
உலகெங்கிலும் காசா மக்களுக்காக எழுந்த மனித நேயர்களின் போராட்டங்கள் இனவெறி இசுரேலுக்கு பல நெருக்கடிகளை அளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன. இசுரேலின் கடும் அச்சுறுத்தலையும் மீறி 44 நாடுகளைச் சார்ந்த ‘குளோபல் சுமுத் ப்ளோடில்லா’ என்னும் அமைப்பினர் 50க்கும் மேற்பட்ட கப்பல்களில் காசாவை நோக்கி உணவு மற்றும் நிவாரணப் பொருட்களின் கப்பல்களுடன் சென்று கொண்டிருக்கின்றனர். ஐ.நா அவை இசுரேல் செய்வது இனப்படுகொலை என அறிவித்திருக்கிறது. மேலும் உலகின் 157க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை எடுத்திருகின்றன. மக்கள் திரள் போராட்டங்களின் ஆற்றலை பறைசாற்றும் வகையில் இவை யாவும் நிகழ்ந்திருக்கின்றன.
இசுரேலின் இனவெறிப் போர் பாலஸ்தீனத்தின் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்ததோடு, மீதமுள்ளவர்களையும் பஞ்சம் பட்டினியால் சாகடித்துக் கொண்டிருக்கிறது. இசுரேலின் இனவெறி உணவுப்பொருள் தேடி வரும் குழந்தைகளைக் கூட சுட்டுக் கொல்கிறது. இவை அனைத்தும் உலகின் பல நாடுகளிலுள்ள மனித நேயர்களை கொதிக்கச் செய்ததன் விளைவாக, தங்கள் உயிர் ஆபத்தையும் மீறி காசா மக்களின் பஞ்சத்தைத் தீர்க்க கப்பல்களுடன் புறப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கப்பல்களில் அடிப்படைத் தேவையான உணவு, குடிநீர், மருந்துகள், குழந்தை பால், டயப்பர்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற 500 டன்னுக்கு மேலான சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. சுற்றுச்சூழல் போராளி ‘க்ரெட்டா தூன்பெர்க்’ (Greta Thunberg) உள்ளிட்ட நான்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், காசா ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என 600 க்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தை ப்ரீடம் புளோடில்லா ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். காசாவுக்கு உதவி வழங்குவதற்காக 2025-இல் இந்த ப்ளோடில்லா பயணம் பல கட்டங்களாக நடைபெற்றது, ஆனால் அனைத்தும் இசுரேல் இடைமறிப்பால் தடைப்பட்டன.

2025-ஆம் ஆண்டில் மே மாதத்திலிருந்து மால்டா, சிசிலி, பார்செலோனா, கிரீஸ், துனிசியா போன்ற இடங்களிலிருந்து கப்பல்கள் புறப்பட்டன. கிரேட்டா துன்பர்க் உட்பட்டவர்கள் ஏற்கெனவே ஜூன் மாதத்தில் காசாவுக்கு நிவாரணப் பொருட்களுடன் படகில் பயணம் மேற்கண்ட போது இசுரேல் கடற்படையால் இடைமறித்து கைது செய்யப்பட்டனர். மீண்டும் இப்போது சென்று கொண்டிருக்கும் படகு மீதும் செப்டம்பர் 23, 2025 அன்று டிரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் படகுகள் சேதம் அடைந்துள்ளன. இதற்கு இத்தாலி கடும் கண்டனங்களைத் தெரிவித்து தங்கள் நாட்டிலிருந்து சென்ற இத்தாலிய குடிமக்கள், ஆர்வலர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களின் பாதுகாப்புக்காக கடற்படை கப்பலை அனுப்பியிருக்கிறது. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினும் தனது போர்க் கப்பலை அனுப்பியிருக்கிறது. கிரீஸ் நாட்டின் எல்லையை செப்டம்பர் 26 அன்று கடந்த போது அந்நாட்டு போர்க்கப்பலும் பாதுகாப்புக்கு நின்றதாக புளோடில்லா அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த அமைப்பினர் 2010-ல் பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் அதன் பிறகு எந்த நிவாரணக் கப்பலும் நெருங்காவண்ணம் சர்வதேசக் கடல் எல்லையிலேயே தாக்குதல் நடத்துகிறது இசுரேல். எந்தத் தாக்குதலும் தங்களை தடுத்த நிறுத்த முடியாது என புளோடில்லா மனித நேய அமைப்பினர் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கிய தங்கள் பயணங்களை இசுரேலின் டிரோன் தாக்குதலையும் மீறி தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பாலஸ்தீன மக்களின் பட்டினியைப் போக்கும் மனித நேய செயல்பாட்டாளர்களின் இந்த முயற்சியைத் தொடர்ந்து அடுத்தபடியான மிக முக்கிய நகர்வாக செப்டம்பர் 16, 2025 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரில் இசுரேல் காசாவில் இனப்படுகொலை செய்துள்ளதாகவும், நேதன்யாகு உள்ளிட்ட இசுரேலிய அதிகாரிகள் இந்த செயல்களைத் தூண்டியதாகவும் ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இவற்றை பல்வேறு சாட்சிகள், மருத்துவர்களுடனான நேர்காணல்கள், ஆவணங்கள் மற்றும் போர் பற்றிய செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு ஆகியவற்றை ஆதாரமாகக் குறிப்பிட்டு காசாவில் நடப்பது இனப்படுகொலை என ஐநா உறுதிபட கூறியுள்ளது.
ஒரு தேசத்தில் நடப்பது இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்கும் என்றால், உடனடியாக அண்டை நாடுகள் ராணுவ தலையீடு செய்யலாம் என்கிற ஒரு சரத்து ஐநாவில் இருக்கிறது. அதன் பெயர் R2P (Responsibility to Protect -பாதுகாக்கும் பொறுப்பு) என்று பொருள்படும். இது 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உலகத் தலைவர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாடு தனது மக்களைப் பாதுகாக்கத் தவறினால் அல்லது அவர்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்தால், சர்வதேச சமூகம் தலையிட்டு அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது இதன் முக்கிய குறிக்கோளாகும். ஏமன் நாட்டின் ஹவுதி போராளிகள் 2024-ல் காசாவைக் காக்க தலையிட்டனர். இதனால் ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட சில அமைச்சர்களையும் கொன்றது இசுரேல். இருப்பினும் இது ஐநாவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏமனின் ஹவுதி போராளிகள் எடுத்த நடவடிக்கை R2P அடிப்படையில் இல்லை என ஐநா நிராகரித்தது.

இப்போது ஐ.நா, இசுரேல் இனப்படுகொலை செய்வதாக அறிவித்த அறிவிப்பு உலகெங்கும் எழுந்த மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். தங்கள் அரசுகளை அசைக்க வைத்த அவர்களின் எழுச்சியாகும். இந்த எழுச்சியே, காசாவின் போரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை செப்டம்பர் 28 அன்று டென்மார்க், பாகிஸ்தான், தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகள் ஐநாவில் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி காசாவுக்கு ஆதரவான தீர்மானத்தை தடுத்து விட்டது. 14 நாடுகள் ஆதரவளித்த நிலையிலும் இத்தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தப் போர் இசுரேலால் அமெரிக்கா நடத்தும் போர் என்பதையே ஒவ்வொரு தீர்மானங்கள் கொண்டு வரும் போது தனது அதிகாரத்தால் முறியடிக்கும் செயல்பாடுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டு 2025, ஜனவரி-ஆகஸ்ட் வரை மட்டுமே ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளுக்காக $8.7பில்லியன் அமெரிக்க இஸ்ரேலுக்கு அளித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்திருக்கிறது. காசா மீதான போரை நீட்டிக்க விரும்பும் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், உலகெங்கும் போரை தாமே நிறுத்துவதாக ஐ.நாவில் பேசியது அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது.
பாலஸ்தீன விடுதலையை செப்டம்பர் 26, 2025 வரையிலான தகவலின்படி,157 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்கும் நிலையில், ஐ.நாவின் இந்த அறிவிப்பினால் இசுரேல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இது ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில் இந்த ஆதரவு 80% மேலானதாக இருக்கிறது. சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நார்வே போன்ற முக்கிய நாடுகளும் இதில் அடக்கம்.
சர்வதேசமெங்கும் எழுந்த மக்கள் திரள் போராட்டங்களுக்கு அந்நாட்டு அரசுகள் நிர்ப்பந்தத்திற்கு ஆளானதால் இன்று பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவளிக்கும் நிலையை எட்டியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில ஏகாதிபத்திய நாடுகளைத் தவிர்த்த மேற்குலக நாடுகளும், அரபு நாடுகளும் பாலஸ்தீன ஆதரவுக்கு வந்துள்ளன. ஆனால் பாலஸ்தீன விடுதலைக்கு போராடிய ஹமாஸ் போராளிகள் இயக்கத்தை தவிர்த்த பாலஸ்தீன விடுதலை என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.
ஹமாஸ் என்பது ஆயுத வழியிலான விடுதலைப் போராட்ட இயக்கம் மட்டுமல்ல, காசா மக்கள் ஜனநாயகப் படி தேர்தலில் தேர்ந்தெடுத்த அரசு அமைப்புமாகும். பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளான காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதி இணைந்த பாலஸ்தீனம் விடுதலைப் பெற்ற தனிநாடாக வேண்டும் என்பதும் இசுரேல் ஆக்கிரமித்திருக்கும் காசா பகுதிகளில் இருந்து இசுரேலியர் வெளியேற வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியக் குறிக்கோளாகும். பாலஸ்தீன ஒற்றுமையை விரும்பியே 2024- ஜூலையில் சீனா முன்னெடுத்த பாலஸ்தீன ஒற்றுமை ஒப்பந்தத்தை ஆதரித்தது.

‘பீஜிங் பிரகடனம்’ (Beijing Declaration) என அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் PLO, ஹமாஸ், ஃபதா உள்ளிட்ட 14 பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை ஒருங்கிணைத்து காசா மற்றும் மேற்குக்கரையை நிர்வகிக்கலாம் என கையெழுத்தானது. அதன் தலைவராக ஃபதா அமைப்பின் தலைவர் அப்பாஸ் நியமிக்கப்பட்டார். இந்த ஒப்பந்தத்தை கத்தார் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பினார் காசாவின் பிரதமரான இசுமாயில் ஹனியே. ஆனால் அதற்குள் அவரையும் கொலை செய்தது இசுரேல். சீனா கண்டனம் தெரிவித்ததோடு ஒதுங்கிக் கொண்டது. இதன்படி அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஒன்றிணைந்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்து விட்டது. அதனை இசுரேலும், அமெரிக்காவுமே நாசம் செய்தன.
ஹமாஸ் போராளிகளுக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட காசாப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட இசுரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று, நிபந்தனையாக சிறையிலடைக்கப்பட்ட தங்கள் மக்களை மீட்பதே ஒரே வாய்ப்பாக இருந்தது. அந்தக் காரணத்தினால் தான் அக்டோபர் 7, 2023 தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இனிமேலும் காசாவை ஆட்சி செய்கிறோம் என்கிற பெயரில் இசுரேலின் அடிமை சங்கிலியில் வாழ விரும்பாததன் பின்னணியே அக்டோபர் 7, 2023 அன்று ‘அல் அக்சா ஃப்ளட்ஸ் (Al Aqsa Floods)’ ஆபரேசனை துவங்கியது.
அந்தத் தாக்குதலில் சுமார் 1200 அளவிலான இசுரேலியர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பிணைக் கைதிகளைப் பிடித்துச் செல்லும் போது இசுரேலிய ராணுவத்தின் அத்துமீறிய அவசரத் தாக்குதல்களினால் பலர் உயிரிழக்க நேரிட்டதாக ஹமாஸ் அமைப்பினர் கூறிய சர்ச்சையும் இன்று வரை நீடிக்கிறது.
இந்தத் தாக்குதலின் போது அந்தக் களத்தில் நடந்த செயல்பாடுகளை ஆராயாமல், இந்த தாக்குதலில் நிகழ்ந்த இசுரேலியர்களின் இறப்புகளே இசுரேல் காசா மீது போர்த் தொடுக்கக் காரணம் என மேற்குலக ஊடகக் கட்டமைப்புகள் தொடர்ந்து பரப்பின. அதற்கு முன்னர் இசுரேல் காசா மக்களை தொடர்ந்து சிறைப்படுத்தி சித்திரவதைக்குள்ளாக்கிய நிகழ்வுகளை எல்லாம் மறைத்தன. மேற்குலகம் ஹமாசை தீவிரவாதிகளிகவே சித்தரிக்கக் கட்டமைக்க நினைத்த செய்திகளையே உலக மக்களிடம் திணித்தன. ஆனால் அம்மக்களின் விடுதலைக்காக இன்று வரை போராடிக் கொண்டிருக்கும் அமைப்பே ஹமாஸ். அந்த அமைப்பை தவிர்த்து விட்டு பாலஸ்தீன விடுதலைக் கோரிக்கை நிரந்தரமாகாது என்பதே விடுதலை நேசிக்கும் பலரின் குரலாகும்.

இந்நிலையில், இடதுசாரி அரசு என்று சொல்லப்படும் இலங்கையின் அதிபர் அனுரா திசநாயக பாலஸ்தீன மக்கள் மீதாக நடத்தப்படும் போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இரு நாடு தீர்வை உடனடியாக ஐநா அமல்படுத்த வேண்டும் என்றும் ஐநாவில் பேசியிருக்கிறார். தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்குக் காரணமான ராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை அனுமதிக்க மாட்டோம் என இறுமாப்புடன் கூறியவர் அனுரா. தமிழர்களின் மீதான திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமான பெளத்தப் பேரினவாத்தை அரவணைத்து ஆட்சி நடத்துபவர், தமிழர்களின் குறைந்தபட்சத் தீர்வான 13வது சட்டத்திருத்தத்தையும் மறுத்தவரின் பாலஸ்தீன சுயநிர்ணய உரிமை குறித்தான பேச்சு இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இலங்கை இனவெறிக் கறையை பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் மறைத்துக் கொள்ளும் உரையாகவே அனுராவின் உரை இருக்கிறது.
இசுரேல் பிரதமர் நேதன்யாகுவும் 2025 செப்டம்பர் 26 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 80வது அமர்வில் பேசினார். இனப்படுகொலைக் குற்றவாளியான அவர் பேச்சைத் தொடங்கியதும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டமைப்பாக அரங்கை விட்டு வெளியேறினர். குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகளின் பிரதிநிதிகளே அதிகமாக வெளியேறினர். இதனால் அரங்கின் பெரும்பாலான பகுதி வெறுமையாகிவிட்டது. இது காசா போருக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தின் அடையாளமாக அமைந்தது. இசுரேலுக்கு சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை, பாலஸ்தீன விடுதலைக்குப் போராடிய மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. விடுதலை கோரி உயிர் ஈகம் அளித்த போராளி அமைப்புகளைத் தவிர்த்து விடும் பாலஸ்தீன விடுதலை என்பது மேற்குலகின், அரபு நாடுகளின் வேட்டைக் காடாகத்தான் முடியும்.
தமிழீழ விடுதலைக்கு உயிர் ஈகம் புரிந்த விடுதலைப் புலிகள் போன்றே ஹமாஸ் போராளிகளும் பாலஸ்தீன விடுதலைக்காக போரிட்ட அமைப்பாகும். ஹமாசை தவிர்த்த பாலஸ்தீனம் என்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி இசுரேல் மீண்டும் தாக்கவே பயன்படும்..