“மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா? என பயமாக இருக்கிறது. என் தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்.” இந்த குறுஞ்செய்தியை உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு கோவையைச் சேர்ந்த மருத்துவக் கனவு கொண்ட மாணவி அனுகீர்த்தனா தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
“அன்புள்ள அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். என் முடிவுக்கு யாரும் காரணமில்லை. இது முழுக்க என் திறமையின்மை தான். நான் உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை.” டேராடூனைச் சேர்ந்த ரியா குமாரியின் இறுதி வார்த்தைகள் இவை.
இந்த இரண்டு மாணவிகளும் தோல்வியால் இறக்கவில்லை. அவர்கள் ஒரு தேர்வால் கொல்லப்பட்டார்கள். அதைவிட ஒரு அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பால் கொல்லப்பட்டார்கள் என்று கூறலாம்.
கடந்த மே மாதம் 2026 நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தேர்வெழுதிய பல லட்சம் மாணவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளியது. முதல் நீட் தேர்வு நடந்த நாளான 3 மே 2026, மறுதேர்வு நடந்த நாள் 21, ஜூன் 2026. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 14. இந்த மரணப் பட்டியலும் இறுதியானது அல்ல, இது நீள்வது தான் வேதனையானது.
எண்
தேதி
பெயர்
மாநிலம்
1
14 மே 2026
ரித்திக் மிஸ்ரா
உத்திரப்பிரதேசம்
2
15 மே 2026
அன்ஷிகா பாண்டே
டெல்லி
3
15மே 2026
பிரதீப் மேகவால் /பிரதீப் குமார்
ராஜஸ்தான்
4
16 மே 2026
மைதிலி அசோக் சோனவனே
மஹாராஷ்ட்ரா
5
20 மே 2026
ஆகாஷ் சதுர்வேதி
மத்தியப்பிரதேசம்
6
4 ஜூன் 2026
ஜஜா ஆர். மகேஷ்
கேரளா
7
13 ஜூன் 2026
ரேணு
டெல்லி
8
16ஜுன் 2026
உமேஷ் மாலி
ராஜஸ்தான்
9
17 ஜூன் 2026
ரியா குமாரி
டேராடூன்
10
18 ஜூன் 2026
அனு கீர்த்தனா
கோவை
11
19 ஜூன் 2026
கோபிகா
சேலம்
12
20 ஜூன் 2026
ரோஷினி
தருமபுரி
13
20 ஜூன் 2026
ஷேக் சனா
ஹைதராபாத்
14
21 ஜூன் 2026
வெற்றியானந்தம்
ஓசூர்
நீட் தொடர்பான மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டேயிருந்தும் அது குறித்தறிய தேசிய தரவுத்தளம் இல்லை. இருப்பினும் பல மருத்துவ ஆய்வுகள் மற்றும் செய்தித் தகவல்கள் தொடர்ந்து கவலைக்குரிய நிலையை சுட்டிக்காட்டுகின்றன.
தமிழகத்தில் அனிதா முதற்கொண்டு வெற்றியானந்தம் வரை நீட் கொடுமைக்கு மாணவ செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பல மாநிலங்களில் தேர்வு முடிவுகள், தோல்வி அச்சம், மறுதேர்வு அறிவிப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
2019-24 வரையான நீட், JEE போன்ற போட்டித் தேர்வுகளால் நடந்த தற்கொலைகள்:
மாநிலம்
தற்கொலை வழக்குகள்
ராஜஸ்தான்
80–100
தமிழ்நாடு
40–60
மகாராஷ்டிரா
35–55
உத்தரப் பிரதேசம்
30–45
பீஹார்
25–40
தெலுங்காணா
20–30
கர்நாடகா
15–25
கேரளா
15–25
மத்தியப் பிரதேசம்
15–25
மற்ற மாநிலங்கள் (சேர்த்து)
30–50
ஒரு கல்வி அமைப்பு மாணவர்களிடம் வாழ்க்கையை விட தேர்வினை பெரிதாக நினைக்க வைக்கிறது என்பதுதான் இங்கு எழும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இந்த ஆண்டு நீட் கொலை செய்த ஒவ்வொரு மரணமும் ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்தின் கனவு, பல வருட உழைப்பு, ஒரு கடன் சுமையின் முடிவு. நீட் மறுதேர்வு, வினாத்தாள் கசிவு சர்ச்சை, முடிவுகளுக்கான காத்திருப்பு – இவை எல்லாம் சேர்ந்து மாணவர்களின் மனதில் ஏற்படுத்தும் அழுத்தம், அவர்களை “தோல்வி என்றால் வாழ்க்கையே முடிந்தது” என்ற மனநிலைக்கு தள்ளுகிறது.
ஒரு தேர்வு ரத்தாகும்போது, மறுதேர்வு அறிவிக்கப்படும்போது, அதன் பின்னால் இருக்கும் உளவியல் சிக்கல்கள் அதற்கு பலியாகும் மனித உயிர்களின் விலையை யார் கணக்கிடுவது? தேர்வு மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மை, மனநல ஆதரவு, தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவையும் ஒரு நம்பகமான அமைப்பின் அடிப்படை. அந்த அடிப்படை உறுதியாக இல்லாதபோது, “தேர்வு” என்பது தகுதியை சோதிக்கும் கருவியாக இல்லாமல், உயிர்களை பலி கேட்கும் பொறியாக மாறிவிடுகிறது.
ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடமே நீட் வேண்டுமா?, JEE வேண்டுமா? என்று கேட்டு அதற்கான பயிற்சியை அப்போதிலிருந்தே கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்பு பாடத்தை முடித்துவிடுகிறார்கள். ஒரு 15, 16 வயது மாணவன் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் 2, 3, 4 ஆண்டுகள் ஒரே தேர்வுக்காக படிக்கிறார்கள்.
சிறு வயதிலிருந்தே போட்டித் தேர்வுக்காக குழந்தைகளை தயார் செய்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. இந்த தேர்வுகள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகள் என்றாலும், பாடத்திட்டம், கேள்வித்தாள், கடினத்தன்மை எல்லாம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
அந்த மாணவனின் தினசரி வாழ்க்கை முழுவதும் பள்ளி, பயிற்சி மையம், மாதிரித் தேர்வுகள், தரவரிசைப் பட்டியல்கள், ஒப்பீடுகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ற சுழற்சியிலேயே சிக்கிக்கொள்கிறது.
பள்ளி முடிந்ததும் நேராக பயிற்சி மையத்துக்கு ஓட வேண்டியிருக்கிறது. அங்கு எழுதும் மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்ணும் தரவரிசையும் அடுத்தடுத்த நாளின் மனநிலையை தீர்மானிக்கின்றன. வகுப்புத் தோழர்களுடன், அண்டை வீட்டுப் பிள்ளைகளுடன் தொடர்ந்து ஒப்பிடப்படுகிறார்கள். இதற்கிடையே “நீதான் எங்கள் கனவு” என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு அவன் தோளில் கூடுதல் சுமையாக அமர்கிறது.
இப்படி படிப்பு, தேர்வு, ஒப்பீடு, எதிர்பார்ப்பு என்ற நான்கு சுவர்களுக்குள் அவனது குழந்தைப் பருவமும், ஓய்வும், விளையாட்டும் மெல்ல மறைந்துவிடுகின்றன. விளையாட்டு, கலை, சமூக உறவுகள், சுயமரியாதை, தோல்வியை ஏற்கும் திறன் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இப்படி பல வருடம் கடினப்பட்டு தயாராகும் குழந்தைகள், தேர்வின் அழுத்தத்தில் தவறான முடிவு எடுத்து விடுகிறார்கள்.
அறிவியல் மட்டுமல்ல வரலாறு, கலை, பொருளாதாரம், ஆசிரியர்கள், சமூக மாற்ற செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர் போன்ற அனைத்துத் துறைகளிலும் மாணவர்களை உருவாக்கும் கல்வி முறை தேவை. ஆனால் நுழைவுத் தேர்வு மையப்படுத்தப்பட்ட அமைப்பு, பல்வேறு திறமைகளை ஒரே அளவுகோலில் அளக்க முயல்கிறது.
ஒரு நாடு தனது மாணவர்களை மதிப்பெண்களால் மட்டும் அளவிடத் தொடங்கினால், அது படைப்பாற்றல் கொண்ட குடிமக்களை அல்ல; தேர்வுகளை வெல்லத் தெரிந்த குடிமக்களையே உருவாக்கும்.
சீனாவில் , 6 முதல் 15 வயது குழந்தைகளுக்காக தனியார் பள்ளிகள் தொடங்கி லாபம் ஈட்ட வியாபாரிகளுக்கு சீனா முழுமையாகத் தடை விதித்துள்ளது. இந்த வயது குழுவுக்கான ஒன்பது ஆண்டுக்கான கட்டாயக் கல்வி (Compulsory Education) ஒரு வியாபாரம் அல்ல என்றும், அது பொது சமூக உரிமை என்றும் சீன அரசுத்துறைகள் தெளிவாக அறிவித்துள்ளன.
இந்தியாவில் கல்வித் துறை சந்தையில் நுழைந்து பல காலமாகி விட்டது. குழந்தைகளின் உளவியல் திறனை விட போட்டித் தேர்வுகளின் மூலம் பணம் பறிப்பதற்கு போட்டிச் சந்தைகள் வளர்ந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி துறை (EdTech) துறை அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இணையவழி வகுப்புகள், தேர்வு தொடர்கள், பயிற்சித் தொகுப்புகள், காணொளி பாடங்கள், தனிப்பட்ட மதிப்பீடுகள் என NEET மற்றும் JEE தேர்வுகளை மையமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, பொருளாதார வசதி உள்ள மாணவர்கள் அதிக பயிற்சிகளைப் பெறுகிறார்கள்; வசதி இல்லாத மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த சந்தையும் அதற்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையுமே இந்த மாணவர்களை இது போன்ற முடிவுக்குத் தள்ளுகின்றன.
இந்த போட்டித் தேர்வுகளால் வருங்கால சந்ததியினர் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வித் துறை (Edtech) கடந்த ஐந்து வருடங்களில் அசுர வளர்ச்சியை கொண்டுள்ளதை காணலாம். நீட் அறிமுகம் இதனை மேலும் வளர்த்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை சார்ந்து கொண்டு வரப்பட்ட IIT, NEET போன்ற தேர்வுகளால் நிகழும் கடும் போட்டி இந்திய EdTech (தொழில்நுட்பம் + கல்வி) துறையே பெரிதும் வளர்ந்து இருக்கிறது. NEET/JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்காக ஏற்படும் மாணவர் தற்கொலைகள், ஆரம்ப வயதிலேயே ஏற்படும் தேர்வு-மைய அழுத்தம் ஆகியவையால் நிறைய குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் மூன்றாவது படிக்கும் குழந்தையே மன நலப் பிரச்சனைகளில் பாத்திக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மருத்துவக் கல்விக்கான தரத்தைப் பேணுவது அவசியம்தான். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் கல்வி அமைப்பு, மொழி, பாடத்திட்டம், சமூகச் சூழல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளாமல் ஒன்றியப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்வு முறையைத் திணிப்பது பாஜக அரசின் கல்விக் கொள்கையாக இருக்கிறது. ஒரே பாடத்திட்டத் தேர்வு முறை இருக்கும் வரை, அதற்கான பயிற்சி சந்தையும் பெருகும். இதனால் கல்வி மெதுவாக பள்ளிக் கல்வியிலிருந்து பயிற்சி தேர்வு என்ற வணிக மாதிரிக்குத் தள்ளப்படுகிறது.
இந்நிலை மாறி மாநிலங்களுக்கு கல்வி அதிகாரம் திரும்பினால் மட்டுமே மாணவர்களின் மனவளத்தை பேண முடியும். அப்போதுதான் பல மாற்றங்கள் சாத்தியமாகும். உள்ளூர் பாடத்திட்டத்துடன் தேர்வு ஒத்திசைந்து செல்லும். மொழி ரீதியான தடைகள் குறைந்து, மாணவர்கள் தாங்கள் படித்த மொழியிலேயே தேர்வை எதிர்கொள்ள முடியும். இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், தனியார் பயிற்சி மையங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை படிப்படியாகக் குறையும். பள்ளிப் படிப்பே தேர்வுக்குப் போதுமானதாக மாறும். அதேசமயம், ஒரே ஒரு எழுத்துத் தேர்வுக்குப் பதிலாக, தொடர் மதிப்பீடு, நடைமுறைத் திறன் சோதனை போன்ற பல்வேறு மதிப்பீட்டு முறைகளையும் அறிமுகப்படுத்த முடியும்.
இவ்வாறு மாற்றங்கள் நிகழும்போது, கல்வி மீண்டும் தேர்வை மையமாகக் கொண்ட அமைப்பாக இல்லாமல், மாணவர்களை மையமாகக் கொண்ட அமைப்பாக மாறும் வாய்ப்பு உருவாகும். குழந்தைகளுக்கு உளவியல் நம்பிக்கையை அளிக்க முடியும். குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.
நீட் மரணம் நீட் தோல்வியால் அல்ல; இந்திய ஒன்றிய அரசின் மருத்துவக் கட்டமைப்பால் நிகழ்கிறது.
தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பு எல்லா மாநிலங்களுக்கும் முன் மாதிரியானது. அந்த கட்டமைப்பை அழிக்க வந்ததே இந்த நீட். இன்று நம் கல்லூரிகளில் நமது மாணவர்களுக்கு இடமில்லாமல் கல்லறைகளைத் தேடி செல்கிறார்கள்.
“மாணவர்கள் தற்கொலை என்பது ஒரு சமூகத்தின் அழிவு”. இதற்கு காரணமாக இருக்கும் நீட் தேர்வை அழிப்போம்
நாம் கேட்க வேண்டிய கேள்வி: “NEET-ஐ எப்படி நடத்துவது?” என்பதல்ல. NEET தேவையா என்பதே?
“ஒரே ஒரு தேசிய நுழைவுத் தேர்வு முறை, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக மற்றும் கல்வி நடைமுறைகளுக்கு உண்மையிலேயே பொருத்தமானதா?” என்பதே.
மாணவர்களின் கனவுகள் எந்தத் தேர்வையும் விட பெரியவை. அவர்களின் உயிர்கள் எந்தக் கல்விக் கொள்கையையும் விட மதிப்புமிக்கவை.
மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி அமைப்பை உருவாக்குவோம். தேர்வுகளை அல்ல, குழந்தைகளை காப்போம்.