வெல்லட்டும் தமிழ்நாடு! வீழட்டும் பாஜக கூட்டணி! என்ற முழக்கத்துடன் கடந்த ஏப்ரல் 10, 2026 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளரான தோழர் அப்துல் ரகுமான் அவர்களை ஆதரித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் தொகுப்பு:
அன்பானவர்களே! இந்த 2026 தேர்தல் நிறைய விடயத்திலிருந்து மாறுபட்ட தேர்தல். இவ்வளவு நாள் வந்து தமிழ்நாட்டிற்கு எந்த பெரிய ஆபத்தும் வந்ததில்லை. ஆனால் இன்றைக்கு டெல்லியிலிருந்து ஒரு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அது என்னவெனில்: பாரதிய ஜனதா கட்சி கூட்டணி என்பது தமிழ்நாட்டை மூன்று நான்கு மாநிலமாக உடைக்க போறேன் என்கிறான், தமிழர்களுடைய கல்வி நிதியை முழுவதுமாக நிறுத்துவேன் என்கிறான், பள்ளிக்கூடங்கள் நடக்கக்கூடாது என்பதற்கான நிதியை நிறுத்தி வைத்து அனுப்ப மறுப்பேன் என்கிறான், அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி திட்டங்களை எல்லாம் தடுத்து வைப்பேன் என்கிறான், இங்கே தமிழ்நாட்டினுடைய நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்தை நான் கொண்டுவர விடமாட்டான் என்றெல்லாம் சொல்கின்ற பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை எதிர்த்து நாம் போரிட்டு கொண்டிருக்கின்றோம்.
அந்த கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்புவதற்காகத்தான் தோழர் அப்துல் ரகுமான் அவர்கள் இங்கே வெற்றி வேட்பாளராக வந்திருக்கிறார்கள். இவர் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அத்தனை இடங்களிலும் மக்களுக்கான போராட்டங்களிலே குரல் கொடுத்தவர், போராட்ட களத்தில் நின்றவர். அடக்கு முறையை எதிர்கொண்டவர். அவரை பெருவாக்குகள் அளித்து நீங்கள் எதிர்க்கட்சியினர் கட்டுத்தொகை கூட பெற முடியாத வகையிலே, எதிர்க்கட்சியை தோற்கடித்து நமது வெற்றி வேட்பாளர் அப்துல் ரகுமான் அவர்களை சட்டமன்ற அவைக்கு அனுப்ப வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
என்னெனில் இதுவரைக்கும் நடந்த தேர்தலும் தற்போது 2026 தேர்தல் நடக்கிறது என்பது போர். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழ்நாட்டை காப்பதற்கான போராட்டத்தையும் போரையும் செய்கின்றோம். நாம் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் காப்பதற்கான போராட்டத்தை செய்கின்றோம். எல்லா இடத்திலும் நீங்கள் பாருங்கள் மக்களே! நம் இளைஞர்களுக்கு இன்றைக்கு அரசாங்க வேலை கிடைக்கிறது இல்லை. ஒன்றிய அரசாங்கத்தில் இரண்டரை லட்சம் வேலை இருக்கிறது. இந்த இடத்திலெல்லாம் தமிழ் பசங்களுக்கு வேலை கொடுக்காமல் செய்கிறது பாரதிய ஜனதா கட்சி. வங்கியில் போய் பாருங்கள். ரயில்வேயில் போய் பாருங்கள். வருமான வரித்துறை அலுவலகத்தில் பாருங்கள், ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகத்தில் அனைத்திலும் சென்று பாருங்கள். அங்கு தமிழ் இளைஞர்கள் வேலையில் இல்லை. விழுப்புரம், திண்டிவனம் என எல்லா இடத்திலும் இந்திக்காரர் தான் அதிகாரியாக உட்கார வைத்துள்ளான். இதற்குதான் பாஜக காரன் இந்தியை திணிக்கிறான். இந்த இந்தியை நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அதனால்தான் மே 17 இயக்கம் இந்தியை எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.
இதற்காகதான் சென்ற மாதம் (மார்ச் 2026) இந்திக்கு எதிரான போராட்டத்தை நடத்தி, எங்கள் அமைப்பினுடைய பொறுப்பாளர் ’சிவா திலீபன்’ அவர்கள் ரயிலின் முன்னே பாய்ந்து இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! என்று உயிர் கொடுத்திருக்கிறார். நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை, எனினும் மக்களுக்காக போராட்ட களங்களில் வேலை செய்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு போர் களத்திலிருந்து நாங்கள் வந்திருக்கின்றோம்.
பாஜக காரன் சொல்றான்: இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை என கேட்கிறான். இன்னொரு மொழியை கற்றுக் கொள்வதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் ஏன் அவன் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அவன் என் மொழியை கற்றுக்கொண்டு வரட்டும். அவன்தானே இங்கு வேலை செய்ய வருகிறான். நாம் தானே இங்கே வேலை கொடுக்கிறோம்.
ஆனால் பாருங்கள்: நமக்கு இருக்கக்கூடிய எல்லா ஒன்றிய அரசினுடைய வேலைகளும் நம் இளைஞனுக்கு கிடைக்கிறது இல்லை. என்எல்சியில் இருக்கிறதா? சேலத்தில் இருக்கக்கூடிய இரும்பு உருக்காலையில் இருக்கிறதா? ரயில்வே தொழிற்சாலையில் இருக்கிறதா? ஐசிஎஃப்-இல்இருக்கிறதா? எச்ஏஎல் இருக்கிறதா? திருச்சியில் இருக்கக்கூடிய பொன்மலையில் இருக்கிறதா? எந்த இடத்திலேயும் கிடையாது. நம் இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கிடையாது. இப்படி வஞ்சிக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியை அந்த கூட்டணியை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி, தமிழ்நாட்டை காக்கக்கூடிய வகையிலே நமது தோழர் அப்துல் ரகுமான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலே நம்முடைய வளர்ச்சி எல்லாம் முடக்கக்கூடிய வகையிலே பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவும் சேர்ந்து இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சொந்த கட்சியை காப்பாற்ற முடியாத அதிமுகவினுடைய தலைவர் எடப்பாடி அவர்கள், எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். சொந்த கட்சியை அதிமுகவை நான்கு கட்சியாக உடைத்தது பாரதிய ஜனதா கட்சி. தன் கட்சியை உடைத்த ஒரு துரோகியோடு, ஒரு எதிரியோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சி எப்படி தமிழ்நாட்டை பாதுகாக்கும் என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்! இதை நீங்கள் உங்கள் ஊரில் சொல்ல வேண்டும். உங்கள் நண்பர்களிடத்தில் சொல்ல வேண்டும். உறவினர்களிடத்திலே சொல்ல வேண்டும். நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்களோ அங்கே இந்த உண்மையை எடுத்து சொல்ல வேண்டும்.
தன் சொந்த கட்சியை கூட காப்பாற்ற வக்கில்லாத ஒரு கட்சி தலைவர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? தமிழர்களை எப்படி காப்பாற்றுவார்? தமிழ் மொழியை எப்படி காப்பாற்றுவார் என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
தாய்மார்களே! தோழர் அப்துல் ரகுமான் அவர்கள் எதை அடையாளமாக இங்கே முன்வைத்து தேர்தலுக்கு வந்திருக்கிறார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டை சாதியாக மதமாக கூறு போட்டு, நமக்கு வரக்கூடிய நிதியை எல்லாம் தடுத்து வைத்திருக்கக்கூடியது பாரதிய ஜனதா கட்சி. அந்த சதிகளை எல்லாம் உடைக்கக்கூடிய வகையிலே ஆற்றல் மிகுந்த செயல்வீரராக களப்பணியாற்றி வருகின்ற தோழர், அவர் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் நிற்கக்கூடிய தோழர் அப்துல் ரகுமான் அவர்கள் இங்கே வெற்றி வேட்பாளராக களம் காண்கின்றார்கள். அவரை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்குள் அனுப்புவது என்பது பண்ருட்டி மக்களினுடைய கடமை மட்டுமல்ல, அது பண்ருட்டி மக்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கக்கூடிய செய்தியாக அமைய வேண்டும். அவர் பண்ருட்டிக்கு மட்டும் வேட்பாளர் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய வேட்பாளராக இங்கே இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை பானை சின்னத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். அந்த வெற்றிக்கு பிறகு நன்றி கூட்டத்திலே உங்களை நாங்கள் நிச்சயம் சந்திப்போம்.