காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டது மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுபாதக செயலை செய்த கோழைகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்பதே  அனைவரின் கருத்தாக இருக்கிறது. மக்களின் துயரத்தில் இருக்கும் இந்த வேளையிலும், இந்த சம்பவத்தைக் கூட  இந்துத்துவ சங்கிகள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்கும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளனர். சமூக வலைதளம் முழுதும் விசமப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இவர்களின் வன்மத்தை, இஸ்லாமிய மக்களே தங்களைக் காப்பாற்றியதாக கூறிய சுற்றுலாப் பயணிகள் சொற்களே அம்பலப்படுத்தி இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்த உடனேயே, இணைய ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துத்துவ கும்பல்கள், தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளிடம், ‘நீங்கள் இந்துவா, முஸ்லீமா’ எனக் கேட்டு, ஆடையை அவிழ்த்து மத சோதனையை செய்து இந்து என்று நிரூபணமானதும் சுட்டதாக பொய்ப் பரப்புரையை நிகழ்த்த ஆரம்பித்தனர். இந்துக்களைக் குறி வைத்து தாக்கியதாகவும் இஸ்லாமியர்கள் திருந்த வாய்ப்பில்லை எனவும் பல வழிகளில் நச்சுக் கருத்துக்களைப் பரப்பி உணர்ச்சிகளைத் தூண்டினர். முழுமையான செய்திகள் வெளிவரும் முன்னரே இந்த வதந்திகள் அனைவரிடத்திலும் பரவின. தீவிரவாத செயலை செய்தவர்களை விட, இஸ்லாமிய மக்கள் மீது வன்மத்தைப் பொழியும் பதிவுகளாக பதிவிட்டுப் பரப்பினர். தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதற்கொண்ட பாஜகவினரும் இதனையே கூறினர். கோடி மீடியா என்று அழைக்கப்படும் சங்கித் தொலைக்காட்சிகளும் இந்த காட்சிகளையே  திரும்பத் திரும்ப பரப்பினர்.

ஆனால்,

  1. தொலைக்காட்சியில் சுற்றுலாப் பயணி ஒருவர், கொலைகாரர்கள் மறைந்திருந்து சுட்டார்களே தவிர அருகிருந்து சுடவில்லை எனக் கூறினார். மேலும் தொலைக்காட்சி பேட்டியளித்த அனைவரும், மதத்தைக் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறவில்லை.
  2. ஒரு தம்பதி தங்கள் உயிரையும், உடைமைகளையும் இஸ்லாமிய மக்களே காப்பாற்றியதாகக் கூறினார்கள்.
  3. ஒரு இஸ்லாமியர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒரு இந்துவைக் காப்பாற்ற அவரைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி வெளியானது.
  4. ஒரு பெண், தங்களை அழைத்துச் சென்ற சுற்றுலா ஓட்டுனர் உயிரைக் கொடுத்து உங்களைப் பாதுகாப்பேன் எனக் கூறி பாதுகாத்ததாகக் கூறினார்.
  5. பல்லவி என்பவர், தன் கணவரை சுட்டுக் கொன்றவர்களிடம் இருந்து தன்னையும், தன் மகனையும் பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு வந்த இஸ்லாமிய சகோதரர்களே காப்பாற்றியதாகக் கூறினார்.
  6. குதிரை வைத்திருந்த காஷ்மீரி இஸ்லாமியர்கள் பலர் துப்பாக்கி சூடு கேட்டதும் பதறி குதிரைகளைக் கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர்.
  7.  குதிரை சவாரி தொழிலாளியான  சையது உசைன் என்கிற இஸ்லாமியர் பயணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கையில் தீவிரவாதிகளால் சுடப்பட்டிருக்கிறார் – என இத்தனை செய்திகளும் வெளிவந்த பின்னால் தான் சங்கிகளின் பொய்ப் பரப்பல்கள் அம்பலமாகின.

சுமார் 2000 சுற்றுலா பயணிகள் கூடிய அந்த இடத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏனென்கிற கேள்வியை எழுப்பாமல், அதை நோக்கிய விவாதம் செய்யாமல் பல ‘கோடிமீடியாக்கள்’ திரும்பத் திரும்ப இந்துவா, இஸ்லாமியரா எனக் கேட்டு விட்டு சுடப்பட்டதாகவே பரப்பிக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், அந்த பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்ற ’ABP மற்றும் ரிபப்ளிக்’ தொலைக்காட்சி நிருபர்களை ”#GodiMedia” என கோசமிட்டுத் துரத்தினர். ரிபப்ளிக் டிவியின் தலைமை செய்தியாளர் அர்னாப், காஷ்மீரில் 370-வது பிரிவு தடைக்குப் பிறகு, அங்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நெருக்கடி கொடுத்ததை குறிப்பிட்டு, இப்பொழுது இந்த தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் பொறுப்பேற்குமா என்று இந்த சம்பவத்திற்கு பொருத்தமே இல்லாத கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த பேச்சு சமீபத்திய உச்சநீதி மன்ற தீர்ப்புகள் பாஜக சார்புத் தன்மையில்லாமல ஜனநாயகத் தன்மையுடன் வெளிவருவதால் ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

மேலும் காஷ்மீரின் கத்துவா பகுதியில், ராகேஷ் சர்மா என்கிற ஒரு மூத்த செய்தியாளர் பாஜக எம்எல்ஏக்களிடம். மத்திய உள்துறை அமைச்சகம்  எல்லையின் ஊடுருவலைத் தடுக்க ஏன் தவறியது? என்று கேட்ட கேள்வியால் பாஜகவினரால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருக்கிறார். சுமேந்து அதிகாரி என்னும் பாஜக நிர்வாகி, நிருபர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, ‘இந்து என்பதால் தான் கொன்றார்கள் என்று சொல், சொல்’ என்று காட்டுக் கூச்சலில் மிரட்டும் தொனியில் அந்தப் பெண்ணை சொல்லச் சொல்கிறான். இவன் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு தாவியவன். ஆக்ராவில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்த அப்பாவி இஸ்லாமிய இளைஞனை ‘சத்ரிய கோரஷா தள்’ என்கிற சங்பரிவார அமைப்பை சார்ந்த கும்பல் சுட்டுக் கொன்றிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் 26 பேரின் படுகொலைக்காக 2600 முஸ்லிம்களைக் சொல்லுவோம் என வெறியுடன் பேசியது வெளியாகி இருக்கிறது. பார்ப்பனிய தலைமையில் இயங்கும் கோடி மீடியாக்களின் பொய்க் கதையாடலும், சமூக வலைதள பதிவுகளின் வெறியூட்டலும் இன்னும் எத்தனை அப்பாவிகளைப் பலிவாங்கப் போகிறதோ என்கிற அச்சமே பரவுகிறது.

பஹல்காமில் இருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலா தலமான பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடந்தது. அமர்நாத் யாத்திரைப் பாதைக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்புப் படையினரால் பெரிதும் ரோந்து செய்யப்படும் ஒரு பகுதி இது. ஆனால் இப்பகுதியில் பாதுகாப்பு ஏனில்லை என்கிற கேள்வியை ‘கோடி மீடியா’ எழுப்பவில்லை. மாறாக, இந்துவா, இஸ்லாமா எனக் கேட்டு கொலை செய்தார்கள் என ஒரு நாள் முழுதும் ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஊடகங்கள், அடுத்த நாள் முதல் ‘இந்தியா அதிரடி, முப்படைகளும் தயார் நிலை, மோடி ஆவேசம், அமித்சா கோவம்’ என வழக்கமான பாஜக புகழ் பாட ஆரம்பித்து விட்டன.

மோடி ஆட்சிப் பொறுப்பேற்று 2014- 2025 வரை, உரி, நக்ரோட்டா, பதான்கோட், அமர்நாத் யாத்திரை, புல்வாமா, ரியாசி யாத்திரை தாக்குதல்கள், இப்போது நடந்த பஹல்காம் வரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா சம்பவம் என்பது பா

ஜக உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய மாலிக் 2023-ல் ஒரு பேட்டியின் போது  குற்றச்சாட்டு வைத்தார். இராணுவ வீரர்கள் செல்லும் வழியில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதால், இராணுவ வீரர்களை பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டு, அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் 2023-ல் கூறிய செய்தி அனைவரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதல், அதற்கு எதிர் தாக்குதலாக நிகழ்த்தப்பட்ட பாலகோட் தாக்குதல் என்பதெல்லாம் மோடியின் நாடகங்கள் என கோடி மீடியா (Godi Media) அல்லாத இணைய ஊடகங்கள் பின்னாட்களில் அம்பலப்படுத்தின. சத்யமாலிக் பேட்டியும் அதையே உணர்த்தியது.

இந்தியாவின் மொத்த வருமானத்தில் பாதி அளவிற்கும் மேல் பாதுகாப்பு துறைக்கு செலவழிக்கும் இந்தியா, கொரோனாவுக்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ஆட்களை நியமிக்கவில்லை என்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ராணுவ வீரர்களை, தேவையற்ற செலவு என நீக்கியதாகவும் முன்னாள் ராணுவத் தளபதி பட்சி என்பவர் கோவத்துடன் பேசினார். ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்னிபாத் வீரர்களுக்கும் நான்கு ஆண்டுகள் வரையே பணி நியமனம் செய்யப்பட்டது. அதிலும் 25% மட்டுமே நிரந்தர பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிரந்தர பணி வேண்டும் என இளைஞர்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் குறித்து விவாதிக்க வேண்டிய ஊடகங்கள், மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மட்டுமே செய்திகளை ஒளிபரப்புகின்றன. சமூக வலைதளங்களும் கோடி மீடியாக்களும் வளர்த்து விட்ட பிம்பத்தால் ஆட்சி செய்யும் பாஜக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத் தகுதியை பறித்து, சிறப்பு சட்டமான 370 பிரிவை நீக்கி, காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்து காஷ்மீர் மக்களின் அமைதியைப் பறித்தது. காஷ்மீரை இராணுவ மயமாக்கியது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படும் போது, அதனை இந்த ஊடகங்கள் செய்திகளாக்கியதில்லை. இலங்கை சென்ற மோடியும் மீனவர் பிரச்சனை குறித்து பேசவில்லை. இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையைத் தமிழ்நாடு வகுக்க வேண்டும் எனப் பேசிய தோழர். திருமுருகன் காந்தியை ’X’ சமூக வலைத்தளத்தில் இயங்கும் உயர்சாதி ஊடகவியலாளர்கள் முதற்கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் வரை பிரிவினைவாதி எனப் பரப்பினர். 

ஈழத் தமிழர் போராட்டத்தை தீவிரவாதமாகக் கட்டமைத்தனர். இந்த கோடி மீடியாக்களும், பார்ப்பனிய ஊடகவியலாளர்களும், இந்துத்துவ ஆர். எஸ் எஸ் கும்பலும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்ட, வாய்ப்புகளைத் தேடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர், வெறுப்புணர்வு விசத்தைப் பரப்புகின்றனர்.

காஷ்மீரில் மகிழ்ச்சி தவழ்கிறது என ஊடகங்கள் மூலமாக கட்டமைத்த மோடி அமித்ஷா கூட்டணியின் சாயம், இந்த பஹல்காம் தாக்குதலால் வெளுத்திருக்கிறது. அதீத விளம்பரங்களின் மூலமாக கட்டமைத்த கதையாடல்கள் நொறுங்கி இருக்கிறது. இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இரங்கலை தெரிவிக்கும் அதே வேளையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத,  வலதுசாரி ஊடகப் பிம்பங்களால் வளர்க்கப்பட்ட மோடி – அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பதையே கோரிக்கையாக வைக்க வேண்டும்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »