
2009 ஆம் ஆண்டு ஈழப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு தமிழ் உணர்வு உருவானது. நம் எதிரிகளால் நமக்குக் காலம் காலமாக உருவாக்கப்படும் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து உருவாகும் தமிழ் உணர்வு அது.
இனப் படுகொலையில் ஒரு பேரழிவைச் சந்தித்து, கையறு நிலையில், திக்கு தெரியாத பாதையில், கோபம், ஆதங்கம், அழுகை என்று உணர்வு கொதி நிலையில் தமிழ் நாட்டின் கூட்டு மனநிலை நிலவியது. அதை ஒரு தேசிய உணர்வாகக் கருக் கொள்ளச் செய்யும் முயற்சியைத் தமிழ்ச் சமூகம் தன்னியல்பாக வரித்துக் கொண்டது.
வரலாறு எப்போதும் தன் போதாமையைத் தீர்த்துக் கொள்ளத் தனக்குத் தேவையான அக-புறச் சூழலுக்குக் காத்துக் கிடப்பதை வரலாறே நமக்குக் காட்டுகிறது. ஆனால் நல்ல அக-புறச் சூழலில் பயிர்களோடு சேர்ந்து களைகளும் முளைப்பது இயற்கையே!.
தமிழ்த் தேசிய முழக்கத்தை, இயங்கியல் போக்கில் பெரியாருக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை தமிழ்ச் சமூகம் கோரி நின்ற சரியான காலகட்டம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகான காலம் தான். தமிழர் அரசியலை முன்னெடுக்கப் பல அரசியல் அமைப்புக்கள் உருவான போதும் இரண்டு இயக்கங்களே அதில் நீடித்து நிற்கின்றன. ஒன்று மே பதினேழு இயக்கம் மற்றொன்று நாம் தமிழர் கட்சி.

இரண்டும் தமிழ்நாட்டின் அரசியலில் தங்கள் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. நாம் தமிழர் கட்சி உருவாகி ஓராண்டில் தன்னை தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டது. மே பதினேழு இயக்கம் தன்னை பெரியாரின் இயக்க அரசியலின் வரலாற்றுக் கண்ணியில் இணைத்துக் கொண்டது. இன அழிப்பின் அரசியல் பின்னணியை ஆய்வு செய்து, அதிலிருந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்கிற பாடத்தை கற்று அதற்கான அரசியலைத் தமிழ் மண்ணில் விதைத்து வருகிறது மே பதினேழு இயக்கம்.
நமக்கு ஏற்புடையதாக இல்லையென்றாலும் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் ஒரு பேரழிவு அரசியலை விதைத்து விட்டது. அது உணர்வு நிலையிலிருந்து மட்டும் அரசியலை அணுகும் போக்கை மக்களிடம் உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போக்கு இந்திய அரசின் ‘தமிழர் பிளவு’ அரசியல் வேலைத் திட்டங்களை நடைமுறை செய்யும் பாதையை இலகுவாக்கி உள்ளது என்பதே இந்தப் பதினைந்து ஆண்டு காலத் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு!.
மிக முக்கியமாக இந்திய நிலப்பரப்பில் வாழும் தேசிய இன மக்களில் அரசியல் ரீதியாக விழிப்பு நிலையில் எப்போதும் இருப்பது தமிழினம் மட்டுமே. தமிழ்நாடு தமிழருக்கே! என்கிற பெரியாரின் முழக்கமும், நான் ‘திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குத் தமிழர் நிலத்தின் எட்டுத் திசைகளிலும் போர் முரசாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். அது பார்ப்பன – பனியா மற்றும் டெல்லி அதிகாரவர்க்கத்தின் கூட்டணி கோட்டையின் அடிவாரத்தில் விசைக்கொண்டு செருகப்பட்ட கடப்பாரை என்பதை அவர்கள் அறிவார்கள்.
1938 இந்தி எதிர்ப்புப் போர் முதல் 2017 ஜல்லிக்கட்டு புரட்சி வரை அதிகாரத்திற்கு எதிராக வெகு மக்கள் திரண்டு வீதிகளில் இறங்கிப் போர் புரியும் தன்மையே தமிழ்நாட்டின் தனித்துவம்.
தமிழ்த் தேசியத்தின் பெயராலேயே இவற்றையெல்லாம் மழுங்கடித்து இளைஞர்களை இந்துத்துவ அரசியலில் கரைக்கும் இந்தியத் தேசிய முகவர் தான் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பதை அவரே பல முறை வெளிப்படுத்திவிட்டார்.

பொய் வரலாற்றைப் பரப்புவது, பெரியார் மீதான அவதூறு பரப்புவது, திமுக அரசின் அரசியல் மற்றும் நிர்வாக தோல்விகளைத் திராவிட இயக்க வெறுப்பாக மாற்றுவது, தமிழ்த் தேசியத்தைச் சோழ தேசியப் பெருமித உணர்வாக மழுங்கடிப்பது, பார்ப்பன ஆதரவு- பா.ஜ.க ஆதரவு அரசியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்வது, பல நூறு பக்கங்கள் பதில் எழுதப்பட்ட அவதூறுகளையே மீண்டும் மீண்டும் கேள்விகளாக எழுப்பி இளைஞர்களைக் குழப்ப நிலையிலேயே வைத்திருப்பது என்பவை தான் நாம் தமிழர் கட்சியின் இத்தனை ஆண்டு கால அரசியல் செயல்பாடு.
டெல்லி அதிகாரத்திற்குச் சேவை செய்யும் மரபு என்று ஒன்று தமிழ்நாட்டில் உண்டு. அந்த மரபின் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை வரலாற்று நீக்கம் செய்து டெல்லி அதிகாரத்திற்குச் சேவை செய்யும் அமைப்பாக நாம் தமிழர் கட்சி இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
இந்த நிலையில்தான் மே பதினேழு இயக்கம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய மாநாட்டைக் கடந்த ஆண்டும், இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தியுள்ளது. மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் ‘தமிழ்த் தேசியப் பெருவிழா -அறிவர் மாநாடு’ என்கிற பெயரில் இரண்டு நாட்கள், மூன்று அமர்வுகள், 18 அறிஞர் பெருமக்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். தமிழர் அரசியலில் உள்ள வரலாற்றுப் பொருள் முதல்வாத போக்கை மார்க்சியப் பார்வையில் விளக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெற்றது.
கடந்த ஆண்டு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பேராசிரியர் வறிதையா கான்ஸ்தந்தின் போன்றவர்கள் இந்த ஆண்டு மாநாட்டில் அறிஞர் பெருமக்களின் உரையைக் கேட்கக் கூட்டத்தோடு ஒருவராக அமர்ந்து கேட்கும் காட்சியைப் பார்க்க முடிந்தது. இது ஒரு புதுப் பண்பாட்டுச் சூழலை அறிவர் அவையமும், மே பதினேழு இயக்கமும் உருவாக்கியுள்ளதையே காட்டியது.

ஜீவா-நாவா சிந்தனைப் பள்ளியின் சார்பில் மார்ச் 30, 2025 அன்று மெய் நிகர் மேடை என்கிற ஏற்பாட்டில் தமிழ்த் தேசியப் பெருவிழா குறித்தும், அறிவர் அவையம்- மாநாடு குறித்தும், இரண்டாம் நாள் மாலை நடைபெற்ற காந்தள் – இளையோர் கலை விழா குறித்தும் கருத்தரங்கு நடைபெற்றது. ஓர் அமைப்பு நடத்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து வேறு ஓர் அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்திய இந்நிகழ்வு தமிழ்நாட்டின் அறிவுத் தளம் கண்டிராத நிகழ்வு.
அதில் பேசிய அறிஞர்கள் மாநாட்டின் தன்மை குறித்தும், இம்மாநாட்டை இளைஞர்கள் முழுமையாக அமர்ந்து கேட்டதை குறித்தும், இத்தனை ஆண்டுகள் ஆய்வறிஞர்கள் மத்தியில் இருந்த விவாதங்களை மே பதினேழு இயக்கமும், அதன் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் மக்கள் வயப்படுத்துவதைக் குறித்தும் உணர்ச்சி வயப்பட்டுப் பேசினர். இந்த மாநாட்டைக் குறித்து வேறு தளங்களிலும் தொடர் விவாதங்களை நடத்த வேண்டும் என்று பேசினர்.
இவற்றின் மூலம் தமிழ்த் தேசிய கோரிக்கையை மக்கள் மையப்படுத்தும் மே பதினேழு இயக்கத்தின் முயற்சியான, தமிழ்த் தேசிய பெருவிழா- அறிவர் அவையம் மாநாடும், காந்தள் கலை நிகழ்வும் இலக்கை நோக்கிச் சரியான பாதையில் போவதை உறுதி செய்துள்ளது.

நீண்ட காலமாகத் தமிழர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், தமிழ்ச் சமூகம் எப்போதும் உணர்வு வயப்பட்ட ஒரு சமூகம். அவர்கள் தனிநபர் வழிபாடு கொண்டவர்கள் என்பது தான். அதை உண்மையாக்கும் அரசியலை நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது. அதன் தலைமை தமிழ்ச் சமூகத்தில் அரசியல் என்கிற பெயரில் நிகழ்த்தி வரும் அருவருப்புகளை, அசிங்கங்களைத் தமிழ்த் தேசியம் என்று பொதுவாகப் பலர் பார்க்க நேரும் நிலையை மாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை மே பதினேழு இயக்கம் தூக்கிச் சுமக்கிறது.
வரலாற்றுப் போக்கில் தமிழ் நிலத்தில் தங்கி, இன்று தமிழர்களாகவே தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் தெலுங்கு மொழி பேசும் மக்களைத் தமிழர்களின் முதன்மை எதிரியாக நாம் தமிழர் அடையாளப்படுத்துகிறது. அவர்களின் சமூக உறவிற்கான மொழியாகத் தமிழே உள்ளது. வீட்டில் அவர்கள் பேசும் தெலுங்கு என்பது இன்றைய நிலையில் தெலுங்கு தேசிய இனத்தோடு உரையாடும் அளவில் இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கும் ஒன்று. இதன் மூலம் இங்கு நிலவும் பார்ப்பனரல்லாதார் அரசியல் இயங்கு தளத்தைச் சிதைத்து இந்துத்துவ அமைப்புகள் வளர்ச்சி பெறுவதற்கான வேலையைச் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி.
இந்த வேலைத் திட்டங்களில் நாம் தமிழரின் அரசியல் நுட்பங்களில் கவனத்தில் கொள்ள வேண்டியவை, சாதி, மதம், கட்சி கடந்து தமிழர் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளில் கூட நாம் தமிழர் கட்சியும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் யாரோடும் தன் மேடையைப் பகிர்ந்துக் கொள்வதில்லை என்பதும், அதற்கான முன்னெடுப்புகளிலிருந்து விலகி தனியே பெயரளவில் அடையாள போராட்டங்கள் நடத்துவதும். இதைத் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் பல்வேறு முறை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதிலிருந்து மாறுபட்டு மே பதினேழு இயக்கம் தமிழ்த் தேசிய அரசியல் என்பதைச் சாதி, கட்சி அரசியல் கடந்த வலிமையான கோரிக்கையாக மாற்றும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. பல கூட்டமைப்பு வேலைத் திட்டங்கள், தன் மேடையைப் பல்வேறு அரசியல் அமைப்புக்களோடு பகிர்வது மற்றும் அவர்களின் மேடைகளில் பங்களிப்பது என்கிற ஆரோக்கியமான அரசியல் பன்னாட்டுச் சூழலை உருவாக்கியது.
அறிவுத் தளத்தில் ஈழ அரசியலைக் கூர்மைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முதல் ப்ரெமென் மக்கள் தீர்ப்பாயம் வரை முக்கிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. மே பதினேழு இயக்கம் அளித்த ஆதாரங்கள் அடிப்படையிலேயே ஈழ இனப்படுகொலையில் இந்திய அரசு விசாரிக்கப்பட முகாந்திரம் உள்ளது என்று ப்ரெமென் மக்கள் தீர்ப்பாயம் கூறியது. ஆண்டு தோறும் மே மாதம் தமிழர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி அதைத் தமிழர்களின் பன்னாட்டு நிகழ்வாக, அரசியல் உரிமையாக மே பதினேழு இயக்கம் மாற்றியுள்ளது. இதுபோன்ற எந்த முன்னெடுப்பையும் அறிவுத் தளத்திலோ, அரசியல் தளத்திலோ செய்யாமல் மேடைகளில் வார்த்தைகளால் வாள் வீசி, மக்களின் உணர்வுகளின் மூலம் கல்லாகட்டும் அரசியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை செய்து வருகிறது.
தமிழ்ச் சமூகம் ஓர் அறிவுச் சமூகம், அது வரலாறு முழுவதும் ஓர் அறிவுச் சமூகமாகவே இருந்தது. தமிழர் தம் வரலாற்று அறிவிலிருந்தே உணர்ச்சி வயப்பட்ட நிலைக்கு மாறுகிறார்கள். அதன் மூலமே தன் உரிமை பறிக்கப்படும் போது தமிழ் உணர்வு திரட்சி கொள்கிறது. அறிவு நிலையிலிருந்தே இந்த உணர்வுகளைத் திராவிட இயக்கம் தமிழர் நெஞ்சில் ஊன்றியது. இந்த உணர்வுகள் கடத்தப்பட்ட ஒருவர் வரலாறு தெரியாதவராக இன்று இருக்கும் நிலையே போலி தமிழ்த்தேசியவாதிகளுக்குச் சாதகமாக அமைந்து போகிறது.

தமிழர் தம் வரலாற்றை வெற்று பெருமிதங்களாக மட்டும் பார்த்து போலி தமிழ் தேசியவாதிகளின் சதிக் கோட்பாடு அரசியலுக்குப் பலியாகின்றனர். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும், பெரியார் பெண்களை இழிவு செய்தார், புலிகள் தன்னை நம்பிதான் ஈழ விடுதலை அரசியலைக் கொடுத்துள்ளனர் போன்ற அனைத்துத் திரிபுவாத அரசியல் அயோக்கியத்தனங்களையும் வரலாறு சீமானியதனங்களாகவே நினைவுகூரும். அந்த சீமானியதனங்களை, இடதுசாரி தமிழ்த்தேசியத்தைக் கொண்டு அரசியல் தளத்தில் நாம் வீழ்த்த வேண்டியது அவசியமாகிறது.
அதன் ஒரு வடிவமாகவே திராவிட இயக்கச் சிந்தனை மரபின் இயங்கியல் தொடர்ச்சியான மே பதினேழு இயக்கம், இந்த அறிவர் மாநாட்டை நடத்தியது.
மார்க்சியக் கோட்பாட்டின் படி, பெரியாரியத்தைக் கொள்கையாகக் கொண்டு, இடது சாரி தன்மையிலான தமிழ்த் தேசியக் கோரிக்கையை மக்கள் மையப்படுத்தும் பணியை எத்தனை தடைகள் வந்தாலும் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து செய்யும். தமிழ்த் தேசியப் பெருவிழா மக்கள் கொண்டாடும் பெருவிழாவாகத் தமிழர் வரலாற்றில் ஒரு நாள் மாறும். தமிழர்கள் அறிவாயுதம் ஏந்துவதே இந்த மண்ணில் விதைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான சீமானியத்தனங்களுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு என்பதை மே பதினேழு இயக்கம் உறுதியாக நம்புகிறது.