நீடிக்கும் அனிதாவின் நீட் ஒழிப்பு கனவு

நீட் கொள்ளையர்கள் கொலை செய்த  அனிதாவின் நினைவு நாள் இன்று. அரியலூர் மாவட்டத்தின் குழுமூரைச் சேர்ந்தவர் அனிதா. சாமானிய ஏழைக் குடும்பத்தில் பிறந்து மருத்துவராகும் கனவுடன் வாழ்ந்த பெண். கள்ளங்கபடமற்ற முகமும், மெலிதான புன்னகையும், மென்மையான பேச்சும் என என்றும் நம் மனதில் நீங்காது பதிந்து விட்ட அடையாளமே அனிதா. உரிய மருத்துவம் கிடைக்காமல் தன் கண்முன் இறந்த தாயின் மரணத்தைப் போல இனி எந்த மரணமும் நிகழக் கூடாது என இலட்சியத்துடன் படித்த மாணவி. 

தமிழ்நாட்டில் மருத்துவ சீட்டுத் தகுதிக்கான மதிப்பெண்ணை தாராளமாக பெற்றிருந்த மாணவி அனிதா. 1200 க்கு 1176 மதிப்பெண்கள். நாங்கள் நிர்ணயிப்பதே தகுதி என்ற மோடி அரசினால் 2016-ல் நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டது. அதனால் அனிதாவின் தகுதி புறக்கணிக்கப்பட்டது. கல்வி ஒன்றே குறிக்கோளை அடையும் வழி என்று படிப்பின் மீது கவனம் செலுத்திய அனிதாவிற்கு, ஒரு மாநிலம் வகுக்கும் கல்விக் கொள்கைகளையே புறக்கணிக்கும் மோடி அரசின் ஒற்றை அதிகார அரசியல் எல்லாம் எப்படி புரியும்? தகுதி, திறமை, தரம் அனைத்தும் எங்கிருந்தோ ஒரு ஆதிக்க கும்பலால் நிர்ணயிக்கப்படுவதா என்கிற கேள்வி எழ, அனிதாவின் போராட்டம் துவங்கியது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசிய பின்னும் கையறு நிலையே பரிசாகக் கிடைத்தது. உச்சநீதிமன்றப் படிகட்டுகளும் அனிதாவை கைவிட்டது. தரங்கெட்டவர்கள் ஆதிக்கத்தின் முன் இனி போராடும் சக்தி இல்லை என்று கருதியே தூக்குக் கயிறைத் தேடிக் கொண்டார் அனிதா.

அனிதாவிலிருந்து ஜெகதீசுவரன் வரை நாம் இழந்தது 23 மாணவர்களை அல்ல, 23 மருத்துவர்களை இழந்திருக்கிறோம். மாநில அரசு கல்விக் கொள்கையின்படி மருத்துவப் படிப்பிற்கு முழுத் தகுதி பெற்றவர்கள் இவர்கள். நீட் என்னும் பெருங் கொள்ளையின் வலைப்பின்னல் அரசியல் ஏதும் அறியாத அந்தப் பிள்ளைகளின் இலட்சியம் தகர்ந்து போனது. உயிரை மாய்த்துக் கொள்ளும் மன உளைச்சலுக்கு தள்ளியது.

மருத்துவ சேவை செய்வதற்காகவே கல்வி கற்று நம் மருத்துவக் கட்டமைப்பிற்கு வலு சேர்க்க எண்ணிய அனிதா முதற்கொண்ட 23 மாணவர்கள் எதனால் தற்கொலை செய்து கொண்டார்கள்? இந்திய ஒன்றிய பாஜக அரசும், அதிகார மட்டங்களும், பயிற்சி நிலையங்களும் இணைந்து நடத்தும் மெகா கொள்ளைக்கு பின்னால் பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகள் என்ன? 

இந்திய ஒன்றியத்தை யார் ஆட்சி செய்தாலும் மாநில அதிகாரத்தைப் பறிப்பது ஒன்றிய ஆட்சியாளர்களின் வழக்கமாகவே தொடர்கிறது. மருத்துவப் படிப்பையும் ஓர்மையாக்கும் நோக்கத்தின் கீழ் ‘அனைத்து இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு’ என்ற பெயரில் காங்கிரசே கொண்டு வந்தது. அனைத்து இந்திய மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு என்கிற பெயரில் மாநிலங்களுக்கான உரிமையைப் பறிக்க முதலில் விதை போட்டது காங்கிரஸ். உரிமையைப் பறித்து விட்டு இந்தத் தேர்வு தேவைப்படாத மாநிலங்களுக்கு விலக்கும் அளிக்கிறோம் என்கிற சலுகையும் தந்தது. இந்த சலுகையைத்தான் பாஜக ஆட்சிக்கு வந்ததும் துடைத்தெறிந்து விட்டது.  

காங்கிரஸ் கொண்டு வந்த ஒரே தேர்வை எதிர்த்து கிறித்துவ மருத்துவக் கல்லூரியும், 104 தனிநபர்களும், தமிழக அரசும் வழக்கு தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பானது, மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு இதற்கு அதிகாரம் கிடையாது என்பதாக இருந்தது. இந்த தீர்ப்பு வந்து மூன்று மாதத்திற்குள்ளாகவே பார்ப்பனர்களால் மறு சீராய்வு மனு போடப்படுகிறது.

 ‘நான் மட்டும் சர்வாதிகாரியாக இருந்தால் நமது நாட்டில் கீதையையும் மகாபாரதத்தையும் கட்டாயப் பாடம் ஆக்குவேன். குருகுல முறை தான் நமக்கு கல்வி கற்பிப்பதில் சிறந்தது அதை எல்லாம் நாம் விட்டுவிட்டோம்’ என்று கருத்தரங்குகளில் பேசிய அருண் தவே என்கிற நீதிபதியின் கீழ் 2016-ல் நீட் வழக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் அமர்வு இதனை விசாரித்தது.

வழக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அறிவிப்பாணை அனுப்பும் விதிகளை மீறி செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கப்படுகிறது. மார்ச் 16, 2016-ல் விவாதம் நடத்தப்படுகிறது. இதில் வழக்கைப் போட்ட கிறித்துவ கல்லூரி, 104 தனிநபர்கள், தமிழக அரசு என இவர்கள் யாரும் வராமலேயே வழக்கு நடக்கிறது. பிறகு நீட் நடத்தக்கூடாது என்ற 2013-ல் சொல்லிய வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று தீர்ப்பு சொல்கிறார்கள். ஏனென்றால் 2013 -ல் தீர்ப்பு சொன்ன மூன்று நீதிபதிகளும் கலந்து பேசி தீர்ப்பு சொன்னதாக தெரியவில்லை என்று காரணம் சொல்லி, அன்று அளித்த தீர்ப்பை  ஏப்ரல் 11, 2016-ல் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.

இதற்கடுத்து நடந்தது தான் நாடகத்தின் உச்சம். இந்திய அரசு, இந்திய மெடிக்கல் கவுன்சில், சிபிஎஸ்இ ஆகிய மூன்றும் எதிர் தரப்பாக நின்றது.  அதற்குள் தேர்வு நடத்திவிட முடியுமா என நீதிபதிகள் கேட்க, பாஜக அரசு அவர்களிடம், நாங்கள் நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்களை வெளியிட்டு விட்டோம். நீட் தேர்வு நடத்தத் தயாராக இருக்கிறோம் என்றது. இதில் கவனிக்கத்தக்க விடயம், 2013 இல் நீட் நடத்தக்கூடாது என்ற தீர்ப்பு வந்த பிறகு பாடத்திட்டங்களை  தயாரித்து வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பா என்பது தெரியவில்லை.

அதைப் போலவே இந்திய மெடிக்கல் கவுன்சிலும் மே 1-ஆம் தேதி தேர்வு நடத்த தயாராக இருக்கிறோம் என்றது. ஏப்ரல் 28, 2016-ல் தான் இந்த விவாதமே  நடக்கிறது. ஆனால்  ஹால் டிக்கெட்டே கொடுத்து விட்டோம் என்று சொல்கிறார்கள். அதற்குள் அனைவருக்கும் போய் சேருமா என்று நீதிபதிகள் கேட்க, மெடிக்கல் கவுன்சிலும் அவர்களிடம்,  நீங்கள் அனுமதி கொடுத்தால் 2-ம் கட்டமாக ஜூலை மாதம் நடத்திக் கொள்கிறோம் என்றது. CBSE – யும் தேர்வு நடத்துகிறோம் என்றது. மூன்று தரப்பும்   சரி என்று சொன்னவுடன் ஏப்ரல் 28,2016 அன்று நடந்த வழக்கின் படி, மே 1, 2016-யில் தேர்வு நடத்தலாம் என தீர்ப்பு சொல்லப்பட்டு, தேர்வும் நடைபெறுகிறது. எள் என்றால் எண்ணெயாக அனைத்தும் முன் ஆயத்தப் பணிகளாக நடந்தேறியது. இனி நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையும் திணிக்கப்பட்டது.

பயிற்சி மையங்களின் அசுர வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டதே நீட் நுழைவுத் தேர்வு என்பது, அதன் வர்த்தகத்தை கணக்கிட்டாலே புரிந்து கொள்ளலாம். மாணவர்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 1 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை பெறப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். 2023-ல் 20 லட்சத்து 36 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு முடிவு வெளியான இந்த வருடத்தில் (2023), வெற்றிப் பெற்ற முதல் 50 மாணவர்களில், 38 பேரிடம் நடத்திய ஆய்வில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ளது. மேலும் அதில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் முதல் முயற்சியிலேயே தகுதி பெற்றுள்ளதும், அவர்களில் பெரும்பான்மையினர் சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளியில் பயின்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இந்த செய்தியின்படி, ஒவ்வொரு வருடமும் மருத்துவத் தேர்வு எழுதும் கிட்டத்தட்ட 20 லட்சம் மாணவர்களில் குறைந்தபட்சம் 15 லட்சம் மாணவர்களாவது நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில்வார்கள். ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் என்று கணக்கிட்டாலும் கூட மலைக்க வைக்கும் இமாலயத் தொகை இந்த மருத்துவ இடங்களுக்கான சந்தையில் பயிற்சி மையங்கள் மட்டுமே கொள்ளையடிப்பது தெரியும்.15 லட்சம் x 1 லட்சம் = 15 ஆயிரம் கோடி. இது ஒவ்வொரு ஆண்டும் கொள்ளையடிக்கும் குறைந்தபட்சத் தொகையே. இன்னமும் 2 அல்லது 3 முறை நீட்  தேர்வு எழுதுபவர்கள், 2லட்சம், 3 லட்சம் கட்டணம் கொடுத்து படிப்பவர்கள் எனும் போது மிரள வைக்கும் கொள்ளையைப் பயிற்சி நிலையங்கள் நடத்துகின்றன. இது பயிற்சி நிறுவனங்கள் மட்டும் நடத்தும் கொள்ளை. இன்னமும் மருத்துவ சந்தையில் கொள்ளையடிக்கும் தொகை எண்ணிப் பார்க்கவே முடியாத பல லட்சம் கோடிகள். ஒரு சேவைத் துறையை சந்தையாக்கி, கொள்ளையடிக்கும் கதவுகளைத் திறந்த பெருமை இந்திய ஒன்றிய அரசையே சாரும்.

இந்திய ஒன்றிய பாஜக அரசும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும், பயிற்சி நிறுவனங்களும் கைக்கோர்த்துக் கொண்டு வந்த நீட் தேர்வே அனிதாவைக் கொன்றது. அன்றிலிருந்து தமிழ்நாடு தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நீட் வேண்டாம் என இயற்றிய தீர்மானம் ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது. மோடி அரசு மதிக்கவில்லை.  ஆளுங்கட்சி, எதிர்கட்சி, ஜனநாயக அமைப்புகள், மக்கள் என அனைத்துத் தரப்பிலும் இன்று வரை போராட்டங்கள் தொடர்ந்தாலும் இந்த தேர்வு இன்னமும் நடைபெற்று கொண்டுதானிருக்கிறது. நீட் தேர்வைத் தடை செய்ய மாட்டேன் என்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆணவமும் தொடர்கிறது.

ஏற்கனவே நீட் மூலம் மாநிலங்களின் மருத்துவ கல்லூரிகளில் 15 விழுக்காடு இடங்களை பறித்துக்கொண்ட ஒன்றிய அரசு, தற்போது 100 விழுக்காடு இடங்களையும் பறித்துக்கொள்ளத் துடிக்கிறது. இதுவரை மாநில அரசு நடத்தி வந்த 85 விழுக்காடு இடங்களுக்கான கலந்தாய்வையும் ஒன்றிய அரசே நடத்திக்கொள்ள தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே மருத்துவப் படிப்பு படித்துவரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற தேர்வை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக மாநில உரிமைகளைப் பறிப்பதோடு, நம் மாணவர்களை நிம்மதியாக படிக்க விடாமலும் செய்கிறது.

காமராசர் முதல்வராக இருந்த காலத்தில் தனது முதல்வர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட சில மருத்துவ சீட்டு விண்ணப்பங்களை இரண்டே நிமிடத்தில் தேர்ந்தெடுத்தார். பெற்றோர் கையொப்பம் இடும் இடத்தில் கைநாட்டு போட்டிருந்த விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்து படிக்காத வீட்டுப் பிள்ளைகளும் படிக்கட்டுமே என்றாராம். ஆனால் இன்று நம் வீட்டுப் பிள்ளைகள் படித்து தகுதி பெற்றும் மருத்துவம் சேர்வதற்கு, நீட் வேண்டாம் என்கிற மசோதாவில்  ஒரு கையொப்பமிடுவதற்காக இந்த ஆளுநரை கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். பாமரர்களும் படித்து முன்னேற வேண்டும் என்கிற சிந்தனை தமிழகத்தின் ஆட்சி அமைப்பினில் வேரூன்றி வளர்ந்தது. அதை வேரோடு அறுக்கவே சனாதனவாதியான ஆர்.என்.ரவியை ஆளுநராக அனுப்பியிருக்கிறது மோடி அரசு.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 71. அரசுக் கல்லூரிகள் 38 உள்ளன. இதில் 10875 இடங்கள் உள்ளன. இந்தியாவின் வேறெங்கிலும் இல்லாத மருத்துவக் கட்டமைப்பை தமிழ்நாடு வளர்த்திருந்தும், தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையின்படி முடிவெடுக்க முடியவில்லை. அனிதா போன்று பறி போகும் உயிர்களையும் நம்மால் காக்க முடியவில்லை. ஜனநாயகத் தூண்கள் பெரும்பாலும் ஆளும் அரசிற்கு சேவகம் செய்பவைகளாக மாறியிருக்கும் சூழலில், உண்மையான ஜனநாயகத் தூண்களாக செயல்படும் மக்கள் அமைப்புகளே மக்களின் பக்கம் நின்று நியாயத்தைப் பேசுகின்றன.

நமது அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக தமிழக அரசு கொண்டு வந்த உணவுத் திட்டத்தைக் கூட கொச்சைப்படுத்தும் தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், சனாதன மூளைகள் திணித்த சிந்தனைகளை வரித்துக் கொண்ட அரசியல் பிழைப்புவாதிகளும் மருத்துவப் படிப்பு தான் உண்டா? வேறு படிப்பே இல்லையா? என்று நம் பிள்ளைகளின் இலட்சியக் கனவுகளை கொச்சைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைப் பற்றி அறியாதவர்கள், பொறாமை கொண்ட மனுவாதிகளின் கருத்துகள் இவை. மாநிலக் கல்விக் கொள்கை வகுத்து, தகுதியில் உலக நாடுகளுக்கு இணையான மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவர்களையும் தமிழ்நாடு வளர்த்திருக்கிறது. சமூகநீதிப் போராட்டங்களால் கட்டியமைத்த தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியில் நம் பிள்ளைகளுக்கு இடமில்லை என்றால் அதைக் கேட்டு இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா?

இந்த நீட் தேர்வினால் தொடர்ச்சியாக 23 மாணவர்களை இழந்திருக்கிறோம் அனிதாவை அன்று இழந்தோம். ஜெகதீசுவரனை இன்று இழந்தோம். நாளையும் யாரையும் இழக்கப் போகிறோமா? களம் காண்போம். நீட் என்னும் கொடிய தேர்வினை விரட்டுவோம். அந்நாளே அனிதாவிற்கு உண்மையாக நாம் செலுத்தும் நினைவஞ்சலியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »