மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டம்
(இக்கட்டுரை 23 ஜூலை 2021 அன்று வெளியிடப்பட்டது. தற்போது மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.)
ஜூலை 23, 1999 தமிழ்நாட்டின் மற்றுமொரு கருப்பு தினம். மாஞ்சோலை தொழிலாளர்கள் அடிப்படை உரிமைக்காக போராடியபோது அதோட்டத் தொழிலாளர்களை தமிழ்நாட்டுக் காவல்துறை திட்டமிட்டுக் கொன்று ஆற்றில் வீசியது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசும் அரசியல்வாதிகளும் இழைத்த அநீதி, 22 ஆண்டுகளாக இன்றளவும் உரிமைக்காகப் போராடும் மக்களின் மனதில் பெரும் வடுவாகவே உள்ளது.
மாஞ்சோலை வரலாறு
இயற்கை எழில் மிகுந்த திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்கள் அமைந்துள்ளது. இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீன்தார், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மனின் போர் வெற்றிக்கு உதவினார். இந்த உதவிக்கு நன்கொடையாக மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 74 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை மன்னர் மார்த்தாண்டவர்மன் சிங்கம்பட்டி ஜமீனுக்கு வழங்கினார்.
1930-இல் ஜமீன் தன்னிடம் இருந்த நிலத்தில் 8,374 ஏக்கரை, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மார்வாடி முதலாளி நுலேவாடியா என்பவரின் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்திற்கு 110 வருட காலம் குத்தகைக்குக் கொடுத்தார். பின் 1948-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில், அனைத்து ஜமீன் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டன. இதனால் மீண்டும் பிபிடிசி நிறுவனம் அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிடம் 2029-ஆம் ஆண்டு வரைக்கான ஒப்பந்தத்தை சில நிபந்தனைகளுடன் புதுப்பித்துக்கொண்டது.
மக்களின் வாழ்வியல்
திருநெல்வேலியை சுற்றியுள்ள மாவட்டங்களில் பஞ்சம், பட்டினி மற்றும் சாதி ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்கள், 1929-ஆம் ஆண்டு முதல் இந்த மலைப்பகுதியில் கூலி வேலைக்காக பிபிடிசி நிறுவனத்தால் குடியமர்த்தப்பட்டனர். நான்கு ஐந்து தலைமுறைகளாக இங்கு வேலை செய்யும் பட்டியலின மக்களே மேற்கு தொடர்ச்சி மலையை, தேயிலை, ஏலம், மிளகு மற்றும் காபி போன்ற பணப்பயிர்களை விளைவிக்கும் எஸ்டேட்களாக உருவாக்கினர்.
வெளியூரிலிருந்து இங்கு குடியமர்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் கடும் குளிருக்கும், வேலை சுமைக்கும் நடுவில், அடிப்படை வசதி இல்லாமல் ஒரே வீட்டில் 5, 6 குடும்பங்களாக, தங்களுக்கென்று ஒரு அடி நீளம் கூட இல்லாமல் சொந்த நாட்டில் அகதிகளாகவே வாழத் தொடங்கினர்.
இங்கு, சுமார் 5,000-திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தோட்டத் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளையோ, கால்நடைகளையோ வளர்க்கக் கூட நிறுவனம் அனுமதியளிக்கவில்லை என்று கூறுகிறார் மாஞ்சோலையில் வளர்ந்த வழக்கறிஞர் திரு. இராபர்ட் சந்திரசேகர் அவர்கள்.
போராட்டமே வாழ்க்கை
இந்தியா சுதந்திரம் அடைந்ததையே பொருட்படுத்தாமல் தங்கள் அடிமை வாழ்க்கையை தொடர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் முதல் போராட்டம், மலைப்பகுதியில் தேயிலைப் பறிக்க டிராலி வண்டிகளை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக 1968-ஆம் ஆண்டில் நடந்தது.
1978-இல் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பிற வேலை நேரத்தைப் போலவே கூடுதலாக இரண்டு இட்லி காலை உணவாகக் கொடுக்க வேண்டும் என்று போராடினர்.
மற்றும், குடியிருப்பிலிருந்து பல மைல் தூரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோட்டத்திற்குச் செல்ல கூடுதலாக 10 நிமிடம் தரவேண்டும் என 1988-இல் போராடினர்.
அனைத்துப் போராட்டங்களிலும் வெற்றியும் பெற்றுள்ளனர். இவ்வாறு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் உரிமைக்காக இந்த மக்கள் குரல் எழுப்பிக் கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், தினக்கூலிக்கு வேலை செய்யும் இவர்கள் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களும் எப்பொழுதுமே வேலை நேரத்திற்கு முன்பு அல்லது மாலை நேரத்தில் மட்டுமே இருந்தது என்றார் வழக்கறிஞர் திரு. இராபர்ட் அவர்கள்.
1998 மக்களவைத் தேர்தல்
1998 ஜூலை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாஞ்சோலை மக்களை சந்தித்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அந்த மக்களுக்கு அடிப்படை ஊதியம் 33 ரூபாயும், இதர படிகள் சேர்த்து 56 ரூபாய் மட்டும் தினக்கூலியாக வழங்கப்படுகின்றன போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டதும், கண்டிப்பாக இந்த கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து மக்களை விடுவிப்பதாக தொழிலாளர்களிடம் வாக்களித்தார்.
தேர்தலுக்குப் பின், தொழிலாளர்களுக்கு அடிப்படையாக ஒருநாள் சம்பளம் ரூ.150 தர வேண்டும், 15 கிலோவிற்கு மேல் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.5 அதிகமாக வழங்க வேண்டும், 8 மணி நேரம் வேலை நேரம் போன்ற தொழிலாளர்களுக்கான 25 அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற பிபிடிசி நிறுவனத்தை தேயிலைத் தொழிலாளர்களின் சார்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆகஸ்ட் 20, 1998 வரை காலக்கெடுவும் கொடுத்தார். இதுவே மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பப்புள்ளி.
போராட்டம் தொடக்கம்
இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிறுவனத்திற்கு எதிராக ஆகஸ்ட் 20, 1998 அன்று மாஞ்சோலை தொழிலாளர்கள் முதல் முறையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று நிறுவனம் அறிவித்தது. இந்த தொழிலாளர்களுக்காக 1950-களில் இருந்து செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற தொழிற்சங்கங்களைக் கலைத்து, புதிய தமிழகம் கட்சி தனியாக ஒரு தொழிற்சங்கத்தை அமைத்தது.
இதுவரை சாதியக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த புதிய தமிழகம் கட்சி முதல் முறையாக தொழிலாளர் பிரச்சனையை கையில் எடுத்தது. அன்றிலிருந்து பத்து நாட்களில் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை கொண்டு வேலை தொடங்கப்பட்டதை எதிர்த்து மக்கள் தேயிலையை கொண்டுச் செல்லும் லாரியை மறித்து, விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் வரவழைக்கப்பட்டது. ஒரு வாரக்காலம் அங்கு ரோந்தில் இருந்த காவல்துறை தடியடி நடத்தி 127 பேரை கைதும் செய்தது. 40 நாட்கள் கழித்து திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ் அவர்களின் உதவியால் மாஞ்சோலை தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 4 மாதங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டனர். அதுவரை பெரிதாக வெளி உலகத்தொடர்பு இல்லாத மக்கள், தேயிலைத் தோட்டத்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் மாதக்கணக்காக வறுமையில் வாடினர். தொடர்ந்து நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிறுவனம் செவி சாய்கவில்லை. நான்கு மாதங்களுக்கு மேல் இந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பேச்சுவார்த்தைக்குப் பின் சிலர் 1999 ஜனவரி மாதம் 5-ஆம் நாள் வேலைக்கு திரும்பினர். இதனால் தொழிலாளர்களுக்கும் கட்சித் தொழிற்சங்கத்தினருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் இடையே முதல்முறையாகப் பிளவு ஏற்பட்டதாக கூறிகிறார் வழக்கறிஞர் திரு. இராபர்ட் சந்திரசேகர். இதற்கிடையில் தொழிலாளர் அந்தோணி முத்து மற்றும் பாலகிருஷ்ணன் படுகொலையும் மக்களிடையே பதட்டத்தை உண்டாக்கியது. அந்தோணி முத்து கொலை வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 11 பேர் மேல் வழக்கு பத்தியபட்டது.
நான்கு மாத போராட்டத்திற்கு பிறகு வேலைக்குச் சென்ற மக்களுக்கு, முன்பு போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட கொடுக்க மறுத்தது நிறுவனம். மேலும், இந்தப் போராட்டத்தில் பங்குப் பெற்ற தற்காலிகப் பணியாளர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்று நோட்டீசும் அனுப்பியது நிறுவனம். இதைக் கண்டித்து மாஞ்சோலை தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம்
இந்த வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து ஏப்ரல், 30, 1999 அன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி 8 மணி நேர வேலை, தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது, மேலும் தொழிலாளர்களின் ஒழுங்கு நடவடிக்கையை விசாரிக்க மாஞ்சோலை தொழிலாளர்கள் இணை ஆணையருக்கு உரிமை போன்றவை வழங்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் ஒப்புதலுடனேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஆனால் 150 ரூபாய் கூலி உயர்வு தொழிலாளர்களின் சிம்ம சொப்பணமாகவே இருந்து வந்தது. இருப்பினும் வறுமையை போராட முடியாமல் மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினர். நிறுவனமும் இந்த உரிமைகளை வழங்க மனமில்லாமல் வழங்கியதாக கூறப்படுகிறது. மே 3 முதல் மக்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.
அதன்பின் மாஞ்சோலை வந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், தொழிலாளர்களை மிரட்டியே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், இதை ரத்து செய்வதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து மீண்டும் போராடப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணாசாமி அவர்கள் தொழிலாளர்களை ஒன்றுத்திரட்டி 1999 ஜூன் மாதம் 6 மற்றும் 7-ஆம் தேதி தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டனர். இதில் 451 ஆண்களும், மறுநாள் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய 198 பெண்களும், 4 ஆண்களும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். உரிமைக்காக போராடிய 652 தொழிலாளர்களைக் கைது செய்த சம்பவம் பொதுமக்கள்ளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கைது சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.
மக்கள் பேரணி
அரசின் இந்த ஜனநாயகமற்ற செயலை கண்டித்து மக்கள் ஜூன் 23 ஒன்றுகூடினர். கைது செய்யப்பட்ட தொழிலார்களை விடுவிப்பதை பிரதான கோரிக்கையாகவும், கூலி உயர்வு மற்றும் எஸ்டேட்டை அரசே எடுத்து நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 5,000 தொழிலாளர்களும், கிராம மக்களும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் 23 ஜூலை 1999-ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர். திருநெல்வேலி சந்திப்பில் தொடங்கியப் பேரணி பெரும் உத்வேகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. ஆனால், மாவட்ட ஆட்சியரை சந்திக்க அவர்களை காவல் ஆணையர் சைலேஷ் குமார் அனுமதிக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்திற்கு 50 மீட்டர் முன்பே காவலர்கள் பேரணியை தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்தனர். ஆட்சியர் அலுவலக மதில் சுவருக்கும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கும் நடுவே பொதுமக்கள் செல்ல முயன்றனர். அப்பொழுது போலீஸ் வானத்தை நோக்கி சுட்ட துப்பாக்கிச் சத்தம் கேட்கவே, மக்கள் என்ன செய்வது என்று குழம்பிய நேரத்தில், காவல்துறை மக்கள் மீது தடியடி நடத்தி துரத்த ஆரம்பித்தது. உயிர் தப்பிப்பதற்கு வேறு வழி இல்லாமல் தாமிரபரணி ஆற்றில் மக்கள் இறங்கி மறுபுறம் செல்ல முயன்றனர். இதைக் கவனித்த காவல்துறையும், ஆற்றின் மறுபக்கம் சென்று மக்களைச் சுற்றி வளைத்து கரை ஏற விடாமல் அடித்தனர். அடிப்படை உரிமைக்காக போராடிய மக்களிடம் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடியில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து ஓடிய மக்ககளை கற்கள் கொண்டும், கண்ணீர் புகை குண்டுகள் கொண்டும் காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டது. இறுதியாக, அடித்த ரத்தக் காயங்களுடன் மயங்கியவர்களின் உடலை ஆற்றில் வீசியது. ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ் அவன் தாய் ரத்னமேரி, ஜோஸ்பின், ஷாநவாஸ், ஆறுமுகம், ரத்தினம், ஜெயசீலன், குட்டி (குமார்), ஜான் பூபாலராயர், இன்னாசி மாணிக்கம், ஆண்டணி, சஞ்சீவி, ராஜு, முருகன், வேலாயுதம், கெய்சர், அப்துல் ரஹ்மான் ஆகிய 17 பேரை காவல்துறைக் கொடூரமாகக் கொலைசெய்தது.
படுகொலை ஒருபுறம் இருக்க, கரையில் இருந்த மக்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர். கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் காயமுற்றுக் கிடந்த நிலையிலும் மக்களைத் தேடித்தேடி கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பத்திரிகையாளர்களையும் காவல்துறை தாக்கியது குறிப்பிடத்தக்கது. பெண்களின் ஆடைகளை உருவி அவமானப்படுத்தியது. மேலும் அடிபட்டு அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையும் வீடு புகுந்து தாக்கியது. மக்களை சாதியைக் குறிப்பிட்டு “உங்களுக்கு எல்லாம் ஒரு போராட்டமா? இனி போராடுவீர்களா?” என்றும், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் சாதி ஆதிக்க வெறியை வெளிப்படுத்தியது காவல் துறை.
மேலும், கிராமத்து மக்கள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக இரத்தக் காயத்தோடு கரையொதுங்கிய உடலுக்கு பொய்க் கதையை போலீசார் ஜோடித்தனர். அதைப் போலவே, பிரேதப் பரிசோதனையிலும் மக்கள் நீரில் மூழ்கி இறந்ததாக மருத்துவர்கள் சான்று வழங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் கொல்லப்பட்ட போராளிகளுக்கு நீதி கேட்டு மறுபரிசோதனை செய்யக் கூறி பிணங்களை வாங்க மறுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு, ஐந்து நாட்கள் கழித்து வெவ்வேறு இடத்தில் அரசே பிணங்களை புதைத்தது. யாரை எங்கு புதைத்தோம் என்று கூட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
அரசின் அறிக்கை
அப்பொழுது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் தனி நபர் கமிஷனை அமைந்தது. இதை விசாரித்த நீதிபதி மோகன் அவர்கள், 11 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றவர்கள் காயத்தால் இறந்ததாகவும் அரசுக்கு சாதகமாகவே குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தப் பேரணியில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் அறிக்கை சமர்ப்பித்தார்.
அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், தொழிலாளர்களுக்கான முழு சம்பள கோரிக்கையைத் தவிர மற்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது என்றும், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மட்டுமே காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்த திட்டமிட்ட படுகொலையை நியாயப்படுத்தினார்.
47 நாட்களுக்குப் பின் ஜூலை 28-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களும் விடுதலைச் செய்யப்பட்டனர். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை நிர்வாகம் கொடுக்கத் துவங்கியது.. மேலும் 2001-ல் தான் தினக்கூலி 56 ரூபாயில் இருந்து 76 ரூபாயாக நிறுவனம் உயர்த்தியது.
பேரணி நடந்ததிலிருந்து 6 மாதத்தில் நடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி 10 தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
பேரணியில் பங்கேற்ற மக்களின் நேர்காணல் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளையும் இணைத்து “நதியின் மரணம்“ என்ற ஆவணப்படத்தை 1999 அக்டோபர் மாதம் தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன், காஞ்சனை திரைப்பட இயக்கத்தில் வெளியிட்டார். இதற்கு வழக்கு பதியப்பட்டு, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு மக்களுக்காக போராடிய செயல்பாட்டளர்களை முடக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டது.
உரிமைக்காக ஒன்று சேரும் மக்களின் எழுச்சியை விரும்பாத அரசு, வன்முறை மூலம் தன் அடக்குமுறையையும் பனியாக்களுக்கான விசுவாசத்தையும் காட்டியது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பதில் மரணமாகவே இருந்தது.
இன்றும் ஜூன் 23-ஆம் தேதி தமிழ்நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவிடம் அமைப்பது 12 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருக்கிறது.
அதிமுக-பாஜக அரசால் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக நம் கண்முன்னே நடந்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு எந்த விதத்திலும் குறையாத கொடூரம் மாஞ்சோலைப் படுகொலை என்றால் மிகையாகாது. அரசு என்றும் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை நசுக்கவே பார்க்கிறது. மேலும், மக்கள் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய காவல்துறையினர் முதலாளித்துவவாதிகளின் அடியாட்களாக இருக்கின்றனர் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இந்த இரண்டு சம்பவங்களும்.