ஆர்.எஸ்.எஸ்.சின் சேவாபாரதிக்கு இடமளிக்கும் திமுக அரசு

ஆர்.எஸ்.எஸ்.சின் சேவாபாரதிக்கு இடமளிக்கும் திமுக அரசு

கொரொனோ சேவை எனும் பெயரில் நுழையும் காவி பயங்கரவாதம்

சேவாபாரதி திருப்பூரில் புதிய கோவிட் கேர் மையத்தை அமைத்தது. இந்த மையத்தை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்கள் “பாரத மாதா” படத்திற்கு பூஜை செய்துள்ளனர்.

இக்கட்டுரையின் முதல் பகுதி, ‘சேவா பாரதி எனும் ஆர்.எஸ்.எஸ்சின் வலைப்பின்னல்‘ என்ற தலைப்பில் வெளியாகிவுள்ளது.

மூன்று முறை சுதந்திர இந்திய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட  இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் தனது வலைப்பின்னலை விரிவாக்குவதற்கு பல ரகசிய அரசியல் அமைப்புகளையும், சேவை அமைப்புகளையும் உருவாக்கி கடந்த நூறு ஆண்டுகளில் ஆழமாக வேர்விட்டு பரவி நிற்கின்றது. பயங்கரவாத செயல்களுக்கு தனி அமைப்புகளை உருவாக்கியது போல மக்களிடத்தில் பிரிவினைவாதத்தை வளர்த்தெடுப்பதற்காக பல என்.ஜி.ஓ எனும் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி செயல்பட்டு வருகின்றது. இதை ஆர்.எஸ்.எஸ்ஸின் கோல்வால்கர் “சேவை புரிவதன் மூலமே சனாதன இந்து பாரதத்தை அமைத்திட முடியும்” என்கிறார். இதற்கான ஆக்டோபஸாக இந்துத்துவ அமைப்புகள் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வலைப்பின்னலில் மிகமுக்கிய கண்ணியான சேவாபாரதி அமைப்பின் விழா ஒன்றிலேயே திமுகவின் அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினரும் பங்கேற்று விளக்கேற்றி சிறப்பித்திருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸின் தொண்டு பிரிவில் பிரதான அமைப்பாக இயங்கி வருவது தான் சேவா பாரதி. இது, 1989ம் ஆண்டு பாலசாகெப் தியோராவால் நிறுவப்படுகிறது. ஆர்.எஸ்.எஸின் தொடர் தடைகளையடுத்து வெகுமக்கள் தொண்டு அமைப்பாக தன்னை உருமாற்றிக்கொள்ளவே சேவா பாரதி தொடங்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது. “தொண்டு அமைப்பு” என்ற போர்வையில் சேவா பாரதி இன்று இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மிக விரிவாகவும் வலுவாகவும் வளர்ந்துள்ளது. “வெகுமக்களுக்கான தொண்டு செய்கிறோம்” என்ற போர்வையில் சர்வதேச அளவில் மிக எளிமையாக நிதி திரட்ட முடிவதுடன் அரசுகளின் கண்காணிப்புகளில் இருந்து மறைந்து இந்துத்துவ கருத்துக்களையும் விதைக்க முடிகிறது.

இந்த சேவா பாரதி அமைப்பிற்கு தான் கடந்த மாதம் ட்விட்டர் ரூ.18 கோடி வழங்கியது.கடந்த மே மாதம் ட்விட்டர் நிறுவனர் ஜாக் டார்சி சேவா பாரதியின் அமெரிக்க கிளை நிறுவனமான “சேவா இன்டர்நேஷனல்”க்கு ரூ.18 கோடி கொரோனா தொற்று நிவாரண பணிக்கான நிதியளிப்பதாக அறிவித்திருந்தார். இதனால், இந்தியா மற்றும் சர்வதேச மட்டத்தில் சனநாயகவாதிகளின் எதிர்ப்பை ட்விட்டர் நிறுவனம் எதிர்கொண்டது. சேவா இன்டர்நேஷனல் அமெரிக்காவில் மேற்கொள்ளும் இந்துத்துவ பிரச்சாரம் மற்றும் அதன் தாய் கழகமான சேவா பாரதியின் இந்திய செயல்பாடுகள் குறித்தும் மே17 குரல் கட்டுரை வெளியானது. அக்கட்டுரையை வாசிக்க. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் திரட்டப்படும் நிதியை கொண்டு இந்தியாவில் ஆர்.எஸ்.எஸின் சேவா பாரதி “தொண்டு நிறுவனம்” என்ற போர்வையில் சிறுபான்மை மத வெறுப்பையும், சனாதன இந்துத்துவ சாதிய கருத்தையும் வளர்த்து வருவதை அக்கட்டுரையில் விரிவாக வெளியானது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பழங்குடியின சிறுமிகளை “கடத்தி” இரகசியமாக குஜராத்தில் வைத்து சனாதன இந்துத்துவ முறை, பெண்ணடிமை தனம் என்று தீவிர இந்துத்துவ கருத்துக்களை திணிப்பது பற்றிய செய்தியும் அதில் அடங்கும்.

சேவாபாரதி அமைப்பு இந்த கொரோனா காலத்தில் மோடி அரசின் சலுகைகளை  மிக அதிகமாக பெற்ற அமைப்பு. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இயங்குவதற்கு நேரடியாக மோடி அரசின் உதவியையும், உத்தரவையும் பெற்றிருக்கிறது. ஆர்.எஸ்.எஸின் இந்த சேவா பாரதி தொண்டு அமைப்பின் மூலமாக தான் பாஜக மோடி அரசு தனது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நிவாரண பணி செய்திட ஒன்றிய அரசு மாநில அரசுகளை புறம்தள்ளி தொண்டு நிறுவனங்கள் மூலமாக செய்திட முடிவெடுத்தது. இந்த திட்டத்தை முன்னிருந்து செயல்படுத்தியவர் திட்டக்குழு நிதி ஆயோகின் தலைவர் அமிதாப் காந்த். இத்திட்டத்தின் வாயிலாக ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற சேவா பாரதி மற்றும் அதற்கு தொடர்புடைய 736 சங்பரிவார தொண்டு அமைப்புகளுக்கு அரசின் உதவித்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணிகள்  ஒப்படைக்கப்பட்டன. இந்த இந்துத்துவ அமைப்புகள் அரசு பேரிடர் நிவாரண நிதி, ஒன்றிய அரசு உணவு தானிய சேமிப்பு கிடங்கில் இருந்து உணவு தானியங்களையும்  பெற்றுக்கொண்டன. இதன் மூலம் மக்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் பொறுப்பினை சேவாபாரதி கைப்பற்றியது.

சேவாபாரதி மக்களுக்கு உணவளிப்பதற்கான நிதி மற்றும் உணவு தானியங்களை அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டது. உணவு தானியங்கள் தேசிய உணவுக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டன. இப்படி தயாரித்த உணவு வழங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டர்களையே சேவாபாரதி பயன்படுத்தியது. இப்பணியை, கொரொனா காலத்தில்ஆர்.எஸ்.எஸ் மக்கள் சேவை புரிந்ததாக பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இதுமட்டுமல்லாமல், சேவாபாரதி உள்ளிட்ட நிறுவனங்களுக்காக,  இந்திய பெருநிறுவனங்களிடம் இருந்து “பெருநிறுவன சமூக கடமை” (CSR) தொகையான லாபத்தில் 2%த்தை பெற்றுக்கொள்ள கொள்கை முடிவு மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட நிதியை வைத்துக்கொண்டே பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளைச் செய்வதாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், இவை எதற்கும் இதுவரை கொடுக்கப்பட்ட/வாங்கப்பட்ட நிதியின் கணக்கு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 2021 மே 7ம் தேதியன்று ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஒன்றியம் முழுவதும் “ஆயுஷ்-64 மற்றும் கபசுர குடிநீர்” விநியோகிக்க போவதாக அறிவித்தது. இந்திய ஒன்றியம் முழுவதும் விநியோகிக்கும் திட்டத்தின் முதன்மை பொறுப்பு சேவா பாரதிக்கு வழங்கியது. இத்திட்டம் குறித்தான மேலதிக தகவல்கள் எதுவும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. இத்திட்டத்தின் அடிப்படையில்  மருந்துகளை சேவாபாரதிக்கு மோடி அரசு நேரடியாக அனுப்பியது. சேவாபாரதி இயங்கும் மாநிலங்களின் வழியாக இம்மருந்துகள் கொடுக்கப்படாமல் நேரடி விநியோகம் நடந்ததை கேரளா அரசு மட்டும் கண்டித்தது. மேலும், சேவாபாரதிக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் அறிவித்தது. கேரள மாநில நிர்வாகம் சேவாபாரதியோடு பிற அரசு கட்டமைப்புகள் ஒத்துழைப்பதை தடுத்தது. சேவா பாரதியின் செயல்பட்டுகளை கேரளாவில் அனுமதிக்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் நிவாரணங்களை மாநில அரசிடம் வழங்கினால் அவற்றை மாநில அரசு துறை வழியாக அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கிட முடியுமென்று கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய மோடி அரசு தனது மக்கள் நலத்திட்டங்களை தனது கட்சி கட்டமைப்பை கொண்டு நேரடியாக மக்களிடம் சேர்ப்பதோடு, அக்கட்டமைப்புகள் வலுப்பெற்று வளர்வதற்கான நிதி ஆதாரங்களையும் அமைத்து கொடுத்திட கொரோனா பெருந்தொற்றை பயன்படுத்தியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதன் காரணமாக, மாநில அரசுகள் ஓரம்கட்டப்பட்டு இந்துத்துவ பரப்புரைகள் செய்யப்படுவதும் தெளிவாகின்றது.

கடந்த 2020இல் மதுரை – திண்டுக்கல் பகுதியில் குறிப்பாக சிங்கம்புணரி அருகே உள்ள  கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பெயரில் இசுலாமியர்கள் கொரொனோ நோயை பரப்புகிறார்கள் எனும் பொய் பிரச்சாரம் மேற்கொண்டதை மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தியது. இது, பின்னர் நக்கீரன் இதழில் செய்தியானது. திராவிட கழக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதை அறிக்கை மூலம் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கொரொனோ நெருக்கடியினை பயன்படுத்திக்கொண்டு இந்துத்துவ அமைப்புகளையும், இந்து மதவெறியையும் பரப்பிட ஆர்.எஸ்.எஸ்க்கு வாய்ப்பினை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு கேரளா அரசு மட்டுமே இதுவரை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படி இயங்குவதன் மூலமாக இந்திய அளவிலான தனது அடிமட்ட கட்டமைப்பினை ஆர்.எஸ்.எஸ் வலிமையாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், இவ்வாறாக இந்திய அளவிலான கட்டமைப்புடன் மாநில வாழ் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நிராகரிக்கும் வழிமுறையை சூழ்ச்சிகரமாக சேவாபாரதி வாயிலாக ஒன்றிய அரசு செயல்படுத்தி உள்ளது. 2021 மே முதல்வாரத்தில் பொறுப்பேற்ற தமிழ்நாட்டின் திமுக அரசு, கொரொனோ பெருந்தொற்று காலத்தில் செயல்படும் சமூக சேவை அமைப்புகள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் சேவாபாரதியும் இடம்பெற்றிருந்தது!

இச்சுழலில் தான் மோடியின் இந்துத்துவ அரசு தனது அரசின் மக்கள் நலப்பணிகளை ஆர்.எஸ்.எஸின் சேவா பாரதிக்கு வழங்கி மாநில அரசின் மக்கள் நலத்துறைக்கு மாற்றாக வளர்த்து வருகிறது. இந்த காவி ஊடுருவலை தெளிவாக உணர்ந்த கேரள அரசு சேவா பாரதிக்கு மக்களை சந்தித்து நிவாரணம் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு அனுமதி மறுத்து வருகிறது. அரசு சுகாதார துறையிடம் உள்ள மக்கள் தகவல்களை பகிர மறுத்துவிட்டது. தமிழ்நாடு அரசும் கேரளாவின் நிலைப்பாட்டை பின்பற்றி தமிழ்நாட்டில் காவி ஊடுருவலை தடுத்திடும் என்று எதிர்பார்த்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்.சின் சேவா பாரதி அமைப்பு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளின்றி செயல்பட திமுக அரசு அனுமதித்து வருகிறது. திமுக அரசின் இந்த செயல் வன்மையான கண்டனத்திற்குரியதாகிறது.

சேவா பாரதி அனுமதிக்கப்பட்டால் தமிழ் நாட்டின் மக்கள் நலவாரிய துறை, நியாய விலை “ரேசன்” கடைகள், ஆரம்ப சுகாதார துறை கட்டமைப்புகளை சிதைப்பதோடு மட்டுமல்லாமல் அரசு துறைகள் முற்றிலும் காவி மயமாகிட வழிவகுத்திடும். இதனால், மத சிறுபாண்மையினர் மற்றும் இந்துத்துவ அரசியலுக்கு எதிரானவர்கள் புறக்கணிக்கப்படும் அவலமும் ஏற்படும்.

இந்நிலையில் பெரியாரியல் கருத்தியலோடு இயங்குகிறோம் என்று சொல்லிக்கொண்ட திமுகவின் அமைச்சர்களே சேவாபாராதி அமைப்பின் நிகழ்வில் பங்கேற்றது பற்றி இதுவரை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் எவ்வித எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சேவாபாரதி இயங்கி வருகிறது என்பதை இந்நிகழ்ச்சிகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இதுபற்றி மே பதினேழு இயக்கம் உட்பட முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சிகள்  தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. பல முற்போக்கு அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி இந்த நிவாரணப்பணிகளில் சேவாபாரதி இயங்க திமுக அரசு அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் மாநில இறையாண்மையை ஓரங்கட்டும் மோடி அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு இடமளித்திருப்பது மட்டுமல்லாமல், மதவெறி பரப்பும் கும்பல்களுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது அம்பலமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »