காசாவில் 20,000 பிஞ்சு குழந்தைகளைப் படுகொலை செய்த இசுரேல் – ஐ.நா அறிக்கை

ஒரு நாட்டின் எதிர்காலத்தை அல்லது ஒரு இனத்தின் எதிர்காலத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் குழந்தைகளை அழித்தால் போதும். அதைத்தான் இன்று காசாவில் இசுரேல் செய்து கொண்டிருக்கிறது. உலக வல்லரசுகள் இசுரேலின் இனப்படுகொலைக்கு அரசியல், இராணுவ, பொருளாதார பாதுகாப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

காசாவில் நடைபெறுவது ஒரு சாதாரண போர் அல்ல, அல்லது ஒரு நிலப்பரப்பை கைப்பற்றும் ஆக்கிரமிப்புப் போரும் அல்ல, இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை. குறிப்பாக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே அழிக்கும் நோக்கில் குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் வன்முறை.

இந்த உண்மையை இதுவரை பாலஸ்தீன மக்கள் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள், மனித உரிமை அமைப்புகள் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையமே  அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து படுகொலை செய்ததன் மூலம் இசுரேல் இனப்படுகொலையை செய்துள்ளதாக ஐ.நா. ஆணையம் அண்மையில் உறுதிப்படுத்தி உள்ளது.

கடந்த செவ்வாயன்று (23/6/2026) ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் (UN Independent International Commission of Inquiry) காசா குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக காசாவில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும், உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது அந்த அறிக்கை.

மேலும் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள குழந்தைகளை இசுரேல் திட்டமிட்டு குறிவைப்பதாக இந்த ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. காசாவில் இசுரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நிகரானவை என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

மேலும் ஐ.நா ஆணையத்தின் அறிக்கையில் உள்ள சில விவரங்கள்:

  • அக்டோபர் 7, 2023 முதல் தற்போது வரை இசுரேல் 20,000 குழந்தைகளைக் கொன்றுள்ளது. 44,000 பேரைக் காயப்படுத்தியுள்ளது.
  • பாலஸ்தீனியக் குழந்தைகள் கைது செய்யப்பட்டு, இசுரேல் நடத்தும் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை.
  • கடுமையான உடல் காயங்கள் மற்றும் உளவியல் சிக்கல்கள், பெற்றோரைப் பிரிந்து அனாதையாக்கப்படுதல், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், உணவு மற்றும் கல்வி பாதிப்பு, சுகாதாரத்தின் சீர்குலைவு போன்றவை குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை அழித்துவிட்டன. இது காசாவில் உள்ள குழந்தைகளை அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதிக்கும்.
  • இசுரேலியப் பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீனக் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்துள்ளன.

இவ்வாறு அந்த ஆணையத்தின் அறிக்கையில் மனதை நடுங்க செய்யும் சாட்சியங்கள் பல அடங்கியுள்ளன.

ஜெனீவாவில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிக்கை குறித்து மனித உரிமை வழக்கறிஞரும் ஆணையருமான கிறிஸ் சிடோட்டி பேசும்போது “பாலஸ்தீனியக் குழந்தைகள் மீதான வன்முறைக்கு இசுரேலிய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்,” என்று கூறி உள்ளார். மேலும் அந்த அறிக்கையிலிருந்து அவர் மேற்கோள் காட்டி உள்ள ஒரு வன்முறை நிகழ்வு கீழே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது:

காசாவில் 14 வயது சிறுவன் ஒருவன் தன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய போது, ​​இசுரேலிய ரோந்துப் படையினரால் சுடப்பட்டான்… (அப்போது அங்கு எந்த சண்டையும் நடைபெறவில்லை).

“அவன் சுடப்பட்டு, படுகாயமடைந்து தரையில் கிடந்தான்… அந்த 14 வயது சிறுவன் ரத்தப்போக்கினால் இறந்து கொண்டிருந்தபோது, ​​இசுரேலியப் படையினர் (சுமார் 45 நிமிடங்களுக்கு) அவனைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்…. அப்போது அவர்கள் பேசிக்கொண்டும், அவர்களில் சிலர் புகைப்பிடித்துக் கொண்டும் இருந்தனர்” என்று கூறினார் கிறிஸ் சிடோட்டி.

இவ்வாறு இசுரேலியப் படைகள் மேற்கொண்ட பல்வேறு இனப்படுகொலை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது ஐ.நா ஆணையம். இசுரேலியப் படைகள் அனாதை இல்லங்களையும் பள்ளிகளையும் அழித்து, பாலஸ்தீனிய சமூகத்தின் அடித்தளங்களைச் சீர்குலைத்ததையும் அறிக்கையாக்கி உள்ளது அந்த ஆணையம். கடந்த அக்டோபர் 2025-ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் என்ற பெயரில் நாடகமாடிய பிறகும், அங்கு இத்தகைய வன்முறைகள் தொடர்ந்திருக்கின்றன.

இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் காசாவில் தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறது இசுரேல். கடந்த ஜூன் 20, 2026 அன்று அதிகாலையில் காசாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது இசுரேல் நடத்திய தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இசுரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) வழக்கு நடைபெற்று வரும் வேளையில் ஐ.நா ஆணையத்தின் இந்த அறிக்கை முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனியக் குழந்தைகள் மீதான வன்முறைக்கு இசுரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆணையம் கூறியதோடு இதை அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த ஆணையத்தால் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இசுரேல் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பு நாடுகள் தீர்மானித்தால் அது உலக அரங்கில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

இங்கே தமிழர்களாகிய நமக்கு இன்னொரு வரலாற்றுப் பொறுப்பும் இருக்கிறது.

2009-இல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் குழந்தைகள் கொல்லப்பட்டபோது, உலகம் இதேபோல் அமைதியாக இருந்தது. மருத்துவமனைகள் மீது குண்டுவீசப்பட்டன. பாதுகாப்பு மண்டலங்கள் தாக்கப்பட்டன. உணவு பொருட்கள் தடுக்கப்பட்டது. மருந்துகள் மறுக்கப்பட்டன. அப்போதும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பொய்யால் இனப்படுகொலை மறைக்கப்பட்டது.

இன்றும் அதே அரசியல் மொழியே காசாவில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

மாறியது இடம் மட்டுமே. மாறாதது இனப்படுகொலையின் அரசியல்.

அதனால்தான் காசாவுக்கான நீதி, ஈழத்திற்கான நீதியிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று.

காசாவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாள், முள்ளிவாய்க்காலுக்கான நீதிக்கான கதவும் இன்னும் அகலமாகத் திறக்கும்.

எனவே, நெதன்யாகு மற்றும் இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள் அனைத்தும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

காசாவின் குழந்தைகளுக்கான நீதி என்பது பாலஸ்தீன மக்களின் கோரிக்கை மட்டும் அல்ல. அது மனிதகுலத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற உலக மக்களின் குரல் இன்னும் வலிமையாக ஒலிக்க வேண்டும்.

அவ்வாறு மக்களின் குரல் ஒலித்தால்தான் இசுரேலின் தொடர்ச்சியான வன்முறை முடிவுக்கு வரும் சூழல் உருவாகும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வாய்ப்புகள் திறக்கப்படும். 

காசாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் அனைத்தும் தற்போது சர்வதேச சமூகத்தின் கையில் இருக்கிறது. பொதுவெளியில் உள்ள இந்த ஆதாரங்களைக் கொண்டு, இசுரேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நெதன்யாகு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அழுத்தம் அனைத்து தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை வலுப்பெற தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

அறிக்கை: https://www.ohchr.org/sites/default/files/documents/hrbodies/hrcouncil/sessions-regular/session62/a-hrc-62-crp-2.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »