
“இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம் இல்லை. சமுதாயத்தில் கீழாகவே வைக்கப்பட்டு இருக்கின்றோம். நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள் கல்வி, உத்தியோகம் முதலிய சகலத் துறைகளிலும் ஆதிக்கம் வகித்துக் கொண்டு பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மையான மக்களை அடித்தளத்தில் வைத்துள்ள நிலைகளை மாற்ற வேண்டும். இந்த காரணத்தை வைத்து தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தேன்” என்று ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்து பிராமணரல்லாதாரின் உணர்விற்கு, உயர்விற்கு அடித்தளமிட்ட வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயரின் நினைவு நாள் ஏப்ரல் 28.
1852 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் நாள் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் பிறந்தவர் சர்.பிட்டி.தியாகராயர். பெரிய வணிக குடும்பத்தில் பிறந்தவர். மூன்று சகோதரர்களின் ஒருவர். ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்சு, லத்தீன், உருது, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் அறிந்தவர். நெசவுத் தறியில் செய்யப்படும் துகில்களில் தேவாங்கு என்பதும் ஒன்று. இந்த தேவாங்க தொழிலை செய்து வந்தவர்கள் ‘தேவாங்கர்’ எனப்பட்டனர். தேவாங்க குடியின் ஒரு பிரிவு ‘பிட்டி’. இந்த பிட்டி குடும்பம் தான் தியாகராயர் குடும்பம்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு அடிகோலியவர் சர்.பிட்டி. தியாகராயர். நெசவுத் தொழில், தோல் பதனிடும் தொழிலில் முன்னணியில் விளங்கியது தியாகராயரின் குடும்பம். இவர்களால் பாடம் செய்யப்பட்ட தோல் ‘பிட்டி’ என்றே மேல்நாடுகளில் புகழ்பெற்றது. அவர்களால் தயாரிக்கப்பட்ட கைகுட்டைகள் ‘சென்னை கைகுட்டைகள்’ என்று புகழப்பட்டு ஐரோப்பிய நாட்டினரிடையே பெரும் ஆதரவு பெற்றிருந்தது. ‘நேஷனல் பண்ட் அண்ட் இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன்’ என்ற அமைப்பை தொடங்கி நெசவு மற்றும் கைத்தொழிலும் புத்துணர்வு ஏற்படச் செய்தார் சர்.பிட்டி. தியாகராயர். ‘தென்னிந்திய வர்த்தக கழகம்’ நிறுவியவர். இந்நாட்டு முதலாளிகள் தொழில் துறையில் முதலீடு செய்ய அஞ்சுவதால் அரசே முன்வந்து தொழில் துறைகளை நடத்திட வேண்டும் என்று சொன்னவர். நவீன முறைகளை புகுத்தி நாட்டுத் தொழில்களை தொடர்வதும், விஞ்ஞான முறைப்படி தொழிற்நுட்பக் கல்வியை துவங்க வேண்டும் என்பதும், இங்குள்ள பொருட்களைக் கொண்டே தொழிற் வளர்ச்சி பெருக்கிட வேண்டும் என்பதுவுமே அவரின் தொழிற் முயற்சியாக இருந்தது. இறக்குமதியால் நாட்டின் வளம் சுருங்கி, மக்கள் அவதியுற நேரிடும் என வலியுறுத்தியவர்.
பல தொழிற்துறை மாநாடுகளை நடத்தி புதிய புதிய சிந்தனைகளை புகுத்தி இந்நாட்டு முதலாளிகளிடம் தொழிலார்வத்தை உருவாக்கியவர். தொழிற்துறையில் பல சீர்திருத்தங்களை செய்தார். அவற்றை மேம்படுத்த ஆங்கில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் வளர்ச்சியைப் பெருக்கினார்.
வணிகம், தொழில் மட்டுமல்ல கல்வித்துறையிலும் தனது பெயரை நிலை நாட்டியவர் சர்.பிட்டி தியாகராயர். பச்சையப்பன் அறநிலைய பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். கல்விக்கூடங்களில் எல்லாம் தொழிற்கல்வி இடம் பெறச் செய்தார். வணிகக் கல்வியும் தொழிற்கல்வியும் இன்று வளர்ந்து நிற்பதற்கு, அன்று அவர் போட்ட உரமே காரணமாகிறது.
தொழிற்துறையை மேம்படுத்திக் கொண்டிருந்தவரின் கவனம் சமூகத்தின் பக்கம் திரும்பியது.
“அவர் (சர்.பிட்டி தியாகராயர்) களத்தில் தூவிய விதை நன்றாக வளர்ந்து இருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் நாம் இங்கு பணியாற்றி வருகிறோம்” என்று பேரறிஞர் அண்ணா போற்றிய, “இத்துணை தொண்டு செய்த ஒருவர் வாழ்வு பின்வருவோருக்கு இலக்கியம் போன்றது என்றால் மிகையாகாது” என திரு.வி.க அவர்கள் புகழ்ந்த இப்பெருந்தகை பிராமணரல்லாதார் வாழ்விற்கு உரம் போட்டவர்.
இவர் தீவிர கடவுள் பக்தர். மயிலாப்பூர் கோவிலுக்கும், திருவல்லிக்கேணி கோவிலுக்கும் இவர் அளித்த திருப்பணிகள் ஏராளமாகும். மயிலாப்பூர் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு பத்தாயிரம் ரூபாயை அன்றே கொடுத்தவர். ஒரு கோவில் விழாவில் பார்ப்பனர்கள் இவரைக் கீழே உட்கார வைத்துவிட்டு, இவருடன் வேலை பார்த்த ஒரு பார்ப்பனரை மேலே உட்கார வைத்தனர். இந்த செயலால் அவர் அடைந்த அவமானமே பிராமணர் அல்லாதார் அரசியலில் வேகம் செலுத்தக் காரணமானது. காங்கிரஸ் அபிமானியாக திகழ்ந்த இவர், அதே காங்கிரஸில் ஈடுபாடு கொண்ட டி.எம்.நாயர் பார்ப்பனரால் அவமானப்படுத்தப்பட்டபோது அவருடன் இணையவும் அந்தச் செயலே காரணமானது.
சென்னை வேப்பேரியில் உள்ள திரு. டி. எத்திராஜ் முதலியார் இல்லத்தில், 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் வெளியூர் உள்ளூர் பிராமணர் அல்லாத பெருமக்கள் பெருங்கூட்டமாக கூடினார்கள். அதுவே நீதிக் கட்சி தோன்ற காரணமானது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட 25 க்கும் மேற்பட்ட பெருமக்கள் கலந்துரையாடல் பிராமணர் அல்லாதார் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியது.

அவர்களின் கலந்துரையாடலில் முக்கியமான பலவும் பேசப்பட்டது. ‘இன்றைய இந்திய அரசியல் உலகம் பிராமண ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஆதிக்கம் வட இந்தியாவில் ‘இந்து ஆதிக்கம்’ என்றும் தென்னிந்தியாவில் ‘பிராமண ஆதிக்கம்’ என்றும் பெயர் பெற்றுள்ளது. வட இந்திய இந்துக்கள் ஆதிக்கத்தின் காரணமாக முகமதியர்கள் தங்களுக்கு என ‘முஸ்லிம் லீக்’ என்ற அரசியல் கட்சியை அமைத்துக் கொண்டு தமது அரசியல் உரிமைக்காக போராடி வருகின்றார்கள். இப்படிப்பட்ட விழிப்பு தென்னிந்திய பிராமணர் அல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாயினும் அவர்கள் ஒன்று கூடி கட்சி என்ற அமைப்பு கொண்டு போராடும் நிலையில் இல்லை. 1884-ல் அமைக்கப்பட்ட சென்னை மகாசன சபையும், திராவிடர் நலனுக்காக போராட முன் வரவில்லை. அதே ஆண்டு அமைக்கப்பட்ட அனைத்திந்திய காங்கிரசும் திராவிடர்களின் நலனை கவனிக்க முன்வரவில்லை. நாமே பிராமணர் அல்லாதவர்கள் நலனுக்காக ஒரு கட்சியை தொடங்கி முன்வருவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆங்கில அரசாங்கத்தை நாடி முகமதியர்கள் 1909 ஆம் ஆண்டில் வந்த மின்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாக அரசியல் நலனை காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனால் திராவிடர்கள் நன்மையடையவில்லை” என அங்கு கூடியவர்கள் கலந்துரையாடியதின் பலனாக உருவானதே ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’.
“தென்னிந்திய பிராமணர் அல்லாதவர்கள் இனி எக்கட்சியையும் நாடிப் போகத் தேவையில்லை. பிராமணரல்லாதோருக்கு சொந்தமான தனி கட்சி உருவாகிவிட்டது. நாமெல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம். இனி நம்முடைய நலனை பாதுகாத்து வருவதற்கான கட்சி அமைப்பு ஏற்பட்டு விட்டது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் செல்லலாம். கட்சியின் பெயர், சட்டதிட்டங்கள் பற்றி நண்பர் டி.எம். நாயரும், நடேச முதலியாரும் மற்ற நண்பர்களும் கூடி ஆலோசித்து முடிவு செய்வார்கள். கூடிய விரைவில் மறுபடியும் நாமெல்லாம் தென்னிந்திய பிராமணர் அல்லாதார் கட்சியின் தனிப் பெரும் கொடியின் கீழ் கூடுவோம்” எனப் பேசினார் தியாகராயர். அனைவரும் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினர். அவர்கள் கலந்துரையாடியபடியே 1920 நவம்பர் 20ஆம் நாள் கூடினர். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதித்தது. “பிராமணர் அல்லாத தென்னிந்திய திராவிடப் பெருங்குடி சமுதாயத்தை கல்வி, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் முன்னேறச் செய்வதே சங்கத்தின் கொள்கையும் கடமையுமாகும்” என்று உரத்து முழங்கினார் தியாகராயர்.

இதன்படி தியாகராயர் அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். ‘தென்னிந்திய மக்கள் சங்கம்’ என்ற ஒரு நிறுவனத்தின் கீழ் ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்‘ என்ற நாளிதழையும், தமிழில் ‘திராவிடன்‘ என்ற நாளிதழையும், தெலுங்கில் ஆந்திர ‘பிரகாசிகா‘ என்ற நாளிதழையும் துவக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிறுவனத்திற்கு தியாகராயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜஸ்டிஸ் பத்திரிகை புகழ்பெற்ற காரணத்தால் இந்த கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக் கட்சி ஆனது. நீதியை குறிக்கும் துலாக்கோலை சின்னமாகக் கொண்டு விளங்கிய கட்சியாக நீதிக்கட்சி தோன்றியது. அக்கட்சியின் முதல் தகவல் அறிக்கை 1916 -ம் ஆண்டு வெளியானது. அதுவே பிராமணர் அல்லாதவர் நிலையை வெளிப்படுத்தியது.
அரசாங்கத்துறையில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையை
1913-ல் சென்னை நிர்வாக சபை அங்கத்தினரான சர். அலெக்ஸாண்டர் கார்டியு என்பவர் முதன்முதலாக ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ முன்பாக சாட்சியம் கொடுத்தைக் குறிப்பிட்டு அந்த அறிக்கை ஆரம்பித்தது.
சர். அலெக்சாண்டர் பப்ளிக் சர்வீஸ் கமிசனில் குறிப்பிட்டவை :
1892 -1904-க்கும் இடையில் சென்னை மாகாண சிவில் சர்வீஸ் பயிற்சியில் வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பிராமணர்கள். மைசூர் சமாஸ்தானத்திற்கான சிவில் சர்வீஸ் போட்டியில் நூற்றுக்கு 85% அலுவல்களை பிராமணர்களே கைப்பற்றினார்கள். உதவி இன்ஜினியர்களுக்கு நடந்த தேர்வில் 17 பேர் பார்ப்பனர்கள், 4 பேர் பார்ப்பனர் அல்லாதார். அக்காலத்தில் 140 டெபுடி கலெக்டரில் 77 பேர் பார்ப்பனர்கள், 30 பேர் பார்ப்பனர் அல்லாதார். மீதி மற்ற பிரிவினர் ( முகமதியர், கிறித்துவர், ஐரோப்பியர்). 1913-ல் 128 நிரந்தர மாவட்ட முனிசீப்புகளில் 93 பேர் பார்ப்பனர். 25 பேர் பிராமணர் அல்லாதவர். மீதி மற்றவர்கள்.
அது மட்டுமல்லாமல், மாகாணத்தில் இந்தியர்களுக்கென்று ஒரு சில பதவிகள் அனுமதிக்கப்பட்டன. கவர்னரின் நிர்வாக கவுன்சிலில் அனுமதிக்கப்பட்ட மூன்று இந்தியர்களில் இருவர் பிராமண வழக்கறிஞர்களாக இருந்தனர். உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஐந்தில் நால்வர் பார்ப்பனர். 1914 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் புதிய செயலாளர் பதவியை ஏற்படுத்தினார்கள். அந்தப் பதவியும் பிராமண அதிகாரிக்கு போய் சேர்ந்தது. அது போல ரெவின்யூ போர்டில் (வருமான வரித்துறையில்) ஒரு இந்தியர், அவரும் பிராமணர். மாகாண சிவில் சர்வீஸ் உள்ளவர்களுக்கு என அனுமதிக்கப்பட்ட இரண்டு கலெக்டர்களும் பிராமணர்கள்.
அது போல மாவட்ட ஊராட்சி, பொது அலுவலகம் எடுத்துக்கொண்டால் அங்கும் பார்ப்பனர்களே இருந்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகம் சென்னை சட்டசபைக்கு ஒருபோதும் ஒரு பிராமணர் அல்லாதவரை தன் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தது கிடையாது. 1914 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் மொத்தம் எண்ணிக்கை 950. அதில் 452 பேர் பார்ப்பனர்கள். 124 பேர் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள். 24 பேர் மற்ற சமூகத்தார். 1907 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. அதில் 12 பேரில் 11 பேர் பார்ப்பனர்கள். இதே நிலைதான் இம்பீரியல் கவுன்சில், மாநில கவுன்சில், முனிசிபல் கவுன்சில் முதலியவற்றில் நடந்து வரும் தேர்தலிலும் நடக்கிறது. இவ்வாறு சர். அலெக்சாண்டர், பெரும்பான்மையான அரசாங்க அலுவல்கள் பிராமணர்கள் வசமே இருந்து வந்த உண்மைகளையும், சிபாரிசு மூலம் நடைபெறும் ஏமாற்றுகளால் பிராமணர்களே ஆதிக்கம் வகித்து வந்த உண்மையையும் கமிஷன் வெளிக்கொண்டு வந்ததை சுட்டிக் காட்டியது நீதிக்கட்சியின் முதல் அறிக்கை. பிராமணர் அல்லாதார் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை, கல்வி, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை உணர்த்தியது. இவற்றை மக்களிடத்தில் பரப்புரை செய்து பிராமணர் அல்லாதவர் எழுச்சியைக் கொண்டு வந்த நீதிக்கட்சியின் பெருமகனே தியாகராயர்.
சென்னை நகரசபை அங்கத்தினராக 1882-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தியாகராயர் 1925 ஆம் ஆண்டு தலைவரானார். (அன்று நகர சபை தலைவர் ‘பிரசிடெண்ட்’ என்று அழைக்கப்பட்டார். இன்று நகர சபை தலைவர் ‘மேயர்’ என்று அழைக்கப்படுகிறார்.) 1920 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னை நகர சபைக்கான தேர்தல் காங்கிரசின் ஹோம்ரூல் இயக்கத்தைச் சேர்ந்த பிராமணர்களுக்கும், நீதி கட்சியைச் சார்ந்த பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையே நடந்த போட்டித் தேர்தலாகவே நடந்தது. ஒரு வட்டத்திற்கு ஒரு பிரதிநிதி என்னும் முறையில் தேர்தல் நடைபெற்றது. தியாகராயரே 50-ல் 28 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவர் வென்றதை நீதிக்கட்சி கோலாகலமாக கொண்டாடியது. வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் தியாகராயர் அமர்ந்திருக்க, கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ஆரவாரத்துடன், வான வேடிக்கைகளுடன் வரவேற்பு கொடுத்தனர்.
ஆங்கில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நகரசபையில் பல திருத்தச் சட்டங்களை கொண்டு வர காரணமானார் தியாகராயர். மின்சக்தியின் உதவியால் சாலைகளின் நடுவே ஓடும் டிராம் வண்டிகள் வடசென்னை பகுதிகளுக்கும் கிடைத்திடச் செய்தார். இவ்வாறு சென்னை நகரத்தின் பல பகுதிகளை இணைக்கும் போக்குவரத்திற்கு காரணமானார். 1912 ஆம் ஆண்டு தான் மின்விளக்குகள் புழக்கத்தில் வந்தன. 13 லட்சம் செலவில் நகர வீதிகளில் மின்விளக்குகளை படிப்படியாக போடுவது என்ற திட்டத்தை மேற்கொண்டார், திட்டமிடப்படி 1912 ஆம் ஆண்டில் இருந்து செயலாற்றியனார். தியாகராயர் பதவியில் இருந்த காலத்தில் நகரசபை சார்பில் 45 பள்ளிகள் நடந்து வந்தன. இலவசமாக காலை சிற்றுண்டி அளிக்க ஏற்பாடு செய்தார். எல்லா வட்டங்களுக்கும் குடிநீர் குழாய்கள் போடப்பட்டன. ஏழை எளியவர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளும் குடிநீர் வசதி செய்யப்பட்டது. குடிமக்கள் நலனுக்காக நீர் வரி ஏதும் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில மருத்துவமனைகளுக்கு ஊக்கம் அளித்தார். நகரைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே தியாகராயரின் விருப்பம். புதிய சாக்கடை சட்டம் விவாதத்திற்கு வந்தது. இதன்படி கடல் நீர் கடலில் கலந்திடும். அதை எதிர்த்தார். இதனால் ராயபுரம், தண்டையார்பட்டி மக்களின் உடல் நலம் கெடுமென்றார். இறுதியில் கூவம் நதியில் சாக்கடைகள் கலக்காமல் இருக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது இன்று வரையிலும் நடைபெறாமல் போய் விட்டது.

ஒரு வணிகராக, தொழிலதிபராக, பக்தராக வாழ்ந்த தியாகராயர் கால சூழலால் பார்ப்பனரின் ஆதிக்கத்தைப் புரிந்து கொண்டு நீதிக்கட்சி துவங்கி, வாழ்வின் இறுதி வரை பார்ப்பரைல்லாதவர்களுக்காக பாடுபட்டு, சென்னை மாகாண முதலமைச்சராக வந்த வாய்ப்பையும் தவிர்த்து விட்டு நீதிக் கட்சியின் தந்தையாக, திராவிட பெருங்குடி மக்களின் தலைவராக வாழ்ந்து மறைந்தார். வெள்ளுடை வேந்தராக மக்கள் மனதில் நிலை கொண்ட தியாகராயர் 1925-ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் மறைந்தார்.
அவரை ‘மனித தர்மத்துக்கான முதற்கிளர்ச்சி செய்த தியாகராயர்’ என்று பாராட்டினார் பெரியார். அந்த கிளர்ச்சியாளரை இந்நாளில் நினைவு கூர்வோம்.
Ref: திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி. தியாகராயர் (வாழ்க்கை வரலாறு ) – கோ. குமாரசாமி