பெகாசஸ்: நடவடிக்கை எடுத்த பிரான்ஸ்! கள்ள மவுனம் காக்கும் மோடி!

பெகாசஸ்: நடவடிக்கை எடுத்த பிரான்ஸ்! கள்ள மவுனம் காக்கும் மோடி!

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் இருக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மக்கள் போராளிகள், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களை, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO என்ற நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ என்ற உளவுச் செயலி மூலம் அரசுகளும், அரசு நிறுவனங்களும் உளவு பார்த்த செய்தி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், 40-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இரண்டு ஒன்றிய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி என 300-க்கும் அதிகமானவர்களின் தொலைபேசிகளை மோடி அரசு உளவு பார்த்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் இந்த செய்தி வெளியானது முதல், இந்தியாவில் நிலவும் ஜனநாயகம் குறித்த கேள்விகள் எழ துவங்கியுள்ளன. இந்திய மோடி அரசின் இந்த செயல், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் எனவும், மோடி அரசு பாசிசத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், மக்களை அச்சுறுத்துகின்ற இந்த செயலை, பாசிச மோடி அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவு பார்த்தது குறித்து இதுவரை இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரான்ஸ் அரசு இது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து இருக்கிறது. ஏனென்றால் இந்த உளவு பட்டியலில் பிரான்ஸின் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  15 முக்கியமானவர்களின் தொலைபேசியும் 2019-இல் இருந்து கண்காணிக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல் பிரான்ஸின் முன்னனி தினசரி பத்திரிக்கையான லீ மாண்ட் (Le Monde) செய்தி வெளியிட்டதையடுத்து, பிரான்ஸ் அரசு உடனடியாக விசாரணை ஆணையத்தை அமைத்து இருக்கிறது.

மேலும், அந்த பத்திரிகை, பிரான்சில் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு மேல் உளவு பார்க்கப்பட்டிருப்பதாகவும், அதில் 600 பேர் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என்றும் 189 பேர் பத்திரிக்கையாளர்கள் என்றும் இன்னும் நிறைய பேர் உளவு பார்க்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இது பிரான்சில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உடனடியாக இதுகுறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் இது தங்கள் நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர் என்றும், உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கான தண்டனை மிகக் கொடூரமாக இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது

உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் அதிபரையே உளவு பார்த்துள்ளனர் என்ற செய்தி உலக நாடுகளையே அச்சுறுத்தியுள்ளது. அதற்கான எதிர்வினையை பிரான்ஸ் நாடு உடனடியாக செயலாற்றத் துவங்கியது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா, உளவு பார்த்தால் விசயத்தில் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி தற்போது எழுகிறது.

பெகாசஸ் செயலியை உருவாக்கிய NSO நிறுவனம், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, தீவிரவாதிகளை கண்காணிக்கவும், சமூகவிரோத செயல்களை தடுப்பதற்காகவும், தேர்ந்தெடுத்த அரசுகள் மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே வணிகரீதியாக பெகாசஸ் செயலியை விற்பதாக கூறுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டின் அனுமதியுடனே விற்பதாகவும் கூறுகிறது. அப்படியென்றால், இந்தியாவில் உளவு வேலையை செய்தது மோடி அரசாக இல்லாமல், வேறு யாராக இருக்கும்? இந்தியாவின் மாநில அரசுகளை, ஒன்றிய அரசை மீறிய ஒரு அரசாக சர்வதேசம் பாவிப்பதே இல்லை.

இந்த உளவு செய்தி வெளியான அன்று, உளவு பார்க்கவில்லை என்று உடனடியாக மறுப்பு தெரிவித்தது மோடி அரசு. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கும், இப்படியான செயலுக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கும் துளியளவும் தொடர்பில்லை என்று மறுத்தது. ஆனால், 2019-இல் இதே பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியான போது, மோடி அரசு அதனை மறுக்கவில்லை. இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு, மோடி அரசு உளவு பார்த்தது என்று இன்று அப்பட்டமாக வெளியான பின்பு, அதனை முற்றிலும் மறுக்கிறது. மறுப்பது ஒரு புறம் இருந்தாலும், இந்தியா குடிமக்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் உளவு வேலை பார்த்ததற்கு, ஒரு அரசாக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விகள் எழுகிறது.

உளவு விவகாரத்தை மறுக்கவில்லை என்று சொல்லும் மோடி அரசு, பெகாசஸ் செயலியை பயன்படுத்தியதில்லை என்று இப்போது வரை கூறவில்லை. 2017-ம் ஆண்டு இந்திய பிரதமர் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து வந்த பிறகு தான் பெகாசஸ் செயலி இந்தியர்கள் மீது உளவு பார்க்க பயன்பாட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் நாட்டின் NSO நிறுவனமும் இதுவரை இதனை மறுக்கவில்லை.

இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக இந்திய மோடி அரசு இதுவரை எந்த ஒரு தகவலும் தராமல், எந்த ஒரு பதிலையும் வழங்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்த கள்ள மவுனமே இந்த இஸ்ரேலிய நிறுவனத்தைக் கொண்டு இந்தியர்களை உளவு பார்த்தது மோடி அரசுதான் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இருக்கிறது. ஒருவேளை இந்திய அரசு நாங்கள் பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவு வேலைகள் எதுவும் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பாக சொல்லுமேயானால், இந்திய மோடி அரசிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்வி இருக்கிறது.

நீங்கள் (மோடி அரசு) உளவு பார்க்கவில்லையென்றால், அந்நிய நிறுவனத்தை கொண்டு இந்தியர்களை உளவு பார்த்தது யார்? இது குறித்து ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது அல்லது மறுக்கிறது? வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தியர்கள் இவ்வளவு பேர் அதுவும் மிக முக்கியமான பொறுப்புகளில் உள்ள பல பேரை உளவு பார்த்திருக்கிறார்கள் என்றால் மோடி அரசுக்கு  நிர்வாகத் திறமை இல்லை என்பது தானே வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது இன்று.

தங்களது நாட்டில் 15 பேரை உளவு பார்த்தார்கள் என்பதற்காக பிரான்ஸ் அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தும் பொழுது 300-க்கும் அதிகமான நபர்களை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று உளவு பார்த்திருப்பதாக அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இத்தனை நாட்களாகியும் இந்திய அரசு மௌனம் கலையாமல் இருப்பதுதான் பாஜகவின் தேசபக்தியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »