
ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது பற்றியும், ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா-ஐரோப்பாவின் போர் நகர்வுகளை நாம் அறிந்து கொள்ளாமல் கடப்பது தமிழர்களுக்கு பின்னடைவை கொடுக்கும் என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூகவலைதளத்தில் சூன் 17, 2025 அன்று பதிவு செய்தது.
ஈரானை நோக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் போர்வெறிக்கூச்சல் அதிகரித்திருக்கிறது. “..ஈரானின் தலைவர் கெமேனியை கொலை செய்வது முதல் ஈரானின் வான்வெளியை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டோம், ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும்..” என தற்போது அவர் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஒருவேளை அமெரிக்கா போரில் இறங்கும் நிலை வரலாம் என்பதை அறிவிக்கிறது. இந்த போர் முற்றுமானால் ஆப்கானிஸ்தான் போர் குறித்து தனது கடந்த ஆட்சியில் பேசியது போல, “ஈரான் மீதான போரில் மற்ற நாடுகளும் இறங்க வேண்டும்” என அழுத்தம் கொடுப்பார்.
ட்ரம்ப் இந்தியாவையும் போரில் இழுக்க அதிக வாய்ப்புண்டு. அப்படியான சூழலில் மோடி அரசு வழக்கம் போல கைகட்டி அவர் சொல்வதை கேட்டுவிடும் நிலை வரலாம்.

இந்தியா-பாகிஸ்தான் போர் நீட்டித்திருந்தால் ஈரான் மீதான போரை நடத்த இயலாமல் போயிருக்கும் என்பதால் தானோ இந்தியா-பாகிஸ்தான் போரை ட்ரம்ப் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த இரு நாடுகளின் போரை தான் மட்டுமே முயற்சி எடுத்து நிறுத்தியதாக ட்ரம்ப் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இதை இந்தியா இதுவரை மறுக்கவில்லை.
ஆகவே டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதாக நாம் அறியலாம். ஏற்கனவே இசுரேலுக்காக கூலி வேலை செய்யும் நிலையில் அமெரிக்காவின் ஈரான் மீதான போருக்கும் எடுபிடி வேலை செய்யும் முடிவை சங்கிகள் எடுக்கலாம்.
ஏற்கனவே இந்திய ஊடகங்கள் (தமிழ் ஊடகம் உட்பட) ஈரானுக்கு எதிரான செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டிற்குள் ஈரான் மீதான தாக்குதலுக்கான ஆதரவு தளத்தை உருவாக்க சங்கி ஆதரவு ஊடகங்கள் முயல்கின்றன.
தமிழ்நாட்டு தமிழர்கள் தமக்கு அருகில் நடந்த ஈழப்போரின் சர்வதேச வலைப்பின்னலையே அறியாமல் கடந்தனர். “சினிமாத்தனமான சாப்பாட்டு கதைகள், அல்லது ஈழம்-பிரபாகரன் நமக்கு எதற்கு?” என இரண்டுவகையான அறிவாளிகள் நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா-ஐரோப்பாவின் போர் நகர்வுகளை நாம் அறிந்து கொள்ளாமல் கடப்பது பின்னடைவை கொடுக்கும்.

உலகளாவிய பொருளாதாரத்தோடு தமிழ்நாட்டு பொருளாதாரம் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் மற்றும் போர் நடவடிக்கைகளில் தமிழர் நிலம் முக்கிய பங்கை வகிக்கிறது. மிகமுக்கியமாக, சாணி-மூளை சங்கிகள் தமிழர்களை பலிகொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இலங்கை கப்பற்படையிடமிருந்தே காப்பாற்றாதவர்கள், இந்த கொடும் போரிலிருந்தா நம்மை காத்துவிடப் போகிறார்கள்?
அரசியல் பேசுவோம். சர்வதேச அரசியலை கவனிப்போம்.
https://www.facebook.com/share/p/1DugAUrLgr
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
சூன் 17, 2025