
‘சாந்தி’ என்று பெயர் வைத்தால் அது உண்மையில் அமைதியாகிவிடுமா? கூடங்குளம் முதல் ஸ்டர்லைட் வரை, ‘தேசிய நலன்’ என்ற பெயரில் தமிழ்நாடு எப்படியெல்லாம் ஒரு சோதனை நிலமாக மாற்றப்பட்டது என்பதை தமிழர்கள் மறக்கவில்லை. இன்று அதே வரிசையில், அணுசக்தித் துறையை தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், இந்தியாவின் வளர்ச்சிக்கான சட்டமாக அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டமாக இருக்கிறது.
மோடி அரசு பதவியேற்ற பின்னர், விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி, கனிமங்கள், வங்கி, காப்பீடு என நாட்டின் முக்கிய பொதுத்துறைகள் ஒன்றன் பின் ஒன்றாக தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா விற்பனை, எல்ஐசி பங்குகள் விற்பனை, பாரத் பெட்ரோலியம் விற்பனை முயற்சி போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் “அரசு அல்ல, கார்ப்பரேட்டுகள் தான் நாட்டை நடத்த வேண்டும்” என்ற அரசியல் தத்துவம் பிஜேபிக்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தற்போது அந்த வரிசையில் அணுசக்தித் துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அணுசக்தி உற்பத்தியை 2047க்குள் 100 ஜிகாவாட் ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறு பகுதி பொதுத்துறை மூலமும், மீதமுள்ள பெரிய பகுதி தனியாரின் கைகளுக்கும் தாரைவார்க்கப்பட உள்ளது. இதற்காகவே ‘Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India’ (SHANTI) சுருக்கமாக ‘சாந்தி’ என்ற ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த ‘சாந்தி’ தமிழ்நாட்டுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, புதிய அபாயங்களையே கொண்டு வருகிறது.
கூடங்குளம், ஸ்டர்லைட்: தமிழ்நாடு ஏற்கனவே கொடுத்த விலை

அணுசக்தி என்பது தமிழ்நாட்டுக்கு ஒரு ‘புதிய’ விடயம் அல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள், மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், கைது, வழக்குகள்—இவை எல்லாம் இன்னும் தமிழர்களின் நினைவில் பசுமையாக இருக்கின்றன. அதேபோல், தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர் கொல்லப்பட்டார்கள். “வளர்ச்சி” என்ற பெயரில், தமிழ் மக்கள் தங்கள் உயிரையே விலையாக கொடுத்த வரலாறு இது.
இப்போது அதே அரசியல் தர்க்கத்தின் அடுத்த கட்டமாக, ‘சாந்தி’ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்வது என்ற பெயரில், அபாயத்தை சுமப்பது தமிழ்நாடு; லாபத்தை அனுபவிப்பது டெல்லியும் கார்ப்பரேட்டுகளுமா? என்ற கேள்வி மீண்டும் முன் நிற்கிறது.
‘சாந்தி’ சட்டம்: கார்ப்பரேட் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு அல்ல
இன்றுவரை நடைமுறையில் இருந்த சட்டப்படி, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அதனை இயக்கும் நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த விபத்துக்குக் காரணம் உபகரணங்களை வழங்கிய நிறுவனம் என்றால், இயக்கும் நிறுவனம் அந்த சப்ளையரிடமிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். இதுதான் உலக நடைமுறை. இதுதான் குறைந்தபட்ச மனிதாபிமானம்.
ஆனால் புதிய ‘சாந்தி’ சட்டம், இந்த சப்ளையர் பொறுப்பு என்ற அம்சத்தை நீக்குகிறது. அதாவது, வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனம் தரமற்ற உபகரணங்களை வழங்கி விபத்து ஏற்பட்டாலும், அவர்கள் சட்டபூர்வமாக தப்பித்துவிடலாம்.
விபத்து நடந்தால்—
– பொறுப்பு யாருக்கு?
– இழப்பீடு யாருக்கு?
– பாதிக்கப்படுவது யார்?
பதில் ஒன்றே: தமிழ்நாட்டு மக்கள்.

போபால் விஷவாயு பேரழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். ஆனால் அந்த பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனம், அதன் அதிகாரிகள் யாரும் உண்மையான தண்டனை பெற்றார்களா? என்றால் இதுவரை இல்லை. இந்தியாவின் வரலாறே சொல்லுகிறது: கார்ப்பரேட் குற்றங்களுக்கு தண்டனை இல்லை; மக்களுக்கு மட்டும் துன்பம். அதையே அணுசக்தி போன்ற மிக ஆபத்தான துறையிலும் நடைமுறைப்படுத்துகிறது ‘சாந்தி’ சட்டம்.
அதானி, வெளிநாட்டு நிறுவனங்கள்: யாருக்கு இந்த சட்டம்?
‘சாந்தி’ சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மாதங்களுக்குள்ளேயே அதானி குழுமம் அணுசக்தித் துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள்—எங்கும் விரிந்திருக்கும் அதானி பேரரசு, இப்போது அணுசக்தி என்ற மிக ஆபத்தான துறையிலும் கால்பதிக்கிறது. உடனடியாக அணுசக்தி உபகரணங்கள் இறக்குமதிக்கு சுங்கவரி விலக்கு, வெளிநாட்டு முதலீட்டுக்கு 49% அனுமதி என எல்லாம் வேகவேகமாக நடக்கிறது.

அணுசக்தி என்பது சாதாரண மின் திட்டம் அல்ல. அது: கதிர்வீச்சு அபாயம், கடல் வள அழிவு , விவசாய நில மாசு, மீனவர்கள் வாழ்வாதார பாதிப்பு, அடுத்த தலைமுறையின் உடல், மரபணு பாதிப்பு போன்ற மிகமோசமான பல தலைமுறைகளை அழிக்கும் திட்டம். அப்படியிருக்கும்போது ஏற்கனவே கூடங்குளம், கல்பாக்கம் என இரண்டு அணு உலைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது, இப்படியொரு சட்டம் என்பது நிச்சயம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய கேடாகத்தான் இருக்கும். ஆனால் இதைபற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட்களுக்கு சாதகமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது. சுருங்கச்சொன்னால்:
முடிவுகளை எடுப்பது டெல்லி.
லாபத்தை எடுத்துக்கொள்வது கார்ப்பரேட்.
விலையை செலுத்துவது தமிழ்நாடு.
இதுதான் இன்று நடக்கும் நவீன-காலனிய அரசியல்.
இது மின்சாரம் பற்றிய விவாதம் அல்ல; இனத்தின் எதிர்காலம் பற்றிய போராட்டம்.
‘சாந்தி’ சட்டம் என்பது ஒரு தொழில்நுட்ப சட்டம் மட்டும் அல்ல. இது ஒரு அரசியல் அறிவிப்பு:

“இந்தியாவின் வளர்ச்சிக்காக சில மாநிலங்கள் தியாகம் செய்யலாம்” என்று பிஜேபியின் இல.கணேசன் சொன்னதை தமிழர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. அந்த “சில மாநிலங்களில்” எப்போதும் முதலில் நிற்பது தமிழ்நாடு தான். கூடங்குளம் முதல் ஸ்டர்லைட் வரை, நெய்வேலி முதல் எண்ணூர் வரை—தமிழ்நாடு தான் இந்திய பார்ப்பனியத்திற்கு சோதனைக் களம்.
ஆகவே இது “மின்சாரம் வேண்டும்/வேண்டாம்” என்ற விவாதம் அல்ல. இது “ஒரு இனத்தின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் கார்ப்பரேட் லாபத்துக்காக அடமானமா?” என்ற அடிப்படை அரசியல் கேள்வி. ஆகவே ‘அமைதி’ (சாந்தி) என்ற போலி முகமூடியுடன் வரும் இந்த சட்டத்தை, தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான சட்டமாக அடையாளம் கண்டு, அரசியலாகவும், மக்களிடையிலும் எதிர்ப்பை கட்டமைப்பதே இன்றைய தேவை.