
தெலுங்கு திரையுலகில் வெளிவந்திருக்கும் இந்த ’23’ திரைப்படத்தை சிறையில் பூத்த நறுமலர் என்றே சொல்லலாம். இப்படத்தில் உண்மைப் பின்னணியைக் கொண்ட மூன்று படுகொலை வழக்குகளை கையாண்டிருக்கிறார்கள். அவ்வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கும், அரசியல் பின்புலம் உள்ளவனுக்கும் எளிதாக கிடைக்கின்ற விடுதலையானது, ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை என்பதை அழுத்திச் சொல்லும் படமாக ’23’ திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
முதல் கதை 1991-ம் ஆண்டு நடந்தது. ஒரு திரையரங்கில் தவறுதலாக ஒரு பெண்ணின் காலை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த ஒரு இளைஞன் (சந்துரு) மிதித்து விடுகிறான். அந்தச் சிறிய விஷயத்தை ஊதிப் பெருதாக்கி அந்த இளைஞனையும், அவனது உறவுகள் உட்பட்ட 8 பேரையும் அந்த சாதி வெறிக் கூட்டம் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்கிறது. அதனை உடற்கூராய்வு செய்ய வரும் மருத்துவரே, தன் சாதியினருக்கு நேரும் இக்கொடுமைகள் பேசு பொருளாக வேண்டும் என தற்கொலை செய்து கொள்கிறார். சாதி வெறியர்கள் மீது வழக்கு பாய்ந்தாலும் அவர்கள் வாய்தா வாங்கி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு வழக்கு. 1993-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம். ஒரு சிறிய இட்லிக் கடை வைக்க ஆசைப்படும் இளைஞன் (சாகர்) கடன் கிடைக்காமல் அலைகழிக்கப்படுகிறான். தந்தையின் ஏச்சுக்கள், காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் சூழ, நண்பன் (தாசு) கொடுத்த யோசனையால் பேருந்தில் திருடப் போகிறார்கள். பேருந்தில் பெட்ரோல் ஊற்றி விட்டு குச்சியை உரசி மிரட்டத்தான் செய்கிறான். அந்தக் குச்சி தெரியாமல் விழுந்து விட பேருந்து தீப்பிடித்து எரிகிறது. அதில் 23 பேர் பலியாகிறார்கள். அந்தப் பெயரே படத்தின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது. வழக்குகள் நடக்கிறது. பார் கவுன்சிலில் இருந்து எவரும் இவர்கள் சார்பாக வாதாடக் கூடாதென முடிவெடுக்கிறார்கள். இப்படி ஒரு முடிவெடுக்கப்பட்டால் எதற்கு நீதிமன்றம், நீதிபதி எனக் காட்டமாக, நீதிபதி 22வது சட்டப்பிரிவை சுட்டிக் காட்டிக் கேட்கும் வேளையில் ஒரு வழக்கறிஞர் இவர்களுக்காக வழக்காட வருகிறார். (ஆர்டிகிள் 22 என்பது எந்த வழக்கில் கைது செய்யப்படுபவர் ஆனாலும் அவருக்கும் நீதி கோர அடிப்படை உரிமை உண்டு என்பதாகும்). அந்த வழக்கறிஞர் ஒரு இடதுசாரித் தத்துவம் கொண்டவராகக் காட்டப்படுகிறது. அவர் படிக்கும் புத்தகத்தின் கூர்மையான வரிகளே அவரின் சித்தாந்த அடையாளத்தைக் காட்டி விடுகிறது.
“ஒரு கொலைக்கான தண்டனை வேறொரு உயிரை எடுப்பது எனத் தீர்ப்பாகிறது. ஆனால் அரசியல்வாதிகள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான பேரைக் கொன்றாலும், சாதி வெறி கொண்ட பண்ணையாளர்கள் எந்தத் தவறும் செய்யாத ஒடுக்கப்பட்ட சாதியியினரை இனப்படுகொலையே செய்தாலும், வங்கிகள் மக்கள் பணத்தை திருடிக் கொண்டு மக்களைத் தற்கொலைக்கு தூண்டினாலும், நீதிமன்றம் அவர்களைத் தூக்கிலிடுகிறதா? நீதிமன்றம் பணமோசடி செய்பவர்களையும், பாலியல் குற்றம் செய்பவர்களையும் கூட பாதுகாக்கும் போது, அதன் விசக் கோரைப் பற்களால் சாகர் மற்றும் தாசு போன்றவர்களைக் கொல்லும் தீர்ப்பு வழங்குகிறது” – அப்புத்தகத்தின் வரிகளாக இருக்கும் இக்காட்சி வலுத்தவனுக்கு ஒரு நீதி, இளைத்தவனுக்கு ஒரு நீதியாக இருக்கும் அரசியலை நுட்பமாக வெளிப்படுத்தி விடுகிறது.
சாகர், தாசு எதிர்கொள்ளும் வழக்கு விசாரணைகள், நீதிமன்றம் அளிக்கும் தண்டனைகள் மற்றும் வழக்கறிஞரின் விடா முயற்சியும் தோல்வியுற்று அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு எனப் படம் நகர்கிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் நாயகன் அழுகிறான், புலம்புகிறான், 23 பேரைக் கொன்று விட்ட குற்றவுணர்ச்சியில் தவிக்கிறான். தற்கொலை செய்து கொள்ளும் வரையில் செல்கிறான். அதன்பின் அவனே அவன் மன உணர்வுகளையும், தான் செய்த தவறையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைக்கிறான். அச்சிறைச்சாலை கண்காணிப்புக்கு வரும் சிறை அதிகாரி அவன் எழுத்தைப் பாராட்டுகிறார். ‘வேலையின்மை காரணமாக திருட்டு, வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் திருந்துவதற்கு உன் புத்தகம் வழிகாட்டும், தொடர்ந்து எழுது’ என்று ஊக்கப்படுத்துகிறார்.
இதற்கு பிறகு நாயகன் மனதளவில் அடையும் மாற்றம், ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் அவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. தோழர் பேரறிவாளன் அவர்கள் சிறையில் இருந்தே மேற்படிப்பு படித்ததும், சிறையில் நல்ல செயல்பாடுகள் பலவற்றை செய்ததும், சிறைக்கைதிகளை சீர்திருத்தியதும் சிறை வட்டாரங்களும், சிலரும் மட்டுமே அறிந்த ஒன்றாக இருக்கிறது. அவையெல்லாம் உயிரோட்டமான காட்சியாக அமைந்திருப்பது போன்ற இப்படத்தின் சிறைக்கூட காட்சியமைப்புகள் உணர்த்துகின்றன. தோழர். பேரறிவாளன் அவர்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பல ஆண்டுகளாக அனுபவித்தார். இப்படத்தின் நாயகன் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறான் என்பது மட்டுமே வேறுபாடு.

நாயகனை சிறை நூலகத்தில் நூல்களைப் படிக்கச் சொல்கிறார் ஜெயிலர். நிறைய வாசிக்கிறான் நாயகன். சிறைக்கைதிகளுடன் புத்தகத்தைப் பற்றி விவாதிக்கிறான். ரஷ்ய எழுத்தாளர் ‘செகோ’வின் கதைகளை சொல்கிறான். அனைவரையும் ஆர்வத்துடன் கேட்க வைக்கும் அளவிற்கு பேசுகிறான். ‘இந்த சுவர்கள் நம் உடம்பைத்தான் சிறைக் கூடத்தில் அடைக்கிறது. புத்தகம் நமக்கு அந்த சுவர்களைத் துளைத்து புதிய உலகில் பறக்க சிறகுகளைத் தருகிறது’ என நண்பனிடம் கூறி புத்தகம் படிக்கச் சொல்கிறான். நண்பன் தாசு, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானது தான் எனக் குற்றவுணர்ச்சி கொண்டவனாகவே சிறையிலிருக்கிறான். பேருந்தில் இறந்தவர்களின் அழுகுரலை மறக்க முடியாமல் கஞ்சா பழக்கம் கொள்கிறான். சாகரின் தொடர் பேச்சும், அவர்களின் நட்பும் கடைசி வரை மாறாமல் இருக்கிறது.
இதில் இடம் பெற்ற மூன்றாவது வழக்கின் குற்றவாளி (ரமேஷ்), 26 பேரைக் குண்டு வைத்து கொலை செய்தவன். ஆனாலும் அவன் அரசியல் பின்புலத்தால் சிறையிலேயே பல வசதிகளுடன் இருக்கிறான். உள்துறை அமைச்சரையே மிரட்டும் அளவுக்கு செல்வாக்கு உடையவனாக இருக்கிறான். அந்த மிரட்டலால் சில நாட்களிலேயே அவன் சிறையில் இருந்து விடுதலையும் ஆகிறான். ஆனால் நாயகன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஏழு வருடம் சிறைக்குப் பின்பு, உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பு உறுதியாகி, தூக்கு தண்டனை நிறைவேறும் தருவாயில் அவர்களின் கருணை மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதன் பிறகும் சிறையில் 35 வருடங்களாக இருக்கிறான் என்பதுதான் படத்தில் மட்டுமல்ல, உண்மையியிலும் நடந்த சம்பவமாக இருப்பது மனதினை வலிக்கச் செய்கிறது.
சிறையில் தாசு, சாகரிடம், நம் செய்தியை பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு, மக்களைக் கொதிக்கச் செய்த அளவிற்கு, திட்டமிட்டு 26 பேரைக் கொலை செய்தவன் மீது பத்திரிக்கைகள் காட்டவில்லையே என்று கூறும் காட்சி, செய்தி ஊடகங்களின் இன்றைய தன்மையை பிரதிபலிக்கும்படி இருக்கிறது. சிறையில் கழிப்பறை கழுவும் வேலையை தரும் போது வெளியிலும் நம்மை இதைத் தான் செய்யச் சொல்கிறார்கள், சிறைக்குள்ளும் அதே வேலை தான் என்று தாசு கூறும் காட்சி சமீபத்தில் சிறைக்குள்ளும் சாதியைப் பார்த்து, அதற்கேற்ப வேலைகள் பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்படும் நடைமுறையை உச்சநீதிமன்றம் கண்டித்ததை நினைவுறுத்தியது.
சிறை, சிறைவாசிகள் என அந்த சூழலுக்குள் நகரும் காட்சியமைப்புகளில், கைதிகளின் பக்கமிருந்து, அவர்களின் மன உணர்வுகளைப் பார்க்கும் அந்த நுட்பமான பார்வையை இப்படம் வழங்குகிறது. சிறையில் குற்றவாளிகளை சீர்திருத்துவதற்கு, சிறை அதிகாரி மூலம் அளிக்கப்படும் வழிமுறைகள் குறிப்பாக ‘உன்னதி’ என்ற பெயரிட்ட பயிற்சிகள், குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவைப் போல சித்தரித்த ஒரு கதாபாத்திரம் விவரிக்கும் அந்த காட்சிகள் என இவையெல்லாம் இப்படத்தைப் போன்று வேறு படங்களில் இடம்பெற்றிருக்கிறதா என்பதே கேள்விக்குறி. அந்த அளவிற்கு வெகு சிறப்பு.

பேருந்தில் இறந்தவரின் மகள் சிறைக்கு வந்து நாயகனைப் பார்த்து கண்ணீருடன் சாபமிட்டு செல்வதும் அவளே 10 வருடம் கழித்து வந்து, புத்தர் சிலையை பரிசாகக் கொடுத்துவிட்டு, ‘எனது தந்தை உயிருடன் இருந்தால் அவர் உங்களை மன்னித்திருப்பார்’ என்று கூறிவிட்டு செல்வதற்கும் இடையில் புத்தர் என்ற படிமம் சாட்சியாக வருகிறது. அதே சமயம் பேருந்து எரிப்பில் கால் இழந்த ஒருவர், இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு செல்பவர்களிடம் உணர்ச்சிப் பூர்வமாகக் கூறும் காட்சி, எழுவர் விடுதலையைக் கோரி போராட்டம் நடந்த போது, ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் குடும்பங்களை வைத்து, இதே போன்று சில அரசியல் பேர்வழிகள் பேச வைத்த செயல்களை நினைவுபடுத்தியது. ராஜீவ் காந்தி கொலை அரசியல் சதிகள் ஒருபுறமிருந்தாலும், ராஜீவ் காந்தி கொலையில் இறந்து போனவர்களின் உறவுகளுக்கு, அந்தப் பெண் புத்தர் சிலையைக் கொடுத்து விட்டு நகரும் அந்தக் காட்சியே உரித்தான பதிலாக இருக்க முடியும்.

நாயகனுக்கு, தான் எழுதிய புத்தகத்தை எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்பதே இறுதி விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்ற முடியாத சட்ட சிக்கலில் இருப்பதை ஜெயிலர் கூறியதும் நொந்து விடுகிறான். அதைப் போல தன் குழந்தையின் புகைப்படத்தையும், தான் எழுதிய குறிப்புப் புத்தகத்தையும் சிறைக் கைதி ஒருவன் எரிக்கும் போது துடிக்கிறான். ஜெயிலர் இதனை செய்தது யாரென்று சொன்னால் தண்டனை அளிக்கிறேன் என உறுதி கூற அவன், ‘நான் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற போதும், தீக்குச்சியை உரசி நின்ற போதும் என் சுயநினைவு என்னிடம் இல்லாத நிலையில் இருந்தது, அதே போன்று தான் என் புத்தகத்தை எரித்த அந்த கைதிக்கும் அந்த சமயத்தில் இருந்திருக்கும்’ என்று சொல்லும் காட்சியில், சிறையின் சீர்திருத்தம் இவ்வளவு பக்குவத்தைத் தரும் சிறைக்கூடமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. அதே சமயம் ராம்குமார் – சுவாதி வழக்கில் ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவலர்கள் நாடகமாடிய காட்சியும் நம் மனக்கண்ணில் வந்து போகிறது.
இப்படத்தின் நாயகி கிராமத்தில் புகையிலை தயாரிக்கும் ஆலையில் வேலை செய்கிறாள். காதலனுடன் நெருங்கி இருந்ததால் திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரிக்கிறாள். காதலனை சிறையில் அடைத்ததும் பல இன்னல்களுக்கு ஆளாகிறாள். நாயகனின் தூக்குத் தண்டனை உறுதியானதும், நாயகி தன் குழந்தையை தத்து கொடுத்து விட்டு கதறுகிறாள். வழக்கறிஞரும், அவர் மனைவியும் ஆதரவு கொடுக்கிறார்கள். செவிலியர் ஆகும் விருப்பத்தை சொல்ல, அவர் படிக்க வைக்கிறார். செவிலியர் பணியில் சேர்கிறாள். நாயகன்-நாயகியின் கடைசி வரையிலான காதல் வலிமையான காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது.

‘அவர்கள் செய்த கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் எல்லா மனிதருக்கும் அவரவரின் நியாயத்தை சொல்ல உரிமையுண்டு’ – வழக்கறிஞர் தனது மனைவியுடன் சொல்லும் இந்த வசனமே நீதித் துறையின் வலுவான பிடிமானமாகும். ஆனால் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடிய உமர் காலித் வழக்கு விசாரணை ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட விசாரிக்கப்படாமல் கடந்ததும், பீமா கோரோகான் வழக்கில் ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட மனித உரிமை ஆளுமைகளை பல ஆண்டுகள் சிறையிலடைக்க வழக்கை ஒதுக்கி வைத்ததும், எளிய அடித்தட்டு மக்கள் மீதான வழக்குகள் காலவரையின்றி நீட்டிக்கப்படுவதும் என நீதித்துறையின் செயல்பாடுகள், அதன் நியதிகளை மீறுவதற்கான நடைமுறை சான்றுகளாகவே இருக்கின்றன.
அதீத கதாநாயக பிம்பத்துடனும், பான் இந்தியா நோக்கத்துடனும் வெளிவரும் திரைப்படங்களில் பாலிவுட்டை அடுத்து தெலுங்கு திரையுலகமே இருக்கிறது. அந்த சூழலில் அங்கு வெளிவந்திருக்கும் இப்படியான படம், சமீப காலமாக மனித உணர்வுகளை, சமூக அவலங்களை முதன்மைப்படுத்தும் நம் தமிழ் திரை இயக்குனர்கள் போல இப்படத்தின் இயக்குனரும் நம்பிக்கைத் தருகிறார் என்றே சொல்லலாம். தெலுங்கு திரையுலகம் இப்படியான கதையமைப்புகளால் மீளட்டும் என்பதே நம் விருப்பம்.
குறிப்பு: இப்படம் அமெசான் ஓடிடி தளத்தில் உள்ளது.