அன்புதான் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் ’ஹபீபி’ திரைப்படம்

இசுலாமியர் குறித்து ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பத்திற்கு மாறாக, முற்றிலும் புதிய கோணத்தில் அவர்களின் வாழ்வு, காதல், ஏக்கம் ஆகியவற்றை உயிரோட்டமுடன் கண் முன் நிறுத்தும் உன்னத சினிமா ஹபீபி.

இயக்குனர் தோழர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி திரைப்படம் இதுவரையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், கறிக்கடை வைத்திருப்பவர்கள் போலவும், அல்லது நமக்கு சம்மந்தமே இல்லாத வெள்ளை நிறத்தில் காட்டி அவர்கள் எதோ நமக்கு அயலவர்கள் போலவே சொல்லிய திரைப்படங்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு நிற்கிறது. அவர்களும் நம்மவர்கள்தான் என்பதுடன் அவர்களது வாழ்க்கையை எளிய முறையில் பதிய செய்துவிட்டார் இயக்குநர்.

கடையநல்லூர் பகுதியில் மூன்று வெவ்வேறு காலங்களில் நிகழ்கிறது கதை. அந்தந்தக் காலத்தை பிரதிபலிக்கும் புற குறியீடுகள் படத்திற்கு உயிரூட்டியிருக்கின்றன. மரபான தரித்தொழில், ஆலைகளால் பாதிப்புறும் சூழல், வளைகுடா நாடுகளுக்குப் படையெடுக்கும் ஆண்கள், பள்ளிப் படிப்பின் போதே வளைகுடா கனவுகளோடு வளர்க்கப்படும் இளையோர் என உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சியை பின்னிறுத்தி ஓரழகிய காதல் கதையை படமாக்கியிருக்கிறார் மீரா கதிரவன்.

இயக்குநர் மீரா கதிரவன்

திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம் அருகே நடப்பது போல, நம் வாழ்க்கையில் எங்கோ பார்த்தது போலவே ஒரு உணர்வைக் கொடுக்கிறது. குறிப்பாக காதலை மிகவும் அழகாகவும் பக்குவமாகவும்  சொல்லும் விதம், காதலை நேசிக்கும் அனைவருக்கும் அவரவர் காதலை கண் முன் கொண்டு வரும் வகையில் பதியப்பட்டிருக்கிறது. மூன்று தலைமுறை காதல் அதாவது 1980களில் வெளிநாடு சென்றவர்கள் கேசட்டில் பேசுவதை கேட்டு மகிழும் காதல், பிறகு கடிதம் கொடுக்கும் காதல், அதன் பிறகு வாட்சப் வீடியோ (இணையவழி) காதல் என காதலை சொல்லிய விதம் அருமை. கிராம வாழ்வின் ஆரவாரங்களுக்கிடையில் நிகழும் காதல் காட்சிகள் சிறப்பாகவும் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டும் ஆவலைத் தருவதாகவும் படமாக்கப்பட்டிருக்கின்றன. (இதில் ‘ரூஹே ரூஹே’ பாடல் குறிப்படத்தக்கது.)

சில காலம் முன்பு வரை நெசவுத் தொழிலில் பாவு போடுவதற்காக நீண்ட தெருக்கள், திண்ணை கொண்ட வீடுகள், அளிப்பாய்ச்சிய வீடுகள் (கம்பி அளி கதவு) என்று இருந்த கடையநல்லூரில் இன்று நலிவுற்றுப் போயிருக்கும் கைத்தறி நெசவு தொழிலாளிகளின் வாழ்வியலைப் பற்றி மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். நெசவுத் தொழிலை உயிராக மதிக்கும் குடும்பங்களையும் கூட்டு குடும்பமாக வாழும் குடும்பத்தலைவனின் தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும், அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வாழ்வெனும் ஓடையில் கூழாங்கற்கள் போல் ஆற்றாத குளுமையை உள்ளிழுத்து ஒதுங்கிக் கிடக்கும் பெண்களை மையப்படுத்தும் திரைக்கதையை ஹபீபி திரைப்படத்தின் சிறப்பம்சமாகக் கூறலாம். பெண்கள் சிறந்த கல்வியுடனும், சுயமரியாதையுடனும், தனக்கு பிடித்ததை தைரியமாக பேசவும், முடிவெடுக்கவும், சமூகசிந்தனை கொண்டு செயலாற்ற வேண்டும் எனும் முற்போக்கு சிந்தனையையும் பேசுகிறது இப்படம். மிகச் சொற்பமான வாரத்தைகளையே பேசும் நிலோபரின் (கதாநாயகி) மௌனம், இறுதிக்காட்சியில் அவர் பேசும் அந்த இறுதி வசனத்திற்கு மேலும் முக்கியத்துவம் சேர்க்கிறது.

காதலியை சந்திக்க வரும் நாயகனை ஊரார் பார்த்துவிட, காதலியை ஊரார் தவறாக பேசக்கூடாது என நினைத்து தானே திருட்டு பழியை ஏற்று, புளியங்கொம்பு கசையடி வாங்குகிறார் நாயகன். அப்போது நாயகனை காப்பாற்ற வரும் கதாநாயகியின் தாயார் பேசும் வசனம் மிக அருமை. “அவன் ஆம்பிளடி…..தப்பே செய்துட்டு போனாலும் அவன் கால கவிழுட்டு வூட்டுக்கு போகலாம்… ஆனால் பொம்பளைகள ஊரைவிட்டு ஒதுக்கி மூலையில உக்கார வச்சுருவாங்க… நமக்கு நாலு செவரு வச்ச வூடுதான்டி ஒலகம்” என சொல்லி கதறும் காட்சி, பெண்கள் நிலை இன்னமும் சில குடும்பங்களில் பின்தங்கி இருப்பதைக் சுட்டிக்காட்டுகிறது.

படத்தின் இறுதியில் இதே பெண்ணை சந்திக்கும் நாயகனிடம் “நாலு சுவரு மட்டுமே வீடு/உலகம் இல்லை….” என அந்தப் பெண் கூறும் காட்சி பெண்ணியத்தின் கூர்மையான வெளிப்பாடு. தனியாக பல சங்கடங்கள், சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொண்டவரின் உணர்வு அந்த ஒரு வரியில் வெளிப்பட்டு விடுகிறது. குறிப்பாக பெண்கள் தாமாக முடிவெடுக்கும் நிலைக்கு முன்னேறியிருப்பதை சுயமரியாதை சிந்தனையோடு சொல்லி இருக்கிறார் இயக்குநர். (இஸ்லாமில் ’தலாக்’ என்பது ஆண்கள் கொடுக்கும் விவாகரத்து என்பது பலரும் அறிந்திருக்கும் சூழலில், பெண்களுக்கும் அதேபோல் ’குலா’ எனும் சட்டம்  இஸ்லாமில் இருக்கிறது என்பதை இத்திரைப்படத்தின் மூலமாகவே அறியமுடிகிறது.)

‘தமிழ்நாட்டில் இந்துக்களும் இசுலாமியர்களும் அண்ணன்-தம்பி உறவாகவும், நட்பாகவுமே இருக்கின்றனர். இங்கே மத வேறுபாடுகளை விதைக்கும் சூழ்ச்சிகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அன்புதான் அனைவருக்குமானது’ என்பதை அழகாக கூறியுள்ளது ஹபீபி திரைப்படம். எந்த ஒரு மனிதனும் ஒரு அநீதி நடக்கும் போது அதற்கான எதிர்ப்பு குரலை பதிவு செய்யாமலிப்பதும் குற்றம்தான் என இயக்குநர் சொல்லியிருப்பதற்கு மீண்டும் ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.

அண்மைய கால அவசர சினிமாக்களின் ஓடுதளங்களை நிகாரித்து தனக்கே உரிய பாணியில் உயிரோட்டமான திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் தோழர் மீரா கதிரவன். குடும்பத்துடன், குழந்தைகளுடன், நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் சென்று கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம் “ஹபீபி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »