பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி

பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி

கொல்லப்படும் பத்திரிக்கையாளர்கள்

உத்திரபிரதேசத்தில் சுலப் ஸ்ரீவஸ்தவா (Sulabh Srivastava) என்ற பத்திரிகையாளர் ஜூன் 12, 2021 அன்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தனக்கு நான்கு நாள்களாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தன்னை கள்ளச்சாராய கும்பலைச் சேர்ந்தவர்கள் பின் தொடர்கிறார்கள் என்றும் கடிதம் மூலம் குறிப்பிடுகிறார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்த நாளே, அதாவது ஜூன் 13 ஆம் தேதி, அவர் கள்ளச்சாராய கும்பலால் கொலை செய்யப்படுகிறார். அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தும், அவர் கடிதம் மூலம் இது கொலையாக இருக்க அனைத்து முகாந்திரங்களும் இருந்தும், உடல்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பே உத்திரப்பிரதேச காவல்துறை இது ஒரு சாலை விபத்து என்ற முடிவுக்கு வருகிறது.

இதே போல், சென்ற ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் சுபம் மணி திரிபாதி என்ற பத்திரிக்கையாளர், முகநூலில் மணல் கடத்தல் கும்பல் பற்றிய தகவல்களை வெளியில் கொண்டு வந்ததால் அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பதிவிட்டு சில மணி நேரங்களுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார். இந்தக் கொலைக்கான விசாரணையும் யோகி ஆதித்தியநாத் அரசால் சரிவர நடத்தப்படவில்லை.

இப்படியாக தொடர்ந்து உண்மைகளை வெளிகொணரும் பத்திரிக்கையாளர்களும் அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்களும் மிகவும் மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள். எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF – Reporters Without Borders) என்கிற அமைப்பின் ஆசியா-பசிபிக்கிற்கான இயக்குநர் டானியல் பாஸ்டர்ட் (Daniel Bastard), உத்திரப்பிரதேச அரசின் அலட்சியத்தைக் கண்டித்து, இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சுலப் ஸ்ரீவஸ்தவா கொலை தொடர்பாக உடனடியாக ஓர் விசாரணைக் குழுவை அமைத்து நீதி கிடைக்கப் பெறுமாரு வலியுறுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதேபோல் பத்திரிக்கையாளர்கள் மேல் நடத்தப்படும் வன்முறைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய ஒன்றியத்தில் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 30 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக, பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு என்கிற குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது கடந்த காலங்களை விட இரட்டிப்பாகியிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 21 பத்திரிக்கையாளர்களாவது, அவர்களுடைய ‘பணி’யை செய்ததற்காகக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கைச் சொல்கிறது.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் ‘180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம்’ பற்றியான பட்டியலில், இந்த ஆண்டு இந்திய ஒன்றியம் 142-வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அவர்களின் கடமையைச் செய்தால், அது அவர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியும் என்கிறது இந்த அறிக்கை. RSF அமைப்பு 2002-ஆம் ஆண்டு தொடங்கி இந்தப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டில் 133 வது இடத்திலிருந்து தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது இந்திய ஒன்றியம்.

பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் என்று ஒரு பட்டியலை இதே RSF அமைப்பு வெளியிடுகிறது. அதில் நரேந்திர மோடி, அவர் பிரதமராக பதவி ஏற்றது முதல் இடம்பெற்று வருகிறார். குறிப்பாக மோடி தன்னுடைய ‘பக்த்’ எனப்படும் தொண்டர்களின் மூலம் பொய்களையும், தேசியவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பி மதச்சார்பற்றவர்களையும் (பத்திரிக்கையாளர்களை), பெண் பத்திரிக்கையாளர்களையும் (Presstitutes – பெண் பத்திரிக்கையாளர்களுக்கு prostitutes என்ற வார்த்தையை உருமாற்றி சங்கிகளால் பயன்படுத்தப்படும் வார்த்தை) வேட்டையாடுவதாக குறிப்பிடுகிறது.

(இதில் இலங்கையின் தற்போதைய சனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷ, 2005 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறார். இலங்கை, பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் பற்றியான பட்டியலில் 127 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலை பற்றியான செய்திகளை வெளியிடும் – தங்களது கடமையை செய்யும் பத்திரிக்கையாளர்களை கொலை கும்பல்கள் மூலம் கோத்தபய வேட்டையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறது.)

இந்திய ஒன்றியத்தில் பத்திரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக இந்திய தண்டனைச் சட்டம் 124-A பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள். இந்த அடக்குமுறைகள் கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

கடந்த மே 13 ஆம் தேதி மணிப்பூரைச் சேர்ந்த கிஷோரேச்சந்திர வாங்கேம் (Kishorechandra Wangkhem) என்ற பத்திரிக்கையாளரை வீடு புகுந்து, அவருடைய மூன்று குழந்தைகளுக்கு முன்னால் கைது செய்து இழுத்து சென்றிருக்கிறது அந்த மாநில காவல்துறை. அவரோடு எரென்ட்ரோ லெய்கோம்பம் (Erendro Leichombam) என்கிற, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் படித்த சமூக செயற்பாட்டாளரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. இவர்கள் இருவரும் செய்த குற்றம், முகநூலில், “மாட்டு சாணமோ மூத்திரமோ கொரோனாவை குணப்படுத்தாது; அறிவியலும் பொது அறிவும் தான் மக்களைக் காப்பாற்றும்” என்று எழுதியது மட்டும் தான். மணிப்பூர், பாஜக ஆளும் மாநிலம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவர்கள் இருவருமே இன்றுவரை, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக பிணை இல்லாமல் சிறையில் இருக்கிறார்கள்.

கடந்தாண்டு செப்டம்பர் 14 அன்று உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற ஊரில் 19 வயது பட்டியலின இளம்பெண்ணை உயர்சாதியை சேர்ந்த 4 நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் இறந்தார். இது நாடு முழுவதும் அதிவரலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவை சேர்ந்த சித்திக் கப்பான் என்ற பத்திரிக்கையாளரை தேசத் துரோக வழக்கில் உபியின் யோகி ஆதித்தியநாத் அரசு கைது செய்தது. அவரது தாயார் இறந்த போது கூட அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இன்றுவரை வெளியே விடாமல், நீதிமன்றமே சட்டமீறலில் ஈடுபடும் சூழல் இந்தியாவில் நிலவுவது கொடுந்துயரம்.

கடந்த வருடம் மார்ச் 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிவரை நடைமுறையில் இருந்த ஒன்றிய பொது முடக்கத்தின்போது, குறைந்தபட்சம் 55 பத்திரிக்கையாளர்களாவது, கொரோனா பெருந்தொற்று குறித்தான செய்தியினை வெளியிட்டதற்காகவும் கருத்து சுதந்திரத்தினை பயன்படுத்தியதற்காகவும், கைது, வழக்குப் பதிவு, சம்மன் அல்லது Show-cause notice, உடல் மீதான மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைச் சந்தித்ததாக உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வுக் குழு (RRAG) தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

பத்திரிக்கையாளர்கள் மீதான அதிகமான தாக்குதல்கள் உத்திரப்பிரதேசத்திலும் (11 தாக்குதல்கள்), ஜம்மூ காஷ்மீரிலும் (6 தாக்குதல்கள்), இமாச்சல் பிரதேசத்திலும் (5 தாக்குதல்கள்) நடைபெற்றதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மூன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுமே பாஜக ஆளுபவை என்பது இங்கு பதிவிடத்தக்கது.

இன்னொருபுறம், 2020 நவம்பர் 16-ஆம் தேதி, தேசிய பத்திரிக்கை நாளன்று, ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், “இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக முழு பலத்துடன் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பத்திரிகையாளர்களில் தொடர் பணியினால் மக்களுக்கு இந்த நோய்த்தற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, “மோடி அரசு என்றைக்கும் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்திற்காக பாடுபடும் என்றும் இதை எதிர்ப்பவர்களை என்றும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றார்!

இந்திய ஒன்றியத்தில் 2010-2020 ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்கள் மீதான கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியான சுதந்திர பேச்சு கூட்டமைப்பு (Free Speech Collective) வெளியிட்ட அறிக்கையில், சமீப காலங்களில் இப்படியான நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெரும்பான்மையான வழக்குகள் பத்திரிக்கையாளர்கள் மீது அவர்களுடைய பணியினை செய்ததற்காக பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதை அல்லது தடுக்கப்படுவதையும் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த பத்து வருடங்களில் குறைந்தது 154 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், விசாரணைக்கு அலைத்துச் செல்லப்பட்டுள்ளனர், அல்லது Show-cause notice-கள் பெற்றுள்ளனர். மேலும், இதில் 40 விழுக்காடுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் 2020-இல் நடைபெற்றவை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

இப்படியாக தொடர்ந்து சர்வதேச நிறுவனங்களால் பத்திரிக்கை சுதந்திரத்தில் வழங்கப்படும் குறைவான மதிப்பீட்டை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. அந்தக் குழுவின் கண்டுபிடிப்புகள் (!) இவை தான்:

  1. ஐரோப்பிய நாடுகளின் பாராபட்சம் காரணமாக இந்தியாவிற்கு குறைந்த மதிப்பீடு தருகிறார்கள்.
  1. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் கவனிக்கப்படுவதில்லை.
  1. காஷ்மீரில் உள்ள ராணுவம், பத்திரிகையாளர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக பாதுகாப்பு அளித்து வருகிறது. பயங்கரவாதிகளிடமிருந்து இவர்களைப் பாதுகாப்பதற்காக இவர்களை பல இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிப்பதையும், அடிக்கடி இணைய சேவை நிறுத்துவதையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவது போல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்கள் எழுதுகிறார்கள்.

அதாவது, அவர்கள் கணக்கிடும் முறை தவறு; அவர்கள் இவர்கள் செய்யும் பாதுகாப்பு நடவடிகைகளை தவறாக புரிந்திருக்கிறார்களாம்! (இதே போலத்தான், பொருளாதார வளர்ச்சியை அளவிடும் ஜிடிபி கணக்கீட்டு முறையை மாற்றியது பாஜக அரசு) மாட்டு மூத்திரமும், சாணமும் எல்லா நோய்களையும் குண்ப்படுத்தும் என்று நம்புவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

கிரேட்டர் காஷ்மீர், காஷ்மீர் ரீடர் பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுவதை கண்டித்து காஷ்மீர் பத்திரிக்கைகள் மேற்கொண்ட போராட்டம்

மெய்யில் இவர்கள் மூடர்கள் இல்லை. மிகவும் தெளிவாகவே எல்லா பொய்களையும் திட்டமிட்டு பரப்புகிறது பாஜக அரசு. அரசை வெளிப்படையாக விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் தேச துரோகிகள் என்றும் அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும் ஆளும் பாஜக அரசாலும் அதனது ஆதரவாளர்களாலும் முத்திரை குத்தப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் பாஜகவின் கட்சித் தொண்டர்களால் காவல்துறையின் உதவியுடன் தாக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள் (கௌரி லங்கேஷ் சங்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்). பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும்படி பத்திரிக்கையாளர்கள் நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு அடிபணியாத பத்திரிக்கையாளர்கள் மீது பொதுத்தளத்தில் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பதும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடும் சம்பவங்களும் வெளிப்படையாகவே நடக்கின்றன. ஏற்கனவே, கிட்டத்தட்ட எல்லா பெரு ஊடகங்களையும் வாங்கிவிட்ட பாஜக அரசு, மீதமிருக்கும் ஊடகங்களில் இயங்கும் பத்திரிக்கையாளர்களையும், தனிப்பட்டு இயங்கும் பத்திரிக்கையாளர்களையும் அதிபயங்கரமாக வேட்டையாடி வருகிறது. இவற்றில் பாதி வெளிவந்ததற்கே சர்வதேச சமூகம் மோடி-இந்தியாவை பதட்டத்தோடு பார்க்கிறது.

இதற்காக பாஜக ஆளாத மாநிலங்களில் பத்திரிக்கையாளர்கள் அவர்களது கருத்து சுதந்திரத்தை அவர்கள் விருப்பம் போல் பயன்படுத்துகிறார்கள் என்றில்லை. பாஜகவைப் போல இல்லை என்றாலும் பிற மாநிலங்களிலும் பத்திரிக்கையாளர்கள் மீது சங்கிகளும், அந்த மாநில அரசும், ஒன்றிய அரசும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும் கிட்டத்தட்ட பதவி ஏற்று இரண்டு வருடங்களில் 35 பத்திரிக்கையாளர்கள் சிறைபடுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. சிவசேனா (மற்றொரு இந்துத்துவ அமைப்பு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆளும் மஹாராஷ்டிராவிலும் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சிறைபடுத்தப்படுகிறார்கள். பொது முடக்கத்தின் போது மட்டும், மாநில அரசின் நிர்வாகத்தோல்விகளை சுட்டிக்காட்டியதற்காக பத்திரிக்கையாளர்கள் மீது கிட்டத்தட்ட 15 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இதே நிலை தான் மேற்கு வங்கத்திலும் தொடர்கிறது. அஸ்ஸாமில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தாக்குதலைச் சந்திக்கிறார்கள். ஒப்பீட்டளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பத்திரிக்கை சுதந்திரம்  மிக மோசமாக இருக்கிறது. அதற்கு ஒன்றியத்தில் ஆளும் மோடியின் பாஜக அரசும் துணை போகிறது.

இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து; அதை சர்வதேச சமூகம் கைக்கொட்டி சிரித்து வேடிக்கைப் பார்க்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »