தமிழ் மக்களின் போர்கால வாழ்க்கையை காட்டும் கண்ணாடி – நீளிரா

நீளிரா – ஒரு நீண்ட இரவினில் ஒரு குடும்பம் அடையும் பயத்தின் பதிவு மட்டுமல்ல இப்படம், சிங்கள இந்திய ராணுவங்களிடம் சிக்கி ஒவ்வொரு நாளும் தமிழீழக் குடும்பங்கள் அனுபவித்த பயம், பதட்டங்களின் நேரடித் தொகுப்பே நீளிரா.

ஒரு திருமண வீடு, அந்த வீட்டுக்குள் புகும் இந்திய ராணுவம், போராளிகள். ஒரே ஒரு இரவில் இவர்களுக்குள் நடக்கும் களம்தான் படத்தின் கதை. எளிமையான கதாபாத்திரங்களின் தேர்வு படத்தின் உயிர்ப்பு. அந்த இரவில் துப்பாக்கிகளின் நடுவே நிறுத்தப்படும் குடும்பம் அடையும் அச்சத்தை நமக்குள்ளும் கடத்தி விடுகிறார்கள்.

செம்மணியில் எலும்புக்கூடுகளாய் வெளிவரும் 412 தமிழர்களின் உயிர்களும், “ITJP அறிக்கை வெளியிட்ட1987-90-க்குள்” கொல்லப்பட்ட 10,427 தமிழர்களின் உயிர்களும், சிங்கள இந்திய ராணுவத்தினரால், துடிதுடிக்க கொல்லப்படுவதற்கு முன் அனுபவித்த பயத்தை உணர்வதற்கு இப்படம் ஒரு கண்ணாடி.

‘எங்கள் மண் எங்களுடையது’ என்கிற உரிமை உணர்வு பிள்ளைகளின் துப்பாக்கி விளையாட்டிலிருந்து அக்குடும்பத்தின் பெரியவரின் எண்ணம் வரை ஊடுருவி இருப்பதை நுட்பமான காட்சி அமைப்புகளின் ஊடே இயக்குநர் கடத்துகிறார். பெரியவர் ‘இந்திய- பாகிஸ்தான் பலுசிஸ்தான்’ போரில் ராணுவ வீரராக இருந்து, பின்னர் இலங்கைக்கு வந்தவர். ‘போரினால் சமாதானம் அடையவே முடியாது’ என்கிற அவரின் கூர்மையான வசனம் படத்தின் வலிமை.

‘நான் சொன்னால் கேட்பார்கள்’ என்று மணப்பெண்ணின் அம்மா போராளிகளைப் பற்றி சொல்லும் காட்சி, மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டவர்களே போராளிகள் என்பதை உணர்த்துகிறது. ராணுவம் தனது வீட்டுக்குள் இருப்பதை போராளிகளுக்கு சொல்லிவிட வேண்டும் என்னும் அங்குள்ள இளைஞனின் தவிப்போ, போராளிகளை மக்கள் எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

சிங்கள ராணுவம் கூலிப்படையாக வைத்திருந்த ‘ஆள்காட்டிகள்’ என்கிற படை சிங்கள ராணுவத்திற்கு எப்படி துப்பு கொடுத்தது என்பதை  விளக்குகிறது ஒரு காட்சி. 1988களில் வந்த தமிழ் திரைப்படங்களில் கேசட் வழியாக போராளிகள் இயக்க செய்திகளை பரப்பியதைக் காட்டும் மற்றொரு காட்சியும் இருக்கிறது.

ராணுவம் வீட்டுக்குள் புகப் போகிறது எனத் தெரிந்ததும், பெண்கள் தங்கள் உடைக்கும் மேல் நான்கு ஐந்து சட்டைகளை போட்டுக் கொள்வது – சிங்கள ராணுவம் பெண்கள் மீது நடத்திய வன்கொடுமைகளுக்கு சான்றாகும் காட்சி. தமிழீழ நிலத்தில் 1985களில் நடந்த உண்மை செய்திகளையே படைப்பாக்கி இருக்கிறார் இயக்குநர் சோமிதரன்.

இந்த மண்ணுக்காக எத்தனை பேரின் காதல் வாழ்க்கைகள் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்காக ஒரு சிறு காதல் கதையும் படத்தில் உண்டு. மருத்துவனான தனது காதலன் போரில் மறைந்து விட்டான் என பித்துப் பிடித்தவளாகிறாள் காதலி. அவன்  உயிருடன் பேராளியாக திரும்பி வந்திருக்கிறான் எனத் தெரிந்ததும் மகிழ்ச்சி அடைகிறாள். இருப்பினும் அவனுடன் சேர முடியாத சூழலே வாய்க்கிறது. ஒவ்வொரு காட்சியாக சொல்லிக்கொண்டே செல்லும் அளவிற்கு மிகவும் நுட்பமாக நீளிராவை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

இந்திய ராணுவக் குழு அத்துமீறி திருமண வீட்டுக்குள் நுழைந்தாலும், உயிர் அச்சுறுத்தலை கொடுக்க நினைக்காத தலைமை தளபதி, உயிரை எடுத்தாவது தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளத் துடிக்கும் அக்குழுவின் சிப்பாய் என இரு வேறு குணம் கொண்ட பாத்திரப் படைப்புகள் இந்திய அமைதி காப்புப்படையில் (IPKF) பங்கேற்ற இரு வேறு அதிகாரிகளை நினைவூட்டின. ஒருவர் IPKF ஜெனரல் ஹர்கிரத் சிங், மற்றொருவர் இந்திய உயர் ஆணையர் தீட்சித்..

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அமைதிப் பேச்சுக்கு வரும்போது சுடுமாறு ஆணையிட்டவர் தீட்சித், அதை மறுத்தவர் ஹர்கிரத் சிங். அமைதி காக்க வந்தவர் அதை நோக்கியே செயல்பட்டார். இதை அவர் (Intervention in Sri Lanka) என்ற புத்தகத்திலும் பதிவு செய்தார். இப்படியும் சில அதிகாரிகள் இருந்தார்கள் என்பதற்கான பாத்திரப் படைப்பாகவே அந்தத் தளபதியின் படைப்பின் ஊடாக காண முடிந்தது.

மேலும் மற்றொரு காட்சி.. இது அமைதிக்கான போரில்லை, ‘ஒன்றுமே இல்லாததற்கான போர் (war for nothing)’ என்கிற வசனம் கொண்ட ஒரு காட்சி ஈழத் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட போரின் அரசியல் மூலக் காரணத்தை நினைவுறுத்துகிறது..

‘ஒன்றுமே இல்லாததற்கான போர்’ என்று சொல்லப்படும் அந்த வரி, ‘ஆபரேஷன் பவான்’ நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு ராணுவ அதிகாரிகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகும். ஆபரேஷன் பவான் என்பது இந்திய அமைதிப் படை ஈழத்தில் மேற்கொண்ட ஒரு ராணுவ நடவடிக்கை.

அந்தப் போரில் ஈடுபட்ட கர்னல் அசோக் மற்றும் ராணுவத் தளபதி சுந்தர்ஜி ஆகிய இருவரும்   ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொண்டிருந்த போது, கர்னல் அசோக், சுந்தர் ஜியிடம் “இந்தப் போருக்கான காரணம் என்ன?” என்று கேட்டதற்கு, சுந்தர்ஜி சொன்ன பதில்: “ஒன்றுமே இல்லை என்பதுதான் போருக்கான காரணம். எந்தக் காரணமும் எங்களுக்கு சொல்லப்படவில்லை” என்று கூறியதைக் கேட்டதும் கர்னல் அசோக் அதிர்ச்சி அடைந்தாராம். இந்த உரையாடலை கர்னல் அசோக் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் சுந்தர் ஜி கேபினெட் கூட்டத்தில்  பேசியதாக சில தகவல்களை அவரிடம் பகிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார். ‘தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு அங்கு தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதில் விருப்பமில்லை என்பதும் கேபினெட்டில் பேசியவர்கள் மூலம் தெரியவந்தது’ என்று சுந்தர் ஜி கூறிதையும் கர்னல் அசோக் X (எக்ஸ்) தளத்தில் பகிர்ந்திருந்தார். இப்படியாக ‘ஒரு காரணமும் இல்லாததற்கான போர்’ என்பதின் மூல அரசியலை அம்பலப்படுத்தியிருந்தார் கர்னல் அசோக்.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கலைப் படைப்பாக இப்படத்தை காண நேர்ந்தாலும், அதில் வைக்கப்பட்ட ஒவ்வொரு வரியும், தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போரின் வன்ம அரசியலைத் தோலுரிப்பதாகவே பார்க்க முடிந்தது.

இப்படி வசனங்களும், காட்சிகளும் அரசியலை நினைவுபடுத்தினாலும்,  போரின் இருதரப்பு சண்டைகள், வெற்றி, தோல்விகள் பேசுகின்ற படமாக இல்லாமல் போர் காலங்களில் தமிழீழ மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை மையமாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குநர் சோமிதரன்.

இவரின் முதல் படம் இது. ஆனால் பல ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்திருப்பதை அம்பலப்படுத்திய இவரின் ஆவணப்படம் சிங்கள அரசின் நல்லிணக்க முகமூடியை  வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இன்றும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சிங்கள அரசின் நில ஆதிக்கத்திற்கு நேரடிச் சான்றாக அமைந்தது.     

மக்களோடு ஒன்றாக கலந்து வாழ்ந்தவர்களே விடுதலைப் போராளிகள் என்பதை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சோமிதரன். சிங்கள இனவெறி ராணுவத்தின் ஆயுதங்களுக்கிடையில் வாழும் ஈழத்தமிழர்களின் துயரத்தை மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் ஏதிலிகளாக வாழ நேரும் அவலத்தையும் இணைத்து இரட்டை வாழ்க்கையில் அல்லாடும் ஈழத் தமிழர்களின் நிலையை கண் முன் நிறுத்துகிறது இப்படம்.

இனப்படுகொலைக்கு உள்ளான எந்த இனமும் அரசியல் போராட்டங்களின் மூலம் மட்டுமே விடுதலையை வென்றதில்லை. கலையும், குறிப்பாக திரைக்கலையும் அவர்களின் விடுதலைக்கான ஆதரவை உலக அரங்கில் உருவாக்கியிருக்கின்றன. 

யூத இனப்படுகொலைக்கு எதிராக ‘Schindler’s List’, ‘The Pianist, Shoah’, ‘Son of Saul’ போன்ற படங்களாகட்டும், ருவாண்டா இனப்படுகொலைக்கு எதிராக ‘Hotel Rwanda’, ‘Sometimes in April’ ஆகிய படங்கள், ஆர்மீனிய இனப்படுகொலைக்கு எதிராக வெளிவந்த ‘Ararat’, ‘The Promise’ திரைப்படங்கள், பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக ‘Paradise Now’, ‘5 Broken Cameras’, ‘Farha’ போன்ற படங்கள் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கின. இனப்படுகொலையின் கொடுமையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் நியாயங்களையும் பேசின. இதன் மூலம் சர்வதேச அழுத்தத்தையும் உருவாக்கின. 

அதே போல ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகவும் காத்திரமான திரைப்படங்கள் இன்னும் அதிகம் வர வேண்டும். அவை சர்வதேச சமூகத்தை உலுக்கி, தமிழர்களுக்கான நீதியை நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். 

அந்த வகையில் ‘நீளிரா’ ஒரு முக்கியமான முன்னெடுப்பு. இதுபோன்ற படங்கள் இன்னும் பலவும் வந்து, தமிழீழ மக்களின் அரசியல் கோரிக்கைகள் வெல்வதற்கு வலு சேர்க்க வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் கட்டாயம் காண வேண்டிய இப்படம் அமேசான் ஒடிடி(OTT) தளத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »