
தேசத்தந்தையாக போற்றப்பட்ட காந்தியைக் கொன்ற, இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. ஜெர்மனி ஹிட்லர், இத்தாலி முசோலினியின் பாசிச சிந்தனைகளை அடியொற்றி தோன்றிய ஆர்.எஸ்.எஸ்-ன் நூறாம் ஆண்டு நினைவை ஒட்டி தபால்தலை மற்றும் நாணயத்தை மோடி வெளியிட்டிருக்கிறார். சுதந்திரமடைந்த பின்னும் இந்தியக் கொடியை ஏற்காமல், பல காலம் புறக்கணித்திருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சுதந்திரப் போராட்ட இயக்கம் என புகழ்ந்திருக்கிறார்.
’ராஷட்ரிய சேவா சங்கம்’ எனப் பொருள்படும் ஆர்.எஸ்.எஸ் தேசப்பற்று என்ற முகமூடியில் வந்தாலும், அதன் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக ‘ஆர்.எஸ்.எஸ் ஆழமும், அகலமும்’ – என்கிற இந்த சிறிய நூல் இருக்கிறது. இது கன்னடத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. தேவனூர மகாதேவ என்பவர் எழுதிய நூலை கனகராச் பாலசுப்ரமணியம் அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான தோற்றத்தையும், அதன் இலக்கையும் நுட்பமாய் கவனித்து அவற்றை மக்களிடையே எடுத்துக் கூறும் முயற்சி தான் இந்நூல் என்கிறார் நூலாசிரியர் ஆர்.எஸ்.எஸ்-யை உருவாக்கிய தலைமைகள் பாசிச சிந்தனையுடையவர்களாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். மனுநீதியையே இந்தியாவின் சட்டமாக மாற்ற வேண்டும் என்பதை மூர்க்கமாகக் கொண்டு அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது கடும் எரிச்சலுற்று இருந்தனர் என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதியவை மற்றும் பேசியவைகளிலிருந்து பல மேற்கோள்களை எடுத்து ஆதாரங்களாக வைக்கிறார்.
குறிப்பாக ‘சிந்தன கங்கா’ நூலில் கோல்வால்கர் எழுதியவற்றை மேற்கோள் காட்டுகிறார்.
“இந்து சமூகம் சதுர்வர்ண அமைப்பைக் கொண்டது… சில மேற்கத்திய நாடுகளில் இருந்து சில விதிகளை எடுத்துக்கொண்டு பொருத்தமே இல்லாத குறுக்கல் முறுக்கலாய் ஒட்டியதுதான் நம் அரசியலமைப்புச் சட்டம்…. உலகத்தின் போலி தத்துவங்கள் மற்றும் அமெரிக்கா இங்கிலாந்து அரசுகளின் அரசமைப்புச் சட்டங்களின் ஒட்டுத்துணி வேலை’ என அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை மலினப்படுத்தும் மேற்கோள்கள் இப்புத்தகத்தில் உள்ளது.

பிரம்மாவின் தலையின் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்னும் மனுநீதியே இந்துக்களின் சட்டம் என்கிறார் சாவர்க்கர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆர்கனைசர் இதழில், ‘உலகெங்கும் புகழாரம் சூட்டப்படும் மனுநீதி நம் அரசமைப்பு பண்டிதர்களுக்கு இல்லை’ என எழுதியதும் விரிவான மேற்கோள்களாக புத்தகத்தில் உள்ளன.
மோடி அரசு படிப்படியாக இன்று ஒற்றை தேசியத்தை நோக்கி இந்தியாவை இழுத்துச் செல்வதற்கு அன்றே அடிக்கல் இட்டவர்களாக ஆர்.எஸ்.எஸ்-ன் பிதாமகர்கள் இருந்திருப்பதை இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது
மோடி இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரச முறை என்பது கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோட்பாடாக கூறியதே. “நம்முடைய தேசியம் ‘ஒற்றை தேசியமே’ ஆனால் அரசமைப்பில் ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அழைத்துள்ளனர்… பாரத நாட்டிற்குள் சுய அதிகாரம் அல்லது பகுதி சுய அதிகாரம் கொண்ட மாநிலங்களின் தனித்துவத்தையே இல்லாமல் ஆக்க வேண்டும் ஒன்றிணைந்த அரசு முறையை நிறுவ வேண்டி நம் அரசமைப்புச் சட்டத்தை திருத்தி எழுதுவோம்” என்று கோல்வால்கர் கூறியதையே இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.
‘ஜெர்மனி தன் சமூகத்தின் கலாச்சாரத் தூய்மையை காப்பாற்ற வேண்டி யூதர்களை அழித்ததில் உச்சகட்ட இனப்பற்று தென்படுவதாகவும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்’ – என்று மனித அழிப்பை நியாயப்படுத்தும் கோல்வால்கரின் பாசிச ஆதரவு சிந்தனையிலிருந்து வெளிவந்த இயக்கமே இன்று நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறது.
மொத்தம் ஐந்து தலைப்புகள் உள்ள இப்புத்தகத்தில் ‘ஆர்எஸ்எஸ்-ஸின் உயிர் எங்குள்ளது’ என்கிற முதல் தலைப்பில் ஆர்எஸ்எஸ் நிறுவியவர்களின் பாசிச சிந்தனையின் மேற்கோள்கள் குறிப்பிடப்படுகின்றன.
இரண்டாவது தலைப்பில், இவர்கள் தங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையாக முன் வைக்கும் சதுர்வர்ண நம்பிக்கைகள் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பகவத் கீதையில் கண்ணன் கூறுவதாக சதுர் வர்ணம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் கீதையை எழுதியது எப்போது? மூலப்பிரதியில் கண்ணனின் சதுர்வர்ண குறிப்பு இருந்ததா? என்பதனை விவேகானந்தரே கேள்வி எழுப்புகிறார்.. விவேகானந்தர், ‘சங்கராச்சாரியார் விளக்கவுரை எழுதி கீதையை பிரபலமாக்குவதற்கு முன்பு மக்கள் கீதையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. சங்கராச்சாரியாருக்கு முன்பு வரை கீதை பாரம்பரியமாக இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் பாரத கண்டம் முழுவதும் சுற்றி வந்தாலும் எனக்கு அது கிடைக்கவில்லை. சங்கராச்சாரியார் கீதையை எழுதி அதை மகாபாரதத்தில் சேர்த்ததாக சிலர் கூறுகிறார்கள்’ என்கிறார். அவரது எழுத்திலிருந்து சதுரவர்ணத்தின் சமத்துவமின்மை, அடிமை முறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர பகவானே கூறுகிறார் என்று மக்களை நம்ப வைக்க பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை விவேகானந்தர் மூலமாகவே அறியலாமே என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இனத்தூய்மை என்கிற பெயரில் ஒரு இழிவான பழக்கத்தை தூய்மைக் கலாச்சாரமென்று வலிந்து தன் முன்னோர்கள் புகுத்தியதை பெருமை பொங்க குஜராத் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடைய கோல்வால்கர் பேசுகிறார். அந்த உரை ஆர்.எஸ்.எஸ்.-ஸின் ஆர்கனைசர் இதழில் வெளிவந்ததை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. அந்த உரையானது கலப்பின ஆராய்ச்சியை தங்கள் முன்னோர்கள் செய்ததைப் பற்றியானதாக இருக்கிறது. அந்த உரையில் கோல்வால்கர், ‘மனித சமூகத்தை மேன்மைப்படுத்த வடக்கிலிருந்து நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அக்குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு வைசிய, சத்திரிய, சூத்திர சமுதாயத்தின் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டளை விதித்ததாகவும், எந்த வர்க்கத்தை சேர்ந்த பெண்ணாகினும் அவளுடைய முதல் குழந்தையின் தகப்பன் நம்பூதிரி பிராமணனாக இருக்க வேண்டும், அதன் பிறகே அவள் கணவனிடமிருந்து பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் நம் முன்னோர்கள் செய்த கலப்பின ஆராய்ச்சிகள் என்றும், ஆனால் இன்று இதை விபச்சாரம் என்று கூறுகின்றனர்’ எனக் கல்லூரி மாணவர்கள் முன் பேசியதை ஆர்கனைசர் எழுதியது. பின்னர் இந்த பேச்சை கோல்வால்கர் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பதால் இது பொய் கதைதான் என்று எழுதுகிறார் நூலாசிரியர். ஆனால் இது உண்மையான வரலாறு என்றே பல வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. தூய்மை கலாச்சாரம் என்ற பெயரில் பிராமணர்களால் அங்கிருந்த அரசின் துணையுடன் நடந்தேறிய அவலங்கள் இவை. பெண்களை சுயமரியாதையற்ற பாலியல் பண்டங்களாக நம்பூதிரிகள் நடத்தியதை எதிர்த்தே ‘நாஞ்செலி’ என்ற பெண் தன் உயிரைக் கொடுத்து நிறுத்தச் செய்தாள் என்கிற வரலாறுகள் எல்லாம் இதன் சாட்சியங்கள்.

இதைப் போன்று பல நஞ்சுகளை ஆர்.எஸ்.எஸ் என்னும் நச்சு மரம் விதைத்ததை இப்புத்தகம் எடுத்துக் கூறுகிறது. ‘திப்புசுல்தான்’ ஆட்சிக் காலத்தில் குடகு வட்டாரத்தில் 69 ஆயிரம் இந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக ஆர்.எஸ் எஸ் இன்றும் அவதூறு பரப்புகிறது. ஆனால் அன்று குடகு பிராந்தியத்தின் மொத்த மக்கள் தொகையை 69 ஆயிரத்தை கடந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் கூற்றின்படி அந்தப் பகுதி முழுவதும் இன்று இஸ்லாமியர்களே நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் அங்கு இருப்பவர்கள் 15% இஸ்லாமியர்கள் தான். இவ்வாறு பொய்தான் ஆர்.எஸ்.எஸ்-ஸின் குலதெய்வமாக இருக்கிறது என ஆசிரியர் இந்த அவதூறுக்கான பதிலடியை ஆதாரத்துடன் கூறுகிறார்.
இங்குள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சாதி அமைப்பினால் நொந்து போய் இந்து மதத்திலிருந்து மாறியவர்களே எனும் போது கோல்வால்கர் தனது புத்தகத்தில், இவர்களை அயலவர்கள் என்றும், இவர்கள் தேசிய இனத்தோடு (இந்துக்களோடு) தங்கள் அடையாளங்களைத் துறந்து ஐக்கியமாக வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்பதை ‘We or our nationhood defined’ நூலில் எழுதுகிறார். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என்று பல துறைகளில் தங்கள் உரிமைகளை கேட்டு போராடிக் கொண்டிருந்த பட்டியல் இனத்தோர் / பிற்படுத்தப்பட்டோர் /மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கவனத்தை திசை திருப்பி இந்து முஸ்லீம் வெறுப்பு போரைத் தூண்டி விட்டனர் என்பதையும் பல ஆளுமைகளின் கூற்றில் இருந்து எடுத்து விளக்குகிறது புத்தகம்.
மேலும் நிகழ்காலத்தில், ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவாரங்களின் மோசடியை அம்பலப்படுத்துகிறது. பாகிஸ்தானை எதிரி நாடாக சித்தரித்து கலவரங்களை மூட்டி விட்டு முஸ்லீம்கள் மீது பழி போடுவது, மோடியின் பொய் வாக்குறுதிகள், வேலைவாய்ப்பின்மை, விலையுயர்வு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி தள்ளுபடி, அவர்களின் சொத்து உயர்வு, பொதுத்துறை தனியார்மயமாக்கம், பாடப் புத்தகங்களில் வரலாற்று திரிபு, பன்முகத்தன்மை மக்களாட்சி பாடங்கள் நீக்கம், பகுத்தறிவு அற்றவர்களாக்க மாணவர்களுக்குள் புகுத்தும் மூடத்தனம், பெண் கல்வி நீக்கம், மதமாற்ற தடைச் சட்டத்தின் பின்னணி என மோடி அரசின் செயல்திட்டங்களுக்குள் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தாக்கம் இருப்பதை இப்புத்தகம் விரிவாக அலசுகிறது.
ஒற்றை தேசக் கொள்கை. அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் என்னும் இலக்கை அடைய, அந்த இலக்கை அடைந்த பின்பு மனுநீதியை சட்டமாக்க தேசப்பற்று பெயரில் பள்ளிக்கூட மாணவர்கள் ஆர்எஸ்எஸ்-ஸில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகள் மத நல்லிணக்கத்தின் பலி மேடையாக தங்கள் வேலைத்திட்டத்தை நகர்த்துகிறது. பார்ப்பன மேலாதிக்கம் இனத்தூய்மை என்ற பெயரில் புகுத்தும் அனைத்து இழிவையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். தேசிய இனம் குறித்த பார்வை மறைந்து மதத்தையே இனமாக மாற்றும் மோசடிக்குள் சிக்க வைக்கும் கருத்தாக்கங்கள் வலுபெறும். சுயமரியாதை, உரிமை கோரும் ஆளுமைகள் ஒடுக்கப்படும் நிலை உருவாகும். இவ்வாறு பல சூழ்ச்சிகளை சுமந்து கொண்டு தேசப்பற்று என்னும் முகமூடியில் மறைத்து வருவதே ஆர்.எஸ்.எஸ் என்பதை ‘ஆர்.எஸ்.எஸ் ஆழமும், அகலமும்’ என்னும் இப்புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.
புத்தகம் கிடைக்கும் இடம்:
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொடர்புக்கு : 98840 82823