பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 200-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இனவெறி இசுரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலையை அங்கீகரிக்கவும் ஒன்றாகக் கூடிய பேரணி செப்டம்பர் 19, 2025 அன்று பெரும் மக்கள் திரளுடன் நடைபெற்றது. இந்தியாவிலேயே முதன்மையான எழுச்சிப் போராட்டமாக நடந்த இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கட்சித் தலைவர்கள், இயக்க ஆளுமைகள், திரைக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் முன்னணியில் நடந்து செல்ல; குழந்தைகள், பெரியோர்கள் எனத் தாமாக திரண்டு வந்த மக்கள் பின்னால் சென்றனர். மழை வந்த போதிலும் கலையாமல் கட்டுக்கோப்பாக பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக உணர்வுப்பூர்வமான முழக்கங்களிட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடந்த பேரணியின் தொடர்ச்சியாக கட்சி மற்றும் இயக்கம் சார்ந்த ஆளுமைகளும், திரைக் கலைஞர்களும் உரையாற்றினர்.

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் அங்கமாக மே 17 இயக்கமும் இப்பேரணியில் திரளாக பங்கேற்றது. இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் திரை ஆளுமைகள் சத்யராச், பிரகாஷ் ராச், தீனா ஆகியோர் எழுச்சி உரையாற்றினர். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் ஆளுமைகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கட்சிகளின் ஆளுமைகளும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தங்கள் உரைகளைப் பதிவு செய்தனர்.

மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர். திருமுருகன் அவர்கள் உரையாற்றினார். அவர் உரையின் சுருக்கம்:

தோழர்களே, நாம் ஒரு வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவிலே இஸ்ரேலுக்கு எதிரான குரல் எழாது என்கின்ற சரித்திரத்தை உடைத்தெறிந்து தமிழ்நாட்டில் இன்று இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் தோழர்கள் திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பேர்ப்பட்ட ஒரு எழுச்சிமிக்க பேரணியிலே பங்கெடுத்திருக்கக்கூடிய நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் எழுச்சி தமிழர் தோழர். தொல் திருமாவளவன் அவர்களுக்கும், இந்த நிகழ்விலே பங்கெடுத்திருக்கும் தமிழினத்தினுடைய உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் தோழர். ஜவாஹிருல்லா அவர்களுக்கும், திரையுலக கலைஞர்கள் மற்றும் இங்கே பங்கெடுத்த பல்வேறு இயக்கங்களை சார்ந்த ஆளுமைகளுக்கும் எங்களது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் கூறியதாக ஒரு முக்கியமான தகவலை சொல்வார்கள். அதாவது, ஈராக்கில் சதாம் உசேன் எப்பொழுது வீழ்த்தப்படுகிறாரோ அப்பொழுது மேற்காசியாவில் ஒரு நிறுத்தப்படாத போர் நடக்க ஆரம்பிப்பது மட்டுமல்லாமல், உலகமெங்கிலும் உள்ள போராடுகின்ற மக்களெல்லாம் கொடூரமான ஒரு போரை எதிர்கொள்கின்ற சூழல் வரும் என்று தேசிய தலைவர் கூறியிருந்ததாக சொல்வார்கள். அதைப் போலத்தான் சதாம் உசேன் வீழ்ந்ததற்குப் பிறகு இன்று வரை எந்த போரில் நிற்கவில்லை. மேற்காசியாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழத்தை அழித்தார்கள்.

இன்று இந்தியாவினுடைய  சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடிய இந்த தேசங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்தியாவிற்குள்ளே நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். எங்கோ யாருக்கோ நடக்கிறது என்று நாம் பாலஸ்தீனத்தில் நடக்கக்கூடிய இனப்படுகொலையை கண்டும் காணாமல் போய்விட முடியாது. அங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டதை பல தோழர்கள் சொன்னார்கள்.

மூன்று நான்கு நாட்களுக்கு முன்பாக ஒரு அறிக்கை வெளிவந்திருக்கிறது. அதில் பாலஸ்தீனத்தில் படுகொலை செய்யப்பட்ட  மக்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 80ஆயிரம் பேர் என்று வெளிவந்திருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் குழந்தைகள். அது 10/15/20 ஆயிரங்களோ அல்ல, தோழர்களே, 3 லட்சம் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 400க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐநா-வினுடைய பொறுப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி அனைத்து மட்டத்திலும் ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது இசுரேல்.

நாம் மனிதநேயத்தின் அடிப்படையில் மட்டும் இங்கே திரளவில்லை. பாலஸ்தீன விடுதலைக்காக திரண்டிருக்கின்றோம். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் இங்கே திரண்டிருக்கின்றோம். ஹமாசை இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சொல்லலாம். நாம் உரக்கச் சொல்வோம். ஹமாஸ் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்பதை உரக்கச் சொல்லுவோம். அந்த மக்களுக்காக ஒரு அடி கூட, பின்வாங்காமல் இன்றுவரை இன்றுவரை களத்திலே அவர்கள்  போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை ஐநா அவை ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுது என்றைக்கும் அறிக்கை வெளியிட்டதில்லை. முதல் முறையாக பாலஸ்தீனத்தில் நடப்பது ஒரு இனப்படுகொலை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஐநாவின் அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும். பிரான்சிஸ் அல்பேனிஸ் என்று சொல்லப்படக்கூடிய ஐநாவினுடைய பாலஸ்தீனத்திற்கான சிறப்பு அதிகாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அங்கே ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என அறிக்கை கொடுத்தார்.

தமிழீழத்தில் 2009-ல் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த பொழுது 2009, மார்ச் மாதம் எட்டாம் தேதி ஐநாவிற்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. இலங்கை அரசு அந்த மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 800லிருந்து 1200 பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று ஐநாவிற்கு அந்த அறிக்கை அளிக்கப்பட்டது. ஐநா அதை அங்கீகரித்தது. அங்கே ஒரு போர்க்குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசு குற்றம் செய்து கொண்டிருக்கிறது என்கின்ற ஊடக செய்திக்கு தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அன்றைய இந்திய அரசு அதை தடுத்து நிறுத்தியது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி ஐநாவில் வெளியாக இருந்த அந்த அறிக்கையை ஒருவேளை இந்தியா தடுக்காமல் இருந்திருந்தால் அந்த இனப்படுகொலையை நாம் தடுத்திருக்கலாம். ஈழத்தினுடைய அழிவை நாம் தடுத்திருக்க முடியும்.

அப்படிப்பட்ட தடைகள் எல்லாம் அன்றைக்கு வந்தன. பாலஸ்தீனுக்கும் அதே தடைகள் வந்தன. ஒன்றரை ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அங்கே இனப்படுகொலை நடக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். ஐநா ஒரு இடத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்று அறிவித்தால் சர்வதேச நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சட்டவிதி இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு தேசத்தில் நடப்பது இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்கும் என்றால், உடனடியாக அண்டை நாடுகள் தனது ராணுவத்தை உள்ளே அனுப்ப வேண்டும். ராணுவ தலையீடு செய்ய வேண்டும். அதற்கென்று ஒரு சரத்து இருக்கிறது ஒரு விதி இருக்கிறது. அதன் பெயர் Responsibility Protect. R2Pஎன்று பெயர். ஒரு தேசத்திலே மக்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று ஐநா அங்கீகரிக்கும் என்றால் அண்டை நாடுகள் உடனடியாக ராணுவத்தை அனுப்ப வேண்டும். அண்டை நாடுகள் மட்டுமல்ல, உலகத்தில் இருக்கக்கூடிய எந்த நாடு வேண்டுமானாலும் அங்கே ராணுவத்தை அனுப்பலாம்.

இப்படி ராணுவத் தலையீடை எந்த நாடும் செய்யக்கூடாது என்கின்ற நோக்கத்திற்காக, அதற்கு எதிராக போர் புரிவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதற்காக ஒரு தரைப்படை நகர்வை இசுரேல் இரண்டு நாட்களாக நடத்திக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளின் படை ஒருவேளை இறங்கும் என்றால், உலகத்தின் எந்த நாட்டுப்படை வேண்டுமானாலும் பாலஸ்தீனத்தில் இறங்கி அந்த போரை நிறுத்த முடியும். இஸ்ரேலை திருப்பி அடிக்க முடியும். அதற்கு சர்வதேச சட்டம் அனுமதித்து விட்டது. இன்றைக்கு இசுரேல் மீது ஒரு நாடு திருப்பி அடிக்கும் என்றால் அது சர்வதேச சட்டத்தின்படி குற்றம் அல்ல. ஆக ஐ.நாவினுடைய இந்த இனப்படுகொலை என்கின்ற அறிவிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட சமயத்தில்தான் நாம் ஆயிரக்கணக்கில் இங்கு திரண்டு இருக்கிறோம். இதைவிட வேறு என்ன வேண்டும்?

இன்றைக்கு பாலஸ்தீனத்திற்குள்ளாக சர்வதேச படைகள் நுழைய வேண்டும். நமது முழக்கம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம். அந்த மக்களை பாதுகாப்பதற்கான ஒரு மனிதநேய உதவிகள் சென்று சேர வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம். ஆனால் நமது குரல் அத்துடன் நிற்கக் கூடாது. நமது குரல் எதுவாக இருக்க வேண்டும் என்றால், ‘பாலஸ்தீனத்தை விடுதலை செய்’ என்கின்ற முழக்கமாக இருக்க வேண்டும். ‘பாலஸ்தீனம் ஒரு தனி தேசம்’ என்று அங்கீகரிக்கப்படும் என்றால் அது தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளும்.

ஹமாஸ் அந்த தேசத்தினுடைய ராணுவமாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும். ஆக நமக்கு தேவையானது ஒரு விடுதலை போராட்டத்திற்கான ஆதரவே.

தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த சமயத்தில் தமிழ்நாடு என்ன சொன்னது? நாங்கள் விடுதலைப் புலிகளோடு நிற்கிறோம் என்று தமிழ்நாடு சொன்னது. ‘விடுதலைப் புலிகள் எங்கள் இரத்தம்’ என்று தமிழ்நாடு சொன்னது. இங்கே கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் இருக்கிறார்கள். அன்று ஈழத்துக்கு செல்கின்ற ஆயுத வண்டிகளை எல்லாம் அடித்து நொறுக்கிய ஒரு மாபெரும் போராளி வீரன் இங்கே இருக்கின்றார். தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்த சமயத்தில் அதைத் தடுப்பதற்கான அனைத்து போராட்டத்தையும் நடத்திய தோழர்கள் இங்கு இருக்கிறார்கள். தொல் திருமாவளவன் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். எண்ணற்ற அமைப்புகள் இங்கு இருக்கின்றன.

தோழர்களே, தமிழ்நாடு அன்று தெளிவாக இருந்தது. ஈழத்தில் கொல்லப்படுகின்ற தமிழர்களுக்காக மட்டும் நாம் போராடவில்லை. தமிழீழம் விடுதலையாக வேண்டும் என்பதற்காக நாம் போராடி இருக்கிறோம். தமிழினம் விடுதலையாக வேண்டும் என்கின்ற முழக்கத்தை வைத்திருக்கிறோம். இந்திய அரசு விடுதலைப் புலிகளை தடை செய்கிறோம் என்று சொன்ன பொழுதும் கூட, தமிழ்நாடு ஒரு காலத்திலும் பின்வாங்காமல் நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று சொன்னது, இன்றும் சொல்கிறது. இனிவரும் காலத்திலும் சொல்லும் தோழர்களே. 

அதை போலத்தான் ஹமாசை நாங்கள் ஆதரிக்கிறோம். ஏனென்றால் ஹமாஸ் நடத்துவது ஒரு விடுதலைப் போராட்டம். ஹமாசை பயங்கரவாதி என்று சொல்லுகின்ற எந்த தேசமும் ஒரு பயங்கரவாத தேசம்தான். இனப்படுகொலை தடுப்பதற்காக ஹமாஸ் போராளிகள் நிற்கிறார்கள் நேற்று முன்தினம் ஹமாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

காசாவிற்குள் இஸ்ரேலின் படை வரும் என்றால், அதுதான் அவர்களுடைய சமாதியாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்யாமல் இந்த மண்ணிலிருந்து வெளியேற மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களது தாய் மண். அந்த மண்ணை விட்டு ஒருகாலும் வெளியேற மாட்டார்கள். ஒரு காலும் வெளியேற்ற முடியாது.

இந்த மண்ணுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த மண்தான் நமது இனத்தை, நமது குலத்தை, நமது நாகரிகத்தை, நமது மொழியை வளர்த்தெடுத்தது. மண்ணை ஒருவன் ஆக்கிரமிக்கும் பொழுது உயிரை கொடுத்தாவது நாம் நிலத்தை, நமது தாய்நாட்டை மீட்க வேண்டும் என்கின்ற விடுதலைப் போரிலே இருக்கக்கூடிய எந்தப் போராளிக்கும் தமிழன் துணை நிற்பான், குரல் கொடுப்பான். இன்றைக்கு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறது தமிழினம்.

இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள், இதர சர்வதேசநாடுகள் மற்றும் 44 நாடுகளிலிருந்து படகுகளில் உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு காசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு 20 வயது சிறுமி போராளியான கிரேட்டா துன்பர்க் என்கின்ற அந்த போராளி சிறுமி அங்கு சென்றிருக்கிறார். அவர் 14 வயதிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறார். குழந்தையாக இருந்த காலத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய அந்த கிரேட்டா துன்பர்க் இரண்டாவது முறையாக சென்றிருக்கிறார்.

முதல் முறை அவர் காசாவிற்குள் சென்ற பொழுது இசுரேல் அரசு அவரைக் கைது செய்தது. இரண்டாவது முறை நுழைந்தால் நாங்கள் அவரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறைப்படுத்துவோம் என்று இசுரேல் மிரட்டியும் கூட கிரேட்டா துன்பர்க் அங்கே சென்று கொண்டிருக்கிறார். 50 படகுகள் சென்று கொண்டிருக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட நாடுகளிளிலிந்து சென்று கொண்டிருக்கிறார்கள். நாமும் அனுப்பி இருக்கின்றோம்.

‘வணங்காமண்’ என்கின்ற உதவிப்பொருள் கொண்ட அந்த படகை தமிழீழத்திற்கு இனப்படுகொலை நடந்த பொழுது அனுப்பிய இனம்தான் தமிழினம்.16 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பினோம். பாலஸ்தீனத்துக்காக நாம் நடத்துகின்ற இந்த போராட்டம் என்பது வெறும் பாலஸ்தீன மக்களுக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த பாலஸ்தீன மக்களை அழிப்பதற்காக ஒன்றுகூடி இருக்கக்கூடிய ஏகாதிபத்தியங்களை உடைத்து நொறுக்குவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம். பாலஸ்தீன போராட்டத்தைப் பற்றி நாம் அனைத்து இடங்களிலும் பேச வேண்டும். அனைத்து மட்டங்களிலும் பேச வேண்டும். அதற்காகத்தான் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு இந்த மாபெரும் எழுச்சி மிகுந்த இந்த கூட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

இன்றைக்கல்ல, 2018லேயே தந்தை பெரியாரை இழிவுபடுத்துகின்ற வகையிலே பலர் பேசினார்கள். சங்கிகள் பேசினார்கள், சிலையை உடைப்போம் என்றார்கள். காவிச் சாயத்தை ஊற்றினார்கள். போலித் தமிழ் தேசியவாதிகள் பெரியாரை இழிவுபடுத்தினார்கள். அன்றைக்கு நாங்கள் சொன்னோம், கருஞ்சட்டை படை திரண்டு வரும் என்று சொன்னோம். 2018யிலே 30,000-க்கு மேற்பட்ட தோழர்கள் கருஞ்சட்டையோடு திரண்டு திருச்சியிலே திரளத் திரள நின்றோமே, அந்த திரட்சிதான் தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிரான சக்திகளினுடைய வாயை அடக்கியது. அந்த வழியில் இருந்து சொல்லுகின்றோம், இந்திய அரசே! இசுரேலோடு இருக்கக்கூடிய உறவுகளை துண்டித்துவிடு, இசுரேலோடு எந்த உறவையும் வைத்துக் கொள்ளாதே! என்று சொல்கின்றோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் கூட இந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் இந்த இனப்படுகொலையைக் கண்டிக்கக்கூடிய வகையில் ஒன்று திரள வேண்டும் என்று கேட்கின்றோம். இதிலே கட்சி பார்க்க கூடாது. கட்சி கடந்து தமிழினம் ஒன்றுபட்டு எழுந்து நிற்க வேண்டும். தமிழினமோ, பாலஸ்தீனமோ எங்கெல்லாம் விடுதலைப் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் நாம் ஒன்று திரள்வோம் தோழர்களே. அதற்கெல்லாம் குரல் கொடுப்போம்.

அந்த வகையில பெரியாரிய உணர்வாளர்கள கூட்டமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்துகிறது. இங்கு பெரும் சரித்திரத்தை நாம் படைத்திருக்கின்றோம். சிறு சிறு அமைப்புகள் என்று நம்மை சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டினுடைய இரத்த நாளங்களாக நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த சிறு சிறு இரத்த நாளங்கள் தான் இந்தியாவினுடைய அந்த ஏகாதிபத்திய மனநிலையை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நமது குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் திருமாவளவன் அவர்கள் தனது கண்டன உரையை இந்த மன்றத்திலே ஆற்ற இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் இன்று அதிகாலைதான் அவர் இங்கிலாந்திலிருந்து இங்கே வந்தார்கள். இதுவரை அவர் தூங்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான ஒரு பயணத்திலும் கூட இந்த பேரணியிலே முழுமையாக இருந்து பங்கெடுத்து நம்மையெல்லாம் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். அவருக்கு பலத்த கரகோசத்தை நீங்கள் எழுப்ப வேண்டும் என்று சொல்லி, அவரது உரைக்கு வழிவிட்டு விடைபெறுகிறேன்.

தந்தை பெரியார் நமக்கு வழி கொடுத்திருக்கிறார். அந்த வழியிலே போராடுவோம் என்று தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய இந்த மாபெரும் பேரணி ஆர்ப்பாட்ட முழக்கத்துடன் நிறைவடைந்தது.

சென்னையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், குடிமக்கள் பேரணி நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் இசுலாமிய சங்கங்கள் போராட்டத்தில் இணைந்துள்ளன என சவுத் ஃபர்ஸ்ட் (south first) இணையதளத்தில் செய்தி வெளியானது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »