நெய்தல் நில ‘பழங்குடிகள்’
கரையில் இருந்து பார்க்கும் பொழுது கடல் தடைகள் அற்ற ஒரு நீர்ப்பெருவெளி தான். அலைவாய் கரையில் கால் நனைத்துக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்கும் வேற்று நிலத்து மக்களாகிய நமக்கு கடல் மகிழ்ச்சி உணர்வைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி உணர்வு என்பது கடலின் பிரம்மாண்டம் ஏற்படுத்தும் பிரமிப்பு மற்றும் அச்ச உணர்வின் கிளர்ச்சிதான்.
உண்மையில் கடல் ஒரு வேட்டை களம். நீங்கள் கடல் புக வேண்டும் என்றால் வேட்டைக் களத்தில் நிற்கும் விழிப்புநிலை வேண்டும். அது கடல் சார்ந்த மக்களாக இருக்க கூடிய மீனவச் சமூக மக்களிடம் இருக்கிறது. பெரும் கடலைப் பற்றிய பாரம்பரிய அறிவும், ஒரு வேட்டை சமூகத்திற்கான விழிப்பு நிலையும்தான் அவர்களை ஆண்டாண்டு காலமாக நெய்தல் நிலத்தில் வாழவைத்து வருகிறது. சங்க இலக்கியம் நெய்தல் நில மக்களை பரதவர் என்றே பொதுவாக குறிக்கிறது. ஆனால் நவீன அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் நெய்தல் நில மக்களை நாம் மீனவர், மீனவச் சமூகம், கடலர், கடலோடிகள், மீன் தொழிலாளர் (Fish worker) என்று பொதுவாக அடையாளப்படுத்துகிறோம். இந்த அடையாள அரசியல் அவர்களுக்கு உண்மையில் நன்மை தந்ததா..? என்ற கேள்வியின் பின்புலத்தில் தான் எங்களை “கடல் பழங்குடிகள்” என்று அறிவியுங்கள் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது.
தமிழர்கள் தங்களின் பாரம்பரிய திணை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் நிலங்களில் வாழ்ந்தவர்கள். நவீன அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் தங்கள் திணை ஒழுக்கம் கலைந்து அனைத்து நிலங்களிலும் வாழும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுதும் கூட நாம் நெய்தல் நில மக்களின் சமூக பண்பாட்டை பற்றியோ அவர்களின் வாழ்வியலைப் பற்றியோ ஏதும் அறியாதவர்களாக தான் உள்ளோம். உண்மையில் மீனவ மக்களின் சமூக பண்பாட்டு அமைப்பு மற்றும் தற்சார்பு நிலை அவர்களை நெய்தல் நிலம் சாராத மற்ற பொது சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தி வைத்துள்ளது. பொது சமூகமோ சந்தை உறவை தவிர வேறு எந்த வகையிலும் அவர்களோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாதா சமூகமாக ஒதுங்கி நிற்கிறது. சுனாமி, கஜா புயல், ஒக்கி புயல் போன்ற பேரிடர் நேரங்களில் ஏற்படும் ஊடக வெளிச்சத்தில் மட்டுமே அவர்களை பார்த்து உச்சு கொட்டிக்கொண்டு இருக்கிறோம். அந்த நேரங்களில் நம்மோடு சேர்ந்து அரசும் அதையே செய்கிறது. நெய்தல் நில மக்களை பற்றி பெரியளவிலான பதிவுகள் கூட இல்லாமல் இருப்பது தமிழ் அறிவு தளத்தில் உள்ள பற்றாக்குறை தான். நெய்தல்நில மக்கள் சார்ந்த பல பதிவுகள், ஆவணங்கள், கதைகள், நாவல்கள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவறறை பிற மக்களின் வெளிக்கு கொண்டு வரும் முயற்சிகள் முக்கியமானவை.
கடல் பழங்குடிகள் என்னும் கோரிக்கை இன்று நேற்று உருவான கோரிக்கை அல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘கடலோர மக்கள் சங்கம்’ என்ற அமைப்பின் தொடக்க காலக்கட்ட கோரிக்கைகளில் ஒன்று அது. இந்த அமைப்பு கடல் பழங்குடிகளாக அறிவிக்க கோரும் தங்கள் கோரிக்கையை மண்டல் ஆணையத்திடம் முன்வைத்துள்ளது. மண்டல் ஆணையமும் அதனை ஏற்று தன்னுடைய பரிந்துரையில் 13.37(1): “பரம்பரைத் தொழில் செய்யும் சமுதாயங்களில் சில பிரிவினரான மீனவர், பஞ்ஜராஸ், பன்ஸ்போராஸ், காத்வாஸ் முதலானோர் இன்றும் நாட்டின் சில பகுதிகளில் தீண்டாமை என்னும் இழிவை அனுபவித்து வருகின்றனர். இப்பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இந்த ஆணையம் சேர்த்துள்ளது. அப்பிரிவினரை பட்டியல் வகுப்பினர் அல்லது பழங்குடி வகுப்பினர் பட்டியலில் சேர்க்க அரசு கவனம் செலுத்த வேண்டும்”. என்று மீனவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கூறியுள்ளது.
பழங்குடிகள் என்னும் சொல் மலைகளில் வாழும் மக்களைக் குறிப்பதாக தான் பொது சமூகத்தின் புத்தியில் உள்ளது. இந்திய ஒன்றிய அரசின் தேசிய பழங்குடியினர் ஆணையம் 1999 ஆம் ஆண்டு யார் பழங்குடியினர் என்பதற்கான ஐந்து வரையறைகளை நிர்ணயித்துள்ளது.
- பழமையான பண்புகள் இருப்பதற்கான அறிகுறிகள்.
- தனித்துவமான பண்பாடு.
- பூகோள ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலை.
- பிற சமூகங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் உள்ள கூச்சம் அல்லது தயக்கம்.
- சமூகத்தில் பின் தங்கிய நிலை.
இந்த கூறுகளில் பெரும்பான்மை தமிழ் மீனவச் சமூகத்திற்கும் பொருந்துகிறது.
மீனவர்களுக்கு என்று தொன்மம் இருக்கிறது. உலகின் முதல் தொழிலான வேட்டை தொழிலை இன்று வரை மீனவர்கள் செய்துவருகிறார்கள். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளான வலை உள்ளிட்ட பொருட்களை பொதுவில் வைத்துக்கொள்வது, தங்களுக்கான தனித்துவமான மீனவ பஞ்சாயத்து அமைப்புக்கள் வைத்துக்கொள்வது, தனி நபர் பெயரில் பட்டா இல்லாமல் ஊர் பெயரிலோ கோவில் பெயரிலோ பட்டா வைத்துக்கொள்வது என்று தனித்த பண்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும் பாரம்பரியமாக தங்கள் தொழில் சார்ந்த இடத்தை ஒட்டியே தங்களுடைய வாழ்விடத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு பொது சொல்லை தங்களுடைய பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார கூறுகளின் அடிப்படையில் உருவாக்கி கொள்கிறார்கள். தங்கள் பண்பாட்டு அடையாளங்களை காக்கவும் அல்லது தங்களுடைய எண்ணிக்கை பெரும்பான்மையை நிறுவவும்தான் பொதுவாக அடையாள சொல் அரசியல் உருவாகிறது. அப்படிதான் ‘மீனவர்’ என்ற சொல்லும் ‘மீன் தொழிலாளர்’ என்ற சொல்லும் உருவாகியுள்ளது.
தற்போதைய சூழலில் மூன்று வகையான மீனவர்கள் உள்ளனர். அதாவது தங்களுடைய உடலையும், கடலைப் பற்றிய மரபுவழி அறிவையும் பயன்படுத்தி மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் முதல் வகை. இரண்டாவது வகை மீன்வர்கள், வேறு திணை நிலங்களில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் பிழைப்புக்காக வந்த தொழில்முறை மீனவர்கள். மூன்றாவது பெரும் முதலீடுகளை கொட்டுதல், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்று தமிழ்நாட்டின் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரத்துடிக்கும் பெரும் முதலாளிகள். மீனவர்கள் என்று சொல்லும் பொழுது இவர்கள் அனைவரும் அதற்குள் வந்துவிடுகிறார்கள்.
அதேபோல மீன் தொழிலாளர் என்ற வரையறைக்குள் மீன்பிடி தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வணிகத்தில் ஈடுபடும் மீன்களை வெட்டி பாகம் பிரிப்பவர், அதை சந்தை படுத்துபவர் என்று இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தொழிலாளர்களும் சேர்ந்து விடுகின்றனர். இதில் கடல் புகுந்து மீன்பிடிப்பதை தவிர மற்ற எதுவும் பாரம்பரிய தொழில்கள் அல்ல. இவைகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
இந்த இரண்டு சொல்லாடல்களாலும் இத்தனை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் பாரம்பரிய மீனவர்கள் தான். நூற்றாண்டுகளாக கடலை மட்டுமே நம்பி வாழும் அவர்கள் இன்றும் தங்கள் உடலை பயன்படுத்தி கட்டு மரத்திலோ, பாரம்பரிய படகுகளிலோ சென்று மட்டுமே மீன்பிடித்து தங்கள் வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். இவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இந்திய அளவில் கூட இல்லை. அதனால்தான் மீனவர்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை ஒன்றிய அரசால் எடுக்க முடிகிறது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் (மீனவச் சமூகத்திலிருந்து) முன்னாள் அமைச்சர் திரு ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தான். இந்த நிலையில்தான் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளது.
இந்தியாவிற்கு என்று இலட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கிய 25.32 இலட்சம் ச.கி.மீ கடல் பரப்பு உள்ளது. இதில் கடலோர மாநில அரசுகள் வெறும் 12 கடல் மைல் (21.6 கி.மீ) மீது மட்டுமே ஆளுகை செலுத்த முடியும். அதாவது நம் மீனவர்கள் இந்த 21.6 கி.மீ பகுதிகளில் தான் மீன்பிடி தொழிலை செய்ய முடியும். மீதமுள்ள கடல் பரப்பு முழுவதும் ஒன்றிய அரசின் இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொழிலுரிமை எல்லை வெறும் 5.4 கி.மீ தான். இதுவும் ஒழுங்காக பின்பற்றப்படுவதில்லை.
தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரை பகுதிகளை கொண்டது. 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு 1076 கி.மீ நீள கடற்கரையையும், 41,412 ச.கி.மீ கண்டத்திட்டையும், 1.9 இலட்சம் ச.கி.மீ பிரத்தியேக பொருளாதார மண்டலத்தையும்(Exclusive Economic Zone) கொண்டுள்ளது. இங்கு உள்ள சுமார் 608 மீனவ கிராமங்களில் உள்ள கடல் மீனவர்களின் மக்கள் தொகை 10.48 இலட்சம். இதில் அரசு கணக்கின்படி மீன்பிடி விசைப்படகுகளின் எண்ணிக்கை 5,806 மற்றும் பாரம்பரிய மீனவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்படகுகள் 41,652 ஆகும். அதிலும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் எண்ணிக்கை 36,645. விசைப்படகு மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடி தொழிலை செய்ய அனுமதிக்காமல் இவர்கள் அத்தனை பேரும் நம் கடற்பரப்பின் வெறும் 21.6 கி.மீ பகுதிகளில் தான் மீன்பிடி தொழிலை செய்ய வேண்டும் என்பது தான் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை தினம் தினம் சிதைத்து கொண்டிருக்கிறது.
எந்தவித நவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் கன்னியாகுமரியில் இருந்து 2000 கி.மீ.க்கு அப்பால் உள்ள டீகோ கார்சியா மற்றும் சீசெல்சு பகுதிகளுக்கு சென்று சூரையும், சுறா மீனையும் பிடித்து வருகிறார்கள் தூத்தூர் விசைப்படகு மீனவர்கள். கடலை பற்றிய மரபுசார் அறிவு கொண்ட இவர்களுக்கு தான் ஆழ்கடல் மீன்பிடிக்கும் திறமை இல்லை என்று திட்டமிட்ட பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இந்த பிரச்சாரங்களுக்கு பின்னணியில் கடற்கரைப் பகுதிகளில் முதலீடு செய்யும் பெரும் முதலாளிகள் உள்ளனர்.
தமிழ்நாட்டின் கடல் பொருள் ஏற்றுமதி 2018-19 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 5591.49 கோடிக்கு நடந்துள்ளது. தமிழ்நாட்டின் கடல் மீன் உற்பத்தி 5.21 இலட்சம் டன். பெரும் முதலீடுகள் குவியும்போது நிலத்திலும், காடுகளில் இருந்தும் பூர்வகுடி மக்களை வெளியேற்றுவது போலவே தங்கள் தொழில் சார்ந்த வாழ்விடமான கடற்கரையில் இருந்து கடல்சார் மக்களை பிடிங்கி எறியும் நோக்கத்தோடு தான் சாகர் மாலா போன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் தான் மீனவர்களை கடல் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு மீனவர் என்ற பொது சொல் யாரையெல்லாம் உள்ளடக்கியது என்பதை முன்னரே விவாதித்துள்ளோம். மீன் தொழிலாளர் எனும் சொல் பாரம்பரிய மீனவர்களை பின்னுக்கு தள்ளி தொழில் முறை மீனவர்களை முதன்மைபடுத்துகிறது. ஆக கடல் பழங்குடிகள் என்ற சொல் மீனவச் சமூகத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பாரம்பரிய மீனவர்களை குறிக்கும் வகையில் கையாளப்பட வேண்டும். தமிழ் நாட்டில் பரவர், முக்குவர், பட்டினவர், மரைக்காயர், மீனவர், நுளையர், அரையர், கடையர், கரையர், வலையர், உமணர், சுண்ணாம்புப் பரவர், மரக்கலம் கட்டுவோர் போன்ற பாரம்பரிய கடல் சார் மக்கள் இருக்கிறார்கள். இதில் உமணர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலைச் செய்யக்கூடியவர்கள் அல்ல காலம் காலமாக உப்பு உற்பத்தி செய்யும் பாரம்பரிய தொழிலைச் செய்யக்கூடியவர்கள். இவர்களை பற்றிய முறையான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் கடல் பழங்குடிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்விடங்களையும் தொழிலையும் உறுதிபடுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தபட வேண்டும். அவர்களுக்கு என்று தனியாக மீனவர் வங்கிகள் உருவாக்கபட வேண்டும்.
தமிழ்நாடு அரசு இதுவரை கைம்பெண், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் போன்ற சமூகம் மற்றும் பண்பாட்டு அரசியல் முக்கியத்துவம் உள்ள சொற்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடல் பழங்குடிகள் என்னும் சொல் அதி முக்கியத்துவம் வாய்ந்த சொல்லாடல். கடற்கரைச் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் சொல்லும்,
“கடலோடிகளல்லா மீனவர் உளர்; மீனவரல்லாக் கடலோடிகளும் உளர்” என்னும் கூற்றை கருத்தில் கொண்டு கையாளப்பட வேண்டிய அரசியல் சொல் தான் கடல் பழங்குடிகள்.
தொல்காப்பியம் ஐந்திணைகளில் பொருள்வயின் பிரிவு (பொருள்தேட தலைவன் செல்வதால் ஏற்படும் பிரிவு) தொடர்பான திணைகளாக சொல்லப்படுபவை பாலை, முல்லை, நெய்தல். இதில் பாலை, முல்லைத் தலைவன் காலதாமதமாயினும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. ஏனெனில் இவை நிலவழி சார்ந்த பிரிவுகள். ஆனால் கடல்வழிப்பிரிவாக அமையும் நெய்தலில் தலைவன் வருவான் என்பது நம்பிக்கை நிறைந்த நிலையிலேயே அமையும். இந்தத் தன்மையை சங்க இலக்கிய நெய்தல் பாடல்களில் பரவலாக காணமுடிவதாக ஆய்வாளர் திரு.ஆ.திருநாகலிங்கம் தனது ஆய்வில் தெரிவிக்கிறார் (மீனவர் சமுதாய நாட்டுப்புறப்பாடல்கள்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்). உயிருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படக்கூடியதாக நெய்தல் திணை பிரிவு இருப்பது இன்றளவும் தொடரும் நிலை.
இந்நிலத்தின் மூத்தகுடிகளாகவும், நம் கடற்கரையின் பாதுகாவலர்களாகவும் உள்ள தமிழ் மீனவர்களுக்குரிய சமூகநீதி பாதுகாப்பு உடனே அளிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மோசமான வெளியுறவுக் கொள்கையால் அதிகம் கொலை செய்யப்பட்ட மக்களும் நம் தமிழ் மீனவர்கள். பொருளாதாரத் திட்டங்களால் தற்போது கடும் நெருக்கடியை நோக்கி தள்ளப்படுகிறார்கள். தமிழினத்தின் அடையாளமாகவும், தமிழ் மக்களுக்கு ஊட்டமிக்க கடலுணவை எளிய விலையில் வழங்கும் தன்னலமில்லா நெய்தல் மக்களின் உரிமைக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும். மீனவ மக்களோடு அரசியல்ரீதியாக முற்போக்கு இயக்கங்கள் செயல்படும் பொழுதெல்லாம் கடுமையான அடக்குமுறை நிகழ்கிறது. மீனவ மக்கள் தம் உரிமைகளுக்காக ஒன்றுகூடும் பொழுது அவர்களின் சனநாயக கோரிக்கைகள் மறுக்கப்பட்டு கடுமையான அடக்குமுறைகள் ஏவப்படுவதை கூடன்குள போராட்டம் முதல் ஒக்கி புயலுக்கான போராட்டம் வரை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. இப்போராட்டங்களில் பங்கெடுத்ததற்கான வழக்குகள் கன்னியாக்குமரியின் இரணியலிலும், குழித்துறையிலும் இன்றும் நடந்து வருகிறது. இப்படியாக தனிமைப்படுத்தப்படும் இம்மக்களின் சனநாயகக் கோரிக்கைகளுக்காக தமிழினத்தின் குரல் வலுவாக எழ வேண்டும்.
References
- பழங்குடியினர் பட்டியலும் மீனவர்களும்- லிங்கன் வழக்கறிஞர்.
- வறீதையா கான்ஸ்தந்தின் கட்டுரைகள்.
- மீன்வளம் கொள்கை விளக்க குறிப்பு 2020-2021, தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை.