
இந்தியே ஆட்சி மொழி என்று டெல்லி ஆதிக்கவாதிகள் 1965-ல் திணித்த போது, மாணவர்கள் கொதித்தெழுந்து போராடிய மொழிப் போராட்டத்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ளும் வகையில் வெளிவந்துள்ளது பராசக்தி திரைப்படம். ‘இந்தியை தமிழர்கள் எதிர்க்கவில்லை, இந்தி கற்க ஆர்வம் காட்டுகிறார்கள்’ என்பது போன்ற கருத்துருவாக்கத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவவாதிகள் பரப்பிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தத் திரைப்படம் நீறு பூத்த நெருப்பாக இந்தி எதிர்ப்பு என்றும் தமிழ்நாட்டில் கனன்று கொண்டிருக்கும் என்பதை அவர்களுக்கு திரைப்படமாகக் காட்டியுள்ளது.
மொழி இனம் கடந்து மொழி போராட்டத்திற்காக இணைந்த ‘புறநானூற்று சேனை’ என்கிற மாணவ அமைப்பு ரயிலை எரிக்கும் காட்சியுடன் இப்படம் ஆரம்பிக்கிறது. மக்களின் உயிருக்கு சேதம் விளைவிக்காமல், டெல்லி ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கு சேதம் விளைவித்து தங்களது போராட்ட நோக்கமான ‘நீதி பரவட்டும்’ என்பதை உணர்த்தும் படி இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், இந்தி படம் ஒளிபரப்பிய திரையரங்கம் எரிப்பு, இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், காவல் துறையினரின் தடியடி, கலவரங்கள், சொந்த மக்களையே கொத்துக் கொத்தாக கொன்ற இராணுவம் என அன்று நடந்த அனைத்து வடிவங்களும் இப்படத்திலும் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. வணிக ரீதியான வெற்றிக்காக இயக்குனர் சில காட்சிகளை புனைவாக இணைத்துள்ளார். போராட்டத்தின் சில தகவல்கள் விடுபட்டுள்ளது. அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இப்படம் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு மொழி விழிப்புணர்வுப் படமாக அமைந்திருக்கிறது.
தபால் நிலையத்தில் இந்தித் திணிப்பால் ‘ஒரே நாள்ல எட்டாம் வகுப்பு படிச்ச என்ன படிக்காத தற்குறியாக்கிட்டாங்க’ என பேரனிடம் பேசும் நாயகனின் பாட்டி, ‘மொழியில கை வைச்ச அடுத்த நிமிசம் சோத்துக்கு திண்டாடுறோம் பார்த்தியா’- அண்ணனிடம் சொல்லும் தம்பி, ‘இந்தி படிச்சா போதும் வேலையில முன்னேறிடலாம்னு சொன்னீங்க, இப்ப அவங்கள மாதிரி இந்தி பேசனும்னு சொல்றீங்க, அவங்க பிறந்ததிலிருந்து பேசுறாங்க, நான் இப்பதான் கத்துக்கிட்டு வந்து பேசுறேன், இரண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்குல்ல’ – என வேலைக்கான நேர்காணலில் உயரதிகாரிகளிடம் கூறும் நாயகன், நாங்க தமிழ்ல படிச்சி இங்கிலிஷ்ல எழுத, இந்திக்காரங்க அவங்க தாய்மொழியில ஈசியா எழுதிடுவாங்கய்யா – முதல்வரிடம் கெஞ்சும் மாணவன் என அனைத்தும் இந்தி தான் ஆட்சி மொழி என்ற சட்டத்தினால் இந்தி தவிர்த்த மற்ற மொழிகள் பேசும் சாமானிய மனிதனின் வாழ்க்கையில் எந்தளவுக்கான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான வசனங்களாக நமக்குள் ஊடுருவுகின்றன.

இராணுவ அதிகாரியாக வரும் வில்லன் ஜெயம் ரவியிடம், நாயகனான சிவகார்த்திகேயன் சொல்லும் வசனம் ஒன்று, சிப்பாய் கலகத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்றது தமிழன் தான், எங்களுக்கு எவனும் தேசபக்தி சொல்லித் தரத் தேவையில்லை என்பதாக வசனம். 1857-ல் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திற்கு முன்பே, 225 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தென்னிந்திய விடுதலைப் போர் என்று அழைக்கப்படும் பாளையக்காரர்கள் புரட்சியை, மக்கள் தளத்தில் எவரும் பேசாதிருந்த சூழலில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மே 17 இயக்கம் கோவை புரட்சியிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து பாளையக்காரர்களின் போராட்ட வரலாற்றை மக்கள் தளத்தில் பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இது திரைப்பட வசனத்திலும் எதிரொலித்திருக்கிறது.
இப்படத்தில் ஒரு மாணவனின் இறப்பினால் கலைக்கப்பட்ட புறநானூற்று சேனை என்னும் மாணவர் அமைப்பு, இந்தி ஆட்சி மொழி சட்டத்தினால் ஒரு மாணவன் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் போது மீண்டும் உயிர் பெறுகிறது என்பதே கதைக் கரு அவர்களின் திரட்சியினால் இந்திய ஆட்சி மொழி சட்டம் திருப்பிக் கொள்ளப்படுகிறது என்பது முடிவு. அண்ணாவின் சட்டமன்ற உரையுடன் இப்படம் நிறைவடைகிறது.
இந்திய ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து போராடி, துப்பாக்கி சூட்டினால் பலியான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மாணவர் இராஜேந்திரனாக நடிகர் அதர்வா கதாபாத்திரம். மேலும் அன்றைய தலைவர்கள் கதாபாத்திரத்திற்கும் தேர்ச்சியான நடிகர்கள் என வரலாறும் புனைவும் சேர்ந்த படமாக ரசிகர்களை கொண்டாடச் செய்கிறது.
போராட்டத்தின் நோக்கத்திற்காக மாணவர்களின் ரயில் எரிப்பை நியாயப்படுத்த முடியாது. இது ஒரு புனைவுக் காட்சி என்றாலும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராக தங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் ஒரு உன்னத நோக்கமாக இக்காட்சியை இப்படத்தின் இயக்குனர் மக்களிடம் கடத்துகிறார். அது போலவே, 1987-ல் தமிழ்நாடு விடுதலைப் படை ரயில் பாலத்தில் குண்டு வைத்ததை எவராலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அதன் பின்னணி நோக்கத்தை இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் விடுதலை திரைப்படத்தின் ஊடாக நமக்குள் கடத்தியிருப்பார். இப்படத்தில் ரயில் எரிக்கும் முன் மக்களைக் கீழே இறக்கி விடுவதைப் போல, அப்படத்திலும் மருதையாற்று பாலம் தகர்க்கப்பட்டதும், எப்படியும் ரயிலை ரயில் அதிகாரி நிறுத்தி விடுவார் என்கிற நம்பிக்கை வைத்திருந்த புரட்சிப் படையினர், அந்த நம்பிக்கை பொய்யானதும், டெல்லி அரசை மிரட்டுவதற்காக செய்த செயலை எண்ணி பெரிதும் வருந்தி, அந்த ரயிலை எப்படியும் நிறுத்தி விட வேண்டும் என்று அவர்கள் பதைபதைக்கும் காட்சியை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். டெல்லி ஆதிக்கவாதிகளின் அடாவடிகளால் எழுந்த எதிர்வினைகளே அன்றைய மாணவர்கள் திரையரங்கை எரித்ததும், தமிழ்நாடு விடுதலைப் படை இரயிலை தகர்த்ததும் என்னும் பொருத்தப்பாடுகளை அறியச் செய்தது இப்படம்.
மாணவர்களின் அன்றைய கொந்தளிப்பின் ஊடாக, மாணவர்கள் போர்வையில் உள்ளே புகுந்த காலிகளை பெரியார் சுடச் சொன்னதும் வரலாறு. அன்றைய மாணவர்கள் போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை. இந்தி ஆட்சி மொழி என்பதை அரசியல் தலைமைகளின் போராட்டமாகவே இருக்க முடியும், அதுவே தீர்வு தரும் எனத் திடமாக எண்ணினார். பார்ப்பனர்கள் ஆதரவு தரும் எந்த போராட்டத்தின் தீர்வும் உறுதியானதும், நிலையானதும் அல்ல என்பது அவர் வாழ்நாளில் கற்றுக் கொண்ட படிப்பினை. அதனால்தான் ராஜாஜி ஆதரித்த 1965- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தார்.
மாணவர்கள் போராட்டம் உன்னத நோக்கம் கொண்டது என்றாலும், இரண்டாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய சூழ்ச்சிகளை அறிந்து கொண்ட அரசியல் அதிலில்லை.. பெரியார் நிரந்தரத் தீர்வை நோக்கிய போராட்டக் களத்தையே வடிவமைத்தவர். பார்ப்பனியம் எதிர்க்கின்ற காரியங்களே தமிழர்களின் நலன் என்று தீர்க்கமாக நினைத்தார். அதனால் அப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. இரு முனையாக பார்க்க வேண்டிய 1965- மொழிப் போரை, பெரியாரை மையப்படுத்தி கொச்சைப்படுத்துபவர்கள் தங்களின் அரசியல் பிழைப்புக்காக இப்படி ஒரு கருத்துருவாக்கத்தை பரப்புகிறார்கள். ஆனால் பெரியாரின் மக்கள் மயப்படுத்திய முதல் இந்தி எதிர்ப்பு தான் இப்போராட்டத்திற்கும் உணர்ச்சி விதையாகியது என்பது தான் உண்மை.

‘தீ பரவட்டும்’ என்று பேரறிஞர் அண்ணா முழங்கிய சொற்றொடரை தணிக்கை வாரியம் நீக்கியதால் ‘நீதி பரவட்டும்’ என அது மாற்றப்பட்டு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இராமாயணம் கம்பராமாயணத்தை ஏன் கொளுத்த வேண்டும்? என்று அண்ணா அவர்கள் நடத்திய சொற்போரின் தலைப்பு இது. இந்த சொல் டெல்லி ஆதிக்கவாதிகளின் இயல்பினை படம் பிடித்துக் காட்டியதால் நீக்கப்பட்டது. ஆனால் இளைஞர்களிடையே இச்சொல் பிரபலமடைந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் அதிக இளைஞர்கள் வாங்கும் நூலாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மொழி உணர்வை காலங்கள் கடந்தாலும் அவ்வளவு எளிதில் அசைத்து விட முடியாது என்பதனை டெல்லி ஆட்சியாளர்களுக்கு என்றென்றும் தமிழினம் உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கும். தமிழ் பற்றினை மக்கள் மயப்படுத்திய திராவிடக் கருத்தாளர்களும், தமிழினப் பற்றாளர்களும் உணர்ச்சியூட்ட நமக்களித்த எழுத்துக்களும், இயற்கையை நேசித்து உருவான தமிழர் மரபின் சிந்தனையும் உள்ளவரை இங்கு இந்தித் திணிப்பு எக்காலத்திலும் எடுபடாது என்பதையே 1965 மொழிப் போராட்டத்தை மையப்படுத்தி உருவான பராசக்தி திரைப்படம் உணர்த்துகிறது..