உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவெடுக்கும் மின்னணு-கழிவுகள் (E-Waste)

உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவெடுக்கும் மின்னணு-கழிவுகள் (E-Waste)

சுற்றுச்சூழல் குறித்து கவலைகொள்ளும் நாம், சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு இயல்பாக தொழிற்சாலைகளின் கழிவுகள் முக்கிய பங்கு வகிப்பதை அறிந்திருப்போம். ஆனால், நாள்தோறும் நாம் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள் அதன் செயல்தன்மையை இழந்ததும், குப்பையில் தூக்கி எறியும் மின் பொருட்கள் ஏற்படுத்தும் சூழியல் சீர்கேடு குறித்து கவலைப்படுவதே இல்லை. கணினிமயமாக்கப்பட்ட நவீன உலகின் இந்த மின்சாதன கழிவுகள் வேகமாக உருவெடுத்து வரும் பிரச்சனையாக உளது. மின்னணு-கழிவுகள் எனப்படும் இந்த மின் பொருட்கள் நம் கைகளை விட்டு சென்ற பின்னால் என்ன ஆகிறது என்று நாம் இங்கு தெரிந்துகொள்வோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலைபேசி, கணினி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி போன்ற அனைத்து வகையான மின்/மின்னணு சாதனங்கள் முதலியவை பயன்படுத்த முடியாத நிலையில் அது குப்பையாக மாறுவதை தான் மின்னணு-கழிவுகள் என்கிறோம்.

மின்னணு-கழிவுகளின் அளவுகள்:

சர்வதேச தொலைத்தொடர்பு தொழிற்சங்கம் (International Telecommunication Union) 2019 வெளியிட்ட தகவலின்படி, உலகம் முழுவதும் பயனற்று சேர்ந்த மொத்த மின்னணு-கழிவுகள் 53 மில்லியன் மெட்ரிக் டன்கள் (மி.டன்.). இது கடந்த ஐந்து ஆண்டுகளை (2014 – 2018) காட்டிலும் 20% அதிகம் என்பது கவலைக்குரிய ஒன்று.

சர்வதேச அளவிலான எண்ணிக்கை இப்படி இருக்க, இந்தியாவில் 2019-ல் குவிந்த 3.2 மி.டன்களோடு மூன்றாம் இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களை சீனா & அமெரிக்கா முறையே 10.1 மி.டன்கள் , 6.9 மி.டன்கள் என்கிற அளவில் அதிர்ச்சியளிக்கிறது. இதே சீரான அளவில் சென்றால், இந்தியாவின் அடுத்த வருட மின்னணு-கழிவுகள் சுமார் 5 மி.டன்களாக இருக்கும் என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. 2020-ம் ஆண்டு ஐநா வெளியிட்ட “Global E-Waste Monitor” என்கிற ஆய்வறிக்கையில், உலகளவில் குவிந்த கழிவுகளில் வெறும் 17.6% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது. மறுசுழற்சி குறித்தான கொள்கை திட்டங்களை வைத்திருக்கும் நாடுகள் கூட சேகரிப்பு & மறுசுழற்சி முறைகளை பெயரளவிற்கே நடைமுறைப்படுத்துகின்றன.

இந்தியாவில் இருந்து குவியும் மின்னணு-கழிவுகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகின்றது. வெளிநாடுகளில் ஏலத்தில் விடப்படும் மின்னணு-கழிவுகளை குறைந்த விலையில் இங்குள்ள நிறுவனங்கள் இறக்குமதி செய்து அதிகம் இலாபம் பார்க்கின்றன. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உணருவதே இல்லை. இப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 1.3 மி.டன் கழிவுகள் இங்கே தஞ்சமடைகின்றது.

மின்னணு-கழிவு சட்டங்கள்:

இந்திய ஒன்றியத்தில் மின்னணு-கழிவுகளுக்கான சட்டம் என்பது “மின்னணு-கழிவு மேலாண்மை & கையாளும் விதிமுறைகள்” (E-Waste Management & Handling Rules) என்ற பெயரில் முதன்முதலில் 2011-ல் இயற்றப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த காலங்களில் “அபாயகரமான கழிவுகள் மேலாண்மை, 1989” (Hazardous Wastes Management, 1989) என்கிற வரையறைக்குள் இருந்துள்ளது. இந்தச் சட்டம் 2012-ல் அமலுக்கு வந்தபிறகு, கூடுதலாக “உற்பத்தியாளர்களின் கூடுதல் பொறுப்பு” (EPR – Extended Producer Responsibility) என்கிற சரத்து சேர்க்கப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மின்னணு பொருட்கள்  உற்பத்தி செய்தததிலிருந்து, அதன் ஆயுட்காலம் முடிந்த பின்பு, அதை முறையாக சேகரித்து மறுசுழற்சி அல்லது அப்புறப்படுத்தும் வேலைத்திட்டங்களை அதன் தயாரிப்பாளர்களே உரிமை கோரும் முறை வகுக்கப்பட்டது.

மின்னணு-கழிவுகள் பொதுவாக கையாளப்படும் முறை

சர்வதேச அளவில் மொத்தம் 67 நாடுகள், மின்னணு-கழிவுகள் குறித்தான சட்டத்தை இயற்றியுள்ளன. சில நாடுகள் EPR என்கிற சரத்தை பின்பற்றினாலும், உள்நாட்டில் மட்டுமே இந்த மேலாண்மை சட்டங்களை முறையாக பின்பற்றுகின்றனரே தவிர, குறிப்பாக வளரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கழிவுகளை பெரிதளவில் தங்கள் கண்காணிப்பில் கொண்டுவர முற்படுவதில்லை.

“ஒரு அபாயகரமான கழிவு நாடுகடந்து செல்லும் பொழுது, அதுகுறித்து கையாளும் வழிமுறைகளை வகுப்பது தான் “Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Waste” என்கின்ற அமைப்பின் நோக்கம். இந்த கூட்டமைப்பில் 187 நாடுகள் அங்கம் வகுத்திருந்தாலும், இப்படிப்பட்ட அபாயகரமான கழிவுகளை இடமாற்றம் செய்யும்பொழுது, அந்த மின்னணு-கழிவுகள் பற்றிய விபரங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவற்றை பட்டியலிட்டு எழுத்து வடிவிலான ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மின்னணு-கழிவு மறுசுழற்சி கட்டமைப்புகள்:

உலகின் மொத்த மின்னணு-கழிவுகளில் 17.6% மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. மீதமுள்ளவை மண்ணிலேயே தங்கிவிடுகின்றன. இதற்கு முன்னர் கூறியது போல EPR என்கிற சட்டமுறையின் மூலம், 2016-ம் ஆண்டில் மின்னணு-கழிவுகள் சேகரிப்பு மையங்கள் குறித்தான இலக்கு உற்பத்தியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ASSOCHAM அமைப்பின் பொதுச் செயலாளர் DS ராவத் 2016-ல் அறிவித்தபடி, இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் உள்ள சேகரிப்பு மையங்கள் இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் மையங்கள் அளவு (டன்கள்)
தமிழ்நாடு 14 39,000
புது தில்லி 13 47,000
மும்பை 22 32,000
கர்நாடகா 52 50,000
மேற்கு வங்கம் 1 600

 

அக்டோபர் 2017-ல் சீன மொபைல் நிறுவனமான சியோமி இணையத்தின் மூலமாக வாடிக்கையாளர்களிடம் இருக்கும் அனைத்து வகையான மின்னணு-கழிவுகளை 500 நகரங்களில் இருக்கும் மையங்கள் மூலமாக சேகரித்து வருகிறது. சியோமி இந்தியா நிறுவனத்தின் முரளி கிருஷ்ணன், 2018-ல் இதுவரை 60,000 கிலோ மின்னணு-கழிவுகளை சேகரித்து உள்ளதாக கூறுகிறார். இதனோடு நில்லாமல், “கரோ சம்பவ்” (Karo Sambhav) என்கிற அமைப்போடு கூட்டு ஒப்பந்தம் மூலம் 10,000 சேகரிப்பு மையங்களை இந்தியாவின் 500 நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராமில் இயங்கி வரும் கரோ சம்பவ் என்ற அமைப்பின் நிறுவனர் ப்ரன்ஷூ சிங்கால் (Pranshu Singhal). இந்த அமைப்பு மொத்தம் 28 நிறுவனங்களோடு வேலை செய்து ‘கழிவு சேகரித்தல் இலக்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழ்நாட்டின் கோவை மாநகரில் “கிரீன் எரா” (Green Era) என்ற நிறுவனம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அங்கீகாரத்தோடு 2018-ம் ஆண்டு கோவை பாரதி பூங்கா அருகே, தமிழ்நாட்டில் முதன்முதலாக மின்னணு-கழிவுகள் போடுவதற்கான குப்பை தொட்டியை அறிமுகம் செய்துள்ளது. இதில் சிறிய வகை கழிவுகளான மின்கலம், அலைபேசி மற்றும் சிஎஃப்எல் (CFL) பல்புகள் போடுவதற்காக வடிவமைத்துள்ளது.

 

சூழலியல் பாதிப்புகள்:

மேலும் இவ்வகையான மின் சாதனங்களில் உள்ள உதிரி பாகங்களில் தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம், மெர்குரி, காட்மியம், லெட்(Lead) மற்றும் அரிய வகை உலோகங்களான இண்டியம், பல்லாடியம் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. இது போன்ற உலோகங்கள் தூக்கி எறியப்பட்டு நேரடியாக நிலம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மின்னணு-கழிவு மையங்கள் மூலம் மின்னணு-கழிவுகளில் உள்ள உலோகங்கள் மறுபயன்பாட்டுக்காக பிரித்தெடுக்கப்படுகின்றன. இதை பிரித்தெடுப்பதற்காக பெரும்பாலும் அமிலங்களே பயன்படுத்தபடுகிறது. இந்த அமிலங்களின் வழியே வெளியேறும் திரவமானது, நேரடியாக பூமிக்கடியில் செல்லும் போது, நிலங்கள் மட்டும் நிலத்தடி நீரும் அதன் இயல்புத்தன்மையை இழந்து நச்சுத்தன்மை வாய்ந்தவையாக மாறுகின்றன.

உலோக பிரித்தெடுத்தலின் மற்றொரு வழிமுறையாக திறந்தவெளியிலே செப்பு கம்பிகள் மற்றும் Printed circuit board-களை எரிக்கும் பொழுது, அது காற்று மாசுபடுதலையும் கூடுதலாக உற்பத்தி செய்கின்றன.

தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையும் அவலங்களும்:

2020-ல் வல்லரசு எனும் வெற்று கனவுகளை மட்டும் வைத்து கொண்டு, ஒரு தொலைநோக்கு பொருளாதார, சூழலியல் கொள்கை இல்லாமல் உழைக்கும் தேசிய இன மக்களை பணியமர்த்தி வருகிறது இந்திய ஒன்றிய அரசு.

அரசின் மெத்தனபோக்கு ஒருபுறம் இருக்க, இந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் முதலாளிகள் கொடுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வெறும் சாக்குப்பை மட்டுமே என்பது கூடுதல் அதிர்ச்சி. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், வெறும் கைகளை கொண்டே அலைபேசிகளின் உள்ளே இருக்கும் நெகிழி பாகங்கள், உலோக மற்றும் இதர ரசாயன மூலப்பொருட்களை பிரித்தெடுத்து, தேவையற்ற பாகங்களை இந்த சாக்கு பைகளின் மூலம் சேமிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மின்னணு-கழிவுகளின் பிரம்மாண்ட மையங்களாக இருக்கும் புது தில்லியின் சீலம்பூர் மற்றும் மொராதாபாத் குப்பை கிடங்குகளில் சுமார் 5-10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைசாரா கூலி தொழிலாளர்களாக பணியில் உள்ளனர்.

இந்தியாவில் மட்டும் குறிப்பாக, மின்னணு-கழிவுகள் கையாளும் பணிகளில், ஏறத்தாழ 4-5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் 10 முதல் 15 வயது வரம்புகளில் அதிகளவில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். முறையான பாதுகாப்பு வழிமுறைகள் & உபகரணங்கள் இல்லாமல் பல்வேறு சேகரிப்பு/மறுசுழற்சி மையங்களில் வேலை செய்வதே இவர்களின் பிரதான பணியாக உள்ளது என்று ASSOCHAM பொதுச் செயலாளர் D.S.ராவத் 2016-ல் இதை குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அபாயகரமான சூழலில் வேலை செய்யும் இந்த குழந்தைகள் ஆஸ்துமா மற்றும் பல்வேறு உடல் உபாதைகளின் தாக்கத்தினால் 35 முதல் 40 வயது நிரம்பிய பிறகு அவர்களது உடல்நிலை பெரிதும் ஒத்துழைப்பதில்லை. முறையான பாதுகாப்பு இல்லாமல், மின்னணு-கழிவுகளை ஏரிப்பதன் மூலம் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் நேரடியாக வெளியில் தெரியும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதோடு நில்லாமல், கழிவுகள் எரியூட்டிய பின்னர், காற்று வழியாக அந்த உலோக மற்றும் ரசாயன துகள்கள் தொழிலாளர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள், குடிநீர் வழியாக உடலுக்குள் செல்வதால் இன்னும் ஏராளமான உடல் உபாதைகள் வரவழைக்கின்றன.

மேலும் இந்த வகையான மற்றும் பல்வேறு நச்சுமிக்க பொருட்களினால் வரும் நோய்களின் பட்டியல் கீழே (ஆங்கிலத்தில்) கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்வு வழிமுறைகளும், சந்தை நிலவரங்களும்:

நுகர்வோர்கள் பயன்படுத்தும் மின்னணு பொருட்களின் ஆயுட்காலம் பற்றி ஒரு விரிவான விவாதத்திற்கு உட்படுத்தாமல் எளிதில் கடந்து சென்று விடமுடியாது. ஏனென்றால் “பொருள் வடிவமைப்பு” துறையில் Planned obsolescence பெயரில், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மிக குறுகிய இடைவெளியில் பல்வேறு அம்சங்களுடன் கவர்ச்சிகரமான விளம்பரங்களோடு அடுத்தடுத்து பொருட்களை விற்பனை சந்தையில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கும். குறைவான ஆயுட்காலம் கொண்ட மின்னணு பொருட்களுக்கு சிறந்த உதாரணம் தகவல் தொழில்நுட்ப சாதனங்களான மவுஸ் (Mouse), விசைப்பலகை (Keyboard) , மற்றும் ஒலிப்பெட்டிகள் (Speakers).

பெருமளவு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பங்குபெறும் இந்த முறைசாரா தொழிலாளர்களின் அவலக்குரல்களை அரசுகள் செவிசாய்க்கும் வண்ணம், உலகளவில் இயங்கும் தொழிற்சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் போராட்டங்களின் வழியே, தீர்வுகளை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டங்களை வகுப்பதே நம் தலையாய பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »