை சிங்கள இராணுவம் நடத்தி வருவது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழர் பகுதிகளின் அனைத்து நடவடிக்கையிலும் காவல்துறை, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ’குடிமை சமூக அதிகாரிகள்’ அனைவரையும் புறந்தள்ளிவிட்டு சிங்கள இராணுவம் கைப்பற்றியிருப்பது, தமிழர் பகுதியை இராணுவ மயமாக்கும் சிங்கள அரசின் தமிழினப் படுகொலையின் தொடர்ச்சியே.

தமிழரின் பூர்வீக இடத்தை அபகரித்தல் மற்றும் சிங்கள குடியேற்றம்:

தமிழர்கள் தனித்த தேசிய இனம் என்பதற்கு அடிப்படையாக இருப்பதே அவர்கள் குறிப்பிட்ட நிலப்பகுதிக்குள் (வடக்கு கிழக்கில்) வாழ்கிறார்கள் என்பதுதான். ஆகவே, அதனை மாற்ற வேண்டுமென்று சிங்கள அரசுகள் தொடர்ச்சியாகத் தமிழர் பகுதிகளை ஆக்கிரமிப்பதையும், அங்குச் சிங்கள குடியேற்றங்களைத் திட்டமிட்டு ஏற்படுத்துவதையும் ஒரு வேலைத் திட்டமாக பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றன.

இலங்கை சுதந்திரமான பின், சுமார் 14 ஆயிரம் சதுர கிலோமீட்டராக இருந்த தமிழர் பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிங்கள அரசு அபகரித்து, 7500 சதுர கிலோமீட்டர் என்றளவில் விடுதலைப் புலிகளின் வருகைக்கு முன் சுருக்கி விட்டது. 2009 வரைக்கும் தமிழர் பகுதியின் ஒரு பிடி மண்ணைக்கூட சிங்கள அரசு அபகரித்து விடாதபடி விடுதலைப் புலிகள் தங்கள் தாய்மண்ணைக் காத்தார்கள். ஆனால், 2009-க்குப் பிறகு நிலைமை மாறி இன்று அதிவேகமாகத் தமிழர் பகுதிகளைப் பறிப்பதும், அங்குச் சிங்களக் குடியேற்றம் நடத்துவதும் நடைபெற்று வருகிறது. இடையில் இதற்கு எதிராக ஈழத்தமிழர்கள் தங்களது நிலம் மீண்டும் தங்களுக்கு வேண்டுமென்று போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால், சர்வதேசத்திடம் தனது இன அழிப்பு அம்பலப்பட்டுப் போனதை அடுத்து, சிறிது காலம் நிலப்பறிப்பை நிறுத்தி வைத்தது இலங்கை அரசு. இப்போது பேரிடரைப் பயன்படுத்தி மீண்டும் தமிழர்களின் நிலத்தை அபகரிப்பதையும் சிங்கள குடியேற்றத்தையும் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

மன்னார் மாவட்டத்திலிருந்து 45 கிலோ மீட்டருக்கு தெற்கில் 1000 ஏக்கரில் இருக்கும் ’முள்ளிக்குளம்’ எனும் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இலங்கை கடற்படை தனது ‘வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம்’ அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

2013-ல் இலங்கையின் இராணுவ அமைச்சராக கோத்தபய இராசபக்சே இருந்தபோது, 35 ஏக்கரில் கடற்படை கட்டளைத் தலைமையகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 77 ஏக்கர் இடம், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க மன்னார் மாவட்ட கத்தோலிக்க திருச்சபையினால் வீடு கட்டுவதற்காக இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதிபராக கோத்தபய பொறுப்பேற்றவுடன், இந்த பேரிடரைப் பயன்படுத்திக் கிடப்பிலிருந்த திட்டம் மீண்டும் தொடங்கப் பட்டிருக்கிறது. அதிலும், ஏற்கனவே இருந்த 35 ஏக்கருடன் சேர்ந்து ஈழத்தமிழர் மறுவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட 77 ஏக்கர் நிலத்தையும் சிங்கள கப்பற்படை எடுத்துக் கொண்டது.

தங்களின் கண்ணெதிரே தங்களது பூர்வீக இடத்தை சிங்கள இராணுவம் அபகரிப்பதைத் தடுக்க ஈழத்தமிழர்கள் போராடியும் ஒரு பலனுமில்லை. மேலும், இங்கே கப்பற்படை தளம் அமைக்கப்படுமாயின் அவர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்படும். எனவே, மீதமிருக்கிற தமிழர் நிலமும் விரைவில் பறிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் சிங்களக் குடியேற்றமும் பெருவாரியாக நடைபெறும். இதேநிலை தொடர்ந்து ஏற்பட்டால் முள்ளிக்குளத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்பதற்கான சுவடே எதிர்காலத்தில் இல்லாமல் துடைத்தெறியப்படும். இப்படித் திட்டமிட்ட இன அழிப்பை இந்த பேரிடரைப் பயன்படுத்தி மிக வேகமாகத் தமிழர் பகுதிகளில் இனப்படுகொலை இலங்கை அரசு செய்து வருகிறது.

தமிழ் அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கும் இலங்கை அரசு:

இந்த பேரிடரைப் பயன்படுத்தி இலங்கை சிறையில் இருக்கும் (கடுமையான) சிங்களக் குற்றவாளிகள் 2,961 பேரை இனப்படுகொலை இலங்கை அரசு விடுதலை செய்திருக்கிறது. இதில் பத்தாண்டுகளுக்கு மேலாக எந்தவித குற்ற அறிக்கையும் தாக்கல் செய்யப்படாமல் வெறும் விசாரணை சிறைவாசியாக இருக்கும் 84 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரைக்கூட சிங்கள அரசு விடுதலை செய்யவில்லை. கொடுமை என்னவென்றால், 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 5 வயதுக் குழந்தை மற்றும் 2 இளைஞர்கள் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசின் இராணுவ அதிகாரி ‘சுனில் ரத்நாயக்கவுக்கு’ 2015-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பேரிடரைப் பயன்படுத்தி அவசர அவசரமாக அந்த கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்திருக்கிறது.

(5 வயதுக் குழந்தை உள்ளிட்ட எட்டு தமிழர்களை 2000-ல் படுகொலை செய்த இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க 2015-ல் கைது செய்யப்பட்டபோது)

10,000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறையில் 26,000 பேரை அடைத்து வைத்திருக்கிறது இலங்கை அரசு. இதனால், கொரோனா தொற்று இங்கு பரவ வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தபின், சிங்களக் கொலையாளிகளை விடுதலை செய்த சிங்கள அரசு, தமிழ் அரசியல் சிறைக்கைதிகளின் விடுதலையை மறுத்திருக்கிறது. இத்தனைக்கும் தமிழர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சிறைக் கைதிகளை விடுதலை செய்வோமென்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துத்தான் தற்போதைய இராசபக்சேக்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், 2009-ல் இருந்த அதே இனவழிப்பை தான் இப்போதும் இந்த இராசபக்சேக்கள் தொடர்கிறார்கள்.

இப்படி அப்பட்டமாக, சர்வதேச சமூகத்திடம் 2015-ல் ஐ.நாவில் அமெரிக்கா இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தை ஒப்புக்கொண்ட அனைத்து சாரத்தையும் இந்த பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி மீறுகிறார்கள். இதைச் சம்பந்தப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்குமா என்றால், அவர்கள் தற்போது இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக எப்படி மாற்றலாமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரிடரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாகக் குறைந்திருக்கிறது. இதனால், தற்போது அதிகளவில் எண்ணெய்யை வாங்கி சேர்த்து வைத்துக் கொண்டால் பிற்காலத்தில் நல்ல பலன் என்று இந்தியா யோசித்து வருகிறது. இதனால் தான், ஒருபக்கம் இந்தப் பேரிடரில் இந்திய மக்களுக்குப் பெரிதாக எந்த நிதியுதவியும் செய்யாமல் இந்தியப் பிரதமர், ’கைதட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள்’ என்று மக்களை ஏமாற்றி வருகிறார். மறுபக்கம், இந்த நிதியைக் கொண்டு அரபு நாடுகளிலிருந்து அதிகப்படியான எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தயாராகி வருகிறார்.

ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில், எண்ணெய்யைச் சேமித்து வைக்குமளவுக்கு இந்தியாவிடம் ’சேமிப்புத் தொட்டிகள்’ இல்லை. ஏனென்றால், ஏற்கனவே இந்தியாவில் எண்ணெய் இருப்பு அதிகமாகவே இருக்கிறது. எனவே, இந்த சமயத்தில் சேமிப்பதற்கு புதிய சேமிப்புத் தொட்டிகள் இந்தியாவுக்குத் தேவை. அதற்கு இலங்கை அரசு தேவை. ஏனென்றால், இலங்கையில் தமிழர் பகுதியில் இருக்கும் இயற்கைத் துறைமுகமான திரிகோணமலையில் எண்ணெய்யைச் சேமித்து வைக்கும் 99 டேங்குகள் இருக்கின்றன. ஏற்கனவே இதில் 50 தொட்டிகள் இந்தியாவின் ’இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கு’ இலங்கை அரசால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது மீதமிருக்கிற தொட்டிகளையும் கேட்டு வாங்க வேண்டுமென்று பெங்களூரைச் சேர்ந்த ’தக்ஷாஷிலா இன்ஸ்டிடியூஷன்’ என்ற சிந்தனைக் குழுவின் உதவி பேராசிரியர் அனுபம் மனூர் ஏப்ரல் 22 அன்று இந்துஸ்தான் டைம்ஸில் கட்டுரை எழுதினார்.

ஆனால், இந்தியாவின் இந்த முயற்சிக்கு சீனாவும் ஜப்பானும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. ஏனென்றால், இதே திரிகோணமலை தொட்டியை ஏனைய நாடுகளும் கோருகின்றன. ஆகவே, இதை எப்படியாவது தங்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நாடுகள் துடிக்கின்றன. அதற்கு இலங்கையில் தற்போதைக்கு இருக்கும் தமிழர் பிரச்சனையைப் பேசுவதுபோல் நாடகமாட முயற்சி செய்து வருகிறது இந்தியா. சமீபகாலத்தில் தொடர்ச்சியாக, தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு சரியாக நிவாரணம் கொடுக்கவில்லை என்று சிங்கள இரத்னா விருது வாங்கிய என்.ராம் தலைமையிலான இந்து பத்திரிக்கை எழுதுகிறதென்றால் அதற்குப் பின்னால் இந்தப் பொருளாதார நன்மை மறைந்திருக்கிறது.

இப்படி சர்வதேச நாடுகள் தங்களது நலனுக்காக இலங்கையை அணுகுகின்றன என்பது தெரிந்ததால் தான் சிங்கள அரசு எந்தவித சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது. ஆக, விடுதலைப்புலிகள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடும், இலங்கையில் ஆட்சி மாற்றம் வந்தால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடும், இலங்கையின் அரசியல் சட்டம் மாறினால் தமிழருக்கு விடிவு கிடைக்கும், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்தால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடும் என்று சொல்லப்பட்ட அனைத்தும் பொய்யென்று நிரூபணமாகி இருக்கிறது. இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பு தீர வேண்டுமென்றால் ’தனித்தமிழீழம்’ என்பதே ஒரே தீர்வு என்பதை வரலாறு மீண்டுமொரு முறை உணர்த்தி இருக்கிறது.

Translate »