
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக இசுரேல் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிகழ்த்தி வந்த நிலையில், டிரம்ப் கொண்டு வந்திருக்கும் ‘காசா அமைதி ஒப்பந்தம்’ பாலஸ்தீனத்திற்கு பெயரளவில்கூட அமைதியை கொண்டு வராமல், அந்த நிலப்பரப்பை இன்னும் அதிகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லுமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 29, 2025 அன்று இசுரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனிருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார். ஆனால் இந்த ஒப்பந்தம் ‘போர் நிறுத்தம்’ என்ற பெயரில் காசாவை கையகப்படுத்தும் திட்டமாகவே இருக்கின்றது. குறிப்பாக கடந்த பிப்ரவரி 4, 2025 அன்று டிரம்ப் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வலுப்படுத்துவது போல்தான் தற்போதைய ‘காசா அமைதி ஒப்பந்தம்’ திட்டமிடப்பட்டிருக்கின்றது. காசாவை முழுமையாக கையகப்படுத்தி அதன் இருபது லட்சம் மக்களை வெளியேற்றிய பிறகு அதை ‘மத்திய கிழக்கின் ரிவியரா’வாக (சுற்றுலாத்தளமாக) மாற்றப்போவதாக கடந்த பிப்ரவரியில் கூறியிருந்தார் டிரம்ப். இதை நடைமுறைப்படுத்துவது போல் ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்திருக்கிறார் ட்ரம்ப்.

இசுரேலுக்கு இந்த திட்டத்தின் மூலம் அதிக முக்கியத்துவம் கொடுத்த அமெரிக்கா, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் காசாவை அடிமைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. மேலும் இசுரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவும் மேற்குக் கரையும் இணைவதற்கான வாய்ப்புகளே இனி இல்லாமல் போவதற்கான கூறுகளை அமெரிக்கா கொடுத்திருக்கிறது.
இந்த திட்டத்திற்கு இரு தரப்பினரும் (ஹமாஸ் மற்றும் இசுரேல்) ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்கா கூறி இருக்கின்றது. ஆனால் ஹமாஸை முழுவதும் வெளியேற்றி பாலஸ்தீன நிர்வாகத்தை கைப்பற்றுவதே அமெரிக்காவின் திட்டமாக இருக்கின்றது.
இந்த திட்டத்தின்படி, காசாவை டிரம்ப் தானே மேற்பார்வையிடுவார். மேலும் காசாவை நிர்வகிக்க தற்காலிக குழு ஒன்றை அமெரிக்கா நியமிக்கப்போகிறது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் சிலர் பாலஸ்தீன நிர்வாகத்திற்கான அறங்காவலர்களாக நியமிக்கப்படுவார்கள். எந்தவொரு பாலஸ்தீனத் தலைமையும் பங்கு வகிக்காமல் சுயாதீன கண்காணிப்பாளர்களின் கீழ் காசாவை நிர்வகிக்க திட்டம் தீட்டி இருக்கின்றார் ட்ரம்ப்.
பாலஸ்தீனியர்களைக் கொன்று அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கிய அமெரிக்கா-இசுரேல் கூட்டணி இன்று காசாவை மீண்டும் கட்டியெழுப்புகின்றோம் என்று இந்த ‘அமைதி’ ஒப்பந்தத்தைக் கொண்டுவருகிறது. மேலும் போர்க்குற்றங்களை புரிந்த வல்லாதிக்க நாடுகள் மற்றுமொரு போர்க்குற்றவாளியை காசாவை நிர்வகிக்க நியமித்திருக்கின்றன. டிரம்பின் ஒப்பந்தப்படி, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், காசா சர்வதேச இடைக்கால ஆணையத்தின் (GITA) தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வகிப்பார். (1997 முதல் 2007 வரை பிரிட்டிஷ் பிரதமராக இருந்த பிளேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போரில் போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.)
இனி காசா நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஹமாஸ் பங்கு வகிக்கக் கூடாது என்பதற்காக காசாவில் உடனடியாக சர்வதேச நிலைப்படுத்தல் படையை (ISF) அமெரிக்கா உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது. அங்குள்ள காவல்துறைக்கு ISF பயிற்சி அளிக்கவும் உள்நாட்டு பிரச்சினைகளை இந்த ISF படை கையாளவும் அமெரிக்கா அதிகாரம் அளிக்கப் போவதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பாலஸ்தீனத்திற்கு எதிரான பல விடயங்கள் அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தில் இருக்கின்றன. கடந்த இரண்டு வருட போருக்குப் பிறகும், இனப்படுகொலை நிகழ்வுகளின் தொடர்ச்சியை திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா. பால்ஃபோர் பிரகடனம் மூலம் மத்திய கிழக்கில் கால் பாதிக்க முயற்சித்த பிரிட்டிஷ் அரசைப் போல, அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் ஒப்பந்தம் ஒரு காலனித்துவ திட்டமாகத்தான் இருக்கின்றது.

தற்போது பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகாரம் பெற உலகின் பல்வேறு இடங்களில் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அமெரிக்கா செய்யும் தந்திரமாகத்தான் இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கிறது. அதனால்தான் அமைதித் திட்டம் முன்மொழியப்பட்டாலும் இசுரேல் தற்போதும் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ட்ரம்ப் இந்தத் திட்டத்தை அறிவித்த பிறகும் கூட (அக்டோபர் 19, 2025 அன்று) இசுரேலின் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 45 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
போர் நடக்கும் நாடுகளில் ஒரு உண்மையான அமைதித் திட்டம் கொண்டு வந்தால் அது முதலில் இனப்படுகொலை நிகழ்வுகளை தடுப்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த அடிப்படை விதி கூட இல்லாமல் ட்ரம்ப் திட்டம் வகுத்திருப்பது இனவெறி இசுரேலை காப்பாற்றும் நோக்கில் மட்டுமே. மேலும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் வணிக கூட்டாளிகளை காசாவின் மறுகட்டமைப்பில் ஈடுபடுத்தி தனது சந்தையை இன்னும் விரிவாக்கம் செய்யவே அமெரிக்கா முயற்சிக்கிறது. (டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு மற்றும் கத்தாரில் தனது தனியார் பங்கு நிறுவனத்திற்காக 4.6 பில்லியன் டாலர் முதலீட்டைச் சேகரித்துள்ளார்.)

இன்றும் காசாவில் உணவும் மருந்துகளும் இல்லாமல் மக்கள் துன்பப்படுகின்றனர். உதவி விநியோகங்கள் இன்னும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. காசா மற்றும் மேற்குக் கரையில் இசுரேலின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. ஆனால் மேற்குலக ஊடகங்கள் வழக்கம்போல் அமெரிக்கா அமைதியைக் கொடுக்கும் என்று செய்தி பரப்பிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால் இசுரேல் ஹமாஸை ‘முடித்துவிடும்’ என்று பகிரங்கமாக மிரட்டியிருக்கிறார் நெதன்யாகு. அனைத்து வழிகளிலும் பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கே அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் போட்டிருப்பது புலனாகிறது.