பாசிசம் – நவபாசிசம் குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2வது மாநில மாநாடு நடந்தது. அதில் மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை :

இன்றைக்கு இந்தியாவில் நிலவி வருகின்ற இந்துத்துவ அரசியல் என்பது எவ்வகையான அரசியல் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திருக்கிறது. இது பாசிசமா அல்லது நவ பாசிசமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். பாசிச எதிர்ப்பு அரசியலை முழுமையாக விவாதிப்பதற்கு அனுபவங்களையும், வரலாற்றுப் பாடங்களையும் கோட்பாட்டு ரீதியாக கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள். அந்த வகையில் இந்தியா முழுமையிலும் இந்த இந்துத்துவ பாசிச அரசியலை எந்த வகையாக வரையறுக்க வேண்டும் என்பது நம்முன் இருக்கக்கூடிய முக்கியமான விவாதமாக பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பாசிசம் என்பதன் கருத்தியல் பார்ப்பனியத்தில் தொடங்கி இருக்கிறது. இந்தப் பார்ப்பனிய கருத்தியல் போக்கு இங்கு கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவத்துடன் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற பொழுது முதலாளித்துவமும், நிதிமூலன ஆதிக்கமும், இந்த பார்ப்பனியத்தின்பாற் உருவாக்கப்பட்டு இருக்கிற ஆதிக்க அடக்குமுறை வலதுசாரி கருத்தியல்களும் இங்கு இணைந்து மாபெரும் பாசிசக் கருத்துகளாக உருவாகியிருக்கிறது. இது பாசிசமா அல்லது நவ பாசிசமா என்று வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்தியாவில் பாராளுமன்ற சனநாயகத்தில் இருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விவாதத்தை முன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய விவாதத்தை எடுத்துப் பார்த்தோம் என்றால், ஐரோப்பாவில் நியோ பாசிச (நவ பாசிச) போக்குகள் வந்திருக்கின்றன என்பது குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் இருக்கின்றன. ’இங்கிலாந்து, இத்தாலி, சோவியத்தின் முன்னாள் நாடுகளில் இயங்குகின்ற இந்த நியோ பாசிச அமைப்புகளை ஒத்து, இந்தியாவில் இருக்கின்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ்-னுடைய ஆட்சி அதிகாரக் கட்டமைப்பை நியோ பாசிசமாக பார்ப்பது’ என்கின்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இதை சிபிஎம்எல் கட்சி மறுத்திருக்கிறது. சிபிஐ கட்சி இதைப் பாசிசம் என்றே வரையறுத்து சொல்கிறது.

ஆக இந்தியாவில் இருக்கின்ற போக்கை நாம் எப்படி பார்ப்பது என்பதை முக்கியமாக நான் கருதுகின்றேன். இந்தியாவில் இருக்கக்கூடிய பாஜகவை தனித்த கூறாகப் பார்ப்பதா அல்லது ஆர்.எஸ்.எஸ்-யை அங்கமாக வைத்திருப்பதால் ஆர்.எஸ்.எஸ்-யை  முதன்மையாகப் பார்ப்பதா என்கின்ற கேள்வி முகாமையானது. பாராளுமன்ற அரசியலுக்குள் நின்று பார்க்கும்போது பாரதிய ஜனதா கட்சியை மையமாக வைத்து விவாதிப்பதும், பாராளுமன்ற சனநாயகத்தை அரசியலுக்குள் ஒரு அங்கம் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்-யை மையப்படுத்திய அரசியலாகவும் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்றால், பார்ப்பனியத்தை மையமாக வைத்து தான் விவாதத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆக, இங்கு மக்கள் கட்டமைப்பு, அதற்குள் கொண்டுவரப்படுகின்ற இந்துத்துவ வலதுசாரிக் கருத்தியல்கள் அல்லது மக்கள் அரசியலுக்குள் இங்கே முதலாளித்துவ சனநாயக கட்டமைப்பை உருவாக்கி இருக்கின்ற இந்த தேர்தல் கட்டமைப்புக்குள் இயங்கக்கூடிய கட்சிகள் என இவைகளை மட்டும் வைத்து இந்த அரசியலைக் கணித்து விட முடியாது.

ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டு வந்த அந்த பாசிசத்திற்கு ஒரு ராணுவ முகம் இருந்தது. அது ஆன்ட்டிசெமிட்டிக் என்று சொல்லப்படக்கூடிய யூத எதிர்ப்பு அரசியல் என்பதன் அடிநாதமாக இருந்தது. ஆனால் யூத எதிர்ப்பு அரசியலை அது எவ்வளவு வலுவாக முன் வைத்ததோ அதேபோன்று கம்யூனிச எதிர்ப்பு அரசியலையும் முன் வைத்தது. புதுவிதமான தேசிய சோசியலிசம் என்கிற கருத்தியலை முன்வைத்து இத்தாலியிலும், ஜெர்மனியலும் அவர்கள் மேலெழுந்து வந்தார்கள். புதுவகையான அந்த தேசிய சோசலிசம் என்கின்ற பாசிச போக்கு என்பது உழைக்கின்ற சமூகத்திலே பெருமளவு ஆதிக்கம் செலுத்திய போக்காக இருந்தது. அது தனது பிரதான எதிரியாக கம்யூனிஸ்ட்டுகளை வரையறுத்தது.

1930 -ஆம் ஆண்டு கம்யூனிசத்தை வரையறுக்கையில், சிபிஎம் கட்சி என்ன சொல்கின்றது என்றால், அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை (great depression) மையமாக வைத்து, அதன் விளைவாக எழுகின்ற பாசிசத்தை அவர்கள் வரையறை செய்கிறார்கள். அதே சமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல சோவியத் யூனியனின் நடந்த புரட்சி என்பது ஒரு மிகப்பெரும் நெருக்கடியை உலகளாவிய அளவில் வலதுசாரிகளுக்கும், முதலாளிகளுக்கும் உருவாக்கி கொடுத்தது.

சோவியத் யூனியனில் எழுந்த புரட்சிப் போக்கு, அதில் கம்யூனிசம் என்னும் பெரும் பூதம் உலகத்தை ஆக்கிரமித்து விடும் என்கின்ற அபாயம்தான் பாசிசப் போக்கு கூர்மை அடைவதற்கும் ராணுவ ஆற்றலாக மாறுவதற்கும் அடித்தளமாக இருந்தது. இன்றைக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. ஆக இராணுவ வாதம் என்கின்ற ஒன்றை முன்வைத்து பாசிசக் கோட்பாடுகள் முன்னகர வேண்டும் என்கின்ற தேவை இல்லை. அன்றைக்கு சந்தைகளைப் பங்கு போடுவது, காலனிகளைப் பங்கு போடுவது என்கின்ற ஒரு போக்கு பிரதானப் போக்குகளாக இரண்டாம் உலகப்போரில் மையப்பட்டு இருந்தது. முதல் இரண்டு போர்கள் ஏகாதிபத்தியங்களுக்குள் நடந்த சண்டை ஆகும். அந்த சண்டை காலனியங்களை பங்கு போடுவதற்காக நடந்த சண்டை. இன்றைக்கு காலனிகள் கிடையாது. நாம் பின்காலனியமாக இருக்கிறோமா அல்லது நவகாலனியமாக இருக்கிறோமா என்கின்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைக்கு இருக்கக்கூடிய போக்கு என்பது சந்தைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு போக்காக இருக்கும் பட்சத்தில், இந்த ஏகாதிபத்தியங்களுக்குள்ளான முரண்பாடுகள் என்பதை எவ்வாறு கணித்துப் பார்க்க வேண்டும், அதே சமயத்தில் சோவியத் யூனியன் என்கின்ற தொழிலாளர்களுக்கான தேசக் கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு இல்லாத உலகத்தில் ஏகபோகமாக இருக்கக்கூடிய ஏகாதிபத்திய உலகத்திற்குள்ளாக வளர்கின்ற பாசிஸ்டுகளுக்கு ராணுவ வாதம் தேவையில்லை. ஏனென்றால் அவர்களை அச்சுறுத்துவதற்கு அங்கு சோவியத் யூனியனும் இல்லை. ஸ்டாலினும் இல்லை. இப்படிப்பட்ட பின்புலத்திலிருந்து தான் இன்றைய பாசிசப் போக்குகளை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

அன்றைய உழைக்கும் வர்க்கத்தை பாசிஸ்டுகள் கைகளுக்குள் கொண்டு வருவதற்கு அவர்களுக்கு பாராளுமன்ற சனநாயகம் என்பது எதிரியாக இருந்தது. ஆகவே பாராளுமன்ற சனநாயகம் தேவை இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று எழக்கூடிய பாசிசம் என்பது எந்த இடத்தில் கருக்கொள்கிறது என்றால், நடுத்தர வர்க்கத்தில் கருக்கொள்ளும் இடமாக இருக்கிறது. உழைக்கும் சமூகத்திற்குள்ளும் கருக்கொள்ளும் இடமாக இருக்கிறது. ஆகவே நடுத்தர வர்க்கத்திற்கு உள்ளாகவும், உழைக்கும் வர்க்கத்திற்கு உள்ளதாகவும் பெரும் கருத்துக்களாக விதைக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட தேர்தல் சனநாயகத்தை நிராகரித்துவிட்டு பாசிசத்தை முன்னகர்த்தி விட முடியாது என்கின்ற கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு பாசிசம் செயல்படுகிறது.

இது தேர்தல் சனநாயக கட்டமைப்பை அச்சுறுத்தாத காரணத்தினால் இதை முழு பாசிசமாக பார்த்து விட முடியாது என்று சொல்வது ஏற்புடையதாக இருக்குமா என்கின்ற கேள்வியை இந்த அரங்கத்திற்கு விட்டு விடுகிறேன்.

இன்றைய பாசிசத்திற்கு இந்த தேர்தல் சனநாயக கட்டமைப்பு என்பது அச்சுறுத்தலாக இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்த தேர்தல் சனநாயக கட்டமைப்புகள், முதலாளித்துவ சனநாயக கட்டமைப்புகள் எந்த வகையிலாவது குறிப்பாக ’இந்தியாவில் பார்ப்பனியத்திற்கு எதிர்ப்புடையதாக இருக்கிறதா என்று பார்த்தால், அது பார்ப்பனியத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது’.

பார்ப்பனியம் என்கின்ற கருத்தியல் பாசிசமாக இருக்கும் பொழுது, இங்கு இருக்கக்கூடிய முதலாளித்துவ சனநாயக கட்டமைப்பு என்பது பாசிசத்திற்கு சார்பான கட்டமைப்பாகத் தான் இருக்கிறது. ஆகவே இந்த தேர்தல் சனநாயகக் கட்டமைப்பில் இயங்குகின்ற காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியை முழுப் பாசிசமாக பார்க்க முடியாது என்கின்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

இந்த இடத்தில் நான் பெரியாரை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். அரசியல் சாசனத்தை மையமாக வைத்து தான் இந்த தேர்தல் சனநாயகக் கட்டமைப்பு இருக்கின்றது. தேர்தல் சனநாயக கட்டமைப்பை வைத்து தான் இது பாசிசமா, நவ பாசிசமா என்கின்ற விவாதம் வருகிறது. ஆக தேர்தல் சனநாயகக் கட்டமைப்பை நிலை நிறுத்துகின்ற அமைப்பு என்பது அரசியல் சாசனமாக இருக்கிறது. அந்த அரசியல் என்னவாக இருக்கின்றது என்பதை பேசும்பொழுது, அண்ணல் அம்பத்கர் அவர்கள் இதற்கு போதுமான கருத்துக்களை தெளிவுபடுத்தி இருக்கின்றார். அதே சமயத்தில் நடைமுறை அரசியலில் தந்தை பெரியார் இங்கு அம்பலப்படுத்துகின்றார்.

இந்த அரசியல் சாசனத்தில் சாதி பாதுகாக்கப்படுகின்றது. சாதி பாதுகாக்கின்ற சட்டப்பிரிவுகள் நீக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அரசியல் சாசனத்தை கொளுத்துவேன் என்கின்ற முடிவை எடுக்கின்றார். சாதியை பாதுகாக்கக் கூடியதாக இந்த அரசியல் சாசனம் இருக்கும் என்றால், அந்த சாதியைப் பாதுகாக்கின்ற பார்ப்பனியமும் இயங்கும் என்கின்ற நிலை வருகிறது. அப்படி இயங்குகின்ற பார்ப்பனியம் இந்த அரசியல் சாசனக் கட்டமைப்பை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ளும் என்பதை மறந்து விடாதீர்கள் என்பதைத்தான் தந்தை பெரியார் எச்சரித்து இருக்கின்றார்.

அரசியல் சாசனத்தில் சாதியைப் பாதுகாக்கும் பிரிவை நீக்கவில்லை என்றால் இது அனைத்து மக்களுக்கும் நியாயத்தை வழங்குகின்ற சனநாயக அமைப்பாக இருக்க முடியாது என்று அறுதியிட்டு சொன்னவர் தந்தை பெரியார். அதனால்தான் அந்த அரசியல் சாசனத்தை எரித்தார். இன்றைக்கும் அந்தப் பிரிவுகள் நீக்கப்படவில்லை.

அரசியல் சாசனத்தை மையமாக வைத்து இயங்குகின்ற தேர்தல் முறை பாஜக, ஆர்.எஸ்.எஸ்-யை அச்சுறுத்தவில்லை என்கின்ற காரணத்தினால், அவற்றை முழுப் பாசிசமாக பார்த்து விட முடியாது என்று சொன்னால், இந்த அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய சாதியைப் பாதுகாக்கின்ற பிரிவை என்னவென்று வரையறுப்பது? இதுதான் இங்கு பிரச்சனை.

நான் பிரகாஷ் காரத் அவர்கள் பேசிய உரையை முழுமையாக கேட்டேன். அதில் எந்த இடத்திலும் பார்ப்பனியம் என்கின்ற வார்த்தை இல்லை என்கின்ற வருத்தத்தை இச்சமயத்தில் பதிவு செய்கின்றேன். ’பார்ப்பனியம்’ என்ற சொல்லுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது ஒரு கோட்பாடாக இந்த மண்ணை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அது தொழிலாளர் வர்க்கம் ஒன்றாவதை தடுக்கக்கூடிய வர்ணாசிரமக் கொள்கையை உள்ளே வைத்திருக்கிறது. ஆக பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தாமல், பார்ப்பனியம் பற்றிய விவாதத்தை பொது வெளியில் வைக்காமல் இந்தியப் பாசிசத்தை வரையறுத்து விட முடியாது. அது இசுலாமிய எதிர்ப்பு மட்டுமல்ல, அது உள்ளுக்குள் தங்களது மக்களாகக் கருதுகின்ற இந்துக்களையும் கூட ஒன்றிணையாமல் தடுக்கக்கூடிய ஒரு சுரண்டல் கட்டமைப்பை உள்ளே வைத்திருக்கிறது. இது குறித்தான விவாதம் இல்லாமல் இந்தியாவில் நிலவுகின்ற போக்கு பாசிசமா, இல்லையா என்று பார்த்தோம் என்றால், தந்தை பெரியார் சொன்னது போல, அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல, பாசிசம் தான் இந்தியாவினுடைய கட்டமைப்பாகவே இருக்கின்றது. இந்தியாவினுடைய கட்டமைப்பை பாதுகாப்பதே பாசிசமாக இருக்கின்றது. ஆக பாசிசத்தை உடைப்பீர்கள் என்றால் இந்தியா உடைந்து போகும் நிலை தான் இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கான ஆபத்து எங்கிருந்து வருகிறது என்றால், தேசிய இனங்களிடமிருந்து வருகிறது. குறிப்பாக மாநிலங்கள் என்கின்ற கட்டமைப்பிலிருந்து வருகிறது. மாநிலங்கள் தான் மக்களுக்கான சட்டங்களை இயற்றுகின்ற ஒரு அடிப்படை அலகாக இந்தியாவுக்குள் இருக்கிறது. இந்த மாநிலங்கள் மொழிவழி மாநிலங்களாக இருக்கிறது அல்லது தேசிய இனக்கூறுகளை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கிறது. இவர்கள் ஏன் மாநில அதிகாரத்தின் மீது கை வைக்கிறார்கள் என்றால், இவர்கள் வைக்கக்கூடிய ஒற்றை அடையாளப் போக்கினை எதிர்கொள்ளக்கூடிய கருத்தியலாக, தேசிய இன அரசியல் எழும் என்கின்ற காரணத்தினால்தான் மாநிலத்தை நோக்கி அவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியினுடைய அமலாக்கத்துறையிலிருந்து சிபிஐ-யிலிருந்து அனைத்து துறையும் மாநிலக் கட்சிகளை நோக்கிதான் வந்ததே ஒழிய காங்கிரஸ் கட்சியை நோக்கி வரவில்லை. காங்கிரஸ் கட்சியை அவர்கள் வீழ்த்திவிட்டு அதிகாரத்திற்கு வந்த பொழுது சொன்ன குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சி என்பதே ஊழல் கட்சியாக இருக்கிறது என்பதை சொல்லித்தான் வந்தார்கள்.

’India Against Corruption’ என்று சொல்லுகின்ற அந்த ஊழலுக்கெதிரான கட்டமைப்பை உருவாக்கியது ஆர்எஸ்எஸ் எனும் போது, ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றால், அமலாக்கத்துறை எங்கே பாய்ந்திருக்க வேண்டும்? காங்கிரசை நோக்கித் தானே பாய்ந்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் எந்த விதத்திலும் பாரதிய ஜனதா கட்சியினுடைய அஜெண்டாவிற்கு எதிரி இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்-ம் வரையறை செய்திருக்கிறது.

அவர்களுக்கு நெருக்கடி தரக்கூடிய மாநிலங்கள் எங்கே இருக்கிறது என்றால், எந்த மாநிலங்களில் எல்லாம் மாநில கட்சிகள் இயங்குகிறதோ அந்த கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஒற்றை தேசக் கொள்கையை கடுமையாக எதிர் கொள்கின்றன. காரணம் ’ஒற்றை தேசக்கொள்கை’ என்று வந்தால் மாநிலங்களுடைய குறைந்தபட்ச அதிகாரக் கட்டமைப்பு என்பது தகர்ந்து போய்விடும்.

பாஜக  மாநிலத்தை நோக்கி குறி வைக்கக்கூடிய காரணங்கள் என்னவென்றால், பாரதிய ஜனதா கட்சி பன்முக அடையாளத்தை எதிர்க்கிறது. பன்முக அடையாளத்தை ஏன் எதிர்க்கின்றான்? அதற்கான பொருளியல் காரணிகள் என்ன? இன்றைக்கு நிலம் என்பது மாநிலத்தினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. கனிம வளங்கள் என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. மனித வளம் என்பது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. பெரு முதலாளிகள் லாபத்தை ஈட்ட வேண்டும் என்றால், இந்த கனிம வளங்களை ஏகபோகமாக கொள்ளை அடிக்க வேண்டும். அப்படியென்றால், மாநிலத்தின் அதிகாரிகளை, அதிகாரத்தை சுவீகரித்து மொத்தமாக அதை ரத்து செய்தால் மட்டும்தான் இந்த நிலத்தை ஒட்டுமொத்த இந்தியாவினுடைய மைய அரசு அல்லது ஒன்றிய அரசு என்று சொல்லக்கூடிய அரசு ஏகபோகமாக பெருமுதலாளியின் கையில் ஒப்படைக்க முடியும். மாநிலங்கள் அதிகாரம் இல்லாமல் போகும் என்றால், மக்களுக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

இன்றைக்கு மக்களுக்கு மூன்று விதமான அரசியல் பங்கேற்புகள் கொடுக்கப்படுகின்றன. உள்ளூர் அளவிலே அதிகார பங்கேற்பு, மாநில அளவில் அதிகார பங்கேற்பு, ஒன்றிய அளவில் அதிகார பங்கேற்பு. உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் இருக்கக்கூடிய அதிகார பங்கேற்பு என்பது  நிலம் சார்ந்தது, கனிம வளம் சார்ந்தது, மனித வளம் சார்ந்தது. இந்த கனிம வளத்தையும், மனித வளத்தையும், தொழில் கொள்கையையும் ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகின்ற பொழுது அதை பெருமுதலாளிகளிடத்திலே ஒப்படைத்து விட முடியும். அதனால்தான் அவர்களுக்கு பன்முகத்தன்மை என்பது ஆபத்தாக போகிறது. ஆகவே இந்த பன்முகத்தன்மை ஏன் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது என்கின்ற போக்கை நாம் தெளிவாக விளக்குகின்ற பொழுதுதான், அதனுடைய பாசிசக் கூறுகளை, அதனுடைய முதலாளித்துவப் போக்குகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவன் வெறும் மதவெறியை மட்டுமே முன்வைத்து உள்ளே நகரவில்லை.

அடித்தளத்தில் கம்யூனிஸ்ட்கள் சொல்வதைப் போல பொருளாதார நோக்கம் இருக்கிறது. அந்த பொருளாதார நோக்கத்திற்குள்ளாக தேசிய இனங்களை ஒழித்துக் கட்டினால் மட்டும்தான், அதனுடைய அதிகாரக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டினால் மட்டும்தான், இந்த வளங்களை ஏகபோகமாக கார்ப்பரேட் கையில் ஒப்படைக்க முடியும். அது இல்லாத கட்டத்தில் மாநிலங்கள் குறைந்தபட்ச தடையாக இருக்கும் என்றே அந்த பாசிச கூறு பன்முகத்தன்மையை இன்றுவரை எதிர்த்து கொண்டிருக்கிறது. இதுதான் நான் பார்த்த அரசியலாக சமயத்தில் இந்த அரங்கத்துக்குள் முன்வைக்க விரும்புகிறேன். ஏனென்றால் இது போன்ற கருத்துக்களை விவாதிப்பதற்கான சிறந்த அரங்கு என்பது மக்கள் அதிகார கழகத்தின் அரங்காகதான் இருக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மதவாதத்தை மட்டுமே எதிர்ப்பதற்காக நாங்கள் வரவில்லை. மே 17 இயக்கம் தெளிவாக ஈழ அரசியலிலிருந்து, இன்று நாங்கள் பேசுகின்ற அனைத்து அரசியல் தளத்திலும் பொருளாதாரக் காரணிகள் என்ன இருக்கிறது என்பதை விளக்கித்தான் முன்வைத்து வருகிறோம். ஈழ அரசியலுக்குள் இருக்கக்கூடிய பொருளாதாரக் காரணிகள், ஏகாதிபத்தியத்தினுடைய லட்சியங்கள், இலக்குகள், திட்டங்கள் போன்ற இவற்றை கடந்த 16 ஆண்டுகளில் மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி இருக்கிறது.  இதை நாங்கள் விவாதத்திற்கு முன்வைத்திருக்கிறோம். கம்யூனிஸ்ட்களிடத்தில் முன்வைத்திருக்கிறோம். அவர்களின் பதில்களை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். 16 ஆண்டுகளாக எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் இச்சமயத்தில் இந்த மேடையில் நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

பொருளாதாரக் காரணிகள் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பலியிடப்பட்ட ஈழத்தையும், அந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய போரையும் குறித்தான முழுமையான பகுப்பாய்வு இந்திய அளவில் இடதுசாரிகளிடத்தில் நடக்கவில்லை என்றால், இந்திய பாசிசத்தை எதிர் கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அவர்களால் வகுத்து விட முடியாது. ஏன் ஈழம் அழிக்கப்பட்டது என்பதைப் பற்றியான புரிதல் இந்தியாவில் இருக்கக்கூடிய இடதுசாரிகளுக்கு விவாதத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்றால்,  ஏகாதிபத்தியத்தினுடைய திட்டங்களை, ஏகாதிபத்தியத்தின் நகர்வுகளை எவ்வாறு கண்டறிந்து எதிர்கொள்வீர்கள்?

2005/2006ல் இந்தியாவிற்குள்ளாக கூட்டணி ஆட்சியில் இடதுசாரிகள் இருக்கும் பொழுது, அணுக்கொள்கையை ’123 அக்ரிமெண்ட்’ என்று சொல்லக்கூடிய அந்த அணுக்கொள்கைக்கு எதிராக இடதுசாரிகள் போராடிய பொழுது, இந்த பிராந்தியத்திற்குள் ஏகாதிபத்தியத்தினுடைய தெற்காசிய அரசியலில் வேலைத்திட்டம் என்ன என்பதைக் கணித்து பேச மறுத்தார்கள். ஆக, அது எங்கே முடிந்தது என்றால், இனப்படுகொலையில் முடிந்தது. விடுதலைப் புலிகளை பாசிஸ்டுகள் என்று சொல்லுவதற்கு எந்தவிதமான கவலையும் படாமல் எளிமையாக அறிவிக்கக் கூடியவர்களால், பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்-யையும் பாசிஸ்ட் என்று சொல்வதற்கு ஏன் இத்தனை விவாதம் நடக்க வேண்டும்? விடுதலைப் புலிகளை வரிக்கு வரி பாசிஸ்ட்கள் என்று சொன்னவர்கள், அது குறித்த முழுமையான ஆய்வு நடத்த முடியாமல் போனதனால், ஒரு இனப்படுகொலையை நாம் பார்த்தோம்.

ஆனால் 1990-யிலே விடுதலைப் புலிகளினுடைய சிந்தனையாளர்கள் மிகத் தெளிவாகவே இது குறித்து வரையறை செய்து பேசியிருக்கிறார்கள். ஆசிய கண்டத்திற்குள்ளாக ஏகாதிபத்தியம் தனது விரிவாதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றால், தெற்காசிய பிராந்தியத்திற்குள் அவர்கள் இயங்க வேண்டும், அந்த தெற்காசிய பிராந்தியத்துக்குள் அவர்கள் இயங்கக்கூடிய மிகப்பெரும் பகுதியாக தமிழின பகுதியும் இலங்கை அரசியலும் இருக்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள். அது 80-களில் வந்திருக்கிறது, 90-களில் வந்திருக்கிறது, 90-களின் இறுதியில் தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 2001 அந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னான அறிக்கையில், மிகத் தெளிவாக சொல்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது உலகளாவிய அளவில் இயங்குகின்ற மக்கள் அமைப்புகளை ஒழித்து கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட நடவடிக்கை என்று தெளிவாக சொல்கிறார்கள்.

ஆக 2001-ல் நடந்த கொள்கைகளுடைய வழிகாட்டுதல் தான், இன்றைக்கு வரை இந்தியாவில் இருக்கக்கூடிய கருப்புச் சட்டங்கள் வரை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த 25 ஆண்டுகளில் நடந்த வரலாற்று போக்குகளை தொகுப்பு செய்து, நாம் அரசியல் நிலைப்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டியருக்கிறது. இந்திய அளவிலே ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்வதிலே நாம் பின்தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் இதற்கு எதிரான அரசியல் நகர்வை முன்னகர்த்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

இன்றைக்கு பாரத ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் என்பது ஒரு மாபெரும் அபாயமாக இருக்கிறது. இதற்கு எதிரான இந்திய அளவிலான வேலைத் திட்டம் நாம் உருவாக்கியாக வேண்டும். அதை உருவாக்குவதற்குரிய கருத்தியல் வலிமையும், கள வலிமையும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைப்புகளுக்கு இருக்கிறது. நாம்தான் அதை நேருக்கு நேராக வீதியில் எதிர் கொண்டிருக்கின்றோம். வட இந்தியாவில் போராட்டங்கள் நடக்காமல் இல்லை, போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் அமைப்பாக்கப்பட்டு மக்கள் திரள் இயக்கங்களாக பல்வேறு களங்களில், பல்வேறு தளங்களில், இங்கு அம்பேத்கரிய அமைப்புகள், சூழலியல் அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மார்க்சிய அமைப்புகள், மார்க்சிய லெனியிய அமைப்புகள் என்று பல தளங்களிலிருந்து நாம் நடத்துகின்ற இந்த அரசியல் எதிர்ப்புதான், இந்த மண்ணில் அவர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்னேறி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

மதுரையிலே மிகப்பெரிய அளவுக்கு அவர்களால் ஆட்களைத் திரட்ட முடிகிறது. அதிகார வர்க்கம் அதற்கு துணையாக நிற்கிறது. இதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த மாநாட்டை நடத்துவதற்கும், இந்த அரங்கத்தில் நடத்துவதற்கும் என்ன பாடுபட்டிருப்பீர்கள் என்பதும் நன்றாகவே தெரியும். அவர்களுக்கு கிடைத்தது போல உங்களுக்கு அரங்கம் எளிதில் கிடைத்திருக்குமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் மதுரையை அவர்கள் மையமாக மாற்ற விரும்புகிறார்கள். நாம் ஒருபொழுதும் அனுமதித்து விடக்கூடாது.

ஆக இதற்கு எதிரான வேலைத் திட்டம் என்பது கடுமையான வேலைத் திட்டம். கள வேலைத் திட்டத்தை நாம் கூட்டாக சேர்ந்துதான் பார்க்க வேண்டும். நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள் விவாதங்கள் வரும், வந்தே ஆக வேண்டும். அதுதான் கருத்தியல் மற்றும் வலிமை அடைவதற்கான சனநாயக வழியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த கருத்து வேறுபாடு மூலமாகத்தான் நம்மால் கூர்மையாக முடியும்.

மக்கள் அதிகாரக் கழகம் சொல்லுகின்ற ஒரு அரசியலில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். அந்த காரணத்திற்காக தான் மேடையில் நிற்கிறோம். தேர்தல் களத்திற்கு அப்பாற்பட்ட களத்தில் நாம் பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும் என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம். தேர்தலை வைத்துக்கொண்டு பாசிஸ்டுகளை எதிர்க்க வேண்டும் என்றால், தேர்தல் களத்தை கட்டுப்படுத்துகின்ற இந்த சனநாயகக் கட்டமைப்புனுடைய கருத்தியல் எங்கே என்கிற கேள்வியை  முன்வைக்க வேண்டியருக்கிறது. தேர்தல் களத்தை நடத்துகின்ற இந்த கட்டமைப்பு என்பது புரட்சிகர சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எந்த வகையிலும் அனுமதிக்காது. ஆனால் வலதுசாரிகள் அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கான அனைத்து உதவியும் செய்யக்கூடிய கட்டமைப்புதான் இந்தக் கட்டமைப்பு.

1980-ல் ஆரம்பித்து 2014 வரை இந்தியாவினுடைய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார வர்க்கத்திற்குள்ளாக ஆர்எஸ்எஸ்-யினால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் பதவிக்கு செல்ல முடியும் என்கிற நிலை இருந்திருக்கிறது என்றால், இந்தியாவினுடைய கட்டமைப்பு பாசிச எதிர்ப்புக் கட்டமைப்பா? இதே அதிகார வர்க்கத்திற்குள் உழைக்கும் மக்கள், தலித்துகள், இசுலாமியர்கள் தேசிய இன விடுதலையிலிருந்து வெளியில் வந்தவர்கள் அவர்களால் இந்த பதவிகளுக்குள் செல்ல முடியாது என்றால் இந்தக் கட்டமைப்பு எந்த வகை கட்டமைப்பு?

ஒரு கட்டத்தில் 2005/2006 – யிலே ஆர்எஸ்எஸ்-யினுடைய தலைவரும், இந்தியாவை ஒட்டுமொத்தமாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய, இந்தியாவின் கொள்கை திட்டங்களை வகுக்கக்கூடிய, இந்தியாவின் சட்டம் ஒழுங்கை வழிநடத்தக் கூடியவராக அறியப்படுகின்ற, இந்தியாவின் அரசியல் சாசனத்தில் சொல்லப்படாத அமைப்பான புலனாய்வுப் பிரிவு (Iintelligence bureau) அமைப்பினுடைய தலைவரும் சகோதரர்களாக இருக்கிறார்கள் என்றால், இந்தியாவினுடைய அதிகார வர்க்கக் கட்டமைப்பு சனநாயகக் கட்டமைப்பு என்பது பாசிஸத்திற்கு எதிரானதா, ஆதரவானதா? இந்தக் கட்டமைப்பு பற்றியான விமர்சனம் இல்லாமல் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சியினுடைய பாசிசப் பண்பை நாம் எளிதில் வரையறுத்து விட முடியாது என்பதைத் திட்டவட்டமாக மே 17 இயக்கம் சார்பாக இங்கே நான் முன்வைக்க விரும்புகிறேன்.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால், நாம் பாஜக, ஆர்எஸ்எஸ்-யை அதிகாரத்தில் இருந்து நீக்கி விடுவோம் என்று வைத்து கொண்டாலும், ஆட்சிக்கு வருகின்ற காங்கிரஸ் கட்சியோ அல்லது இவர்கள் கொண்டாடுகின்ற ராகுல் காந்தியோ அதிகாரத்திற்கு பெரும்பான்மையோடு வந்தால் ஆர்எஸ்எஸ்-யை தடை செய்து விடுவார்களா, ஆர்எஸ்எஸ்-யை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களா, அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

தேசத் தந்தையை படுகொலை செய்த பொழுதும் கூட இந்த கட்சியை ஒடுக்குவதற்கு, இந்த அமைப்பை முற்றிலுமாக நிர்மூலமாக்குவதற்கு இந்தியாவின் அதிகார வர்க்கம் துணிச்சலாக இல்லை, தயாராக இல்லை என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இந்த சண்டை என்பது தேர்தலுக்கு அப்பாற்பட்ட சண்டை. தேர்தலுக்கு வெளியில் நடக்கக்கூடிய சண்டை. தேர்தல் கட்சிகள் அவர்களைத் தடுத்து நிறுத்துகின்ற முயற்சியை பாசாங்குத்தனமாக செய்கிறார்கள். அந்த பாசாங்குத்தனம் கூட இல்லாமல்தான் இருந்த காரணத்தினால் அதிமுக-வை அகற்றினோம். நமக்கு குறைந்தபட்சம் ஒரு பாசாங்குத்தனமாவது தேவைப்படுகிறது. மாற்று கருத்து இல்லை. ஆனால் அவ்வாறாக இயங்கக்கூடிய மாநில கட்சிகள், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஒரு கூட்டமைப்பில் உருவாகிருக்கக்கூடிய மாநில கட்சிகள், முதலாளித்துவத்தில் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கின்றன, முதலாளித்துவ போக்கைப் பற்றி என்ன நிலைப்பாடு எடுத்திருக்கின்றன?

இன்றைக்கு இருக்கக்கூடிய தொழிலாளர்களை எல்லாம், தூய்மைப் பணியாளர்களை எல்லாம் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய முதலாளித்துவ கொள்கை என்பது பாசிசத்தை வளர்த்துமா, வீழ்த்துமா? பாசிசத்தினுடைய மிக முக்கியமானக் கூறுகளில் மதவாத வலதுசாரி அரசியலும், அதோடு சேர்ந்து முதலாளித்துவ ஏகபோக அரசியலும் இணைந்துதான் இருக்கிறது. ஆக, முதலாளித்துவ சார்பு அரசியலை முன்னெடுத்துக் கொண்டு, பாசிச எதிர்ப்பு அரசியலைக் கட்டுகிறேன் என்று சொன்னால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? முதலாளித்துவ சட்டங்களை அல்லது முதலாளித்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாசிசத்திற்கு அமைப்பு தேவைப்படுகிறது, கட்சி தேவைப்படுகிறது. அந்த இடத்தில் பாசிச கட்சியோடு முரண்பாடு இல்லை, அங்கே உடன்படுகிறார்கள் (திமுக). ஆனால் மதவாத வலதுசாரி அரசியலை எதிர்த்து நிற்கிறேன் என்று சொல்கிறார்கள். இது எவ்வாறு பாசிசத்தை வீழ்த்திவிடப் போகிறது? 

ஆகவே இது தேர்தல் அரசியல் ஏன் போதாது என்று சொல்வதற்கான காரணமே ஒழிய, இவற்றை முற்றிலுமாக நிர்மூலம் செய்துவிட்டு வாருங்கள், புரட்சிக்கு செல்லலாம் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த அரசியலை அந்த எல்லைக்குள் புரிந்து நிற்க வேண்டும். திமுகவோ அல்லது இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளையோ முழுமையாக தொங்கிக்கொண்டு நாம் நிற்க முடியாது. முழுமையாக ஆதரித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த பாசிச எதிர்ப்பு களத்தை நீங்கள் மாநில கட்சிகளிடத்தில், இந்த முதலாளித்துவ கட்சிகளிடத்தில் ஒப்படைத்தீர்கள் என்றால் அவர்கள் பாசிஸ்டுகள் வளர்வதை அனுமதிப்பார்கள். அதுதான் நான்கு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி பெரும் எண்ணிக்கையில் திரண்டு நிற்பதை நாம் பார்க்கின்றோம்.

இவர்கள் மக்கள் எதிர்ப்பு திட்டங்களை கொண்டு வருகின்ற பொழுது, மக்களிடத்தில் எழுகின்ற எதிர்ப்புணர்வு என்பது பாசிஸ்ட்களுக்கு சாதகமாகதான் போய் முடிகிறதே ஒழிய, அது சனநாயக அரசியல் வளர்த்தெடுப்பதற்கு பயன்படுவதில்லை என்பதை நான்கு ஆண்டு கால அரசியலில் எடுத்துக்காட்டாக நாம் பார்க்கிறோம். இது நடந்திருக்கிறது. காரணம் என்ன? அண்ணாமலை வளர்ந்ததற்கான காரணம் என்ன? பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து நிப்பதற்கான காரணம் என்ன? 4000 பேர் திரட்டி நிற்பதற்கான அதிகார பலம் அல்லது பின்புலம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இது கிடையாது. காரணம், தமிழ்நாட்டில் ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒரு செஞ்சட்டை தோழனோ, கருஞ்சட்டை தோழனோ, நீலச்சட்டை தோழனோ துணிந்து எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சியை மக்களிடத்தில் அம்பலப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு என்பது மக்கள் மயப்பட்ட அரசியலாக இருந்தது.

அது 2021 திமுக வெற்றிக்கு பிறகு அது திமுக மையப்படுத்தப்பட்ட அரசியலாக மாற்றப்பட்டுவிட்டது. திமுக என்ன செய்கிறது? அறிக்கை விடுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறதே ஒழிய, மக்கள் மன்றத்தில் எந்த அரசியல் பரப்புரையும், மக்களை அரசியல் படுத்துகின்ற வேலையையும் திமுக செய்யவில்லை. திமுக இன்றைக்கல்ல, என்றைக்கும் செய்ததில்லை. அவர்கள் மக்களை அரசியல் படுத்துவதற்காக வரவில்லை. அதிகாரத்தைப் பிடிப்பதற்கு இது பயன்படும் என்றால் அதை எடுத்துக் கொள்வார்கள். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திமுகவை வேலை வாங்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்றால், நமக்கு தான் இருக்கிறது அதை சனநாயகத்தை நோக்கி தள்ளுகின்ற பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்றால், நமக்கெல்லாம் இருக்கிறது. அது மனித உரிமை பாதுகாக்கூடிய அரசாக மாற்ற வேண்டிய கடமை நமக்குதான் இருக்கிறது. அது பாசிச எதிர்ப்பு அரசியலுக்குள்ளாக தள்ள வேண்டிய பொறுப்பும் நமக்குதான் இருக்கிறது.

ஆக தோழர்களே, முன் எப்போதையும் விட பாஜக எதிர்ப்பு அரசியல் என்பது வீதிக்கான அரசியலாக, மக்கள் இயக்கங்களுக்கான அரசியலாக, கட்சிக்கு அப்பாற்பட்ட அரசியலாக, திமுகவிற்கு அப்பாற்பட்ட அரசியலாக இன்றைக்கு களத்தில் மீண்டும் எழ வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நான்கு வருடத்திற்குள் திமுகவினுடைய தவறுகளை அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் உதிரிகளாக இருக்கக்கூடிய நாம் தமிழர் போன்ற கட்சிகளும் பயன்படுத்தி வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மக்களிடத்தில் இருக்கக்கூடிய அதிருப்திகளை பாசிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையாக துணிச்சலாக சொல்ல வேண்டியருக்கிறது. திமுக வந்ததற்கு பிறகு ஊடக தளம் என்பது நம் அனைவருக்கும் மறுக்கப்பட்டுவிட்டது. நான் யாரை பார்த்தாலும் யாராவது ஒருவர் என்னைப் பார்த்த உடனே கேட்கக்கூடிய முதல் கேள்வியாக, அதிமுக காலத்துல பயங்கரமா சண்டை போட்டீர்களே, இப்பொழுது எல்லாம் எங்கே போனீர்கள் என்று கேட்கிறார்கள். நீங்கள் அதைத் தொலைக்காட்சிகளிடம் கேட்டிருக்க வேண்டும். அதனை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?

இன்றைக்கு யுடியூப் சேனல்கள் என்பது யாரினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? ஒன்று பாரதிய ஜனதா கட்சி கட்டுப்பாட்டில் இருக்கிறது அல்லது திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஊடகத்தில் சுதந்திரமான தனித்த ஊடகங்கள் என்று யுடியூபில் இயங்கக் கூடியவர்கள் யாரிடத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு இயங்கி வருகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்தானே. இன்றைக்கு அவர்களுக்குத் தேவை போலியான பாசிச எதிர்ப்பாளர்கள் அல்லது துணிச்சலற்ற பாசிச எதிர்ப்பாளர்கள். யார் இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக பரப்புரை செய்கிறார்களோ அவர்களை முன்வைத்துக் கொள்வது மட்டுமே.

உண்மையான பாசிச எதிர்ப்பு அரசியலை ஒருபுறம் பாரதிய ஜனதா கட்சியும், மறுபுறம் திமுகவும் அதை சார்ந்த அதனுடைய அடியாட்களும் தடுத்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான விஷயம். நீங்கள் யாராவது திமுகவை விமர்சித்து விட்டீர்கள் அல்லது ராகுல் காந்தியை விமர்சித்து விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். இதில் கூத்து என்னவென்றால் இந்த திமுக ஆதரவு இணையதளம் முதல்வருக்கு ஜால்ரா அடிப்பதை விட ராகுல் காந்திக்கு அதிகமாக ஜால்ரா அடித்தது. 2024 தேர்தலில்  பார்த்தோம் என்றால், தமிழ்நாட்டுக்குள்ளாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக முடிவுகளை மாற்றுவதற்கு நாம் கடுமையாக கடுமையாக இயங்கி கொண்டிருந்தோம். ஆனால் அந்த சமயத்தில் இவர்கள் ராகுல் காந்தி படத்தை மட்டும்தான் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

ராகுல் காந்தி என்ன செய்தார்? ராகுல் காந்திக்கு வேலை தென் இந்தியாவில் அல்ல, உத்தரப் பிரதேசத்தில் போய் சண்டை போடுவது, பீகாரில் போய் சண்டை போடுவது, மத்தியப் பிரதேசத்திற்கு போய் சண்டை போடுவது, ஹரியானாவில், குஜராத்தில், மகாராஷ்டிராவில், சத்தீஸ்கரில், ஜார்க்கண்டில் சண்டை போடுவது. அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் வந்து என்ன செய்கிறார்? நாம் அதை  கேட்கவே கூடாது. இன்றைக்கு என்ன போக்கு நடந்து கொண்டு இருக்கிறதென்றால், வட இந்தியாவை பாரதிய ஜனதா கட்சி எடுத்துக்கொள்ளும், தென் இந்தியாவை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொள்ளும் என்கிற போக்கு தான் நடக்கின்றது. இரண்டு இந்திய தேசியக் கட்சிகள் பங்கு போட்டுக் கொள்ளக்கூடிய இடத்தில் வந்து நிற்கிறது. இன்றைக்கு தொகுதி மறுசீரமைப்பு என்று தென்னிந்தியாவில் நமது பிரநிதித்துவத்தை முற்றிலுமாக குறைக்கக்கூடிய போக்கை கொண்டு வந்திருக்கிறார்கள். இது குறித்து காங்கிரஸ் எதுவும் பேசியதா? ராகுல் காந்தி பேசினாரா? போராட்டம் ஏதாவது நடத்தினாரா?

இன்றைக்கு தீவிரமான பாசிசப் போக்குகளை பாஜக கடைபிடிக்கவில்லை என்று சொல்லுவது முழுமையான தவறு. யாரெல்லாம் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அரசியலுக்கு எதிராக இருக்கிறார்களோ, யார் தீவிரமாக எதிர்கொள்வார்களோ அவர்களை ஆர்எஸ்எஸ் படுகொலைகள் செய்திருக்கிறது. அப்படி எதிர்ப்பவர்களை, ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி நிரந்தரமாக ஏழு ஆண்டுகளாக சிறையில் வைத்திருக்கிறது. பீமா கோரேகான் வழக்கிலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் யார்? கம்யூனிச சிந்தனையாளர்கள், மார்க்சிய சிந்தனையாளர்கள். அவர்களைக் குறித்து இந்தியா முழுவதிலும் ஒரு பெரும் எழுச்சியை எந்த தேசிய கட்சி கொண்டு வந்தது? பாரதிய ஜனதா கட்சி அகற்றிவிட்ட சனநாயகத்தை கொண்டு வருகிறோம் என்று பேசுகின்ற எந்த கட்சியும் இவர்களுடைய விடுதலையை முன்வைத்து பெரும் போராட்டத்தை இந்திய அளவில் கட்டி எழுப்பவில்லை.

அதேபோலத்தான் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படுகின்ற படுகொலை, டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை, CAA பெயரில் நடத்தப்பட்ட படுகொலை, அதற்காக கைது செய்யப்பட்டு இன்றைக்கு வரை சிறையில் அடைக்கப்பட்ட உமர் காலித், ரிசில் இமாம் போன்றவர்களின் விடுதலைக் குறித்து இந்திய கூட்டணி என்ன பேசியது? இசுலாமிய இனப்படுகொலை செய்யப்பட்டார்களே இதெல்லாம் பாசிச டெண்டன்சியா, பாசிசமா? இது பாசிசப் போக்கா அல்லது பாசிசமா, எது? இரண்டில் எது? ஆக யார் நேரடி எதிரியாக அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்களோ, அவர்களை கொன்றழிப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நீங்கள் நேரடி எதிரியாக இல்லை என்பதனால், உங்கள் மீது வழக்குகள் வரவில்லை என்பதனால், அவன் பாசிஸ்ட் இல்லை என புரிந்து கொள்ளக்கூடாது. இந்த விவாதம் ஒரு தொடர்ச்சியான விவாதமாக இருக்க வேண்டும்.

இந்த பாசிசம் குறித்தான பெரும் உரையாடல்களை டிராஸ்கி செய்திருக்கின்றார். கிராம்சி செய்திருக்கின்றார். அதற்குப் பின்பு பல அறிஞர்கள் இது குறித்து பேசிருக்கிறார்கள். நமக்கு டிராக்சி மீது உடன்பாடு இருக்கிறது, முரண்பாடு இருக்கிறது என்பதெல்லாம் வைத்து கொள்வோம். ஆனால் பாசிசம் குறித்தான விவாதத்தை மேற்கொள்கின்ற பொழுது, எவ்வாறு அந்த காலகட்டத்தில் பாசிசம் எழுந்தது, இரண்டாம் உலகப் போக்கு பின்பான பாசிசக் கட்டமைப்புகள் எவ்வாறு எழுந்தன, அந்த பாசிசக் கட்டமைப்புகள் இப்பொழுது எப்படி இருக்கின்றன,  இந்தியாவில் பாசிசப் போக்குகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியதிருக்கிறது. அந்த பெரும் கடமை இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு நமக்கு இருக்கிறது.

மக்கள் அதிகாரமாக இருக்கலாம், அல்லது மே 17 அமைப்பாக இருக்கலாம். அவன் இயக்கத்தினுடைய பெயரையோ, சட்டையினுடைய நிறத்தையோ பார்ப்பதில்லை. நம்மையெல்லாம் ஒட்டுமொத்தமாக அவன் எதிரி என்றுதான் பிரித்து வைத்திருக்கிறான். ஆகவே இதையெல்லாம் கடந்துதான் நாம் இதற்கான ஆய்வுகளை முன்வைத்து இந்திய அளவில் இதற்கான வழிகாட்டுதல்களை செய்ய வேண்டிய கடமை, ஒரு வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. ஆக அப்படிப்பட்ட ஒரு பணியை மேற்கொண்டு வருகின்ற 2026 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணி என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும். முறியடிக்கப்படுவது மட்டுமல்ல, அம்பலப்படுத்தப்பட வேண்டும். நிரந்தரமாக மக்கள் மன்றத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்ற ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கான வழிவகையும், அதற்கான கூட்டமைப்பையும், கூட்டு செயல் திட்டத்தையும் தமிழ்நாடு அளவில் நாம் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்த இடத்திலிருந்து அதை முன்னகர்த்த வேண்டும் என்று நான் மக்கள் அதிகாரக் கழகத்தினுடைய தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்து நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »