
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாக இந்துத்துவ கும்பல்கள் சர்ச்சையை எழுப்புகின்றனர். இம்மலையை அயோத்தியாக மாற்றுவோம் என கலவரத்தை தூண்டுகின்றனர். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்த கும்பல்கள் மதவெறியை திணிப்பதற்கு காத்திருக்கும் வேளையில், நமது வரலாற்றை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அவ்வகையில் தமிழர்கள் இசுலாமியர்களின் கூட்டுப் பண்பாட்டை விளக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் இந்துக்களும் இசுலாமியர்களும் வேறுபட்ட சமயங்களை தழுவினாலும், ஒன்றாக பல வகையான பண்பாட்டு உறவுகளால் பிணைப்போடு வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறவும், தர்கா வழிபாடு என்பது தமிழர் – இசுலாமியர்களின் மிகச் சிறந்த பண்பாட்டு களமாக இருந்துள்ளன என்பதை சொல்லவும் ‘தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும்’ என்கிற இந்நூல் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள், தமிழ்நாடு தழுவிய அளவில் தர்கா வழிபாட்டு முறை இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் உள்ளது என்பதை ஆழமாக விளக்கியுள்ளார்.
இசுலாம் மதமானது, கிறித்துவத்தை போல ஒரு நிறுவன சமயமாகவே இந்தியாவுக்கு வந்துள்ளது. நிறுவன சமயங்களில் தனித்துவங்களில் ஒன்று கூட்டு வழிபாடு. தமிழ்நாட்டில் கிறித்துவம், சைவம், வைணவம், இவை எல்லாம் அறிமுகம் ஆகும் முன்னர் நாட்டார் தெய்வங்கள் வழிபாட்டு முறைகளே இருந்தது என ஆசிரியர் உறுதியாகக் கூறுகிறார்.
அனைத்து சமயங்களிலும் இறையடியார்கள் சிலர் சிறப்பான இடத்தை வகிக்கின்றனர். சைவ சமயத்தில் நாயன்மார்களும், வைணவ சமயத்தில் ஆழ்வார்களும், கிறித்துவ சமயத்தில் புனிதர்களும், அதேபோல் இசுலாமிய சமயத்தில் “அவுலியாக்கள் அல்லது வலிமார்” என்று அழைக்கப்படுகின்றனர்.
அவுலியா அல்லது வலிமார் என்றால் யார், அவர்கள் என்ன பணி செய்தார்கள், அவர்களுக்கு ஏன் தர்கா கட்டினார்கள், இசுலாமிய சமூகங்கள் மட்டுமல்லாமல் இதர சமூகங்களும் ஏன் அவர்களை வழிபடுகின்றனர் என்பதை விரிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் ஆசிரியர். அதனோடு தர்காவின் வழிபாடுகள், அதன் விழாக்கள், முக்கிய தர்காக்கள், தர்காவில் இந்துக்களும் வழிபட்ட விதம் போன்றவற்றோடு மதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் கிராமத்தைப் பற்றியும் விளக்குகிறார். இறுதியில் தர்கா வழிபாட்டிற்கு எதிர்ப்பு குறித்தும் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.

தர்கா வழிபாடு:
அல்லாவை வழிபடும் இடமாக பள்ளிவாசல் அமைகிறது. தர்காவோ அடக்கம் செய்யப்பட்ட அவுலியாக்களை வழிபடும் இடமாகும். தர்காக்களுக்கு இசுலாமியர் மட்டுமின்றி இந்துக்களும் திரளாக செல்கின்றனர், அவர்கள் அவுலியாக்களை நாட்டார் தெய்வங்களில் ஒன்றாகவே கருதி வழிபடுகின்றனர். குழந்தைப் பேறு வேண்டியும், குடும்ப உறவு முறை மற்றும் பொருளியல் சிக்கல் தீர்வுகளுக்காக, மனக்கோளாறு தீர்ப்பது, பேய் விரட்டுதல் போன்ற ஆற்றல்கள் அவுலியாக்கு இருப்பதாக நம்பி வலுபடுகின்றனர். வேண்டுதல், நிறைவேறினால் பணமாகவோ, அணிகலனாகவோ, பொருளாகவோ காணிக்கை வழங்குகின்றனர்.
முகமது நபியின் வரலாற்றை கூறும் சீறாப்புராணம் என்ற காப்பியத்தை எழுதிய உமறுப் புலவருக்கு, அவரது சொந்த ஊரான எட்டயபுரத்தில் தர்கா ஒன்று உள்ளது. தர்காவை சுற்றி வாழும் கோனார் மற்றும் மறவர் சாதியினர் நேர்த்திக்கடனாக இன்றுவரை குழந்தைகளுக்கு உமறு, உமறம்மாள் என்று பெயர் வைக்கும் பழக்கம் புழக்கத்தில் உள்ளது. வீட்டில் திருமணம் நிகழ்வு நடந்தால், முதலில் வெற்றிலை பாக்கு தர்காவிற்கு வைக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது என்று ஆசிரியர் கூறுவது பலரும் அறியாதது.
தர்கா விழாக்கள்:
தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இறையன்பர்களான அவுலியாக்கள் இறந்த நாள் விழா ’சந்தனக்கூடு விழா’ என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா 10 நாட்களுக்கு முன்னதாகவே திருவிழா போல் காட்சி அளிக்கும். விழாவின் இறுதி நாளில் சந்தனக்கூடு விழா நிகழும். அதில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சந்தனக்கூடு சுமந்து சென்று வண்டியும், ஆடும் இலவசமாக வழங்குவதை இந்து மற்றும் கத்தோலிக்க குடும்பங்கள் பரம்பரையாக வழக்கமாக கொண்டுள்ளன. இந்த சந்தனத்தை புனிதப் பொருளாக கருதி, இந்துக்களும் இசுலாமியர்களும் சிறிதளவு வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம். அவுலியா மறைந்த நாளன்று இறைச்சியுடன் கூடிய விருந்து ஒன்றை தர்காவில் சமைத்து அனைவரும் பரிமாறி பிரித்து உண்கிறார்கள்.
தர்காக்களும் இந்துக்களும்:
”உலுக்கான் அல்லது துக்ளக்” என்ற பெயர் கொண்ட டெல்லி சுல்தான் eன்ற ஒருவர் கிபி 1323 ஆம் ஆண்டில் மதுரை வந்து காலமானார். இவரை வைகை ஆற்றின் வடகரையில் அடக்கம் செய்தபோது தர்கா ஒன்றையும் கட்டியுள்ளனர். பாண்டிய மன்னன் இந்த தர்காவிற்கு 15,000 பொன் வழங்கியிருக்கிறான். வீரப்ப நாயக்கன் என்ற நாயக்க மன்னன் (1572-1595) ஆட்சிக்காலத்தில் ஆறு கிராமங்களின் உரிமை தொடர்பாக சிக்கல் தோன்றிய போது இதை விசாரித்து 6 கிராமங்களுக்கும் தர்காவிற்கே உரியது என்பதை உறுதி செய்து கல்வெட்டிலும் பொறித்துள்ளான் போன்ற வரலாற்று சான்றுகள் உள்ளன.
மேலும் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் உதவியுள்ளார். முதலாம் ‘துளசா’ என்று அழைக்கப்படும் ’திருக்கோசி துக்கோசி’ மன்னர் 1729 -1735 ஆண்டு வழங்கிய நிலத்தில் அவர் மகன் பிரதாப் சிங் 11 நிலைகளுடன் கூடிய 131 அடி உயரமுள்ள மினாரை அதாவது கோபுரத்தை கட்டிக் கொடுத்ததோடு, இளங்கடமனூர் என்ற கிராமத்தையும் கொடையாக வழங்கியுள்ளார். தர்காவில் ஆண்டுதோறும் மராட்டிய மன்னர் குடும்பத்திற்கு சந்தனமும் பட்டுச்சால்வையும் அனுப்பி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல திருப்பத்தூரில் ‘அகோரி காணுமயா ஒளி’ தர்கா என்ற பெயரில் தர்காவிற்கு மருது சகோதரர்கள் மானியம் வழங்கி உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் சுல்தான் செய்யது இப்ராஹிம் தர்காவில் 19 வழிமார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுக்கு சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு ஆசாரி, நாடார், ஆதிதிராவிடர், யாதவர் போன்ற சமூகத்தினரில் குறிப்பிட்ட பணிகள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர்.
தமிழர்களும், இசுலாமியர்களும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதைக் குறித்து பலவகையான வரலாற்று தகவல்களுடன் அடுக்கியுள்ளார் ஆசிரியர்.
பிராமண அவுலியாக்கள்:
கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் என்பவர், தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர். இவர் இசுலாமிய சமூகத்தை தழுவி ‘மீனா நூர்தீன்’ என்று பெயர் பெற்றார். இவரது அவுலியா நிலைக்குப் பிறகு ‘மீனா நூர்தீன் வழி தர்கா’ என்ற பெயரில் மதுரை தெற்கு வெளிவீதியில் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் வேளாங்கண்ணிக்கும் இடையில் ‘பாப்பா கோயில் தர்கா’ உள்ளது. இசுலாமிய சமூகத்தை தழுவிய ‘ஹதீஸ் அம்மா’ என்ற பிராமண பெண்ணும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார், இசுலாமியரும் இந்துக்களும் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். இங்கு அசைவ உணவுப் பொருட்களை படைப்பதில்லை. விரதம் இருந்து வழிபடுகின்றனர். அங்கு அன்னதான நிகழ்வு நடத்தும் போதும், முதலில் இந்துக்களுக்கு உணவு பரிமாறியப் பின்னரே இசுலாமியர்களுக்கும் உணவு பரிமாறப்படுகிறது.
மதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் கிராமம்:
இந்தியாவின் முன்மாதிரியான திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகேயுள்ள ’தெற்கு விஜயநாராயணம்’ கிராமம் விளங்குகிறது. இங்கு சாதி மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மதத்தினரும் சாதியினரும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16ஆம் தேதி கூடுகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக கிராமத்தில் செய்யது முகமது மலுவுக்கு ‘மேத்த பிள்ளை அப்பா’ தர்கா உள்ளது. இங்கு நடைபெறும் கந்தூரி விழாவினை தேவர் சமுதாயத்தினரே முன் நின்று நடத்துகின்றனர். ஆயிரக்கணக்கானவர் கூடும் விழாவாக இருந்த போதிலும் மது சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. கேலி கிண்டல்கள் இல்லை, திருட்டும் நடைபெறுவதில்லை என்பதை இவ்விழாக்களில் காணலாம். இங்கு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மனிதநேயத்துடன் சகோதர பாசத்துடன் பழக முடியும் என்பதை தங்களுடைய செயல்பாடுகள் மூலம் தெற்கு விஜயநகரம் கிராம மக்கள் நிரூபித்து வருகின்றனர். (தினமணி, 03.08.98)
தர்கா வழிபாட்டிற்கு எதிர்ப்பு:
இசுலாமிய மத அடிப்படைவாத குழுக்கள் குறிப்பாக சவுதி அரேபியாவுடன் தொடர்புடைய சில இசுலாமிய அடிப்படைவாத குழுக்கள் வெகுசன தன்மை வாய்ந்த தர்கா வழிபாட்டிற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இசுலாம் சமயத்தில் உருவ வழிபாடு நோக்கி தர்கா வழிபாடு இழுத்துச் செல்கிறது என்றும், கந்தூரி விழாவில் இன்னிசை நிகழ்ச்சிகள் ஊடுருவதாகவும், பிற சமயத்தினர்களை தடையின்றி கலந்து கொள்கின்றனர் எனவும், பள்ளிவாசலில் இசுலாமிய பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடும், தர்க்காவின் வருவாய் தனிப்பட்ட குடும்பங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றன என குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர்.
தமிழ்நாட்டு தர்காக்களில் நிகழும் வழிபாடு, விழாக்களில் தமிழர்கள் கலந்து கொள்வதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இந்து இசுலாம் என பார்க்காமல் தமிழர்கள் என்று முறையில், கோயில்களுக்கு நிலமும் சீர்வரிசையும் கொடுத்து வருகின்றனர். அதேபோல் தர்கா அல்லது பள்ளிவாசலுக்கு நிலமும் சீர்வரிசை பொருட்களும் வழங்கியும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு வரலாற்றுத் தகவல்களின் ஊடாக தமிழர்கள் – இசுலாமியர்கள் வழிவழியான மரபுப் பண்பாடுகளைப் பற்றியான விவரங்களை இப்புத்தகம் வாயிலாக அறிய முடிகிறது.

புத்தகம் கிடைக்கும் இடம்:
திசை புத்தக நிலையம்.
ஆவின் பால் நிலையம் அருகில்
காமராசர் அரங்கம் எதிர்புறம்.
தேனாம்பேட்டை, சென்னை – 600096.
தொடர்புக்கு : +91 98840 82823