நீட் மறுதேர்வுக்கு தள்ளப்படும் மாணவர்கள் – அம்பலமான அடுத்த நீட் மோசடி

தரம், தகுதி என்று மோடி அரசு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட நீட் தேர்வில் நடந்த ஊழல் வெளிப்பட்டு நீட் எழுதிய மாணவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சுமார் 22 லட்சம் பேர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள் இனி மீண்டும் படித்து தேர்வு எழுதும் நிலைக்கு NTA-வில் நடந்த ஊழல் தள்ளியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் நீட் தேர்வு இந்த ஆண்டு மே 3, 2026-ல் நடந்தது. தமிழ்நாட்டிலிருந்து 1.4லட்சம் பேர் தேர்வு எழுதினர். மற்ற மாநிலங்களில் எழுதியுள்ளவர்களையும் சேர்த்து மொத்தமாக நீட் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை சுமார் 22 லட்சமாகும். ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில்தான், தேர்வு ரத்து செய்யப்பட்டதாக NTA அறிவித்த செய்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ராஜஸ்தானில் நீட் தேர்வில் உள்ள வினாக்கள் கையால் எழுதப்பட்ட பிரதிதிகளாக சில வாட்சப் குழுக்களில பகிரப்பட்டது தெரிய வந்துள்ளது. அதிலிருந்த 281 கேள்விகள் கொண்ட 135 கேள்விகள் நீட் வினாத்தாளில் கேட்கப்பட்டவையாகவே இருந்தன. நீட் தேர்வில் மொத்தமாகக் கேட்கப்படும் 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் கசிந்திருக்கின்றன. உயிரியலில் 90 கேள்விகளும், வேதியியலில் 45 கேள்விகளும் நீட் வினாத்தாளில் அப்படியே இருந்துள்ளன. இந்தப் பிரதி சுமார் 5 லட்சம் அளவில் விலைபேசப்பட்டு விற்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மட்டுமல்ல உத்தரகாண்ட், மகாராஷ்டிரா டேராடூன் வரை இந்தக் கசிவு வலைப்பின்னல் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவு NTA – வில் வேலை செய்யும் ஊழியர்களால் அல்லது அதிகாரிகளால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்க முடியும். நீட் தேர்வு எழுதும் அறைக்கு செல்வதற்கு முன் மாணவர்களை கடுமையான சோதனைக்குள்ளாக்கும் NTA முகமை வினாத்தாளை அலட்சியமாக ஊழலுக்கு கசிய விட்டுள்ளது. தாலியை அகற்றுவது, தலைவிரி கோலமாக்குவது, உடைகளைக் கிழிப்பது போன்ற கடுமையான அத்துமீறல்கள் செய்து தேர்வறைக்கு அனுப்பியதெல்லாம் நிகழ்ந்தது. உள்ளாடையைக் கூட கழட்டி விட்டு தேர்வெழுத வைத்த நெருக்கடியையும் மாணவிகள் சந்தித்தார்கள்.

இவ்வளவு கடுமையான சோதனை முறைகளைப் பின்பற்றிய NTA வின்,  நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு என்பது இது முதன்முறையல்ல. பீகார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடிக்கடி வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

2024-ல் ஹரியானாவில் ஒரே மையத்தில் எழுதிய 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது சந்தேகிக்கத்திற்கு உள்ளானது. அதை அடுத்து அந்த மையத்தில் எழுதிய 1563 பேருக்கு மட்டும் மறுதேர்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதன் விசாரணையில் பீகாரில் நீட் மாஃபியா வினாத்தாளை 35 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த முறைகேடு குறித்து மே 17 இயக்கக் குரலில் 2024-ல் வெளியான கட்டுரை:

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகளே இவை யாவும். வெளியில் தெரிய வராத முறைகேடுகளில் மருத்துவ சீட்டு பெற்றவர்கள் இன்றும் எவ்வளவு என்பது கொள்ளையர்களுக்கே வெளிச்சம். இதனால்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இத்தேர்வினால் தான் மருத்துவப் படிப்புக்கு முழு தகுதி வாய்ந்த அனிதா உள்ளிட்ட 23 மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். மருத்துவம் படிக்க முழு தகுதி வாய்ந்த நாம் இழந்த மாணவச் செல்வங்கள் குறித்து மே 17 இயக்கக் குரலில் வெளிவந்த கட்டுரை :

நீட் தேர்வு மட்டுமல்ல ஒவ்வொரு போட்டித் தேர்வுகளிலும் மோடி அரசின் கொள்ளைகள் நீள்கிறது. போட்டித் தேர்வு மூலமான கொள்ளைகள் குறித்து 2021-ல் மே 17 இயக்கக் குரலில் வெளிவந்த கட்டுரை:

தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான இடங்களைப் பெறுவதைக் குறைப்பதற்காக NTA அதிகாரிகள் அனைத்து விதமான தொல்லைகளையும் செய்கிறார்கள். தேர்வு எழுதுவதற்கு முன்பே மாணவர்களை மனமுடையச் செய்வதற்காக கடுமையான சோதனைகளை செய்கின்றனர். தேர்வறைக்கு செல்லும் முன்பே மாணவர்களை மனமுடையச் செய்து தேர்வினில் முழுமையான கவனம் செலுத்த விடாது செய்கின்றனர். இதன் மூலம் தென்னிந்திய மாணவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவத்தில் இடம் பெறும் சதவீதத்தைக் குறைப்பதுதான் பாஜக- ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கமாக இருக்கிறது.

அனைத்து வகையான முறைகேடுகளையும் ஒழிப்பதற்காகவே நீட் என்று பாஜக முன்வைத்தது. ஆனால் நடைமுறையில், நீட் அனைத்து வகையான முறைகேடுகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. நீட் தேர்வை நடத்தும் பாஜகவின் தேசிய தேர்வு முகமை (NTA) என்பது ஒரு மாஃபியா என்பதையே பல முறைகேடுகளில் வெளிப்பட்டுள்ளதைப் போல இந்த முறைகேட்டிலும் வெளிப்பட்டு, மறு தேர்வுக்கு மாணவர்களைத் தள்ளியிருக்கிறது.

மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களையும் அலைச்சலுக்குத் தள்ளி வேதனைப்பட வைக்கிறார்கள். மாணவர்கள் உடன் வரும் பெற்றோர்களுக்கு முறையான தங்கும் வசதிகள் செய்து கொடுக்காமல் மாசடைந்த அறைகளை ஒதுக்குகிறார்கள். பல கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள பல ஊர்களில் இருந்தும்   தேர்வு மையத்திற்கு பெரும்பாடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் தேர்வு எழுதி வரும் வரை கடுமையான வெய்யிலில் பெற்றோர்கள் காத்திருக்கும் நிலைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வளவு தொல்லைகளும் கடந்து தாள் தமிழ்நாட்டில் தேர்வு எழுத வேண்டிய நிலையிருக்கும் போது, சில வடமாநில மாணவர்களுக்கு முறைகேடுகள் செய்து எளிதாக மருத்துவம் படிக்கும் NTA-வின் ஊழல் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

நீட் முதற்கொண்ட நுழைவுத் தேர்வு என்னும் திணிப்புகளுக்கு பின்னால் நடக்கும் ஊழல் எப்போதாவது வெளிவந்தால் தான் தெரியவருகிறது. இன்னும் இந்த வலைப்பின்னலுக்குள் இமாலய ஊழல்கள் பின்னிப் பிணைந்து நடக்கிறது. மக்களின் மன உளைச்சலை அறுவடை செய்து அரசியல் செய்யும் மோடி பாஜக ஆர்.எஸ்.எஸ் அரசின் மற்றுமொரு ஊழலே நீட் தேர்வு. மக்கள் போராட்டங்கள் வலிமையாகாமல் நீட் போன்ற கொள்ளைகள் ஒழிவது சாத்தியம் இல்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »