
தூத்துக்குடியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய ஆவேச உரையின் தொகுப்பு. இதில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தூத்துக்குடியில் திறக்க திட்டமா? என தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பியும், மேலும் காவல்துறை செயல்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் உரிமைகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து உரையாற்றியுள்ளார்.
இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மண்டியிட வைத்த மண்- தூத்துக்குடி மண். இந்த மண்ணில் ஒரு குஜராத்துக்காரன் வந்து கம்பெனி நடத்தினால், அதை நடத்தவிட்டுப் பார்ப்பதற்கு இங்கே தூத்துக்குடி மக்கள் கோழைகள் அல்ல- அவர்கள் வீரம் தெரிந்தவர்கள். இந்த குஜராத் கம்பெனிக்காரனான ஸ்டெர்லைட் கம்பெனிக்காரன் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இதேபோல சுற்றுச்சூழல் விதிகளை மீறி, பலபேர் படுகொலையாவதற்கு காரணமாக இருந்த ஒரு நிறுவனம்.
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிறுவனத்தின் முதலாளியாக இருக்கக்கூடிய ’அகர்வால்’ இந்தியக் குடிமகனும் கிடையாது. அவர் இங்கிலாந்து நாட்டின் குடிமகனாக இருக்கக்கூடிய ’வேதாந்தா’ நிறுவனத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்ட ஸ்டெர்லைட்டிற்கு எதற்காக காவல்துறை மக்களை சுடும் வரை செல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு அந்நிய நாட்டு கம்பெனிக்காக மக்களை சுடும்வரை பார்ப்பதற்காக தமிழ்நாடு காவல்துறைக்கு நாங்கள் வரி கொடுத்து, அந்த வரியின் மூலமாக காவல்துறைக்கு சம்பளத்தை கொடுக்கவில்லை. ஒரு வெள்ளைக்காரனுடைய தேசத்தில் இருக்கக்கூடிய ஒரு கம்பெனி வளர்வதற்காக எங்கள் மண்ணை தாரை வார்க்க வேண்டும் என்கிற தேவை எங்களுக்கு இல்லை.
தமிழ்நாடு காவல் துறை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சம்பளம் வாங்குவது எங்களைப் போன்ற சாமானிய மக்களிடமிருந்து தானே ஒழிய, அகர்வாலிடம் வாங்கவில்லை. எப்போது ஸ்டெர்லைட்டுக்காக நாம் எதிர்த்துக் குரல் எழுப்புகிறோமோ, அதற்கான உரிமை அரசியல் சாசனத்திலேயே எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு இந்த ஆலை தேவையில்லை என்று சொல்கிறோம். அதற்காக 14 உயிர்களை கொடுத்திருக்கின்றோம்.
ஒரு கிரிமினல் குற்றவாளியாக இருக்கக்கூடிய இந்த நிறுவனத்தை இழுத்து மூடி இருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் தலைவனை கைது செய்திருக்க வேண்டும். அதை இந்த அரசு செய்யவில்லை, இந்த காவல்துறை செய்யவில்லை என்பதை குற்றம் சாட்டுகிறோம். ஒரு கிரிமினல் நிறுவனத்தை ஆதரிக்கக்கூடிய கிரிமினல் வேலையை காவல்துறையும் அரசும் செய்தால், அதை துணிந்து எதிர்த்து நிற்போம். 14 உயிர்கள் அல்ல, எத்தனை உயிர் போனாலும் எதிர்த்து நிற்போம். ஸ்டெர்லைட் ஆலையை விரட்டி அடிப்போம். பதினான்கு பேர் இறந்ததற்குப் பிறகும், நாங்கள்(மக்கள்) இந்த ஆலையை வரவேற்போமா? காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால், இங்கே கூட்டம் நடக்காதா? போராட்டம் நடக்காதா? காவல்துறையைக் கண்டு அஞ்சுகின்ற கூட்டமா இது? தூத்துக்குடி மக்களுடைய போராட்ட குணம் இதுவல்ல.
உங்கள் காவல் துறை எந்த பெயர், எந்த அதிகாரியின் உத்தரவும் இல்லாமல் தானே எடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் மக்கள் படுகொலையானார்கள் என்று அருணா ஜெகதீசன் (முன்னாள் நீதிபதி) அம்மையாருடைய அறிக்கை சொல்கிறது.

நான் இன்றைக்கும் கேட்கின்றேன். தூத்துக்குடி காவல் துறைக்கு துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு உத்தரவை யார் கொடுத்தார்கள்? யார் கொடுத்தார்கள்? நான் இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்வேன். காரணம் இருக்கிறது.
நான் ஐ.நா.வில் ஸ்டெர்லைட்டின் படுகொலை குறித்து பேசிவிட்டு வருகின்ற பொழுது, என்னை பெங்களூர் விமான நிலையத்திலே கைது செய்து, அதற்குப் பிறகு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த பொழுது, எனது தந்தையை காவல்துறை உயரதிகாரி சந்திக்கிறார். அப்போது “என்ன காரணத்திற்காக என் மகன் மீது இந்த வழக்கை போட்டீர்கள்?” என்று என் தந்தை கேட்டதற்கு, அன்றைக்கு சென்னையின் கமிஷனராக இருந்த ஏ. விஸ்வநாதன், “Nobody knows who gave the order for the firing” என்று காவல்துறை உயரதிகாரி, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு இந்த காவல்துறை அதிகாரிக்கு யார் உத்தரவு கொடுத்தார் என்று கூடத் தெரியாத நிலை. ஐ.நா. மன்றத்திலே உங்கள் மகன் எவ்வளவு துணிச்சலாக கேட்பதற்கு ”என்ன துணிச்சல் இருக்க முடியும்” என்று கேட்டது காவல்துறை அதிகாரி. இதுதான் காவல்துறை அதிகாரி வேலையா? இப்பொழுது கேட்கின்றோம்.
நான் அன்றைக்கு ஐ.நா. மனித உரிமை அவையில் கேட்டேன். “நீங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது? அந்த உத்தரவு எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வியை நான் கேட்டதற்காக என்னை சிறையில் அடைத்தீர்கள், சித்திரவதை செய்தீர்கள். இதோ நான் மீண்டும் நிற்கின்றேன். உங்கள் சித்திரவதைக்கும் சிறைக்கும் அஞ்சுபவன் அல்ல- நாங்கள். ஐயா வைக்கோவோடு களத்தில் நிற்கக்கூடிய எவனும் சிறைக்கும் வழக்குக்கும் அஞ்சுபவன் அல்ல. நான் கேட்ட கேள்வியை ”அருணா ஜெகதீசன் அறிக்கை” வெளிப்படையாக சொல்கிறது. இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்த உத்தரவும் தரவில்லை என்று.
ஆக, அந்த கம்பெனிக்காரனிடம் காசு வாங்கி, கையில் துப்பாக்கி இருக்கிறது, எடுத்து நீங்களே சுட்டிருக்கிறீர்கள். முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்று அன்றைய முதலமைச்சரான எடப்பாடி அவர்கள் பேசியிருக்கிறார். ஆக முதலமைச்சருக்குத் தெரியாது, அமைச்சருக்குத் தெரியாது, அரசியல் கட்சிகளுக்குத் தெரியாது, எதிர்க்கட்சிக்குத் தெரியாது, உயரதிகாரிகளுக்குத் தெரியாது. தூத்துக்குடி காவல்துறை தானே துப்பாக்கி எடுத்து இந்த மக்களை கோழிக் குஞ்சுகளைப் போல சுட்டுக் கொலை செய்கிறது என்றால், நீங்கள் எல்லாம் யார்? உங்களுக்கு அதிகாரம் எங்கிருந்து வருகிறது? துப்பாக்கி உங்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கலாம். பயிற்சிகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சுடுவதற்கும், அதை பயன்படுத்துவதற்கான உத்தரவு, அதற்கான அதிகாரம் உங்களிடத்தில் கிடையாது. ஒரு காவல்துறை தன்னிச்சையாக துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொள்வதற்கு, யாரையும் சுட்டுக் கொள்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.
அன்பானவர்களே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாம் வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம். ஒரு காவல்துறை காலனி காலத்திலே, வெள்ளையன் ஆட்சி காலத்திலே நம்மை எல்லாம் அடிமை செய்த காலத்திலே, துப்பாக்கி குண்டு ஏந்திய அந்த ரவையை பயன்படுத்தலாம். அன்றைக்கு நம்மை எல்லாம் அடிமையாகப் பார்த்தான். துப்பாக்கி சுட்டு கொலை செய்யலாம் என்றால், அந்த காவல்துறை வெள்ளைக்காரனுக்கு கூலி வேலை செய்தது. ஆனால் விடுதலை அடைந்ததற்குப் பின்பும் ஒரு காவல் துறைக்கு ஒரு துப்பாக்கி ரவை பொருத்திய, உயிரை பிடுங்கக்கூடிய ஒரு துப்பாக்கி எதற்கு? இந்த அரசு கொடுக்கிறது.
காவல் துறைக்கு எதற்கு துப்பாக்கி? முதலில் சொந்த குடிமக்களை சுட்டு கொலை செய்வதற்கு துப்பாக்கி எதற்கு? உலகத்தில் எந்த நாட்டிலும் கிடையாது. இன்றைக்கு ஐரோப்பா முழுவதும் போராட்டம் நடக்கிறது. அமெரிக்காவில் போராட்டம் நடக்கிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் காவல்துறைக்கு சொந்த மக்களை சுட்டுக் கொள்வதற்கு துப்பாக்கி கிடையாது. போராடுபவர்களிடத்திலே பேசுவதற்குதானே அதிகாரிகள் இருக்கிறார்கள். காவல்துறைக்கு வேலை என்ன இருக்கிறது? ஆனால் நீங்கள் துப்பாக்கி எடுத்து சுடுகிறீர்கள். நாங்கள் என்ன எதிரிகளா? எதிரி நாட்டை சார்ந்தவர்களா? பாகிஸ்தானை சார்ந்தவர்களா? யார் நாங்கள்? உங்களிடத்தில் போருக்கு வந்தோமா? ஆயுதம் தூக்கி வந்தோமா? அல்லது சண்டை செய்வதற்கு நாங்கள் பிரகடனம் செய்தோமா? எதுவும் இல்லை. எங்கள் மண்ணில் இந்த ஆலை வேண்டாம் என்று சொல்கிறோம். அதை சொல்வதற்கு முழு உரிமை எங்களுக்கு இருக்கிறது.

இது ஒரு அந்நிய நாட்டு நிறுவனத்தினுடைய நச்சு ஆலை (ஸ்டெர்லைட் ஆலை), வேதாந்தாவினுடைய இந்த ஆலை எதற்காக என் மண்ணில் என்று கேட்பதற்கு தூத்துக்குடி மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு காவல் துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. உங்களுக்கு என்ன அதிகாரம்? அரசியல் சாசனத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ, அதை கடைபிடிப்பது மட்டும்தான் தூத்துக்குடி காவல்துறையுடைய வேலை. அது இல்லாமல் ஒரு அந்நிய கம்பெனிக்காரனின் காலை கழுவுவதற்கு காவல்துறைக்கு வேலை இல்லை என அதிகாரிகளிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொழுது, நானும் என் மகளும் இங்கே தங்குவதற்கு ஒரு விடுதியில் கூட இடம் கிடைக்காத வகையிலே இந்த காவல்துறை தொந்தரவு செய்தது. நான் கேட்கிறேன்: உங்களுக்கு யார் படியளக்கிறார்? ஸ்டெர்லைட் கம்பெனிக்காரனா? இந்த கூட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று சொல்கிறார்கள். நேற்று வரைக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள். அரசியல் சாசனத்தை, சட்டரீதியான எங்களது உரிமையை பாதுகாப்பதற்குதான் காவல்துறை இருக்கிறது. அது இல்லாமல் ஒரு கம்பெனிக்காரனுக்கு, அதுவும் வெளிநாட்டு கம்பெனிக்காரனுக்கு, அதுவும் இங்கிலாந்து நாட்டு கம்பெனிக்காரனுக்காக கூலிவேலை செய்வதற்கு காவல்துறை இல்லை என்பதை நான் மீண்டும் இந்த முறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த கம்பெனி, ஸ்டெர்லைட் கம்பெனி மீண்டும் வருவதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான். அந்த முயற்சியிலே அவன் நீதிமன்ற உத்தரவை எல்லாம் பெற்றுக்கொண்டு வருவதாக ஒருவேளை அவன்(அகர்வால்) முடிவெடுத்து வந்தால், போராட்டம் தூத்துக்குடியில் மட்டும் மையம் கொள்ளாது. தமிழ்நாடு முழுவதும் போராட்ட களத்தில் இறங்கும். நீங்கள் வெறும் தூத்துக்குடியில் எஸ்.பி வைத்து இங்கே இருக்கிறவனை எல்லாம் மிரட்டுவது போல, தமிழ்நாடு முழுக்க மிரட்ட முடியாது. தூத்துக்குடியில் தான் உங்களுடைய நடவடிக்கை எல்லாம் இருக்கிறது. நாங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். எங்கள் தங்கை ஸ்னோலினை சுட்டு படுகொலை செய்த காவல் துறைக்கு எதிராக தமிழ்நாடு திரண்டு எழுந்து நிற்கும். எங்கள் தங்கையையும், தங்கையோடு சேர்ந்து 14 பேரையும் சுட்டு கொலை செய்த காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தோழர் கிட்டு சொன்னார்: குற்றப்பத்திரிகையிலே ஒரே ஒரு காவல்துறை அதிகாரியின் பெயர் மட்டும் தான் இருக்கிறது. சி.பி.ஐ-யுடைய குற்றப்பத்திரிகை என்று சொல்கிறார்கள். எவ்வளவு அதிர்சியாக இருக்கிறது! துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களே சொன்னதற்குப் பின்பும், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், திரும்பத் திரும்ப ஒரு கிரிமினல் காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்ற வேலையை இந்த ஆட்சியாளர்கள் ஏன் செய்கிறார்கள்? திரும்பவும் சுட்டு கொலை செய்ய வேண்டுமா? அவர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில் போய் மெடல் வாங்கியவர்களா? அவர்கள் கொலைகாரப் பயல்கள். கொலைகாரப் பயலுக்கு ஒரு அதிகாரியாக இருக்கிறார்கள் என்பதற்காக மரியாதை தர முடியாது. கொலைகாரன் கொலைகாரன் தான். அந்த கொலைகாரர்களைக் கைது செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
நான் இப்பொழுது பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைமைக்கு வேண்டுகோள் வைக்கின்றேன். இந்த காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்யுங்கள். கொலை குற்றத்தில் கைது செய்யுங்கள். சிறையில் அடையுங்கள். ஒரு அந்நிய நாட்டு கம்பெனிக்கு கைக்கூலி வேலை பார்த்த அதிகாரி தமிழ்நாடு காவல் துறைக்கு தேவையில்லை. தமிழ்நாடு காவல் துறைக்கு ஒரு கரையைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு அனுமதிக்காதீர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஆக அன்பான பெரியோர்களே, தாய்மார்களே, இந்த நிறுவனம் மறுபடியும் வராமல் இருக்க வேண்டும் என்று நாம் போராட வேண்டும். காரணம்: இந்த நிறுவனம் வந்தால் இந்த ஊரினுடைய மழை குறைந்து போகிறது. மழை குறைந்தால் விவசாயத்தினுடைய உற்பத்தி குறைகிறது. விவசாயத்தின் உற்பத்தி குறைந்தால் நம் கையினுடைய பொருளாதாரம் நம்மை விட்டு போகிறது. வறுமை வருகிறது. உடல்நலம் கேடு எழுகிறது. இந்த நிறுவனத்தினால் நமக்கு லாபமா சாபமா? என்றால் சாபம் தான் அதிகமாக இருக்கிறது. சாவுதான் அதிகமாக வருகிறது.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு, இந்த நிறுவனத்தினுடைய அந்த காம்பவுண்டுக்குள்ளேயே வாழாத ஒரு கம்பெனிக்காரன், லண்டனில் உட்கார்ந்து நம்ம மண்ணை நாசப்படுத்துவான், நம்முடைய காற்றை நாசப்படுத்துவான், நம் கடலை நாசப்படுத்துவான் என்றால், அவனை ஏன் நாம் அனுமதிக்க வேண்டும்? எதற்காக இத்தனை உயிரை நாம் பலி கொடுத்தோம்? அதற்கான விலை என்ன? இந்த நிறுவனத்தை மீண்டும் நாம் அனுமதிக்க கூடாது.
இவன் சொல்கிறான், “காப்பர் தேவை இருக்கிறது” என்று. காப்பர் வேண்டுமா? போய் குஜராத்தில் வை? உன் ஊர் குஜராத் தானே, கொண்டு போய் அங்கே வை. வைப்பியா? நான் மோடி சர்க்காரை பார்து கேட்கின்றேன். அங்கே போய் வை. உனக்கு சுதேசியில் காப்பர் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புக்காரன் கேட்டானா? இங்கே இருக்கும் ஸ்டெர்லைட் கம்பெனியை தூக்கி கொண்டு போய் உன் குஜராத்தில் வை. உத்தரப் பிரதேசத்தில் வைக்க விடுவானா என்று பார்ப்போம். மகாராஷ்டிராவில் உடைத்து அனுபினார்களே, அதே மாதிரி அந்த ஊர்காரன் உன்னை உடைத்து அனுப்புவான். தமிழன் அறவழியில் போராடுகின்றான். தன் உயிரை கொடுத்து போராடுகின்றான். ஆனால் குஜராத்தில், உத்தர பிரதேசத்தில் உன் உயிரை எடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியும். அதனால்தான் அங்கே செல்வதில்லை. எங்கள் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றாய்.
அன்பானவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நாம் கட்சி கடந்து, சாதி கடந்து, மதம் கடந்து ஸ்டெர்லைட்டை எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஸ்டெர்லைட்டின் நச்சு புகைக்கு ஜாதி தெரியாது, மதம் தெரியாது, கட்சி தெரியாது. அந்த வகையிலே இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதுதான் அந்த 14 ஈகியர்களுக்கு நாம் செய்கின்ற மரியாதை. இந்த மண்ணிலே உயிர் கொடுதார்களே அந்த ஈகியர்கள். நாம் உயிரோடு இருக்கின்றோம். தங்கை ஸ்னோலின் உயிரோடு இருந்திருந்தால் கல்லூரியை முடிதிருப்பார். ஒரு பட்டதாரியாக இருப்பார். இந்த மண்ணுக்கு தன்னுடைய பங்களிப்பை கொடுதிருப்பார். அப்படிப்பட்ட இளம் உயிர்களை எல்லாம் நாம் இழந்திருக்கின்றோம். இதற்கு மேலும் இந்த கும்பல் ஸ்டெர்லைட் வேண்டும் என்று வந்தால் நாம் ஒரு காலும் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால், அங்கே 14 உயிர்களை பலி கொடுதோமே, அவர்களுக்கு நாம் அவமானம் செய்வதாக மாறிவிடும். அந்த அவப்பெயர் நமக்கு வரலாற்றில் வரக்கூடாது. அதை போக்கின்ற வகையிலே இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை விரட்டி அடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும். எனக்கு பெரும் மகிழ்சியாக இருக்கிறது. ஏனென்றால் ஐயா வைக்கோ அவர்கள் இந்த போராட்டத்தை கையில் எடுதிருக்கிறார்கள். நிச்சயமாக இந்த போராட்டம் வெற்றி பெறும் என்கின்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மே 17 இயக்கம் இறுதிவரை தூத்துக்குடி மக்களோடும், இந்த போராட்ட களத்தில் உங்களோடு நிற்கும் என்று சொல்லி, வாய்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.