சாமானிய சங்கிகளை விட சீமானிய சங்கிகள் ஆபத்தானவர்கள்

திசம்பர் 11, 2025 அன்று ஆம் தேதி  தமிழர் விரோத அமைப்பாகிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்தில் நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக கலந்து கொண்டுள்ளார்.  ஆர்.எஸ்.எஸ் என்னும் சமூக விரோத அமைப்பின் ஒரு பிரிவான விஜில் (VIGIL) என்ற பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட பாரதியார் பிறந்தநாள் மற்றும் வந்தே மாதரம் 150 வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ஒரு போலி தமிழ்த்தேசியவாதி என்றும்,  ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் பார்ப்பன நலனுக்காக தமிழர்களை காட்டிக் கொடுக்கவும் தயங்காதவர் என்றும் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தின் விளைவாக தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் உணர்வு மேலோங்கி வந்தது.  தமிழீழ ஆதரவு போராட்டங்களை அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு இந்திய-இலங்கை நட்பு என்ற வெளியுறவுத்துறை கொள்கையின்  காரணமாகவும்,  அதிகார ஆசையினாலும் மிக மூர்க்கமாக அடக்கியது. எனவே தி.மு.கவிற்கு அதுவரையிலும் ஆதரவு அளித்த திராவிட இயக்கத்தினர் உட்பட தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் இணைந்து தமிழர் நலம் பேணும் மாற்று அரசியல் அமைப்பு ஒன்று இருந்தால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் நாம் தமிழர் பேரியக்கம் புதுக்கோட்டை முத்துக்குமார் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதுவரை திராவிட இயக்கங்களில் மேடைப் பேச்சாளராக இருந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் நாம் தமிழர் கட்சியின் மேடைப் பேச்சாளராக பங்கெடுக்க தொடங்கினார்.

2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் பேரியக்கம் என்ற பெயரில் இயங்கி வந்த அமைப்பு நாம் தமிழர் கட்சியாக உருமாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு புதுக்கோட்டை முத்துக்குமார் அவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு இயக்குனர் சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தருணம் தொடங்கி இன்றுவரையிலும் படிப்படியாக நாம் தமிழர் கட்சியை தமிழர் விரோத செயல்களில் ஈடுபடுத்துவதை சீமான் விடவில்லை. 

தமிழ்த்தேசியம் என்ற அரசியல் முழக்கம் அடிப்படையில் இந்திய ஒன்றிய ஆதிக்கத்திற்கு எதிரானது. ஆயினும் இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியக் கருத்துகளை எளிய வகையில் மக்களுக்கு எடுத்துரைக்க பயன்படும் என்ற நம்பிக்கையில் திராவிட இயக்க தோழர்களும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் சீமானை முன்னிலைப்படுத்தி ஆதரிக்கத் தொடங்கினார்கள். 

அதே 2009 காலகட்டத்தில் தோழர் திருமுருகன்காந்தி உள்ளிட்ட திராவிட இயக்க பின்னணி கொண்ட தமிழீழ ஆதரவாளர்கள், இந்த இனப்படுகொலையை உலகிற்கு எடுத்து சொல்ல ஒரு இயக்கம் தொடங்குவது என்று முடிவு செய்தனர். 

அன்றைய அரசியல் காலகட்டத்தில் ஈழம் என்றோ, தமிழீழம் என்றோ, ஈழத் தமிழர்கள் என்றோ, தமிழீழ இனப்படுகொலை என்றோ பேசுவதைக் கூட இந்திய அரசை எதிர்க்கும் செயலாக கடுமையான நெருக்கடிகளை அனைவரும் சந்தித்து வந்த வேலையில் தோழர் திருமுருகன்காந்தி தாம் உருவாக்கிய இயக்கத்திற்கு தமிழீழ இனப்படுகொலை தொடங்கிய நாளான ‘மே 17’ என்ற தேதியையே மே பதினேழு இயக்கம் என்று பெயர் வைத்து இயங்கத் தொடங்கினார். அதன் முத்தாய்ப்பாக ஒவ்வொரு மே மாதமும் இனப்படுகொலை நடந்தேறிய வாரத்தில்  சென்னை தமிழர் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கீழ இனப்படுகொலையில் படுகொலை செய்யப்பட்ட  நம் சகோதர உறவுகளுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழ நினைவேந்தல் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னெடுத்து வருகிறது.

தமிழீழ விடுதலை என்பதும், தமிழீழ இனப்படுகொலையில் பங்கு பெற்றவர்களை அம்பலப்படுத்தும் நோக்கமும் ஒற்றை நபராலோ, அல்லது ஒரு அமைப்பு மற்றும் கட்சியாலோ சாத்தியப்படுவது அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொண்ட காரணத்தினால், பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் நாம் தமிழர் கட்சியின் சீமானை நினைவேந்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மே 17 இயக்கம் அழைத்துள்ளது. ஆனால் அங்கு வரும் பொழுதெல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவே அவர் முயன்ற சம்பவங்களை கண்ட பொழுது அவரது தமிழீழ நலன் குறித்த சிந்தனையிலும், தமிழ்த்தேசிய கருத்துகளிலும் கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கின.

எனவே தான் ஈழ ஆதரவாளர்கள் சீமானை அளவுக்கு அதிகமாக முன்னிறுத்தும் போதெல்லாம் மே 17 இயக்கம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து தோழர் திருமுருகன்காந்தி பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அன்று சீமானை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்த பல இயக்கத் தலைவர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் மே 17 இயக்கத்தை எதிரி போல் நடத்திய நிகழ்வுகளும் நடந்து வந்துள்ளன. 

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு மே 17 இயக்கம் சென்னையில் முன்னெடுத்த ‘வெல்லும் தமிழீழம் மாநாடு’ நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒரு சிலர் சீமானை ஏன் இதற்கு அழைக்கவில்லை என்று கேட்ட பொழுது “தன்னலம் பேணாமல் தமிழீழத்திற்காக உழைப்பவர்களை மட்டுமே இனிமேல் எங்கள் நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைப்போம். சுயநல அரசியல் செய்து சாத்தியமற்ற வெற்றுக் கூச்சல்களால் ஈழ விடுதலையை சாத்தியப் படுத்துவேன் என்று கூறும் நபர்களை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாண்பையும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மாண்பையும் குலைக்கும் வண்ணம் பேசி வந்து கொண்டிருக்கும் சீமானை நாங்கள் தமிழ்த்தேசியவாதியாக கருதவில்லை” என்றும் அதே மேடையில் தோழர் திருமுருகன்காந்தி பதிலடி கொடுத்தார். 

அன்று முதல் இன்று வரையிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்த்தேசிய அரசியல்வாதியாக மே 17 இயக்கம் முன்னிறுத்துவதில்லை. மாறாக அவரையும், அவரது பேச்சினையும் போலி தமிழ்த்தேசியம் என்றே வரையறுத்து வைத்துள்ளோம். 

இதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது  இரண்டு காரணங்கள். முதலாவது தமிழ் இனத்தின் எதிரியான இந்திய ஒன்றிய அதிகார வட்டத்திற்குள் சென்று தமிழ்த்தேசியத்தை படைத்து விடுவேன் என்று நடைமுறைக்கு ஒவ்வாத  வேலைத்திட்டத்தை முன்வைப்பது. இரண்டாவது தன் வாழ்நாள் இறுதி வரையிலும் தமிழினத்திற்காகவே உழைத்த தந்தை பெரியார் மற்றும் அவர் வழிவந்த திராவிட இயக்க தோழர்களை  தனது அரசியல் அதிகார வெறிக்காக தமிழர்  விரோதி என்று அவதூறு பேசி தமிழின துரோகச் செயலில் ஈடுபடுவது.

சீமான் போன்ற புல்லுருவிகள் பேசுவதனால் தந்தை பெரியார் தமிழின விரோதியாக மக்களால் அடையாளம் காணப்பட மாட்டார் என்பதை வரலாறுகாரும் நாம் கண்டிருக்கிறோம். 2010 ஆம் ஆண்டிலிருந்து கட்சி நடத்திக் கொண்டிருக்கும் சீமான் தனது பேச்சால் இதுவரை ஒரு வார்டு கவுன்சிலர் பதவியை கூட வென்று காட்ட முடியவில்லை. போட்டியிட்ட அத்தனை  தேர்தல் பரப்புரைகளிலும் பெரியாரை எதிர்த்துதான் பேசி வந்துள்ளார். ஒவ்வொரு மேடையிலும் திராவிட இயக்க ஈசியர்களை அவமதிப்பு தான் பேசி வந்துள்ளார். அவரது கட்சியினர் நடத்தும் தெருமுனை கூட்டங்கள் கூட பெரியாரைப் பற்றிய அவதூறு பேசும் கூட்டங்களாகவே இருந்து வந்துள்ளன. ஆனாலும் இன்று வரையிலும் பெரியார் அவர்களால் வெல்ல முடியாதவராகவே இருந்து வருகிறார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகளாக தன்னால் தமிழ்நாட்டில் திராவிட எதிர்ப்பை பெரியார் வெறுப்பை விதைக்க முடியாத உச்சபட்ச விரக்தியில் இருக்கும் சீமான் பெரியார்- மணியம்மையார் திருமணத்தை கொச்சைப்படுத்தி பேசியது, தாய் மற்றும் தங்கைகளை பற்றி பெரியார் பேசியதாக வலம் வரும் தவறான தகவல்களை செய்தி ஊடகங்களில் பேசியது என தரம் தாழ்ந்து பேசத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சீமானின் வீடு மே 17 இயக்கம் உள்ளிட்ட பெரியாரிய உணர்வு கொண்ட அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினரும் பாஜகவின் அரசியல் புரோக்கருமான ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்  சீமான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி மிக மேலோட்டமாக மட்டுமே தனது மேடைகளில் பேசுவதை நாம் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறோம். தமிழ் ஈழத்திற்காக கட்சி தொடங்கியதாக சொல்லும் சீமான் இதுவரை தமிழ் இனத்திற்காக முன்னெடுத்த செயல்பாடுகள் என்னென்ன என்று நாம் தமிழர் கட்சியை மே 17 இயக்கம் கேள்வி  கேட்டது. இது சமூக வலைதளங்களில் 100 நாட்களுக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

திராவிடத்தை இழிவுபடுத்துவது, பெரியாரை அவமதிப்பது, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் கலைஞர் மற்றும்  செல்வி ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளை திராவிட சுடுகாடு என்று அழைத்தது மட்டுமல்லாமல், “அங்கே இரண்டு ஆம்பளை படுத்திருக்கான் நடுவுல ஒரு பொம்பளையும் படுத்திருக்கா” என்று மிகக் கொச்சையாக பேசுவது என அரசியல் நாகரீகம் செயல்படத் தொடங்கினார். இத்தனைக்கும் அவர் கொச்சைப்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டவர்தான் சீமான்.  அந்த நேரத்தில் “இங்கே இலை மலர்ந்தால், அங்கே ஈழம் மலரும்” என்று கொஞ்சம் கூட அரசியல் அறிவின்றி முழங்கியவர்தான் இந்த சீமான். 

இதே சீமான் நரேந்திர மோடியை புகழ்ந்து மேடையில் பேசியிருக்கிறார். மும்பை தமிழர் குடியிருப்பு பகுதிகள் உள்ளடக்கிய தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரத்திற்கு சென்று இருக்கிறார். அர்ஜுன் சம்பத், பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற  ஆர்.எஸ்.எஸ் சங்கிகளுடன் சகஜமாக சீமான் பேசும் புகைப்படங்கள் இணைய வலைதளங்களில் இன்றும் காணக் கிடைக்கின்றன. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையோடு எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் தலைமையில் ஒரே மேடையில் அண்ணன் தம்பி என்று பேசிக்கொள்ளும் தமிழின விரோத போக்கை கண்டு தமிழ் உணர்வாளர்கள் முகம் சுளித்த வரலாற்றை கொண்டவர்தான் சீமான். இதே பச்சைமுத்துதான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை கொச்சைபடுத்தியவரும், புலிகளை தவறாக சித்தரித்து, தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனும், இனப்படுகொலையில் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவருமான குழந்தை பாலச்சந்திரனை விடுதலைப் புலிகளின் சீருடைகள் இருப்பது போல் வர்ணித்த  புலி பார்வை படப் பாடலை வெளியிட்டவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை ஈழத்திற்காகவே பிறந்தவர் போல் காட்டிக் கொண்டு கட்சி நடத்தும் சீமான் இதே புலிப்பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு மேடையில் நின்று ஈழ விரோதத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது மிக முக்கியமானது.

இதுபோன்று  எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு பல துரோகங்களை தமிழினத்திற்கு செய்த சீமான் அதன் உச்சகட்டமாக தற்பொழுது ஆர்.எஸ்.எஸ் இன் மேடையில் வெளிப்படையாக அமரத் தொடங்கியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் நகைப்புக்குரிய விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். பாரதியாரின் கொள்ளு பேரன் அழைத்ததற்காகத்தான் பாரதியாரின் பிறந்தநாள் விழா மேடைக்கு சீமான் சென்றிருந்தார் என்று விளக்கம் கொடுத்து வருகின்றனர். 

இந்த இடத்தில் 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில் மே 17 இயக்கம் எடுத்த முடிவை எடுத்துரைப்பது சீமானின் தமிழின துரோகத்தை அம்பலப்படுத்த உதவும்.  

கடந்த 2022 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை தியாகராயர் அரங்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கம் கவிஞர் காசி. ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும் இதில் தமிழீழ செயல்பாட்டாளர் ஐயா பழ.நெடுமாறன், தோழர் திருமுருகன்காந்தி, தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை கு.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் பங்கேற்பதாகவும் அறிவிப்பு வெளிவந்திருந்தது. அதனோடு சேர்ந்து தமிழர் விரோத பாஜகவின் அன்றைய தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் பங்கெடுக்க போவதாக அறிவித்திருந்தனர்.

தமிழ் ஈழ விடுதலைக்காகவே தமது செயல்பாடுகளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையிலான மே 17 இயக்கம் ‘அண்ணாமலை பங்கெடுப்பதாக இருந்தால் மே 17 இயக்கம் அக்கருத்தரங்கில் பங்கெடுக்காது’ என்று வெளிப்படையாக உடனே அறிவித்தது. அதே அறிவிப்பு மதிமுக நிறுவனத் தலைவர் ஐயா வை.கோ அவர்களிடமிருந்தும் வந்தது. அதை தொடர்ந்து மற்ற இயக்கத் தலைவர்களும் அந்த கருத்தரங்கை புறக்கணித்தனர்.

தமிழீழ இனப்படுகொலை நடந்தேறியது என்னவோ காங்கிரஸின் ஆட்சி காலத்திலாக இருக்கலாம். ஆனால் ஈழ இனப்படுகொலையில் காங்கிரசுக்கு என்ன பங்கு உள்ளதோ, அதற்கு இணையான பங்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் உள்ளது என்பதை மே 17 இயக்கம் திட்டவட்டமாக  அறிவித்தது. காங்கிரசை எதிர்ப்பதுதான் தன்னுடைய ஒரே குறிக்கோள் என்பது போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக தமிழீழ இனப்படுகொலை நடந்த பொழுது அதை தடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட குரல் கொடுத்ததில்லை என்பது மட்டும் அல்லாமல், இந்திய ராணுவம் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த உதவிகளை எந்த இடத்திலும் பாஜக எதிர்க்கவில்லை என்றும் மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது.

எனவேதான் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் என்றாலும்,  அதில்  ஐயா பழ.நெடுமாறன் போன்ற ஈழ உணர்வாளர்கள் பங்கெடுத்தாலும் கூட தமிழர் விரோத, தமிழீழ விரோத ஆர்.எஸ்.எஸ் பாஜக பங்கெடுக்கும் பட்சத்தில் அக்கருத்தரங்கை புறக்கணிப்போம் என்று மே 17 இயக்கம் அறிவித்தது. 

ஆனால் நாம் தமிழர் கட்சியின் சீமானோ இன்று வரையிலும் தமிழகத்தில் இந்துத்துவத்தை பரப்பி, தாய் பிள்ளையாக பழகிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய தமிழர்களோடு தங்களை இந்து என்று நம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களை மோத விட முயற்சிக்கும் கலவர கும்பல் ஆர்.எஸ்.எஸ் மேடையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் சீமானை ஏன் போலி தமிழ்த்தேசியவாதி என்று நாம் அழைக்கிறோம் என்பது தெளிவாக புரியும்.

சீமானின் தமிழின துரோகத்தை நுணுக்கமாக புரிந்து கொள்ள முயற்சி செய்யலாமா?

தனது பல மேடைகளில் பெருந்தலைவர் காமராசரை பற்றி புகழ்ந்து பேசும் சீமான், அதே காமராசரை உயிரோடு டெல்லியில் கொளுத்த பார்த்த ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கு எடுத்திருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஒரு குரலுக்காக இந்திய தேசிய படையில் சேர படை திரட்டிய ஐயா முத்துராமலிங்கனார் அவர்களின் பேரை உச்சரிக்கும் சீமான், அதே நேதாஜியின் இந்திய தேசிய படையை தோற்கடிக்க ஆங்கிலேயர்களுக்காக படை திரட்டி ஐயா முத்துராமலிங்கனாரின் ஈகத்தை அவமதித்த சாவர்க்கரை தலைமை ஏற்கும் ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார்.

கரும்பு விவசாயி சின்னத்தை தன்னுடைய கட்சிக்காக அறிவித்த சீமான், மூன்று வேளாண் சட்டங்களை வைத்து இந்திய விவசாயிகளை அழிக்க பார்த்து அவர்களின் போராட்டத்தில் ஏறத்தாழ 900 விவசாயிகள் மரணமடைய காரணமாக இருந்த பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார்.

‘தமிழில்தான் பேச வேண்டும், பிற மொழி கலப்பு இருக்கக் கூடாது’ என்று மேடைக்கு மேடை பேசும் சீமான், தமிழில் குடமுழுக்கு செய்வதை முழுமையாக எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார்.

தன்னை தமிழ்த்தேசியவாதி என்று சொல்லிக்கொண்டு ‘தனித்த பெரும் அடையாளம் கொண்ட தமிழினம்’ என்று மார்தட்டிக் கொள்ளும் சீமான், இந்தியாவில் தேசிய இன அடையாளங்களே இருக்கக் கூடாது, அனைவரும் இந்தியன் என்றும் இந்து என்று மட்டுமே இருக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் இன் மேடையில் பங்கெடுத்திருக்கிறார். 

சூழலியல் பாதுகாப்பு என்பதே நாம் தமிழர் கட்சியின் கண்டுபிடிப்புதான் என்பது போல் இறுமாற்றுக் கொண்டிருக்கும் சீமான், தூத்துக்குடியில் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் தங்கை ஸ்னோலின் உட்பட 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்து அனில் அகர்வாலை இன்று வரையிலும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார். 

அனைவருக்கும் கல்வியே எங்கள் கட்சியின் கொள்கை என்று சொல்லும் சீமான், அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும் இட ஒதுக்கீட்டை அழித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க பார்க்கும் நீட் தேர்வை கொண்டு வந்து, தங்கை அனிதாவின் மரணத்திற்கு காரணமான பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார்.

நாங்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மேடை போட்டு பேசும் சீமான், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதி சங்கத்தையும் தூண்டிவிட்டு தமிழ்நாட்டை சாதிக் கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்யும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார். 

நில உரிமை, நீர் உரிமை என்று காகிதத்தில் கொள்கைகளை வைத்திருக்கும் சீமான், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்த பாஜகவின்  தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன் மேடையில் பங்கெடுத்திருக்கிறார். 

மண்டியிடாத மானம் என்று சுவரொட்டிக்கு சுவரொட்டி எழுதிக் கொண்டிருக்கும் சீமான், தமிழர்களை பொறுக்கி என்று திட்டிய சுப்பிரமணியசாமி அங்கம் வகிக்கும் பாஜகவின்  தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார். 

இஸ்லாமிய சகோதர சகோதரிகளை தன் கட்சியில் தன்னருகே அமர்த்திக் கொண்டிருக்கும் சீமான், பாபர் மசூதியை இடித்து, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சொந்தங்களை இந்தியாவில் படுகொலை செய்து, குஜராத் கலவரத்தில் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த ஆர்.எஸ்.எஸ் மேடையில் பங்கெடுத்திருக்கிறார். 

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இருந்தாலும் மேலே சொன்ன காரணங்களே சீமான் ஒரு தமிழின துரோகி என்பதற்கும், போலி தமிழ்த்தேசியவாதி என்பதற்கும் போதிய சான்றுகளாக இருக்கும். சீமானின் இத்தகைய நயவஞ்சக குணத்தை அறிந்துதான் பலகாலத்திற்கு முன்பே நாம் தமிழர் கட்சியோடு எத்தகைய அரசியல் உறவும் வைத்துக் கொள்வதில்லை என்று மே 17 இயக்கம் முடிவு எடுத்தது. 

ஏனென்றால் சாமானிய சங்கிகளை விட சீமானிய சங்கிகள் ஆபத்தானவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »