வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர் – மே 17 இயக்கத்தின் விளக்கக் கூட்டம்

அரசியல் சாசனத்திற்கு எதிராக அமல்படுத்தப்பட்ட SIR திட்டம் எவ்வாறு குடியுரிமையைப் பறிக்கும் என்று விளக்கக் கூட்டம் நவம்பர் 22, 2025 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மே பதினேழு இயக்கம் நடத்தியது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சிள் பொருப்பாளர்கள் மற்றும் வியாசை சரத் தோழரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல் சாமி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை:

பாரம்பரியமான இந்த சென்னை நகரத்தை உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய வடசென்னை மக்கள் நிறைந்திருக்கக்கூடிய, இந்த புதிய வண்ணாரப்பேட்டையில் மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருக்கின்ற தெருமுனை கூட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கின்றது. இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்டிபிஐ கட்சியும் மே 17 இயக்கமும்  வெவ்வேறு அல்ல. பெயரளவில் வேறுபட்டாலும் கொள்கை அளவில் இரண்டும் ஒன்றுதான் என்று அடிக்கடி சொல்வேன். தோழர் கரீம் அவர்கள் கூட எங்கே போனாலும் இதை சொல்லி விடுகிறீர்கள் என்பார். உண்மையில் நாங்கள் நேரடியாக களத்திலிருந்து பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் தான் அந்த வார்த்தையைக் கூறுகின்றேனே ஒழிய, அது வெறும் மேடைக்கான வார்த்தை அல்ல.

தமிழர்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் இன்னல் வருகிறதோ, அந்த போராட்ட களங்களில் முன்னணி களத்தில் இருக்கக்கூடிய தோழர்கள் எஸ்டிபிஐ தோழர்கள். அவர்கள் இந்த தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்துகிறோம்.

மிகச் சிறப்பான ஒரு உரையை தோழர் வியாசை சரத் அவர்கள் வழங்கியிருந்தார். இந்த மக்களுக்காகவும் இந்த மண்ணிற்காகவும் போராட வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் பெரிது. உங்களோடு மே 17 இயக்கம் என்றும் தோளோடு தோள் நிற்கும்.

அன்பானவர்களே! 2014க்குப் பிறகு கட்சிகள், பெரும்பாலான இயக்கங்கள் அதிக வேலையோடு இருக்கிறோம். என்றைக்கு மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தாரோ, அன்றிலிருந்து சுமார் 140 கோடி மக்களுக்கு தூக்கம் போனது. வெறும் 3% பேர் மட்டும்தான் நிம்மதியாக தூங்குகிறார்கள், மீதம் 97% பேருக்கு தூக்கம் போனது. எந்நேரமும் மக்கள் பிரச்சனைக்காக பேசிக்கொண்டிருப்பதும் போராடுவதும்தான் கடந்த 10 / 15 ஆண்டுகளாக எங்களுடைய வேலையாகவே மாறியிருக்கிறது.

அந்த வகையில் இன்றைக்கு நீங்களும் நானும் இந்த மண்ணிற்கு அந்நியப்பட்டவர்கள் என நம்மவர்களை மாற்றக்கூடிய ஒரு வேலையை செய்கிறது மோடி அரசு. ஆகவே மற்ற அனைத்தையும் எவ்வளவு மூர்க்கமாக எதிர்த்தோமோ, அதைவிட பன்மடங்கு (இன்னும் சொல்லப் போனால் உயிரைக் கொடுத்தாவது) இந்த எஸ்ஐஆரால் வாக்குரிமை பறிபோவதை  தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த எஸ்ஐஆர் என்பது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்ட பல சட்டங்களில் ஒன்றாக நீங்கள் நினைத்து விடக்கூடாது. நீங்கள் இந்த மண்ணில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யக்கூடிய ஒரு திட்டம்.

பிஜேபி முடிவெடுத்துவிட்டால், நீங்கள் இந்த மண்ணின் மைந்தர் கிடையாது. நாளையிலிருந்து நீங்கள் ஒரு அகதி, அதுவும் அறிவிக்கப்படாத அகதி. இந்த எஸ்ஐஆரில் உங்களுக்கான வாக்குரிமை, குடியுரிமை இல்லை என்று அறிவித்துவிட்டால், நீங்கள் அறிவிக்கப்படாத ஒரு அகதியாக மாறி விடுவீர்கள்.

அகதி என்பவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நீங்கள் நினைக்கலாம்: நமக்கு சொந்த வீடு இருக்கிறது, சொந்த வாகனம் இருக்கிறது, இங்கு 200 / 300 வருடம் வாழ்கிறோம். அதனால் நாம் இந்த மண்ணின் மைந்தன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அரசாங்கத்தின் ஆணைப்படி/ அரசாங்கத்தின் கோப்புகளின் படி, நீங்கள் ஒரு அகதி. அகதியின் வாழ்க்கை கொடூரமானது. அன்பானவர்களே! இதை எதிர்த்து போராடுவதை நாம் உயிரை கொடுத்தாவது செய்துவிட வேண்டும்.

இந்த வண்ணாரப்பேட்டை பகுதியில் இதுதான் எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து நடத்தப்படுகின்ற முதல் கூட்டம் என்று தோழர்கள் சொன்னார்கள். இனி தொடர்ச்சியாக கூட்டம் நடைபெறும். இந்த எஸ்ஐஆர்-ஐ தடுத்து நிறுத்தும் வரை மே 17 இயக்கமும், தோழமை அமைப்புகளும், தொடர்ச்சியாக போராடுவோம். இது பேசிவிட்டு கலைந்து செல்கின்ற கூட்டம் அல்ல.

அப்படி யாராவது எண்ணிக் கொண்டிருந்தால், எங்களுடைய கடந்த கால வரலாறை தெரிந்து கொள்ளுங்கள். மெரினா கடற்கரையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிஜேபி முடிவெடுத்தது. அதை தடுத்து நிறுத்தியவர்களில் முதன்மையானவர்கள் மே 17 இயக்கம். தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன் ஈத்தேன் எடுக்க, அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு எடுக்கலாம், பல லட்சம் கோடிகள் கிடைக்கப் போகிறது என்று வானத்தில் மிதந்து கொண்டிருந்த பொழுது, அவர்களை துரத்தி அடித்தவர்கள் மே 17 இயக்கம்.

ரேஷன் கடையை 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இழுத்து மூடும் வேலையை சர்வதேச நிறுவனங்களோடு சேர்ந்து செய்ய முனைந்தது. இன்றைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ரேஷன் கடையில் கொடுக்கப்படக்கூடிய பொருட்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அன்பானவர்களே, உங்களுக்கு இன்றைக்கு ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியோ, கோதுமையோ, மண்ணெண்ணையோ, சர்க்கரையோ- இதை வாங்குவது மட்டும்தான் நம் வேலையாக இருக்கிறதே ஒழிய, இதற்காக அரசாங்கங்கள் எவ்வளவு மானியம் கொடுக்கிறது? மத்திய அரசு எவ்வளவு கொடுக்கிறது? மாநில அரசு எவ்வளவு கொடுக்கிறது? என்கிற எந்த விவரமும் நமக்கு தெரிவதில்லை.

ஒரு காலத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து ஒன்றிய அரசின் மானியத்தோடு பல்வேறு பொருட்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இன்று இந்த மானியங்களை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது. மாநில அரசுகள் மக்களிடம் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக மாநில வரிப்பணத்தை எடுத்து, அதை மானியமாக நமக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த சுமை மாநில அரசின் கடனாக ஏறிக் கொண்டிருக்கிறது. இதை ஒட்டுமொத்தமாக நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வர்த்தக கழகத்தினோடு ஒப்பந்தம் போட்டு ரேஷன் கடைகளை இழுத்து மூடுவதற்கான வேலையை செய்தார். இதை மே 17 இயக்கம் துணிந்து எதிர்த்தது. அதனால்தான் இன்றுவரை அதை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் இருக்கிறார்கள்.

நாங்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் நாங்கள் பேசக்கூடிய விசயங்கள் ஒவ்வொன்றும் உங்களை (ஒன்றிய அரசின் ஏகாதிபத்தியத்தை) செயல்படவிடாமல் தடுக்கும். அந்த வகையில்தான் இந்த எஸ்ஐஆரும் ஒரு நாள் தடுத்து நிறுத்தப்படும். இது உறுதி. நாங்கள் வாய் சவால் பேசக்கூடியவர்கள் அல்ல.

ஒரு வரைவு ஆணையம் உருவாக்கப்பட்டு, அதற்கு தலைவராக ஆகும் பொழுது, “இந்த நாட்டில் அரசியல் உரிமை அனைவருக்கும் தரப்படும்” என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதை செய்து காட்டிய தலைவர் அவர்.

1920ல் பெண்களுக்கு வாக்குரிமை என்று செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானம் போட்டவர் தலைவர் தந்தை பெரியார். நாங்கள் இவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள். நாங்கள் சொன்னால் செய்வோம். இந்த எஸ்ஐஆர்-ஆல் வாக்குரிமை பறிபோவதை தடுத்து நிறுத்துவோம். ஒரு காலத்திலும் விட மாட்டோம்.

2014க்கு பிறகு அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு சட்டத்தின் வழியாகவும் மிகப்பெரிய தாக்குதலை மோடி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இது நம் அனைவரையும் பழக்க நிலைக்கு தள்ளுகிறது. எப்படியெனில், ஒருவர் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை கொல்வதையும் இந்த நாடு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.

அதனுடைய தொடர்ச்சிதான் இன்று எல்லோரையும் நோக்கி: நீங்கள் இந்தியனா? நீங்கள் தமிழனா? என்று கேட்கிறார்கள். நீங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்கிறார்கள். ஒன்று அடிமையாக வாழுங்கள், இல்லையேல் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள் என்று  பாஜக மோடி அரசு சொல்கிறது. உங்களுடைய குடியுரிமையைப் பறிப்போம் என்று எஸ்ஐஆர்-ஐ கொண்டு வருவது வரை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

நமக்கு வாக்குரிமை என்பது எளிமையாக வந்தது அல்ல. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது எல்லோருக்கும் எளிமையாக வந்தது அல்ல, அது யாரோ வானத்திலிருந்து இறங்கி வந்து கொடுத்தது அல்ல. அனைத்து மக்களுக்கும் ஒரு வாக்குதான். இதற்கு பின்னால் மிகப்பெரிய போராட்டம் இருக்கிறது.

அரசியல் ரீதியாக அந்த போராட்டத்தை முன்னெடுத்து அண்ணல் அம்பேத்கர் வெற்றி கண்டார். அவர் ஏதோ ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல. ‘ஒரு ஆள் ஒரு வாக்கு’ என்பது ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமான உரிமை அல்ல. அதை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து சாதிகளுக்குமான உரிமையாக நிலைநாட்டியவர் அண்ணல் அம்பேத்கர். அரசியல் சட்டத்தின் வழியாக அதை நிறைவேற்றியவர். சமூக ரீதியாக இப்படி ஒரு சட்டம் வந்தால் எந்த எதிர்ப்பும் வராத கள செயல்பாட்டை தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கி கொடுத்தவர் தலைவர் தந்தை பெரியார். இவர்கள் இருவரும் போராடி பெற்றுக் கொடுத்த உரிமை நம் வாக்குரிமை.

ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது அடிப்படை உரிமை. “ஒரு தனி மனிதனுக்கு அரசியல் உரிமை இல்லை என்றால், பிறகு எதற்கு ஜனநாயகம்?” என்று அண்ணல் அம்பேத்கர் கேட்பார்.

இன்று ஜனநாயகமும் இல்லை, உங்களுக்கு வாக்கும் இல்லை என்கிறார் மோடி. அந்த எஸ்ஐஆர் படிவத்தில் என்ன கேட்கிறான்? 1987க்கு முன்பு பிறந்தவர்கள்/பின்பு பிறந்தவர்கள் என இரண்டு அட்டவணை இருக்கிறது. அதாவது 2002-ல் எங்கு வாழ்ந்தீர்களோ அந்த முகவரி போடுங்கள் என கேட்கிறான். ஒருத்தர் குடும்ப சூழல் காரணமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாறி போயிருக்கிறார். கிட்டத்தட்ட 25 வருடம் ஆகி விட்டால் இது எப்படி ஞாபகம் இருக்கும்? சரி ஞாபகம் இருந்தால் எழுதலாம். பொதுவாக நான் வண்ணாரப்பேட்டையில் ஓட்டு போட்டேன் என்றால், வண்ணாரப்பேட்டையில் எந்த இடத்தில்? எந்த வாக்குச்சாவடி? அந்த வாக்குச்சாவடியில் என்பெயர் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அந்த வாக்குச்சாவடி இப்போது ஞாபகம் இருக்கிறதா இல்லையா? எனப் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சனையைப் பற்றி யார் பேசுவது?

அதுமட்டுமல்ல, உங்களுடைய அப்பா அம்மாவுடைய வாக்காளர் அடையாள எண் குறிப்பிட வேண்டும். ஒருவருக்கு 50  அல்லது 55 வயது ஆக இருக்கும் போது, அவர்கள் அம்மா அப்பா உயிரோடு இருந்தார்கள் என்றால் தப்பித்தீர்கள். இல்லையெனில், என்ன பண்ணுவார்கள்? இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை யார் சேமித்து வைப்பார்கள். அது என்ன சொத்தா? சேகரித்து வைப்பதற்கு! இப்பொழுது அதை படிவத்தில் எழுதவில்லையெனில், உங்களுடைய வாக்கு பறிபோகும்.

50 வயதுக்கு மேல் இருக்கக்கூடிய தமிழ்நாட்டு வாக்காளர்களை நீக்கக்கூடிய சதி திட்டம் தான் எஸ்ஐஆர்.

50 வயதுக்கு மேல் இருப்போரை ஏன் குறி வைக்கிறார்கள்? இவர்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளான அதிமுக, திமுக, பாமக, விசிக, மதிமுக என மாநில கட்சிகளுக்கு ஓட்டு போடுபவர்கள். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இந்தக் கட்சிகளுக்குத் தான் மாற்றி மாற்றி ஓட்டு போடுவார்கள். இவர்கள் ஒரு நாளும் பிஜேபியை நோக்கி நகர்வதில்லை. இப்போது இந்த 50/60 வயதுக்கு மேல் இருப்பவர்களின் ஓட்டுரிமையைப் பறித்தால், இதனால் பாதிக்கப்பட போவது யார்? இங்கு இருக்கும் மாநில கட்சிகள்தான் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கப் போகின்றன.

இந்த புரிதலே இல்லாமல் ஒரு கட்சி (அதிமுக) இதை ஆதரித்து முழுதாக படுத்துவிட்டது. இன்னொரு கட்சி (திமுக) இந்த எஸ்ஐஆர் படிவத்தை வீடு வீடாக கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு நோக்கம் புரியவில்லை. நோக்கம் புரியாமல் நீங்கள் தலைகீழ் நின்று வேலை செய்தாலும் உங்களால் இதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது.

இது ஆளுகின்ற மாநிலம், பிஜேபியோடு கூட்டணியில் இருக்கின்ற மாநிலம் என்ற வடிவம் அல்லாமல், இந்த நாடு முழுக்க பிஜேபி தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டான்.

மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என பாஜக முடிவு செய்து விட்டது. 10 வருடமாக காத்திருந்து இன்றைக்கு பீகாரை முடித்துவிட்டது. கிட்டத்தட்ட 85 சீட்டு என நினைக்கிறேன். நிதீஷ் குமாரை விட அதிக ஓட்டு பிஜேபிக்குதான் விழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இதுபோன்ற சூழல்களை ஏற்படுத்தியுள்ளது பாஜக. நேரடியாக தானே வெற்றி பெறக்கூடிய இடத்தை நோக்கி நகர்கிறார்கள். அதனால்தான் எஸ்ஐஆர் கொண்டு வருகிறான்.

இந்த எஸ்ஐஆர் கொண்டு வருவதற்கு மூன்று வழி வைத்துள்ளான். ஒன்று நேரடியாக ’யாரெல்லாம் தங்களுக்கு ஓட்டு போட மாட்டார்களோ, அவர்களை நீக்குவது’. அதாவது உங்களுக்கு அது சரியில்லை, இது சரியில்லை, படிவம்  நிரப்புதல் சரியில்லை, கொடுத்த ஆதாரம் சரியில்லை, அடையாள அட்டை கொடுக்கவில்லை என நேரடியாக நீக்குகிறான்.

இரண்டாவது பெயரை நீக்க முடியவில்லை என்றால், உழைப்பிற்காக வரும் வெளிமாநிலத்தவர்களை இங்கே சேர்ப்பது. உழைத்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இங்கே ஓட்டு எதற்கு? பீகாரில் நாம் பார்த்தோம். “அரியானாவிலிருந்து 6000 பேர் ரயில் வழியாக எந்தவித பயணக் கட்டணமும் இல்லாமல் பீகார் தேர்தலில் ஓட்டு போட வந்தார்கள்” என்று காங்கிரசின் கபில் சிபல் சொல்கிறார். அந்த 6000 பேர் யார்? அவர்களுக்கு எங்கு ஓட்டு? எந்த விவரமும் கிடையாது. இது குறித்து ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை, அது குறித்தான செய்தி சேனல்களில் வரவுமில்லை. மீடியா முழுக்க பிஜேபி கட்டுப்பாட்டிலுள்ளது. இப்படி தமிழ்நாட்டில் வேறு யாரையாவது கூட்டி வந்து ஓட்டு போட்டால், அவன் யாருக்கு ஓட்டு போடுவான்? இப்படி நேரடியாகவே பிஜேபிக்கு ஓட்டு போடக்கூடிய ஆட்களை சேர்ப்பதற்கு இந்த எஸ்ஐஆர் பயன்படுகிறது.

மூன்றாவது மிக முக்கியமானது. நான் ஏற்கனவே கூறியது- 60 வயதுக்கு மேல் இருக்கிறவர்களை ஓட்டை பறிப்பது. இயல்பாகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ”இதுக்குமேல ஓட்டு போட்டு என்ன செய்ய போறோம்” என்ற எண்ணம் இருக்கும். இந்த எஸ்.ஐ.ஆர் படிவத்தில் எழுதி கொடுக்காவிடில் போனா போகுது என்றும், மீறி கேட்டால் அந்த ஆதாரம்/அடையாளம்  கேட்டுக்கொண்டே இருந்தால், ”போப்பா ஓட்டு இல்லனா, இப்ப என்ன கெட்டு போச்சு” என விட்டுவிடுவார்கள். இந்த ஓட்டு இல்லயெனில், தமிழ்நாட்டுடைய அரசியல் மாறும்.

ஆக எஸ்ஐஆர் மூலமாக உங்களுக்கு குடியுரிமை இல்லை என்று அர்த்தம். நீங்கள் ஒரு அகதி என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அதனால்தான் இந்த எஸ்ஐஆர் என்பது மிக மோசமானது. இதை தடுத்து நிறுத்த தமிழ்நாட்டிற்குள் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ எல்லா இடங்களிலும் போராடுகிறோம்.

நிகழ்கால உதாரணம் ஒன்று சொல்கிறேன்: கொஞ்சம் நாள் முன்பு சென்னை அனகாப்புத்தூரில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களை வெளியேற்றி, அங்குள்ள வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அவர்களை கூடுவாஞ்சேரியிலும், பெரும்பாக்கத்திலும், ஈ.சி.ஆர் பகுதிகளிலும் மாற்றிவிட்டார்கள். இப்போது இந்த எஸ்ஐஆர் படிவம் அங்குள்ளவர்களுக்கு கொடுக்கவில்லை என்று எனக்கு முன்பு பேசிய தோழர் சொன்னார். அங்கு பெரும்பான்மையான சமூகங்கள் தெலுங்கு பேசக்கூடியவர்கள். தேமுதிக, அதிமுக, திமுக கட்சிக்கு ஓட்டு போடுபவர்கள். அங்கு பிஜேபியை நாங்கள் பார்க்கவே இல்லை. (ஏனெனில் நாங்கள் அங்கு பணியாற்றினோம்). இந்த 1500 குடும்பங்களில் குறைந்த பட்சம் 2000 / 3000 ஓட்டுகள் இருக்கும். இப்போது இந்த ஓட்டு எங்கு போகும்? இந்த ஓட்டு அப்படியே இல்லாமல் போகும்.

இது போன்ற பல சம்பவங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இன்றைக்கு வரைக்கும் குறிப்பிட்ட முகவரி கிடையாது. ஒரே கதவு எண்ணில் 10/ 15 வீடுகள் இருக்கும். நீங்கள் செம்மஞ்சேரியில் போய் பாருங்கள். ஒரு கதவு எண் 29A போட்டால்- 29A-ன் கீழிலிருந்து மேல் வரைக்கும் ஏழு வீடுகள் இருக்கும். எந்த வீட்டு முகவரியை எழுதுவார்கள்? அப்போது அந்த ஏழு பேருக்கு வாக்காளர் அடையாளம் ரத்தாக வாய்ப்புள்ளது. இதை நாம் நேரடியாக பார்க்கிறோம். இதுபோல எத்தனை லட்சம் ஓட்டுகள் இங்கே பறிபோகும் என்பதுதான் முக்கியம். நீங்கள் எஸ்ஐஆர் படிவத்தை வாங்கி, நிரப்பி கொடுத்து விட்டால் மிக விழிப்போடு இருக்கிறோம் என நினைக்காதீர்கள். பிரச்சனையுடைய ஆழத்தை புரிந்து கொள்ளுங்கள். அதன்பின் புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை.

இன்றைக்கு ராகுல் காந்தி இதுகுறித்து பேசுகிறார். அத்தனை ஓட்டுகளை திருடுகிறார்கள் என தினமும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். என்ன பயன்? 2018ல் மணிப்பூரில் இந்த வேலையை செய்யும் பொழுது, காங்கிரசு இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி இருந்தால், இந்த திட்டம் கொண்டு வந்திருக்க முடியுமா? அப்போதும் விட்டு விட்டீர்கள். 2021ல் கர்நாடகா தேர்தலிலும் கொண்டு வந்தார்கள். ஒரு என்.ஜி.ஓ. வைத்து 50,000 ஓட்டுகளை ஒரே தொகுதியில் நீக்கிவிட்டார்கள். அப்போதும் போராடவில்லை. இதனைத் தொடர்ந்து 2022, 2023, 2025 பீகாரில் 65 லட்சம் ஓட்டை நீக்கிவிட்டார்கள். அதன்பின் தான் பதட்டம் வருகிறது.

இன்றைக்கும் கூட இந்தியா முழுக்க இருக்கக்கூடிய முற்போக்கு அமைப்புகளை ஒன்று திரட்டி போராட வேண்டும் என்கிற எண்ணம் கூட காங்கிரசுக்கு இல்லை. உங்களிடம் (காங்கிரசிடம்) வேலை திட்டம் இல்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சனையை சந்திக்கிறீர்கள். பாஜக இந்தியாவை எப்படி தன்வசப்படுத்தனும் என்கிற அடுத்தடுத்த வேலை திட்டம் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆர்எஸ்எஸ்காரனும் மக்களை சென்று சந்திக்கிறான். தனித்தனியாக வீட்டுக்கு செல்கிறான். இதுவரை ஆர்எஸ்எஸ் என்பது தமிழ்நாட்டில் இயங்கியதா? இயங்கவில்லையா என தெரியாத அளவுக்கு இருந்தான். இன்றைக்கு ஒவ்வொரு இடத்திலும் முதல் முதலாக வெளியே வந்து 50 கூட்டம் நடத்துகிறான். ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தபட்சம் 5000 பேரைத் திரட்டுகிறான்.

பீகார் தேர்தலில் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு பெரிது. ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக் போய் பார்த்து 20,000 ஆர்எஸ்எஸ்காரன் பீகார் முழுக்க வேலை செய்தான். தமிழ்நாட்டில் அந்த வேலையை தொடங்கி இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டிலும் ஆர்எஸ்எஸ்காரன் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறான். நீங்கள் அவனிடம் கேட்க வேண்டியது: ”ஆர்.எஸ்.எஸ். காந்தியை கொன்றது ஏன்? எஸ்.ஐ.ஆர்-ஐ கொண்டு வந்தது ஏன்? அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்வது ஏன்? என்று நீங்கள் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டு, அவனை துரத்தி அடிக்க வேண்டும். இல்லையென்றால், இன்று பீகாருக்கு ஏற்பட்ட நிலைமை நாளைக்கு தமிழ்நாட்டிற்கு ஏற்படும்.

நாம் வெற்றிப் பெருமையை பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இங்கு இருக்கக்கூடிய அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒன்று திரட்டி போராட வேண்டிய தேவை இருக்கிறது. அதை திமுக செய்திருக்க வேண்டும். அவர்கள்தான் இந்த எஸ்ஐஆர் குறித்து ஓரளவு விழிப்போடு இருக்கிறார்கள். மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்த நோக்கம் புரிந்து கொண்டு எதிர்க்கிறார்களா? என்பதுதான் பிரச்சனை. அவர்களுக்கு இது குறித்து சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

இந்த எஸ்ஐஆர் வந்தால் மாநில கட்சிகள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படும். தேர்தலில் நாங்கள் ஈடுபடுகிறோமா? ஈடுபடவில்லையா? என்பது வேறு. ஆனால் நாங்கள் சொல்வது ஒன்றுதான். தமிழ்நாடு என்றைக்கும் மாநில கட்சிகளின் ஆட்சியில்தான் இருக்க வேண்டும். இங்கு தேசிய கட்சிக்கு ஒரு நாளும் வேலை இருக்க கூடாது. ஆனால் அந்த வேலை திட்டத்தை நோக்கித்தான் இந்த எஸ்ஐஆர் போன்ற பல திட்டங்கள் மூலமாக பிஜேபி உள்ளே வருகிறது. இந்த நோக்கத்தை புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டிய கட்சிகள், இயக்கங்கள் சிதறுண்டு போகாமல், இந்த எஸ்ஐஆர்-ன் நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக புரிய வைத்துவிட்டால், இயக்கங்களுக்கு வேலை இல்லை. கட்சிகளுக்கு வேலை இல்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ”ஜல்லிக்கட்டை மீட்டது போல, இந்த எஸ்ஐஆர்-ஐ துரத்தி அடிப்பார்கள்” என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. மக்களுக்கு புரிய வைக்கக்கூடிய வேலையைத்தான் மே 17 இயக்கம் இந்த வண்ணாரப்பேட்டையில் இன்று செய்து கொண்டிருக்கிறது. மக்கள் ஒரு நாள் திரண்டு எழுவார்கள். பாசிசத்தை தூக்கி வீசுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு.

தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையும், இன உணர்வும் டெல்லிக்காரனுக்கு என்றைக்கும் புரியாது. அது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம். உங்களை கொட்டாமல் விடமாட்டோம். அந்த வேலையை  மே 17 இயக்கம் செய்யும்.

இன்றைக்கு நான்கு தொழிலாளர் மசோதாவை கொண்டு வந்து நாடு முழுக்க அமல்படுத்தி விட்டது பாஜக. வண்ணாரப்பேட்டை என்பது ஒரு காலத்தில் தொழில் நகரமாக இருந்த இடம். இன்றைக்கும் நிறைய தொழிற்சாலைகள் இருக்கக்கூடிய பகுதிதான். இங்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது.

மே தினம் என்பது தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமையை வென்றெடுத்த தினம். தொழிலாளர்களுக்கான எட்டு மணி நேர வேலை என்பது, பல்வேறு தோழர்களின் உயிரை கொடுத்து பெற்றுக் கொடுத்த உரிமை. இன்று அந்த உரிமை இல்லை. இன்றைக்கு ஒரே சட்டத்தின் மூலமாக அந்த உரிமையை ரத்து செய்துவிட்டான்.

  • 12 மணி நேரம் வேலை வாங்கலாம் என்ற தொகுப்பு இச்சட்டத்தில் இருக்கிறது.
  • 300 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலைகள் மட்டும்தான், இனிமேல் தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற சட்டத்தை கொண்டு வந்துவிட்டது பாஜக.
  • இதில் சூட்சமாக என்ன சொல்கிறான் எனில், அந்த 300 பேர் என்பது நிரந்தர தொழிலாளர்களாக இருக்கவேண்டும் என்று இந்த தொழிலாளர் தொகுப்பு சட்டத்தில் இருக்கிறது. (இதற்கு நிகழ்கால உதாரணம்- இன்றைக்கு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடக்கிறது. அவர்கள் நிரந்தர பணி கேட்டுத்தான் போராடுகிறார்கள்).
  • இன்றைக்கு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒப்பந்த தொழிலாளரை பணியமர்த்த சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கிறது பாஜக. அவர்களுக்கு நிரந்தர பணி கிடையாது.

இவ்வாறு உங்கள் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்து, வாழ்வதற்கே தகுதி இல்லாத ஒரு நிலையை நோக்கி நகர்த்துகிறார்கள். இது ஒவ்வொருவருக்குமான வாழ்வா? சாவா? போராட்டம். இந்த நிலையை எதிர்த்து நாம் சண்டை போட வேண்டியது என்பது நம் தலையாய கடமை.

குடியுரிமை என்பது உங்களுடைய அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டது. அதை இன்றைக்கு நீக்கிக்கொண்டே வருகிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி இந்த மூன்றும் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்த்துப் போராடினால் உபா சட்டம் போடுகிறது பாஜக. ‘உமர் காலித்’ என்கிற ஒரே பெயருக்காக, அவர் கடந்த நான்கு வருடமாக சிறையில் உள்ளார். அவருக்கு ஒரு பிணை கூட வழங்கப்படவில்லை. அவர் செய்தது என்ன? தன் மக்களின் உரிமைக்காக போராடியதை தவிர வேறொன்றுமில்லை. அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற ஒரு மாணவன்.

உலகத்தில் பத்திரிக்கையாளர்களை தாக்குவதில், பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதில், இந்தியா வேகமாக முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தூண்களாக இருந்த  பத்திரிக்கையாளர்கள் இன்று மோடி காலடியில் இருக்கிறார்கள். பிஜேபி சொல்வதை எழுதுவதாக இருந்தால் எழுதுங்க, இல்லையெனில் நீங்கள் இங்கே எழுதவே முடியாது என்கிற நிலையை நோக்கி தள்ளுகிறார்கள். பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் அதானியும் அம்பானியும் போட்டி போட்டுக்கொண்டு தொலைக்காட்சிகளையும், ஊடகங்களையும் விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள். ’நியூஸ் 18’ என்கிற செய்தி சேனல் அம்பானி உடையது. ’லைவ் மிண்ட்’ என்கிற செய்தி சேனல் அதானி உடையது. இங்கு ஊடக சுதந்திரம் என்பதே ஒன்றும் இல்லை.

ஒரு எதிர்கட்சி தலைவர் ’தேர்தல் முறைகேடு’ பற்றி அம்பலப்படுத்துகிறார். அரியானா தேர்தலில் ஒரு வெளிநாட்டு பெண் புகைப்படம் போட்டு இந்தியாவில் ஓட்டு போடுகிறான். இதுப்போல தவறான முறைகேடுகள் நடந்தது செய்தியாகவே வரவில்லை, பேச்சு பொருளாகவில்லை. ஏன்? இங்கே ஊடக சுதந்திரம் இல்லை, எழுத்து சுதந்திரம் இல்லை, பேச்சு சுதந்திரம் இல்லை.

சமத்துவம் வேண்டுமென்று ஒரு காலத்தில் போராடி பெற்ற உரிமை இட ஒதுக்கீடு. எல்லா துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற ஒன்றை தற்போது கடைப்பிடிப்பதே இல்லை. ஓரளவிற்கு ஒபிசி/ எஸ்சி/எஸ்டி-யிலிருந்து அரசு துறைகளை நோக்கி சற்று நகர்ந்த நிலையில், இட ஒதுக்கீடு முறையில் கிரீமிலேயர் என்ற ஒன்றைக் கொண்டு வந்து சமத்துவத்தை முற்றிலும் சிதைக்கக்கூடிய வேலையை பாஜக செய்கிறது. நாம் தனித்தனியாக போராடி கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. இங்கு ஆயிரம் பிரச்சனைகள் வரும்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடிக் கொண்டிருந்தால் ஒரு தீர்வும் வராது, நமக்கான தீர்வு: ஒட்டுமொத்த விடுதலைதான்.

தனித்தனி பிரச்சனையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தால், காலமெல்லாம் நீங்கள் இருக்கும் வரைக்கும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். நீங்கள் இறந்தபின் அடுத்த தலைவர் வந்து போராட வேண்டும். ஆக ஒட்டுமொத்தமாக அனைத்திலிருந்தும் நமக்கான விடுதலையை நோக்கி நாம் நகர்வோம். அதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்.

அதற்கான அணிதிரட்டலை, அதற்கான தோழர்களை, அதற்கான மக்களை அரசியல் படுத்தக்கூடிய வேலையை தொடர்ச்சியாக செய்வோம். அதில் எஸ்டிபிஐ கட்சி, வியாசை தோழர்கள், இந்த வண்ணாரப்பேட்டையில் இருக்கக்கூடிய தோழர்கள் என அனைவரும் எங்களோடு கைகோருங்கள். நாம் நிற்பது அரசாங்கங்களை எதிர்த்தும், இந்த பாசிசவாதிகளை எதிர்த்தும். வெற்றி பெற முடியுமா முடியாதா? என்கிற கேள்வியே இல்லை. நாங்கள் எதிர்க்கிறோம் அதுதான் முக்கியம். இந்த மண்ணில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். எங்களுக்குத்தான் இறுதி வெற்றி. பாசிசவாதிகள் வெற்றி பெற்றதாக உலகத்தில் எந்த வரலாறும் கிடையாது. அவர்கள் வெற்றி பெற்றது போன்ற தோற்றத்தை வேண்டுமானால் உருவாக்கலாம்.

உங்களுக்கு வரலாறை சொல்கிறேன். ஹிட்லரை விடவா பிஜேபிக்காரன் ஆர்எஸ்எஸ்காரன் பெரிய ஆள்? ஹிட்லர் எத்தனை பேரை கொன்றான், பல சாம்ராஜ்யங்களை நாங்கள்தான் கட்டி ஆளுவோம் என்றான், இறுதியில் இருந்த தடம் தெரியாமல் தன்னை தானே சுட்டு இறந்தான். பெரிய பாசிசவாதிகளுக்கு நிலைமை அதுதான். மறந்துவிடாதீர்கள்- பாசிசவாதிகள் வாழ்ந்ததாக வரலாறே இல்லை. அன்பு என்ற ஜனநாயகம் தான் இறுதியில் வெல்லும்.

ஜனநாயகம் வெல்ல நாளாகலாம். அதற்கு தொடர்ச்சியாக நாம் போராட வேண்டும். வீட்டில் உட்கார்ந்தா எப்படி வெல்ல முடியும்? அதற்கான முன்னெடுப்புகளை செய்வோம். அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் இன்றைக்கு மே17 இயக்கம் இந்த வண்ணாரப்பேட்டையில் தொடங்கிருக்கிறது. இந்தப் போராட்டம் தமிழ்நாடு எங்கும் வீரியமாக செல்லும். இந்த சட்டம் நீர்த்துப் போகும் வரை மே17 இயக்கம் போராடிக் கொண்டே இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டினுடைய பிரதமர், தமிழ்நாட்டில் வேளாண் விவசாய மாநாட்டில் பேசுகிறார். அவர் பேசிட்டு கீழே கூட இறங்கவில்லை, அதற்குள் நெல் மூட்டை விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யும் ஈரப்பதத்தின் அளவை குறைத்துவிட்டார். இப்போது ஒரு இடத்திலிருந்து நெல்லை வாங்கி, அதைப் பத்திரப்படுத்தி சேமிப்புக்கிடங்கில் வைப்பார்கள். அந்த ஈரப்பதத்தின் அளவை குறைத்ததனால், இவர்களால் நெல்லை வாங்கி சேமித்து வைக்க முடியவில்லை. மோடி பேசுவது விவசாய மாநாடு, ஆனால் செய்வது விவசாயத்தை சாகடிக்கும் வேலை. ஆயினும் அதானிக்கு மட்டும் எல்லாவற்றையும் தூக்கி கொடுக்கிறார். எப்படிப்பட்ட தேச பக்தர்கள் பாருங்கள்.

  • ஜவுளி துறை சார்ந்த 32 கம்பெனிக்கு மானியம் கொடுக்கிறோம் என அறிவிக்கிறார்கள். 32 கம்பெனிகளில் ஒரு கம்பெனி கூட தமிழ்நாடு கம்பெனி இல்லை. கோயம்புத்தூரில் பாதி பேர் பிஜேபிக்குத்தான் ஓட்டு போடுகிறான். கோயம்புத்தூரில் பெரும்பாலும் ஜவுளி தொழில்தான். ஆனால் அங்கு எவருக்கும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து யாரும் பாஜகவை கேள்வி கேட்கவில்லை.
  • கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவுக்கு அனுமதி தரவில்லை. எங்கள் ஊரில் தயாரிக்கக்கூடிய மோட்டார் வாங்காமல், குஜராத்தில் தயாரிக்கின்ற மோட்டார்தான் வாங்க சொல்கிறது பாஜக அரசு. இது குறித்தும் யாரும் பாஜகவை கேள்வி கேட்கவில்லை.
  • தமிழர்களுடைய தொன்மையான அடையாளம் கீழடி. இங்கு மட்டுமில்லாமல் அமெரிக்கா வரைக்கும் சென்று ஆராய்ச்சி செய்து 2000 /3000 வருஷம் பழமையானது என ஆராய்ந்து சொல்வதை அங்கீகரிக்க மறுக்கிறது பாஜக. ஆனால் யாருக்குமே தெரியாத, எந்த புத்தகத்திலும் இல்லாத சரஸ்வதிநதி ஓடுகிறது என்பதை நம்புகிறான். தமிழ் மொழிக்கு நிதியை கொடுக்க மறுக்கிறான். இதற்கு காரணம் தமிழர்களின் மீதான வெறுப்பு.

மே 17 இயக்கம் இந்த அரசியலை மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் இது எங்கள் மண். இங்கே எந்த குஜராத்தியும் மார்வாடியும் வந்து இந்த மண்ணில் அதிகாரம் செய்ய விடமாட்டோம். பிஜேபிக்காரன் கொடி பறப்பது தமிழனுக்கு அவமானம் என்பதை தமிழ்நாடு முழுவதும் சொல்லி கொண்டிருக்கிறோம். எங்கள் ஊர் கொடி பறக்கிறதா? எப்படி வடநாட்டான் கொடி இங்கே பறக்க முடியும் என கேட்கிறோம். இந்த உணர்வு எல்லாருக்கும் வரவேண்டும்.

நீங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இங்கே ஓட்டு போடுகிறீர்கள். இந்த எஸ்.ஐ.ஆர் படிவத்தை ஒன்றை எழுதி கொடுத்துவிட்டு மற்றொன்றை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். யார் கேட்டாலும் கொடுத்துவிடாதீர்கள். அதுதான் நீங்கள் கொடுத்ததற்கு ஆதாரம். பிறகு திரும்ப வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவார்கள். அதில் உங்கள் பெயர் இருக்கிறதா? என தயவு செய்து பாருங்கள். ஒரு பக்கம் சட்டப் போராட்டம் நடத்தி இந்த எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து, இன்னொரு பக்கம் நம்மை போன்ற இயக்கங்கள் சமூக தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

கொடுங்கோன்மை சட்டம் ஒரு நாளும் சட்டமாக நிலைத்து நின்று வலிமை பெற்றதாக இந்திய வரலாற்றில் நடந்ததில்லை. அதேபோல இந்த எஸ்ஐஆர் சட்டத்தை தூக்கி வீசுவோம். அது ஒரு நாள் நீக்கப்படும். அந்த நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ஆதார் என அனைவரையும் எடுக்கச்சொல்லியும், அதை அனைத்திலும் இணைக்க சொல்லியும், இத்தனை வருடமாக ஆதார் கார்டு இல்லாமல் வாழவே முடியாத நிலையை உருவாக்கி விட்டு, தற்போது இந்த எஸ்ஐஆரில் ஆதார் கார்டு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள். எஸ்ஐஆர் அடிப்படையிலேயே மோசடி என்பதற்கு எடுத்துக்காட்டு இது. ஆக இந்த எஸ்ஐஆர் மூலமாக ஓட்டுக்களை பிரிப்பதற்கும், பிடுங்குவதற்கும், புதிதாக தேசிய கட்சிகளை உள்ளே சேர்ப்பதற்குமான வேலையாகவும், மாநில கட்சிகளை இல்லாமல் செய்வதற்காகவும், பாஜகவுக்கு ஓட்டு போடாதவர்கள் என்று நினைக்க கூடியவர்களை நிரந்தரமாக இந்தியாவில் குடியுரிமை அற்றவர்களாக மாற்றக்கூடிய வகைதான் இது. இதை ஏதோ ஒரு அனுமானத்தில் சொல்லவில்லை. குடியுரிமை திருத்தம் வந்த பொழுது இதைத்தான் எச்சரித்தோம்.

அசாமில் இன்றைக்கு இதுதான் நிலைமை. அங்கு குடியுரிமை இல்லை என பல பேரை நீக்கி விட்டது பாஜக. இந்த நாட்டிற்காக போராடி உடம்பில் வீரத்தழும்பு வாங்கிய ஒரு ராணுவ அதிகாரிக்கு குடியுரிமை இல்லை என தெரிவித்து விட்டது பாஜக. இன்றைக்கு அவர் சிறப்பு முகாமில் இருக்கிறார். இந்த நிலைமை நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த நிலைமையிலிருந்து மக்களை காக்க வேண்டியது ஒவ்வொரு முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் தலையாய கடமை. அதை நாம் செய்வோம். எஸ்ஐஆர் என்கிற இந்த சதியை, மோடி-ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் சதியை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவோம் என்று சொல்லி விடை கூறி முடிக்கிறேன். நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »