வெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி

அமெரிக்க ஒன்றியத்தில் வெள்ளையின காவல் துறையினரால் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்டின் படுகொலை நிகழ்வு பெரும் கிளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த எழுச்சி அலை ஐரோப்பாவின் வீதிகளில் எதிரொளிக்கிறது. வாரக்கணக்கில் நடந்து வரும் இந்தப் போராட்டம் பல தரப்பு மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது.

கருப்பின மக்களோடு வெள்ளையினத்தைச் சார்ந்த பலரும் கை கோர்த்திருப்பது இப் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறது. கொரோனா தொற்றினால் லட்சம் அமெரிக்கர்கள் இறந்து கொண்டிருக்கும் காலத்தில் நடந்த இந்த மக்கள் எழுச்சியானது ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் வெட்டியெறிந்துவிட்டு அரசை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.

நோய்த்தொற்று, மரண பயத்தை விட உரிமைக்கான போராட்டம் என்பது முதன்மையானது என்பதை இப்போராட்டம் சொல்லுகிறது. கொரோனா தொற்றினை மிக மோசமாக கையாண்ட அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் பெருமளவில் மக்கள் மாண்டார்கள். இதில் பெரும்பான்மையோர் கருப்பின மற்றும் ஏழை எளியவர்கள் என்பது அமெரிக்காவின் கொடூர முதலாளித்துவ, லாபநோக்கிலான சுரண்டல் அமைப்பை அம்பலப்படுத்தியது.

அப்படியான ஒரு ஏற்றத்தாழ்வு வெளிப்படையான காலத்தில் நடந்த இந்தப் படுகொலை மக்களை ஒன்று திரட்டி இருக்கிறது. மக்கள் அலை அலையாக திரண்டெழுந்து வெள்ளை மாளிகையை முற்றுகைக்குள்ளாக்கினார்கள். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் அதிபர் வெள்ளை மாளிகையின் பதுங்கு குழிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நிற வெறி, அடிமை வணிகம் செய்தவர்களின் சிலைகள் உடைத்தெறியப்பட்டன. கொலம்பஸ் போன்ற இனவெறியரின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இது இங்கிலாந்திலும் தொடர்ந்தது. கருப்பின மக்களை இழிவு படுத்தும் வகையில் காட்சியமைத்திருந்த உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ’கான் வித் த விண்ட்’ காணொளிப் பதிவுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. காவல்த் துறையினரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நெடுந் தொடரை தொலைக்காட்சி நிறுவனம் நிறுத்தியது. ஜார்ஜ் ப்ளாய்ட்டினை படு கொலை செய்த மின்னியாப் போலீஸ் நகர சபை காவல் துறை அமைப்பைக் கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது.

பல இடங்களில் காவல்த்துறை அதிகாரிகள் மண்டியிட்டு மன்னிப்பினைக் கோரினர். ஆனாலும் அமெரிக்க அதிபரின் வெள்ளை இன வெறி ட்விட்டர் செய்திகள் வன்முறையை தூண்டும் விதத்திலேயே வெளிப்பட்டன. இம்முறை நடக்கும் இந்த ‘கருப்பின வாழ்க்கை முக்கியமானது’ எனும் வாசகத்துடனான போராட்ட எழுச்சியில் இடதுசாரிக் கொள்கையாளர்களும், அக்கருத்தியலும் எழுச்சிப் பெற்றது.

இன்னும் சொல்ல வேண்டுமெனில் ப்ளாக் பேந்தர்ஸ் எனப்படும் கருஞ் சிறுத்தை அமைப்பும், கருப்பின மக்களின் விடுதலைக்காக ஏகாதிபத்திய-வெள்ளை இனவெறி அரசியலை துணிச்சலாக போர்க்குணத்தோடு எதிர்த்த புரட்சிப் போருக்கு அணியமாகச் செய்த மால்கம் எக்ஸ்சின் கருத்தியல் முகாமையான பாத்திரத்தை வகிக்கிறது.

தீவிர இடது சாரித்தன்மை இப் போராட்டத்தில் வெளிப்படுவதாக மேற்குலக பத்திரிக்கைகள் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டன. மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்ட காலமான 1960களில் இருந்து இன்று வரை அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் காணவில்லை எனும் பொருளாதார ஏற்றத் தாழ்வு அப்பட்டமான உண்மை. 1960களில் வெள்ளை இனத்தவரின் வருமானம் என்பது கருப்பின குடும்பத்தினரின் வருமானத்தை விட 7 மடங்கு அதிகமாக இருந்தது.

60 ஆண்டுகள் கழித்தப் பின்னர், ஒரு கருப்பினத்தைச் சார்ந்தவர் –ஒபாமா- அதிபராக வந்தப் பின்னர் இந்த வருமான வேறுபாடு என்பது 6.6 சதமாக இன்றளவும் நிலவுகிறது. இந்த வர்க்க வேறுபாடும், சமூக அநீதியும் கருப்பின மக்களை எழுச்சியுற வைத்திருக்கிறது.

இந்தப் போராட்டம் என்பது இன வெறிக்கு எதிரானப் போராட்டம் மட்டுமல்ல, கட்டற்ற லாப நோக்குடன் தன் சொந்த மக்களையேச் சுரண்டிய அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி. இந்த எழுச்சி அமெரிக்காவை மட்டுமல்ல மேற்குலகம் முழுவதையுமே ஆட்டம் காண வைத்திருக்கிறது. இது போன்றதொரு எழுச்சி இந்தியத் துணைக் கண்டத்தில் எழுவதற்கான அனைத்துச் சூழலையும் இந்துத்துவ அரசு உருவாக்கி வைத்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்தப் போராட்டம் இந்தியாவின் பாசிஸ்டுகளை அச்சம் காண வைத்திருக்கிறது. ஏகாதிபத்தியம், பாசிசம், நிறவெறி, சாதியவெறி ஆகியவற்றின் வீழ்ச்சியை இந்த நூற்றாண்டு உருவாக்கும் எனும் நம்பிக்கையே நாம் இந்த பூவுலகிற்கு கொடுக்கும் நம்பிக்கைக் கீற்றாக இருக்க முடியும்.

இம்மாதிரியான வலதுசாரி உலக ஒழுங்கில் தமிழ்த்தேசிய எழுச்சியே தமிழர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கும் அரசியல் கருத்தியலாக அமைகிறது. தமிழர்களின் அரசியல் உரிமைகள் நசுக்கப்பட்டு அடிமைகளாக மாற்றப்படுவது தொடர்கிறது. இந்திய அரசின் இந்த எதேச் சதிகாரப் போக்கினைக் கண்டித்து எந்த ஒரு தேசியக் கட்சியும் குரல் எழுப்பவில்லை. மாநில உரிமைகள் அடிப்படையில் தேசிய இன உரிமைகளே.

மிகக் குறைந்த உரிமைகளோடு இயங்கி வந்த மாநில உரிமையைக் கூட பறித்துக் கொண்டிருக்கிறது இந்திய மோடி அரசு. இதற்கு மேலும் தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக ஒன்று கூடவில்லையெனில் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும். இந்த இழி நிலையை தேர்தல்கள் மாற்றிடாது. ஆட்சி மாற்றங்கள் சாத்தியம் செய்திடாது. ஒன்றுபட்ட மக்கள் விழிப்புணர்வே இந்த மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

Translate »