தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அம்பலப்படுத்தும் விதமாக ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது மே17 இயக்கம். இந்த பரப்புரையில் போலித் தமிழ்தேசியவாதியான சீமான் ஈரோட்டு மக்களின் பிரச்சினைகளை மடைமாற்றும் நோக்கில் செய்து வரும் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டினார் தோழர் திருமுருகன் காந்தி. சனவரி 27, 2025 அன்று தொடங்கிய பரப்புரை ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது.
தமிழ்த்தேசிய கூட்டணியைச் சேர்ந்த தோழர்கள் ஒரு வார காலத்திற்கும் மேலாக தொகுதி மக்களிடம் துண்டறிக்கை வழங்கி பரப்புரை செய்தனர். பரப்புரையின் இறுதி கட்டமாக பிப்ரவரி 2, 2025 அன்று மாலை 6 மணிக்கு, தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக BPஅக்ரகாரத்தில் ஊடக சந்திப்பும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. முன்னதாக நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெடிகுண்டு வீசுவதாக மிரட்டியதற்கும், நாதக கட்சியினர் தேர்தல் பரப்புரையில் நடத்தும் வன்முறை வெறியாட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, தமித்தேசிய கூட்டணியை சேர்ந்த தோழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சுயேச்சை வேட்பாளர் வெண்ணிலா அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது நாதக கட்சியினர் கற்கள், உருட்டுக் கட்டைகள் காட்டி மிரட்டியதை ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம் புகாராகவும் அளித்தனர்.
பிப்ரவரி 2, 2025 அன்று மாலை அக்ரகார பகுதியில் நடைபெற்ற ‘வெல்க பெரியார்-வெல்க பிரபாகரன்‘ பொதுக்கூட்டத்தில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.செரீப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்ட நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:
இது ஒரு வித்தியாசமான பொதுக்கூட்டம். வழக்கமாக தோழர் செரீப் அவர்களும் தோழர் குடந்தை அரசன் அவர்களும் நானும் மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டமும் பொதுக்கூட்டமும் நடத்துவோம். அத்தகைய நிகழ்விற்காகத்தான் நாங்கள் அதிகம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தேர்தலுக்காக மேடை போட்டு மக்களை சந்திக்கும் முதல் அனுபவமாக இந்த அனுபவம் இருக்கிறது. எங்களுக்கெல்லாம் மூத்த தோழராக இந்த மண்ணிலே திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைத்த அரசியலை செய்து கொண்டிருப்பவர் தோழர் செரீப் அவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக இந்த மண்ணிலே சாதி ஆதிக்கம் ஒழிந்து சமத்துவம் நிலவ வேண்டும் என்று போராடி வருகிறார் தோழர் குடந்தை அரசன் அவர்கள். மேலும் கட்சி,சாதி,மதம் கடந்து தமிழின உரிமைக்காக ஓர் இனமாக அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டுமெனதற்காக போராடுவது மே 17 இயக்கம்.
இதற்காகத்தான் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கின்றோம். அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி என இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்திலும் எங்கள் மீதான வழக்குகள் தொடர்கின்றன. எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. ஆனால் இந்த அடக்குமுறைதான் நம்மை (தமிழ்த்தேசிய கூட்டணி) ஒன்றாக இணைத்திருக்கின்றது.
நாங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக் கட்சிகளை, பாஜகவை விமர்சித்து பேசியிருக்கிறோம். ஆனால் மாநிலக் கட்சிகளை பொதுவாக நாங்கள் விமர்சித்ததில்லை. ஏன் என்றால் மாநிலக் கட்சிகள் ஏதோ ஒரு வகையில் இந்த மண்ணுக்காக நிற்பார்கள் என்று எண்ணினோம். ஆண்ட கட்சிகளை அல்லது அதிகாரத்தில் இருக்க கூடிய கட்சியை விமர்சிக்கலாம், ஆனால் அதிகாரத்திற்கே செல்ல இயலாத கட்சிகளை ஏன் விமர்சிக்க வேண்டும் என்று நாங்கள் அமைதி காத்தோம்.
இத்தகைய சூழலில் இங்கு இருக்கும் அனைத்து மாநிலக் கட்சிகளும் (சிறுபான்மையினருக்காக பேசும் மாநிலக் கட்சிகள் உட்பட) எந்த காலத்திலும் தந்தை பெரியாரை இழிவு படுத்தி கொச்சைப்படுத்தியதில்லை. தமிழ்நாட்டில் எந்த மாநிலக் கட்சியும் பெரியாரை விமர்சித்ததில்லை. பலகாலமாக பெரியாரோடு உடன்படாத காங்கிரஸ் கட்சியும் பெரியார் குறித்து அவதூறு பேசியதில்லை. பெரியாரை எதிர்க்கும் பார்ப்பன கூட்டம் வெளிப்படையாக மேடை போட்டு பெரியாரை அவதூறு செய்யத் துணியவில்லை. ஆனால் தமிழ்நாட்டிலே பெரியார் பெண்களை கொச்சையாக பேசிவிட்டார், அவர் சிலையை உடைப்போம் என்று கூறி, ஈரோட்டில் பெரியார் குறித்து அவதூறு பேசி ஓட்டு வாங்குவேன் என்று திமிராக வந்திருக்கும் சீமானை நாம் ஒருபோதும் அனுமதிக்க இயலாது.
இத்தகைய அரசியலை அப்புறப்படுத்த வேண்டிய உறுதியுடன் நாங்கள் களத்திற்கு வந்திருக்கிறோம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெரியார் பேசாத ஒன்றை திரித்துக் கூறும் சீமான், தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசுகிறார். ஆனால் பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்ற திமுக இதற்கு எந்த எதிர்வினையும் செய்யவில்லை. ஆளும் கட்சியான திமுக சீமானைக் கைது செய்யவில்லை, எதிர்க்கட்சியான அதிமுகவும் இதை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. ஆனால் திமுக மற்றும் அதிமுக எங்கள் (பெரியார்) தலைவர்கள் என கொண்டாடுகிறார்கள்.
இன்னும் ஒரு கவுன்சிலர் இடத்தை கூட பெற முடியாத நாம் தமிழர் கட்சியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி. எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் தமிழினத்திற்காக உழைத்த தந்தை பெரியாரை சீமான் கொச்சைப்படுத்துகிறார், ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் எங்கேயோ ஏதோ சிக்கல் இருக்கிறது.
சீமானை அம்பலப்படுத்தாமல் தேர்தல் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என்கிற எண்ணம் திமுகவிற்கு இருந்தால் என்ன செய்வது என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது. திமுகவுக்கு பலமான எதிர்கட்சியாக யாரும் களமிறங்காத சூழலில் பெரியாரை இழிவு படுத்தி, கொச்சைப்படுத்தி ஒருவர் பேசுகிறார் என்றால் அந்த நபரை அம்பலப்படுத்த வேண்டாமா? அதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் தேர்தல் முடிந்து தான் சீமான் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்றால் உங்களுக்கு (திமுகவிற்கு) கொள்கை முக்கியமா? அல்லது பதவி முக்கியமா? என்று கேட்க விரும்புகிறோம்.
எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், பதவி தேவை இல்லை. பெரியார் தான் முக்கியம், பதவி தேவையில்லை. நாங்கள் பரப்புரைக்காக களமிறங்கிய போது எங்களிடம் எந்த பணபலமும் இல்லை. இங்கு பரப்புரை செய்த அனைத்து தோழர்களும் ஒரு வார காலம் தங்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்து வந்திருக்கிறார்கள். தங்கள் கைகளில் உள்ள பணத்தை செலவழித்து பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்கள். பல நாள் ஒரு வேளை அல்லது இருவேளை மட்டுமே உணவு உண்ணும் சூழலில் வீதி வீதியாக பரப்பரை மேற்கொண்டு இருக்கிறார்கள். எதற்காக? இந்த மண் பெரியார் மண். ஆனால் பெரியாரை மண் என்று சொன்னவனை விடக்கூடாது என்பதற்காக வந்திருக்கின்றோம்.
நாங்கள் (பெரியாரிய உணர்வாளர்கள்) சீமானுடைய வீட்டை முற்றுகையிட்ட பின்னர் தான் பெரிய கட்சிகள் இது குறித்து பேசுகின்றனர். அதற்கு முன் ஏன் பேசவில்லை? மறியல் நடத்தவில்லை? என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றோம். ஒரு பொறுக்கி பெரியாரை இழிவுபடுத்தும்போது அவர்கள் வீதியில் இறங்கி இருக்க வேண்டாமா? எல்லாமே அவர்களுக்கு தேர்தல் கணக்கா? அவர்கள் (பெரிய கட்சிகள்) சீமானுக்கு 8% ஓட்டு வரும் என்று கணக்கு வைத்து அமைதி காத்ததை அவமானமாகப் பார்க்கின்றோம்.
எங்களுக்கு ஓட்டு முக்கியமில்லை. இந்த ஈரோட்டு மண்ணிலே சீமான் போன்ற இழிவான நபரை அம்பலப்படுத்தியது நாங்கள் என்பதில் பெருமை கொள்கின்றோம். யூட்யூபிலும் தொலைக்காட்சியிலும் பேசும் திமுக ஆதரவாளர்கள் வீதிக்கு வந்தார்களா? அரங்கத்திற்குள் அமர்ந்து சீமான் போல் ஆயிரம் பேசி விடலாம். ஆனால் வீதிக்கு வர வேண்டும். அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும். அடிக்கவில்லை என்றாலும் திருப்பி அடிக்க வேண்டும்.
எங்களுக்கு வழக்கு குறித்து அச்சமில்லை, ஆனால் தந்தை பெரியார் குறித்தோ தேசிய தலைவர் பிரபாகரன் குறித்தோ யாரேனும் அவதூறு பரப்பினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் வரவில்லை, சம்பாதித்த பணத்தை இதற்காக செலவு செய்து விட்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு ஆணவம் அதிகம்.
சுயேச்சை வேட்பாளரான விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய தோழர் வெண்ணிலா அவர்களை இங்கே களம் இறக்கி இருக்கின்றோம். காரணம் ஒன்றே ஒன்றுதான். அவரின் தாத்தா பெரியாரின் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர். பெரியாரின் வழி வந்தவரை முன்வைத்து பெரியாரை இழிவு செய்யும் ஒருவரை உரித்துத் தொங்க விட வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றோம்.
பெரியார் சிலையை உடைப்பேன் என்று ஒரு இசுலாமிய பொறுப்பாளரை நாதக பேச வைக்கிறது. இசுலாமியருக்கும் பெரியாருக்கும் இடையே சிண்டு முடியும் வேலையை, பெரியாருக்கும் திராவிடத்திற்கும் எதிராக சிண்டு முடியும் வேலையைத் தான் பாப்பாரத்தனம் என்கிறோம். பார்ப்பானுக்கு பூணூல் முதுகில் இருக்கிறது, சீமானுக்கு பூணூல் மூளையில் இருக்கிறது. இரண்டுமே ஒன்றுதான். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் சீமானுக்கு பூணூல் நாக்கில் இருக்கிறது.
கலைஞருக்கு ஆதரவாக பேசிய சீமான் ஜெயலலிதா பணம் கொடுத்தவுடன் கலைஞர் ஒழிக என்றார். மோடி வந்தவுடன் ஜெயலலிதா ஒழிக என்று கூறினார். இரு ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் படுத்திருக்கிறார் என்று கொச்சைப்படுத்தினார். அதிமுக கட்சிக்காரர்கள் அமைதியாக இருந்து விட்டனர். இதற்குப் பிறகு சசிகலா அம்மையாருக்காக ஓபிஎஸ்-ஸை திட்டினார். ஓபிஎஸ்சிற்காக எடப்பாடியைத் திட்டினார். பின் எடப்பாடிக்காக சசிகலாவைத் திட்டினார். பிறகு சசிகலாவுக்காக எடப்பாடியை திட்டினார். ஆனால் கட்சித் தலைவர்களைத் திட்டியதை போல சீமான் தந்தை பெரியாரை திட்டினால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தந்தை பெரியாரை அவதூறாகப் பேசினால் சீமானை செருப்பால் அடிப்பதற்கு தமிழ்நாடு மொத்தமும் திரண்டு வந்திருக்கிறது.
மண்டையில் மண் இருந்தால் பெரியார் மண்ணாகத்தான் தெரிவார் என்று தோழர் செரீப் அவர்கள் குறிப்பிட்டார். சீமான் வீடு முற்றுகை என்பது அண்ணாமலைக்குத்தான் ஒரு முக்கிய செய்தியை சொல்லியிருக்கும். பெரியார் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று நினைத்த அண்ணாமலைக்கு அடி விழுந்திருக்கிறது. நாங்கள் அடித்த அடி சீமானுக்கு விழுந்த அடியல்ல, பிஜேபிக்கு விழுந்த அடிதான்.
இந்த தேர்தலை எதற்கு பயன்படுத்துவது என்று எங்களுக்கு யோசனை இருந்தது. பெரியாரைக் கொச்சைப்படுத்தும் நபருக்கு பாடம் கற்பிக்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகின்றோம். உங்களுக்கு (மக்களுக்கு) ஒரு பொறுப்பு இருக்கிறது. நாங்கள் விடுமுறை எடுத்து கடந்த ஒரு வார காலமாக பரப்புரை மேற்கொண்டதன் பயனாக சீமான் அம்பலப்பட்டுப் போயிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தினர் சீமான், பெரியார் குறித்து பேசியது குறித்து தற்போது தான் தெரிந்திருக்கிறார்கள். இப்படியா சீமான் பேசினான், தெரிந்திருந்தால் சும்மா விட்டிருக்க மாட்டோம் என மக்கள் சிலர் கூறினர். அப்போது திமுக கட்சி முறையாக பரப்புரையைக் கையாண்டதா? என்ற கேள்வி எழுப்ப விரும்புகிறேன். அதிமுக வாக்கு வங்கியைக் குறி வைக்கும் சீமானை அம்பலப்படுத்த அதிமுக வரவில்லை. ஏன் இந்த விசியத்தில் பொறுப்பு எடுத்திருக்க வேண்டாமா? அதிமுக. இதுமட்டுமல்ல பாமக, தேமுதிக போன்ற இதர கட்சிகள் இருக்கின்றன. தந்தை பெரியார் அவர்கள் போராடி பெற்ற இட ஒதுக்கீட்டினால் தான் பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் படித்ததற்கு காரணம் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு செய்தி வந்தது. சீமானுக்கு எதிர்வினை ஆற்றிய கட்சித் தலைவர்களை வரவேற்கிறோம். இந்த கட்சிகள் எல்லாம் பெரியாரை ஏற்றுக்கொண்டனவை தானே, சீமானை எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். எனவே பாஜக தங்கள் அடியாளாக சீமானை இறக்கி விட்டிருக்கிறது.
இசுலாமியர்களையும் திராவிடத்தையும் மோதவிடக்கூடிய வேலையை சீமான் ஏன் செய்தார்? இது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்னுடைய கொள்கை/ வேலைத்திட்டம். நான் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட சிஏஏ எதிர்ப்பு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எங்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் 25 கூட்டங்களுக்கும் அதிகமாக பேசியிருக்கிறார். ஊடக சந்திப்புகளில் மட்டுமே நாடகமாடும் சீமான் உண்மையில் இசுலாமியருக்காக எந்த போராட்டங்களையும் முன்னெடுத்ததில்லை.
இசுலாமியருக்காக பல போராட்டங்களை தொடர்ச்சியாக தோழர் ஷெரிஃப், தோழர் வேல் முருகன் போன்றோர் முன்னெடுத்தனர். ஆனால் ஆசிபா படுகொலை, அக்லக் படுகொலை என இசுலாமிய படுகொலை எதற்கும் சீமான் பேசியதில்லை, போராடியதில்லை. NIA அடக்குமுறையை எதிர்த்து சீமான் போராடினாரா? பாலசுதீனியர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோது மே 17 இயக்கம் இரண்டு முறை பேரணி நடத்தி இருக்கிறோம். பாலஸ்தீன பிரச்சனை குறித்து பேசியதற்காக 2018இல் மீது என் மீது உபா வழக்கை அன்றைய அதிமுக அரசு பதிந்தது. ஆனால் சீமான் பாலசுதீன மக்களை படுகொலை செய்ததற்காக என்ன செய்தார்? ஆனால் வழக்கு பாயும் என்ற அச்சத்தில் CAA எதிர்ப்பு கூட்டங்களில் பங்கேற்காமல் ஓடி ஒளிந்து கொண்டவர் சீமான்.
சீமான் ஊடக சந்திப்பில் வீர வசனம் பேசுவதை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இறுதியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. நாங்கள் பல ஊர்களிலிருந்து வந்திருக்கின்றோம், வெகு தொலைவில் இருந்து வந்திருக்கின்றோம். சென்னை, கும்பகோணம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிதம்பரம், சேலம், கோவை, கன்னியாகுமரி என பல இடங்களில் இருந்து வந்திருக்கிறோம். ஏன் இவ்வளவு தொலைவில் இருந்து வந்து பரப்புரை செய்கின்றோம்? பெரியாரை அவதூறாகப் பேசினவன் கணிசமான வாக்குகளை சீமான் வாங்கி விடக்கூடாது என்பதற்காக வந்திருக்கின்றோம்.
நாம் தமிழர் எனப்படும் நாம் சங்கீ கட்சி, தனக்கு பாஜக உறுப்பினர்கள், மார்வாடிகள் மற்றும் தேமுதிக, அதிமுக ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறது. எனவே எங்களை விட ஈரோடு மக்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சீமானுக்கு ஓட்டு போடக்கூடாது என்று கூறுங்கள். அதுதான் தந்தை பெரியாருக்கு நாம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய நன்றிக்கடன். அண்ணாமலை, ஹெச்.ராஜா மற்றும் குருமூர்த்தி தான் சீமானை இங்கு அனுப்பி இருக்கிறார்கள். சீமானுக்கு ஓட்டு கணிசமாக விழுந்தால் வெறிநாய் கூட்டம் பெரியாரை இன்னும் அவதூறு செய்ய வரும். இதைப் பற்றி திமுக கவலை கொள்ளாவிட்டாலும் நாங்கள் கவலை கொள்வோம்.
நமக்கு கொள்கை வெற்றி கிடைக்க வேண்டும், கொள்கை எதிரி முறியடிக்கப்பட வேண்டும் என்பதுதான் இலக்கு. எனவேதான் வீதி வீதியாக சீமானை அமல்படுத்திருக்கிறோம். பார்ப்பான் என்றால் சமமாக பார்ப்பான் என்று சீமான் கூறுகிறார். இதை பார்ப்பானே கூறியதில்லை. அனைவரும் சமம் என்றால் எதற்காக பார்ப்பான் பூணூல் போட்டான்?
சீமானுக்கு நடிக்க தெரியும், ஒழுங்காக திரைப்படம் இயக்க தெரியாது, அரசியலும் தெரியவில்லை. சீமான் ஈழத்தில் தேசியத்தலைவர் பிரபாகரனோடு இணைந்து சாப்பிட்டேன் என்று கதை சொல்லும் வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். “விடுதலைப் புலிகளுக்கு துணை நின்றவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள்/ பெரியாரிய தோழர்கள். எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் சீமானுக்கும் தொடர்பில்லை. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் சீமானுக்கும் தொடர்பு இல்லை. இதற்கு மேலும் சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனோடு தொடர்பு இருப்பதாக பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று விடுதலைப் புலிகள் அமைப்பினரே கூறிவிட்டனர்.
தந்தை பெரியாருக்கும் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கும் எதிராக இருக்கும் ஒருவன் மோடிக்கு ஆதரவாக இருக்கின்றான், அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கின்றான். இங்கே இரண்டு சங்கிக் கூட்டம் இருக்கிறது. ஒன்று பாஜக, மற்றொன்று நாதக. பாஜகவை மொழிபெயர்த்தால் அது நாதக என்று வரும். எங்களுக்கு சங்கி என்றால் கலவரத்தை தூண்டுபவன் என்று தான் தெரியும். ஆனால் சங்கி என்றால் நண்பன் என்று கூறியவர் சீமான். நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளரே சீமான் ஆர்எஸ்எஸ்ஸுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி பதவி விலகி விட்டார்.
இசுலாமிய நண்பர்கள் தமிழ்நாட்டில் அதிக அரசியல் உணர்வு பெற்றவர்கள். நீங்கள் தான் இளைஞர்களுக்கு இது குறித்து பேச வேண்டும். நாதகவில் இணைந்தால் ஆர்.எஸ்.எஸ்ல் சேரும் நிலைதான் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள்.
எனவே இந்த பகுதியிலே சீமானுக்கு ஒரு ஓட்டு கூட செல்லக்கூடாது. அப்படி சென்றால் அது தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும். நாதகவின் அரசியல் வீழட்டும், தமிழர்கள் அரசியல் உயரட்டும், தந்தை பெரியார் புகழ் வெல்லட்டும் என்று கூறி விடைபெறுகின்றேன். நன்றி! வணக்கம்!!