முடிவிலா சுரண்டலில் முறைசாரா-அமைப்புசாரா தொழிலாளர்கள்!
சனாதன அரசினால் நிராகரிக்கப்படும் பெண் தொழிலாளர்கள்
இந்தியப் பெண் கல்வி விகிதம் 65% உயர்ந்துள்ள சூழலிலும் இன்று வேலைக்கு செல்லும் பெண்களின் விகிதம் 25% க்கும் குறைவாகவே உள்ளது. பெண்களின் இந்த கல்வி வளர்ச்சியானது முற்போக்கு சமூக சீர்திருத்தவாதிகள் கல்வி குறித்து உருவாக்கிய கருத்தாக்கங்களால் தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் சாத்தியமானது.
உலகமயம், தாராளமயம் தாக்கத்தினால் உருவான குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
“மனைவி வீட்டு வேலைகளைப் பார்க்கவும், கணவன் வெளியில் சென்று வேலை பார்க்கவும் உருவாக்கப்பட்ட திருமண ஒப்பந்தத்தை மனைவி மீறினால் மனைவியை விட்டு கணவன் நீங்கி விடலாம்” – மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.
“வேலைக்கு செல்லும் பெண்கள் விபச்சாரிகள் “- சாமியார் ஜெயேந்திர சரஸ்வதி.
இதுபோன்ற பிற்போக்கு பெண்ணடிமைத்தன கருத்துக்களை உதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த மதகுருக்கள் மற்றும் தலைவர்களின் ஆட்சியில் தான் பெரும்பாலான வடமாநிலங்கள் இன்று சிக்கி தவிக்கின்றன. வடமாநில ஆட்சியாளர்களின் இந்த குறுகிய மானபான்மையால் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் உழைப்பு சக்தி ஒன்றிய வளர்ச்சி பங்களிப்பில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக உழைப்பாற்றல் படைத்த மக்கள் தொகைக்கு இணையான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
மத அடிப்படைவாதிகளின் அதிகார வெறியும், இந்தியப் பெருமுதலாளிகளின் லாப வெறியும் இணைந்தால் அடித்தட்டு ஏழை, எளிய மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் அனைத்து வழிகளிலும் சுலபமாகவே நடைபெறும். இப்படியாக அமைப்பு சாரா தொழிலாளர் மீது ஏவப்படும் சுரண்டல் யாரும் அறியாத வகையில் பல நுண்ணிய கண்ணிகளால் பிணைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றியத்தின் உள்நாட்டு உற்பத்தி பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்களையே சார்ந்திருக்கிறது. 2019ல் எடுக்கப்பட்ட பொருளாதார ஆய்வின்படி, அமைப்பு சாரா தொழில்துறை மூலமாக மட்டுமே 93% வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளால் நிர்வகிக்கப்பட மாட்டார்கள். வீட்டு வேலை மற்றும் சுயதொழில் புரிபவர்கள், கூலி தொழிலாளர்கள், பணி விதிகள் வரையறுக்கப்படாத நிறுவனங்களில் பணி புரிபவர்கள் என இந்திய ஒன்றியத்தில் பல வகையான அமைப்பு சாரா தொழில்கள் நடைபெறுகின்றன. இதில், அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 9.6 கோடி என்கிறது ஒரு ஆய்வறிக்கை. அதிலும், வெறும் 23% மட்டுமே முழுநேர வேலை வாய்ப்பு பெற்றவர்களாக உள்ளனர். மீதமுள்ள 77% ஒப்பந்தப் பணியாளர்களாகவே உள்ளனர்.
கொரோனாப் பெருந்தொற்றின் முதல் அலையின் போது நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தற்போது இரண்டாவது அலையில் முற்றிலும் அழிக்கபட்டுள்ளன. இதன் விளைவாக இளைஞர் வேலை வாய்ப்பு பெருமளவில் சரிவடைந்துள்ளது. பெண்கள் வேலை இழப்பதாலும் வருமானம் இழப்பதாலும் பல குடும்பங்களில் போதுமான உணவை உட்கொள்வதை தவிர்க்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும், குடும்பங்களில் கடன் சுமை, ஏற்றத்தாழ்வு, வறுமை அதிகரிப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொருளாதார வல்லுநர் அனூப் சத்பதி தலைமையில் ஒன்றிய அரசு இந்திய அளவிலான குறைந்தபட்ச தனிநபர் வருமானத்தை நிர்ணயிக்க ஒரு குழுவை அமைத்தது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு தனி நபரின் குறைந்தபட்ச வருமானமாக கிராமப்புறங்களில் ரூ 375 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ430 ஆகவும் இருக்கலாம் என இக்குழு பரிந்துரைத்தது.
கொரொனா முன்புவரை 30 கோடி தொழிலாளர்களின் தனி நபர் வருமானம் ரூ.375க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், பெருந்தொற்றின் காரணமாக மேலும் 23 கோடி தொழிலாளர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, சுமார் 53 கோடி தொழிலாளர்கள் குறைந்தபட்ச வருமானத்தை கூட ஈட்ட முடியாத அவல நிலையில் உள்ளனர் என்று “ஸ்டேட் வொர்கிங் ஆப் இந்தியா – 2021” என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் வீடுகளில் எந்த அளவிற்கு வறுமை தலைவிரித்தாடுகிறது என்பதை உணரலாம்.
இச்சூழலில் தான் பெரும்பான்மை நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெறுகிறது. இந்நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் மீது சுமத்தப்படும் கூடுதல் பணிச்சுமைகளை சகித்து செல்கின்றனர். ஒருபுறம் அதிகரிக்கும் பனிசுமை மறுபுறம் சம்பள வெட்டு என இரண்டையும் பொறுத்துபோனால் தங்கள் குடும்பத்தின் வறுமையை ஓரளவாவது குறைக்க இயலும் என்று அனைத்து இன்னல்களையும் தாங்கி கடக்கின்றனர். இப்படி, குடும்பத்திற்கு தூணாக நிற்கும் பெண்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் அளவற்றவை.
ஒரு சிறிய துணிக்கடையில் மாத ஊதியம் ரூ10,000க்கு வேலை செய்துவந்த சுமதி, வயது 35, தனது வாகன ஓட்டுநர் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தான் வேலை செய்த கடையில் வியாபாரம் சரிவர இல்லாததால் கடை நிறுவனர் பலரையும் பணி நீக்கம் செய்தார். இதுநாள் வரை, சுமதியின் பணிச்சுமை அதிகரித்தாலும் தனக்கு வேலையுடன் வருமானம் உள்ளது என்று சமாளித்து வந்தார். ஆனால், கடையின் வியாபாரம் முற்றிலும் நலிந்துவிட்டதால் கடையை மூடப் போவதாக நிறுவனர் தெரிவித்துவிட்டார். தற்போது, வேலை தேடி அலையும் எந்த இடத்திலும் இடத்திலும் வேலை இல்லையென்றே சொல்வதாகவும் வருத்தத்துடன் கூறுகிறார்.
குறைந்த முதலீட்டுடன் ஒரு கடையைத் துவங்குபவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்கள் இல்லை. வங்கிக் கடன், கந்து வட்டி கடன், பராமரிப்பு, பணியாளர் ஊதியம் என ஒரு கடையை நிர்வகிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் தான் அவர்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொரோனாப் பெருந்தொற்றினால் அரசு அடிக்கடி அறிவித்த ஊரடங்கும், வருவாய் இழப்பால் மக்களின் நுகர்வு சக்தி குறைந்ததும் எனப் பல நிர்ப்பந்தங்கள் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன.
இந்திய ஜவுளித் துறை இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12% ஈட்டி தருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்களிப்பு அளிக்கின்றது. இத்துறையில், 4.5 கோடி தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆடை நிறுவனங்களில் 60%ல் இருந்து 80% வரையிலான தொழிலாளர்கள் பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்களில் பலலட்ச கணக்கானவர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யக் கூடிய துறையாகவும் ஜவுளி தொழில் விளங்குகிறது.
குறைந்த முதலீட்டுடன் இயங்கும் சிறு-குறு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிமையாக்கும் முறைகளை ஒரு பொறுபுள்ள அரசு மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, பணி நேரங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் வகுப்பதும், குறைந்த பட்ச ஊதியத்தை உறுதிபடுத்தும் விதிகளை வகுப்பதும் மக்கள் மீது அக்கறையுள்ள அரசின் அடிப்படை கடமை. ஆனால் இதற்கு நேர்மாறாகத் தான் மோடி அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஒருபுறம், பெருந்தொற்றால் இழந்த வருவாயை மீட்டிட தொழிலாளர்களின் பணி நேரங்களை உயர்த்துகிறார். மறுபுறம், எந்த வாழ்வாதார நெருக்கடிகளையும் சந்தித்திடாத பெரு நிறுவன முதலாளிகளுக்கு மக்கள் பணத்தில் வரிச் சலுகைகளை வாரி வழங்குவதும் பல லட்சம் கோடி வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதுமாக மோடி செயல்படுகிறார்.
40 வயதான பார்வதி கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறார். தனது குடிகார கணவர் இறந்துவிட்டதால் இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய ஒற்றை வருமானத்தை ஆதாரமாக கொண்டிருந்துள்ளார். இடைத்தரகர் மூலமாகக் கிடைத்த வேலையும் இந்த தொடர்ச்சியான ஊரடங்கினால் கிடைக்காமல் போனதால் பசி, பட்டினியால் தன் குழந்தைகள் வாடுவதாகக் கவலையுடன் தெரிவித்தார்.
இந்திய கட்டுமானத் துறையில் பணி புரியும் 5 கோடி பணியாளர்களில் 10.3% பெண்கள். இந்தத் துறையிலும் பெண்கள் ஆண்களைவிடக் குறைவான ஊதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். பாலினப் பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல், பணிப் பாதுகாப்பின்மை எனப் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் இத்துறையில் மிக அதிகம். எனினும், தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை எண்ணி பெண்கள் இப்பணிக்கு செல்கிறார்கள்.
2020-21 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை 50% சரிந்திருப்பதாக தேசியப் புள்ளியியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. கொரோனா பாதிப்பிற்கு முன்பே மோடி அரசின் பணமதிபிழப்பு, ஜி. எஸ். டி போன்ற தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானத் தொழில் மோசமாக பாதிக்கபட்டது. இது தற்போது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் 80% முறைசாராத் துறைகளையே சார்ந்து இயங்குகிறது. முறைசார்ந்த தொழில் துறையின் பொருளாதார பங்களிப்பு வெறும் 10%க்கும் குறைவானதாக உள்ளது. முறைசாரா தொழில் பிரிவுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அன்றாடம் கூலி வருமானத்தை ஈட்டுபவர்கள் முறைசாரா தொழிலாளர்கள். தங்கள் உழைப்பிற்கான ஊதியத்தை, வீட்டு வேலையாட்கள் போன்று, மாத சம்பளமாக பெறுபவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள்.
சுயதொழில் மூலமாக கிராமப்புற குடும்பங்கள் குறைந்தபட்சம் 50% வருவாயும், நகர்ப்புற குடும்பங்கள் 35% வருவாயும் பெறுகின்றன. அது, மாதம் ரூ.10,000க்கும் குறைவானதாகவே உள்ளது. சுயதொழில் செய்யும் பெண்களுக்கும் பெரும்பாலும் குறைந்த அளவு வருவாயே கிடைக்கிறது.
தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் படி சுமார் 6.3 கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதவையாக உள்ளதாக கூறுகிறார்கள். பல நாடுகளில் இத்தகைய தொழிலாளர்களை பதிவு செய்யும் முறைகள் வலுவாக இருப்பதால் பேரிடர் காலங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடிப்படை உதவிகளான உணவு, மானியம், நிதி முதலானவை கொண்டு சேர்க்கும் வழிகள் நேரடியான முறையில் சுலபமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், 10க்கும் குறைவான நபர்களைக் கொண்டு நடத்தப்படும் நிறுவனங்கள் அதிகமுள்ள இந்தியாவில் அதனைப் பதிவு செய்யும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாததால் பலருக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதில்லை என்று பொருளியல் ஆய்வறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இவர்களுக்கென்று நல வாரியங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றிலும் பெரும்பான்மை தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்யப்படாமலே உள்ளன.
இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களைத் தான் மோடி அரசு இந்தப் பெருந்தொற்று காலத்திலும் கைகழுவியுள்ளது. இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 14 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்தப் பணியாளர்களாகவே இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவித்திருந்த போது இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற நிகழ்வு உலகில் வேறு எங்கும் நடந்திராத ஒன்று. அவர்கள் உணவுக்கும், தங்கும் இடத்திற்கும் மோடி அரசு உறுதி அளித்திருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சுகாதாரம் மற்றும் பேறுகாலத்திற்கான சமூக பாதுகாப்பு நிதிக்கு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மோடி அரசு எந்த ஒதுக்கீடும் செய்யவில்லை. சமூகப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு என எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில் அமைப்புசாரா மற்றும் முறைசாரா பெண் தொழிலாளர்களின் குடும்பங்கள் இந்தப் பேரிடர் காலத்தில் நிற்கதியாகவிடப்பட்டுள்ளன.
அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறுகிய கால நிவாரணமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டின் இறுதி வரை விலையில்லா தானியங்கள் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.5000 என ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் செலுத்த வேண்டும். எதிர்கால திட்டங்களாக பெண்களுக்கு பணி உத்தரவாத சட்டம் இயற்றுவதும், சமூகப் பாதுகாப்பு தளங்களை உருவாக்குவதும் தான் அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
மாநிலங்களின் சூழல்கள் வெவ்வேறாக இருக்கும் போது வரி மற்றும் இயற்கை வளங்கள் மீதான கட்டுபாடு மட்டும் ஒன்றியத்திடம் குவிந்திருப்பதால் நிகழும் அவலம் தான் இந்தக் கொரோனாக் காலத்தின் படிப்பினையாக இருக்கிறது . ஒன்றியத்திடம் குவிந்துள்ள வளங்கள் மீதான அதிகாரத்தை பிரித்து வழங்கிட வேண்டும். மாநிலங்களுக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமையும், வேலைவாய்ப்பு வடிவமைப்புகளை அமைத்துக் கொள்ளும் அதிகாரமும் இருக்க வேண்டும்.
வறுமையைக் குறைப்பதே பொருளாதார வளர்ச்சியின் திறவுகோலாக இருக்க முடியும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் வறுமையைக் குறைக்கும் நலத்திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் பொது சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். தொலைநோக்கு திட்டங்களாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் பணி மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்தான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்யும் நோக்கமிருந்தால் முதலில் தனியார் மயக் கொள்கையைக் கைவிடவேண்டும்.
சிறு, குறு நிறுவனங்களின் வருமான விகிதம் குறைவதால் அதனை சரிகட்ட அவை முறைசாரா தொழிலாளர்களை சுரண்டுகின்றன. மேலும் அவர்களின் கடன், வட்டி, வரி ஆகியவற்றால் உருவாகும் நெருக்கடியும் அளவற்றவை. பொருட்களை சந்தைப்படுத்தும் தன்மையில் ஏற்படும் இன்னல்களும் மற்றும் பெருநிறுவனங்களுடனான போட்டி விலைகளில் தாக்குப் பிடிக்க இயலாமை போன்ற பிரச்சினைகளும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட சிறு குறு நிறுவனங்களின் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. இவற்றையெல்லாம் சந்திக்கும் நெருக்கடியான சூழலால் தான் சிறு குறு நிறுவனங்களும் தங்கள் இருத்தலுக்கான போட்டியில் தொழிலாளர்களை வருத்துகின்றன.
அரசின் தொழிலாளர் விரோத வரி நடவடிக்கைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சுரண்டல், ஆகியவற்றோடு சிறு குறு நிறுவனங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு நிதி முதலீடு, பேரம் பேசும் வலிமை, அரசின் சலுகைகள், கடனை பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பு என அனைத்து சாதகமான சூழலும் எளிமையாக கிடைத்துவிடுகிறது. இவற்றையெல்லாம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் சூழலுக்கு உள்ளாகிறார்கள். இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வில் ஏழை, எளிய முறை சாரா தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
முறைசாரா தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பு, பணி பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என எவையும் இல்லாத ஆதரவற்ற நிலையில் கசக்கி பிழியப்படுகிறார்கள். இந்த அன்றாடங்காய்ச்சிகளே சரிந்து கொண்டிருக்கும் இந்திய துணைக்கண்டத்தின் பொருளாதாரத்தை தூக்கிச் சுமப்பவர்கள். இவர்களுடைய உழைப்பைச் சுரண்டி தமது நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் அவலமான நிலையைத் தான் தங்களது கொள்கையாக இந்திய அரசும், பெருநிறுவனங்களும் மாற்றியிருக்கின்றன.
கொரோனா நெருக்கடி, அதற்கு முன்பே உருவான நிதி மந்தநிலை ஆகியவற்றின் இழப்புகளை இந்தத் தொழிலாளர்கள் தலையினில் சுமத்தியிருக்கிறார்கள். இவர்களுடைய உழைப்பு நேரத்தை அதிகரிப்பதும், ஊதியத்தை குறைப்பதுமாக தொழிலாளர் விரோதக் குற்றத்தை துணிந்து செய்கிறார்கள். இத்தொழிலாளர்களை அரசியல் அணியாகத் திரளவிடாமல் தம்முடைய உரிமைகளுக்காக போராடும் வலிமையற்றவர்களாக மாற்றியிருக்கிறார்கள். இந்நிலை மாறாமல் இந்த சுரண்டல் கொள்ளை நிற்கப் போவதில்லை.
ஒன்றியத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் முதுகெலும்பை போன்றவர்கள் அமைப்பு மற்றும் முறைசாரா தொழிலாளர்கள். முதுகெலும்பை நொறுக்கிவிட்டு தனியார்மயத்தின் இரைப்பையை நிரப்புவதில் கவனம் கொண்டால் இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி படுக்கையில் தான் கிடக்கும்!