வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! சாதிவெறியர்களை காக்கும் ஒருதலைபட்ச விசாரணையை நிராகரித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததை குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரப்பட்ட வழக்கில் பதிலளித்த அரசு தரப்பு, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், புகாரளித்த பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என்று கூறுகிறது. உண்மை குற்றவாளிகளான சாதியவாதிகளை காப்பாற்றும் வகையில் அரசு எந்திரம், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கியுள்ளதாக மே பதினேழு இயக்கம் கருதுகிறது.
வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள இடைநிலை சாதியை சேர்ந்த பத்மா முத்தையா, வேங்கைவயல் தலித் மக்கள் பகுதிக்கான குடிநீர் பற்றாக்குறையை நீக்குவது குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமால், சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று அக்டோபர் 2, 2022 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அறிக்கை வாசித்துள்ளார். தற்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முரளிராஜாவின் நெருங்கிய உறவினர்கள் முருகன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அதனை கேள்வி எழுப்ப, வாக்குவாதமாகிறது. தண்ணீர் திறந்துவிடும் மாற்று சமூகத்தை சேர்ந்த சண்முகம் என்பவரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதன் பிறகு, சொந்த செலவில் தனியாக தண்ணீர் தொட்டி அமைத்து ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் தண்ணீர் குழாய் அமைத்து கொடுத்துள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர்.
இதன் பின்பு சில நாட்கள் கழித்து, தலித் சமூகத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகள் டிசம்பர் 24, 2022 அன்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மாசுபட்ட குடிநீரை அருந்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது. ஊர் மக்கள் குடிநீரில் கெட்ட நாற்றம் வருகிறது என்று கூறியுள்ளனர். சந்தேகமடைந்து, தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் நீர்த்தேக்க தொட்டியில் ஏறி சோதனையிட, தண்ணீர் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக கனகராஜ் புகாரளிக்க, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின்பே தமிழ்நாடு முழுக்க செய்தி பரவி பிரச்சனை தீவிரமடைந்தது.
காவல்துறை விசாரணை முறையாக நடைபெறாமல் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. முக்கிய தடயமான அசுத்தப்படுத்தப்பட்ட தொட்டியின் தண்ணீரை தடயவியல் சோதனைக்கு கூட எடுக்காமல் அதிகாரிகளின் முன்னிலையில் அகற்றியுள்ளனர். இந்நிலையில், மக்கள் போராட்டத்திற்கு பிறகு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போதும் அதே நிலை தான். மேலும் ஒரு நபரை பணம் கொடுத்து குற்றவாளியாக்க நடைபெற்ற முயற்சியும் வெளிவந்தது. வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களும், சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோரை குற்றவாளியாக்க முயற்சி நடைபெறுகிறது என்று கடந்த ஜூன் மாதம் அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தான், ஊராட்சி மன்றத் தலைவரான பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் கெட்ட நாற்றம் வருவதாக முரளிராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும் கூறி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுவிடும் என்ற சூழலில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதை அறிய முடிகிறது.
தாங்கள் குடிக்கும் குடிநீரில் தாங்களே எப்படி கழிவை கலக்க முடியும் என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகின்றனர் குற்றம்சாட்டப்பட்டவர்கள். மாசுபட்ட குடிநீரை குடித்து ஒரு மாணவி பாதிக்கப்பட்ட நிலையில், ஊர் மக்கள் குடிநீரில் கெட்ட நாற்றம் வருகிறது என்று கூறிய பின்னரே ஊர் மக்கள் முன்னிலையில் தொட்டி மீது ஏறி சோதித்துள்ளனர் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. அப்போது ஆதாரத்திற்காக எடுத்த காணொளியை குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு அவர்களுக்கு எதிரானதாக மாற்றும் வேலையை சிபிசிஐடி செய்துள்ளது. உள்ளூர் காவலர்கள் சித்திரவதை செய்தும், சிபிசிஐடியினர் உளவியியல் ரீதியாக துன்புறுத்தியும் குற்றத்தை ஏற்றுக்கொள்ள சொல்லியுள்ளனர். தற்போது ஆதாரத்திற்கு அளித்த காணொளி, மற்றும் பணினிமித்தம் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை வெட்டி, ஒட்டி, திரித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பல மாதங்களுக்கு முன்பே காவல்துறையினரிடம் கிடைத்தும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் குற்றத்தை ஒத்துக்கொள்ள வைக்க சிபிசிஐடி ஏன் முயற்சித்தது என்ற கேள்வி எழுகிறது! ஊராட்சி மன்றத் தலைவருடனான முன்பகையை சாதிய கண்ணோட்டத்தில் அணுகாமல் தனிப்பட்ட பிரச்சனை என்று கூறுவதன் நோக்கம் என்ன? குற்றத்திற்கு முக்கிய ஆதாரங்களான காணொளி மற்றும் தொலைபேசி உரையாடல்களை காவல்துறையினர் வெளியிட்டது ஏன்? அதுவும் முழுமையாக இல்லாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சந்தேகம் உண்டாகும்படி ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டது ஏன்? தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை நடைபெறுகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியதை உண்மையாக்கும் வகையில் தான் குற்றப்பத்திரிக்கையும் , காவல்துறையினர் செயல்பாடும் உள்ளது.
இப்படியாக முன்முடிவோடு நடத்தப்பட்ட விசாரணையையும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் குற்றப்பத்திரிக்கையையும் மே பதினேழு இயக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது. இந்த வழக்கு புதிய கோணத்தில் தொடக்கத்திலிருந்தே மறுவிசாரணை செய்யப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் கருதுகிறது. இந்த விசாரணை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை, அதற்கான பொறிமுறைகளை பின்பற்றி முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இவ்வழக்கில் சாதியவாதிகளை காக்கும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. சாதி ஒழிந்த சமூகத்தை கட்டமைக்க வேண்டிய கடமை தமிழ்த்தேசியத்திற்கு உண்டு என்பதை நினைவில்கொள்வோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
30/01/2025