போரும் பஞ்சமும்
2021 ஆண்டு மிகப் பெரிய உணவு பற்றாகுறை மற்றும் மிகப் பெரிய பஞ்சத்தின் ஆண்டாக இருக்க போவதாக உலக உணவுத் திட்டக்குழு கூறுகிறது.
93 நாடுகளில் 95.7 கோடி மக்கள், அதாவது உலகின் 12% மக்கள், சாப்பிட போதுமான உணவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதில் கூடுதலாக 23.9 கோடி மக்கள் போதிய அடிப்படை மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.
43 நாடுகளில் 4 கோடி மக்கள் “பஞ்சத்தின் விளிம்பில்” உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2.7 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சோமாலியா, நைஜீரியா மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நாடுகளின் அரசுகள் கொரோனா நெருக்கடியை காரணம் காட்டினாலும் இந்த அவல நிலை 2020-21 காலத்தில் மட்டுமே உருவாக்கியது அல்ல. கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பிருந்த பிரச்சனை கொரோனாவால் தீவிரமாகியுள்ளது. இந்த ஏழை நாடுகள் மீது வல்லாதிக்க நாடுகள் திணித்த தாராளவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ ஆதரவு போக்குகளே இந்த சீரழிவிற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
இந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் இந்த ஏழை நாடுகளின் மக்களிடையே உள்ள பல்வேறு பாகுபாடுகளை கூர்மைப்படுத்தி இனரீதியாக, மதரீதியாக மோதல்களை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கி வன்முறை மற்றும் படுகொலைகள் செய்ய கற்று தருகின்றன. இவர்களின் முதல் குறி பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதாக தான் உள்ளது. கொரோனாவை போன்றே இந்த பணக்கார நாடுகளின் சூறையாடலும் பெருந்தொற்றாக உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.
கூடுதலாக, 2021 உணவு அமைப்புகள் உச்சி மாநாடு பல பாதகமான முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, கார்பரேட் நிறுவனுங்களுக்கு சாதகமாக மானியங்கள் வழங்குவது விவசாய நிலங்களை அரசே கையகபடுத்தி கொடுப்பது போன்ற முடிவுகளால் உணவு உற்பத்தி கார்பொரேட்டுகளின் நுழைவால் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
சிரிய பஞ்சம்
சிரியாவில் போர் முடிந்தாலும் அங்கே போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் மக்கள் மீது மற்றொரு போரை தொடுத்துள்ளது. 1.2 கோடி சிரிய மக்கள் இப்போது கடும் பஞ்சத்தால் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், துருக்கி இராணுவங்கள் சிரிய மண்ணில் நடத்திய போரின் காரணமாக அம்மக்கள் உணவு, உடைமை அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். தங்கள் வாழ்க்கையே ஒரு கானல் நீராகி போனதை நினைத்து அவர்கள் மனம் வெதும்பி கொண்டுள்ளனர்.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டக்குழு தரவுகளின்படி 1.2 கோடி சிரிய மக்கள், அதாவது நாட்டின் 60% சதவிகிதம், இன்று நிரந்தரமாக உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் கூடுதலாக 45 லட்சம் சிரிய மக்கள் நிரந்தர உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். போருக்கு முன் சிரியா சராசரியாக 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தி செய்து வந்தது. இன்று அது பாதியாக குறைந்து வெறும் 21 லட்சம் டன் கோதுமையே உற்பத்தி செய்கிறது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தில் இருந்த சிரியாவில் கொரோனா தொற்றின் விளைவாக இப்போது பால் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இத்துடன் வேலை வாய்ப்பின்மை இந்த அவல நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சிரிய மக்கள் தங்கள் பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கு 20 ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரிய மக்கள்தொகையில் 50% க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக வருவாய் ஆதாரங்களை இழந்துள்ளனர்.
மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான அடிப்படை உணவு ரொட்டி, அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை பெற்றிட குறைந்தது 120,000 சிரிய பவுண்டுகள் தேவைப்படும். இது தற்போது சிரியாவில் கிடைக்கும் சராசரி சம்பளத்தை விட மிக அதிகம். மக்களிடத்தில் சேமிப்பு எதுவும் மிச்சம் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் மக்கள் பாதிக்கபடுவார்கள் என்று உலக உணவு திட்டக்குழு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, தீவிர போர் நடைபெற்ற வேளையில் சிரியாவில் உணவு விலை கடுமையாக உயர்ந்தது. இத்தனுடன், சிரிய பவுண்டின் மதிப்பு சரிந்ததால் அடிப்படை பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, 2020 சனவரியில் 1000 சிரிய பவுண்டுகளாக இருந்த சமையல் எண்ணெய் 2021 சனவரியில் 5000 பவுண்டுகளாக உயர்ந்துவிட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தங்களிடம் மிஞ்சியுள்ள கால்நடைகளை விற்று வருகிறார்கள்.
மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளான போர் மற்றும் கலக வன்முறைகளால் உலகின் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ள வேண்டிய நிலையானது உண்மையில் வெட்கக்கேடான விடயம். எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், திக்ரே மற்றும் ஏமன் போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன
மடகாஸ்கர் பஞ்சம்
மடகாஸ்கரில் ஏற்பட்டுள்ள பஞ்சம் போரினாலோ வேறு வன்முறை மோதல்களாலோ ஏற்படவில்லை!
மடகாஸ்கரில் காலநிலை மாற்றத்தால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது 4 லட்சம் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர். அடுத்த சில மாதங்களில் இது 5 லட்சத்தை எட்டும் என்று சொல்லப்படுகிறது. 10 லட்சம் 14 ஆயிரம் மக்கள் போதிய உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாக உலக உணவு திட்டக்குழு தெரிவித்துள்ளது. கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. தெற்கில் 100,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அம்போவொம்பே பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரமாகும்.
1998ல் ஆப்ரிக்காவின் தெற்கு சூடானில் (Bahr el Ghazal) பஹர் எல் காசெல் பகுதியில் போரால் ஏற்பட்ட பஞ்சத்தின் விளைவாக 70,000 மக்கள் இறந்து போனதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
திக்ரே பஞ்சம்
திக்ரே என்பது எத்தியோப்பியாவில் உள்ள தன்னாட்சி அதிகாரமிக்க மாநிலமாகும். அந்த அரசுக்கு என்று தனி இராணுவ படை உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக அம்மக்கள் தனித்த அரசியல் இறையாண்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு திக்ரே எத்தியோப்பியாவை தவிர்த்து தனது தன்னாட்சிக்குட்பட்ட பகுதிக்கான தேர்தலை நடத்தியது. இதனை தொடர்ந்து அங்கு எத்தியோப்பிய அரசுடன் போர் மூண்டது. அண்டை நாடான எரித்திரிய படைகளும் எத்தியோப்பியாவுடன் இணைந்து திக்ரே படையினருடன் சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டையில் எத்தியோப்பியா-எரித்திரிய படைகள் உணவை போர் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன. திக்ரே மக்களின் உணவு தானியம் மற்றும் விவசாய உற்பத்தியை முற்றிலும் சீரழித்து வருகின்றனர். திக்ரே விவசாயிகளை கொல்வதும், உழவு கருவிகளை பறிமுதல் செய்வதும், கால்நடைகளை கொல்வதும் என்று திக்ரே மக்கள் மீது வலிந்து பட்டினியை திணித்து வருகின்றனர். இதன்காரணமாக, திக்ரே மக்கள் கடும் பஞ்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சம், 4 லட்சம் மக்கள் பஞ்சம் பாதித்த பகுதியில் சிக்கியுள்ளனர். 33,000 குழந்தைகள் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சண்டை தொடர்ந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை விரைவிலேயே அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1980களில் சுமார் 10 லட்சம் மக்கள் பஞ்சத்தால் உயிரிழந்த வரலாறை ஏற்கனவே எத்தியோப்பியா சுமந்து நிற்கிறது.
ஏமன் பஞ்சம்
ஏமன் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடு. சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஏமனில் உள்ள எண்ணெய் வளத்தை அபகரிக்க அங்கே ஒரு உள்நாட்டு போரை உருவாக்கியது. அதற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வல்லாதிக்க நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்தன.
ஏமன் போரில் சுமார் 130,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போரின் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தாலும் உணவு தட்டுப்பாடாலும் 84,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, 1.6 கோடி மக்கள் ஏமனில் பஞ்சத்தின் விளிம்பில் சிக்கி தவித்து வருகின்றனர். 5 வயதிற்கு கீழ் உள்ள 23 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாகுறையால் பாதிக்கப்பட்ட்டுள்ளார்கள்.
தங்கள் சுயநல லாபத்திற்காக பணக்கார நாடுகள் இயற்கை வளங்கள் மிகுந்த ஏழை நாடுகளில் போர் சூழலை உருவாக்கி, போரிடும் இரு குழுக்களுக்கும் ஆயுதங்களை வழங்கி மக்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கிறது. மேலும், ஒரு செயற்கையான பஞ்சத்தை உருவாக்கி பல லட்ச மக்களை அழித்தொழிக்கிறது.
இங்கே கவனிக்க வேண்டியது போரினால் மட்டுமல்லாமல் தவறான பொருளாதார கொள்கைகளால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியும் இந்த அவல நிலைக்கு மிகப்பெரும் காரணமாக உள்ளது. “Global Hunger Index” எனப்படும் உலக பட்டினி பட்டியலில் இந்திய ஒன்றியம் 94வது இடத்தில் உள்ளது. இது கொரோனா தொற்றால் உருவான நிலையல்ல. ஆனால், கொரோனா இந்தியாவின் இந்த அவல நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இந்திய ஒன்றியத்தில் வாழும் 19 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்கிறார்கள். அதில் 56 லட்சம் குழந்தைகள் 4 வயதுக்குட்பட்டவர்கள் என்று 2020 “யுனிசெப்” (UNICEF) அறிக்கை தெரிவிக்கின்றது. 1947க்கு பிறகு இந்திய ஒன்றியத்தின் மக்கள் பெரும்பாலும் நேரடியாக போரால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், இந்தியா உலக பட்டினி பட்டியலில் ஆப்ரிக்க நாடுகளுடன் இடம்பிடித்துள்ளது. இதற்கு அடிப்படை காரணம் இந்தியாவின் நவ தாராளவாத பொருளாதார கொள்கையே ஆகும்.
தமிழ்நாட்டின் சூழல்
இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் சத்தமில்லாத பட்டினி சாவுகள் நடைபெறுவது அன்றாட செய்திகளில் இடம்பிடிக்காத அளவிற்கு ஒரு பழம் கதையாகிவிட்டது. தமிழ்நாட்டில் பட்டினி சாவுகள் சொற்பமாக உள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இலங்கை எல்லை உள்ளது. இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் பொருளாதார மாற்றங்களால் தமிழ்நாட்டிற்கு பாதிப்புகள் ஏற்படும் சூழல் வேகமாக உருவாகி வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது இலங்கையில் சீனா துறைமுக நகரம் (CHEC Port City Colombo) கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அந்த சீன துறைமுக நகரத்திற்குள் நுழைய சீனா கடவு சீட்டு (Passport) வழங்கி வருகிறது. ஆதாவது இலங்கை நாட்டினுள் சீனாவின் இறையாண்மைமிக்க பிரதேசம். இந்திய பெருங்கடலில் தனது சரக்கு கப்பல் போக்குவரத்தை பாதுகாத்திட இந்த துறைமுக நகரத்தில் சீனா தனது இராணுவ படைகளை குவிக்கும் நகர்வுகளை அடுத்து மேற்கொள்ளும். இதன் விளைவாக இன்று லடாக், அருணாச்சல பிரதேசம் போன்ற சீன எல்லையோர மாநிலங்களில் நிலவி வரும் இராணுவ மயமாக்கல் போர் பதட்ட சூழல் தமிழ்நாட்டின் எல்லைகளிலும் உருவாகிடும்.
அமெரிக்கா – சீனாவின் வல்லாதிக்க போட்டியில் சிக்கி நசுங்கப்போவது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்திடும் மக்கள் தான். இன்றைய சிரியா, ஏமன் போன்று தமிழ்நாட்டு தமிழர்களும் இதில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்க தனது உலக வர்த்தகத்தையும் ஏகாதிபத்தையும் நிலைநிறுத்திட இந்திய பெருங்கடல் சரக்கு கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இதன்மூலம் சீனாவின் ஏற்றுமதி வணிகத்தை கட்டுப்படுத்தவும் நினைக்கிறது. இதற்கு எதிர்வினையாக இந்திய பெருங்கடலில் சீனா தனக்கென ஒரு இறையாண்மைமிக்க நிலப்பரப்பை இலங்கையில் கைப்பற்றியுள்ளது. இந்த துறைமுக நகரத்தை சீனா தனது இராணுவத்தளமாக பயன்படுத்திடும்.
அமெரிக்க-இந்திய “2+2 ஒப்பந்தங்கள்” (மே பதினேழு கட்டுரைகள்) மூலம் அமெரிக்கா இந்தியாவில் இராணுவ தளத்தை அமைத்து கொள்வதற்கான ஒப்பந்தத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் இந்தியாவில் அமெரிக்காவின் இராணுவத்தளம் அமைந்தால் இலைங்கையில் உள்ள சீன தளத்தின் மீதான தாக்குதல்களுக்கு நடுவே தமிழ்நாடு மற்றும் தமிழீழ தமிழர்களும் சிக்கி கொல்லப்படுவார்கள் என்பது நிதர்சனம்.
தமிழ்நாடும் இராணுவ மயமாகும் சூழல்கள் ஏற்படும். தமிழ்நாட்டில் இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் இதனுடன் இணைத்தே நோக்கிட வேண்டும். அப்படியானால், இன்று வடகிழக்கு, காஷ்மீர் மாநிலங்களில் நிலவும் இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு தமிழர்களும் உள்ளாக்கப்படுவார்கள். மனித உரிமைகள் மறுக்கப்படுவது இயல்பாகிவிடும். இப்படியாக இராணுவ மயமாக்கப்படும் தமிழ்நாடு – “சீன” இலங்கை கடலோர எல்லைகளில் அணு உலை பூங்காக்கள் நிரம்ப அமைந்துள்ளது கூடுதல் ஆபத்தாகும்.
1876ல் தாது வருட பஞ்சத்தால் மெட்ராஸ் மாகாணத்தை சேர்ந்த 1 கோடிக்கும் மேலானோர் உயிரிழந்தனர். அன்றைய ஏகாதியபத்திய பிரிட்டன் காலனிய சுரண்டலால் உருவான அழிவு வரலாறை, இன்றைய உலக ஏகாதியபத்திய நாடுகள் மீண்டுமொரு அழிவு வரலாறை நம் மீது எழுதிட கொக்கரிக்கின்றன!