
மேற்குலகத்தின் கொள்ளைக்காக நடத்தப்படும் போர்கள், பாகிஸ்தான் – சவுதி ஒப்பந்தம், இந்துத்துவ கும்பலின் திசைதிருப்பும் வேலை, உலகளாவிய போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் அக்டோபர் 1 2025 அன்று மின்னம்பலம் சேனலில் வழங்கிய நேர்காணல்.
நிரூபர்: மின்னம்பலம் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சிறப்பு நேர்காணலில் நம்மோடு இணைந்திருக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். வணக்கம்.
நிரூபரின் கேள்வி: உலகம் முழுவதுமே இன்றைக்கு போருக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் பொதுமக்கள் போர் வேண்டாம் என போராட்டம் செய்கிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் போர் அதிகரிப்பதை எப்படி பார்ப்பது? இது ஒரு முரண்பாடாக தெரியவில்லையா?
தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: உலகம் முழுக்க போர் நடத்துவதற்கான ஒரு சூழலை மேற்குலகம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் முதலில் உங்கள் நாட்டு சந்தை வேண்டும் எனச் சொன்னார்கள். உங்கள் நாட்டில் முதலீடு செய்கிறேன் என்றார்கள். பிறகு பொருளை விற்கிறேன் எனச் சொன்னார்கள். அந்தப் பொருளை விற்பதற்கு சந்தையைப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதன்பின் பொருளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் வேண்டும். இந்த மூலப்பொருள் எங்கெல்லாம் இருக்கிறது? பல்வேறு நாடுகளில் இருக்கிறது. அந்த மூலப்பொருளை எடுக்க வேண்டும் அல்லவா!

அதாவது நிலக்கரி இருக்கிறது, டங்ஸ்டன், நிக்கல் தேவைப்படுகிறது, மின்கலம் (பேட்டரி) செய்வதற்கான பல்வேறு மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. நீங்கள் பேட்டரி கார் பார்ப்பீர்கள். இதற்கான பொருள் எங்கே இருந்து எடுக்கிறார்கள்?, அலைபேசி(மொபைல்) பார்க்கிறீர்கள். அதற்கான மிக நுணுக்கமான கனிமப் பொருட்கள் எங்கே எடுக்கிறார்கள்?, இந்த கனிம வளங்கள் எல்லாம் ஒரே நாட்டுக்குள் கிடையாது. ஒரு நாட்டில் உற்பத்தி நடக்கலாம். ஆனால் கனிமப் பொருள் பல்வேறு நாடுகளில் இருக்கும். அப்படியென்றால், அந்த நாடுகளில் ஆட்சி அதிகாரத்தையும், இவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றியாக வேண்டும். கனிம வளங்களை எடுத்தாக வேண்டும்.
இந்தியாவுக்குள் இந்துத்துவம் எனப் பேசி கலவரத்தை கொண்டு வந்து நம்மவர்களை திசை திருப்பக்கூடிய இதே நேரத்தில், இந்தியாவில் இருக்கக்கூடிய கனிம வளங்கள் எல்லாம் யார் கையில் ஒப்படைக்கப்படுகிறது? அதானி கையில், வேதாந்தா கையில், அம்பானிகள் கையில், டாட்டாக்கள் கையில் தான் ஒப்படைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த மூல வளங்கள் எல்லாம் எங்கு போகிறது? பெரிய பெரிய கம்பெனிகளுக்கு போகப்போகிறது. நிலத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மோடி அரசு இனி காடுகளில் சுரங்கம் உருவாக்குவதற்கு வனத்துறையிடம் அனுமதி கேட்க தேவையில்லை என முடிவு செய்து அதற்கான சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.
இது எல்லாமே ஒரு ஆசியாவை மூல வளங்களை எடுக்கக்கூடிய பகுதியாகவும், ஆப்பிரிக்காவை மூல வளங்கள் எடுக்க கூடிய பகுதியாகவும், தென் அமெரிக்காவை மூல வளங்களை எடுக்க கூடிய பகுதிகளாக தான் பார்த்து வைத்துள்ளார்கள். அப்போது அதற்குள் இவர்கள் கட்டுப்பாடுகளை கொண்ட பகுதியாக உருவாக்கியாக வேண்டும். அந்த இடத்துக்குள் இவர்களுடைய ஆதிக்கத்தை கொண்டு வந்தாக வேண்டும். தற்போது ஆசியாவுக்குள்தான் மிகப்பெரிய ஆற்றல்களாக சீனா இருக்கிறது. ஐரோப்பாவினுடைய கிழக்கு பகுதியில் ரஷ்யாவினுடைய மிகப்பெரிய பகுதி ஆசியாவுக்குள் இருக்கிறது. இந்த இரண்டுமே ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக மாறி இருக்கிறது. இதை தவிர ஈரான் இருக்கிறது. அது மிக முக்கியமான ஒரு பொருளாதார வளம் கொண்ட ஒரு நாடு. பெட்ரோலிய வளம் கொண்ட ஒரு நாடு. இந்த மூன்றுமே அமெரிக்காவினுடைய கட்டுப்பாட்டின் கீழாகவோ, அமெரிக்காவின் சுரண்டலுக்கு கீழாகவோ இல்லை.

ஆக இந்த மூன்று நாடுகளையுமே ’அமெரிக்கா’ ஆக்கிரமிக்க நினைக்கும் அல்லது அதன் நிலைத்தன்மையை உடைக்க நினைக்கும். எப்படி லிபியா நாட்டை நாசமாக்கி விட்டார்களோ, அந்த மாதிரி ஆக்கிவிட்டால் உள்ளே புகுந்து கொள்ளை அடிக்கலாம். இப்படிதான் ஆப்கானிஸ்தானில் கொள்ளை அடித்தார்கள். அதேமாதிரி ஈராக்கை கொள்ளை அடித்தார்கள். தற்போது சிரியாவை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி கொள்ளை அடிப்பதற்கான ஒரு வேலை வேண்டும் என்பதால், தற்போது ஈரான் தாக்கப்பட வேண்டும். அப்படி ஈரான் தாக்கப்பட வேண்டுமெனில், ஈரானினுடைய ஆதரவு பெற்ற சக்திகள் (அந்த பகுதியில் இருக்கக்கூடிய போராட்ட அமைப்புகள்) எல்லாம் அழிக்க வேண்டும்.
அன்று விடுதலை புலிகள் முன்பே இதைப்பற்றி சொன்னார்கள். அது என்னவெனில், ”உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களுக்கான போராடுகின்ற அமைப்புகளை அழிக்கின்ற ஒரு வேலையை அமெரிக்கா செய்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள்”.
அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது. இன்று ஹமாஸ் அழிக்கப்படுவதும், ஹிஸ்புல்லா அழிக்கப்படுவதும், ஹவுத்தீஸ் குறிவைத்து தாக்கப்படுவதும், குர்திஸ்தான் அமைப்புகள் நொறுக்கப்படுவதும், தென் அமெரிக்காவில் இருக்கக்கூடிய மக்கள் சார்ந்த அமைப்புகள் கொல்லப்படுவதும், இப்படி உலகம் முழுவதும் மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகள் எல்லாவற்றையும் அழிப்பது என்பது நடக்கிறது.
இங்கே பல்வேறு செயல்பாட்டாளர்களை கொண்டு போய் சிறையில் போடுவது நடக்கிறது. பீமா கோரேகான் வழக்கில் ஏகப்பட்ட பேரினை சிறையில் அடைத்தார்கள். மக்கள் உரிமைக்காக போராடக்கூடிய எல்லோரையும் கொண்டு போய் சிறையில் அடைப்பது என்பது உலகம் முழுக்க ஒரு நடைமுறையாக நடக்கிறது.
ரஷ்யாவை வீழ்த்த நினைக்கிறார்கள். ஈரானை வீழ்த்த வேண்டும் என்பதற்காக படைத்தளம் அமைப்பதற்கான சண்டையாகதான் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் போர் நிற்காது. இப்போர் மேலும் விரிவடையும். எவ்வளவு காலம் பாலஸ்தீன மக்கள் தாக்கப் பிடித்து நிற்கிறார்களோ, அவ்வளவு காலம் தள்ளிப் போகலாம். ஈரானை அழிப்பதற்காகத்தான் திருகோணமலைக்கு குறி வைக்கிறார்கள் என்று 2004 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் சொன்னார்கள். மேலும் ஈரானை அழிப்பதற்கான ராணுவ தளம் எங்கே இருக்கிறது என்றால், ஈழத்தில் தான் இருக்கிறது. ஈழத்து பகுதியில் இருந்துதான் ஈரானைத் தாக்குவதற்கான கப்பற்படைத் தளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா நினைக்கிறது. 2009-ல் ஈழம் அழிக்கப்பட்டது. ஈரானின் மீது சுற்றி வளைக்கக்கூடிய ஒரு வேலைகள் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். அது சவுதி அரேபியா மீது எந்த தாக்குதல் நடந்தாலும் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடிய பாகிஸ்தான் உடனடியாக தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இது அடிப்படையில் யாருக்கு எதிரானது? சவுதியை யார் தாக்க போகிறார்கள்? மேற்குலகத்தில் சவுதி ஒரு மிகப்பெரிய ஒரு ஆற்றல் என்றால், அதற்கு எதிர் ஆற்றலாக ஒரு போட்டி தேசமாக ஈரான் பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் மாதிரி, அங்கே ஈரான், சவுதி என்பதாகப் பார்க்கப்படுகிறது.
சவுதியை தாக்கக்கூடிய இன்னொரு மிகப்பெரிய ஒரு ஆற்றலாக ஈரான் இருக்கிறது என சவுதி நினைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் சவுதி என்ன செய்கிறதெனில், ஆப்பிரிக்காவிலுள்ள பல்வேறு தாக்குதலை நடத்துகிறது. ஏமனில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய சவுதி ஆதரவு பெற்ற படைகள் பல தாக்குதல்கள்/ கொலைகள் நடத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. காங்கோ உட்பட்ட பல ஆப்பிரிக்க தேசத்தில் நடக்கும் கொலைகளை சவுதி செய்து தாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஈரானுக்கும் சவுதிக்குமான ஒரு முரண்பாடு வருகிறது என்றால், ஈரானைத் தாக்குவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்திக்கொள்வோம் என எச்சரிக்கை விடுகிறார்கள். அமெரிக்காதான் வர வேண்டும் என்கிற அவசியம் கிடையாது, பாகிஸ்தானைக் கொண்டு நடத்துவோம் என்பது சவுதியினுடைய ஒப்பந்தம். ஆனால் இதனை வெளியே என்ன சொல்வார்கள் ’கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா தடுக்கவில்லை. அதனால் இனிமேல் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதற்காக நாங்கள் பாகிஸ்தானோடு ஒப்பந்தம் போடுவதாக சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
இன்றைக்கு பாகிஸ்தான் ஒரு பிராந்திய அதிகாரமாக (regional power) மாறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் மோடிக்குதான் அவர்கள் நன்றி சொல்வார்கள். ஏனெனில் ஒரு பிராந்தியம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முறை இருக்கிறது. மோடி நண்பர்களின் வணிக நலனிற்காகவே வெளியுறவுக் கொள்கையை மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் என்ன ஆனது? இன்றைக்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிபரிடம் முக்கியத்துவம் கிடைக்கிறது. சீன அதிபரிடம் முக்கியத்துவம் கிடைக்கிறது. அவங்களுடைய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முக்கியத்துவம் கிடைக்கிறது. சவுதியில் பாதுகாப்பு ஒப்பந்தம் போடுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டு நடக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு பிராந்திய சீரமைப்பு நடக்கிறது. இதல்லாம் தமிழ்நாடு கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனில் இந்த மொத்த போர்களும் இந்த பக்கம் நடக்கிறது. கிழக்கு பக்கத்தில் தைவானைச் சுற்றி, பிலிப்பைன்ஸ் சுற்றி பல்வேறு இராணுவ நகர்வுகள் நடந்துக் கொண்டே இருக்கிறது. அந்த பகுதியில் ரஷ்யா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியிலும் ஒரு போர் நடக்கும் சூழல் வருது என்றால், இந்த இரண்டுக்கும் மையமாக இருக்கக்கூடிய பகுதி இந்தியாதான். இந்தியாவில் கடல் சார்ந்து முப்பக்கமும் கடல் கொண்ட பகுதியாக தென்னிந்திய நிலப்பரப்பு இருக்கிறது. அதில் தமிழ்நாடு தான் மிக முக்கியமான நிலப்பரப்பு. இதை நம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் நாம் வேறு வேறு விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தோமெனில், இந்தப் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, நாளைக்கு நாம் என்ன நெருக்கடிக்கு உள்ளாகுவோம் என யாருக்கு தெரியும்?
போர் என்பது உலகம் முழுக்க பரவக்கூடிய ஒன்றுதான். எல்லா நாடுகளும் போரினுடைய விளிம்பில் இருக்கிறார்கள். என்றைக்கு எங்கே போர் வெடிக்கும் என தெரியாது. அப்படி ஒரு போர் சூழல் வந்தால் சாமானிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அந்த இடத்தில்தான் நாம் போரை பற்றியான கவனம் நம்ககு தேவை.
மிக ஆழமாகவும் பொறுமையாகவும் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.