சாப்ளினை வெளியேற்றிய அமெரிக்கா
உலக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினை தெரியாதவர் இருக்க முடியாது. 1914ல் ஓசையில்லா திரைப்படங்கள் உருவான காலத்தில் தனது பயணத்தை தொடங்கிய சாப்ளின் ஓசையுள்ள திரைப்படங்கள் வரை நடித்து வந்தார்.
இங்கிலாந்து லண்டனில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சார்லி சாப்ளின் கடுமையான வறுமையில் தனது குழந்தை பருவ நாட்களை கழித்தார். ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் பிரிந்த நிலையில் அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கி சில்லறை வேலைகள் செய்தும் வந்துள்ளார். நாடகத்துறையில் பணியாற்றிய தனது பெற்றோர்களின் வழியில் சாப்ளினும் சிறு வயதிலே நாடகத்துறையில் தடம் பதித்து 1908ல் (19 வயதில்) அமெரிக்கா சென்றார். மேடை நாடகங்களில் வெற்றிகண்டு, பின்னர் சாப்ளின் அன்றைய புதிய தொழில்நுட்ப வரவான திரைத்துறைக்குள் காலடி பதித்தார்.
தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை மறந்திடாத சாப்ளின் ஏழ்மையின் வலிகளையும், தொழிலாளர்களின் உரிமைகளையும், முதலாளிகளின் சுரண்டலையும் தனது நகைச்சுவை நடிப்பில் வெளிப்படுத்தினார். தனது படைப்புகளில் பணக்கார முதலாளிகளை கடுமையாக சாடினாலும் சாப்ளின் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் காண்பவர்களை ரசிக்கும்படி செய்துவிடுவார்.
தொடர்ந்து ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவான நடிப்பை வெளிப்படுத்தி வந்த சார்லி சாப்ளின் மீது அமெரிக்க அரசுக்கு அச்சம் ஏற்பட்டது. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் அமெரிக்க அரசு அவர் மீது எப்.பி.ஐ கண்காணிப்பை முடுக்கிவிட்டது.
அமெரிக்காவில் கம்யூனிச சிந்தனைகள் வளருவதை கண்டு ஆளும் வர்கம் மிரட்சி அடைந்திருந்த காலம் அது.
ஹாலிவுட்டில் கம்யூனிசம்
1947 மார்ச் 21 அன்று அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் ஒரு அரசாணை வெளியிட்டார். அதில், “அமெரிக்க அரசு ஊழியர்கள் கம்யூனிச கட்சிக்காரர்கள், கருத்துக்களை ஆதரிப்பவர்கள், கம்யூனிச ஆட்சியை அமெரிக்காவில் நிறுவ நினைப்பவர்கள் யாரவது உள்ளனரா” என்று தணிக்கை செய்திட சட்டத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பின்னால் உள்ள நோக்கத்தை புரிந்துகொள்ள அன்றைய அரசியல் நிலவரத்தை சற்று தெரிந்து கொள்வது அவசியம்.
1917 ரஷிய புரட்சியை அடுத்து ரஷியாவில் பாட்டாளிகளின் சோசியலிச அரசு அமைந்துவிட்டது. அமெரிக்காவின் குடியரசு கட்சி பண்ணையார்களும் சனநாயக கட்சி முதலாளிகளும் ரஷியாவின் சோசியலிச அரசையும், ஐரோப்பா ஆசியாவில் சோசியலிச கருத்து விரிவாக்கத்தை கண்டு அஞ்சி நடுங்கிய காலம் அது.
அமெரிக்காவில், 1930 – 40களில் “சிவப்பு அச்சம்” என்று கம்யூனிசத்தை குறித்து பேசப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு சோசியலிச விரிவாக்கத்தை கட்டுப்படுத்திட நாஜி ஹிட்லருக்கு அமெரிக்கா பெருமளவில் உதவி செய்து வளர்த்துவிட்டு கொண்டிருந்தது. 1945ல் ரஷிய செம்படையின் வீரம் செறிந்த தாக்குதல்களால் நாஜி படை வீழ்த்தப்பட்டு இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வு செம்படை மீதான அச்சத்தை அமெரிக்காவிற்கு மேலும் வலுவாக்கியது.
இதற்கிடையே, 1929ல் அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து உருவான “தி கிரேட் டிப்ரஷன்” ( பெரும் மந்தநிலை) எனப்படும் நீடித்த பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட வறுமை, பசி பட்டினியில் அமெரிக்க மக்கள் சிக்கி உழன்றனர். இது, இம்மக்களிடம் முதலாளித்துவத்திற்கு எதிரான கம்யூனிச சிந்தனை வெகுவாக வளர்ந்திட காரணமாக அமைந்தது..
அமெரிக்க அரசியலில் மூன்றாம் அணியாக வளர்ந்து வரும் கம்யூனியிஸ்டுகளை ஒடுக்கிட “வலதுசாரி” குடியரசு கட்சியின் பண்ணையார்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். “அமெரிக்க கம்யூயுனிஸ்டுகள் புறவழியாக ஆட்சியை கைப்பற்றி அமெரிக்காவை ரஷியாவிடம் தாரைவார்க்கவுள்ளனர். கம்யூனிஸ்டுகள், அமெரிக்க தேசத்தின் எதிரிகள். ஆகையால், அவர்களை அடையாளம் கண்டு ஒழித்திட வேண்டும்” என்ற பிரச்சாரங்களை வலதுசாரிகள் வலுவாக பரப்பி வந்தனர்.
தொழில்புரட்சியின் காரணமாக உருவாகிய புதிய முதலாளிகள் தங்களை “நடுநிலையாளர்” சனநாயக கட்சியினராக நிறுத்திக்கொண்டனர். சோசியலிச கருத்து எதிர்காலத்தில் தங்களுக்கும் ஆபத்தாக முடியும் என்று இடதுசாரி கம்யூனிஸ்டுகளை வெறுத்து ஒதுக்கி வந்தனர். கம்யூனிஸ்டுகள் மீதான வலதுசாரி அவதூறு பிரச்சாரங்களை நடுநிலையாளர் என்ற போர்வையில் சனநாயக கட்சியினரும் மௌனமாக ஆதரித்தார்கள்.
இந்த சூழலில் தான் 1947ல் சனநாயக கட்சி அதிபர் ட்ரூமன் அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அரசாணையை வெளியிட்டார். அதிபரின் இந்த அரசாணையை தொடர்ந்து குடியரசு கட்சியை சார்ந்த செனட்டர் ஜோசப் மெக்கார்தி என்பவர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அரசு ஊழியர்கள், காவல்துறையினர், உளவுத்துறை, இராணுவத்துறை என்று கம்யூனிச சிந்தனை அல்லது ஆதரவு நிலை உள்ளவர்களை கண்டறிய விசாரணை மேற்கொண்டு வெளியேற்றப்பட்டார்கள்.
அமெரிக்காவை கம்யுனிஸ்டுகளிடம் இருந்து காப்பாற்றிட செனட்டர் மெக்கார்தி கடைபிடித்த கடுமையான விதிமுறைகள், கண்மூடித்தனமான அவதூறுகளை கொண்டு ஒட்டுமொத்த அமெரிக்கர்களை கதிகலங்க வைத்தார். ஆகையால், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இந்த அரசியல் நடவடிக்கை “மெக்கார்தியிசம்” என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது.
இந்த நெருக்கடிகள் அரசு துறைகளை கடந்து பொது சமூகத்திலும் ஊடுருவி பத்திரிகை துறை, கலைஇலக்கிய துறை, ஹாலிவுட் கலைஞர்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி ஆசிரியர்கள் என்று அனைத்து இடங்களிலும் கம்யூனிஸ்டு வெளியேற்றம் அமெரிக்கா முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றது.
1950 – 60களில் நடைபெற்ற இந்த கம்யூனிச கருத்தியல் அழித்தொழிப்பு அமெரிக்காவின் சோவியத்து யூனியன் உடனான பனிப்போருக்கு மக்கள் ஆதரவை திரட்ட ஏதுவாக அமைந்தது. இந்த பனிப்போர் அமெரிக்க சமூகத்தில் இருந்து கம்யூனிச சிந்தனைகளை முற்றிலும் துடைத்தெறிய உதவியது. சொல்லப்போனால், “கம்யூனிஸ்டு” என்றால் அமெரிக்க நாட்டின் எதிரி என்றளவிற்கு பொதுசமூகத்தில் எதிர் கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது.
அட்லாண்டிக்கின் மறுகரையில், ஹிட்லரின் நாஜி கட்சி தனது “யூத வெறுப்பு ஆரிய மேன்மைவாத, தீவிர வலதுசாரி தேசியவாத” கருத்துக்களை ஜெர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் பரப்பிட திரைப்படங்களை தயாரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாஜி கட்சியின் பிரச்சார தலைவர் ஜோசப் கோயபல்ஸ் நாள்தோறும் திரைப்படங்களை காண்பதும் இயக்குநர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களை நாஜி கட்சி வெளியிட்டது. அதில் மிக முக்கியமானது 1935ல் வெளியான “தி ட்ராயும்ப் ஆப் வில்” என்ற நாஜி பிரச்சார திரைப்படம். இத்திரைப்படம் ஐரோப்பா முழுவதும் வரவேற்பை பெற்றது.
ஜெர்மனி வணிகத்தை குறிவைத்து நாஜி அரசுக்கு ஆதரவான திரைப்படங்களை ஹாலிவுட்டும் தயாரித்து வழங்கின. அவை எந்த இடத்திலும் நாஜிக்களின் பேரினவாதத்தை எதிர்த்தோ, யூதர்கள் மீதான ஒடுக்குமுறைகளை கேள்வி எழுப்பிடவோ இல்லை. அதே நேரம் கம்யூனிஸ்டுகளை விரோதிகளாக காட்டி தயாரிக்கப்பட்டன.
தேங்கிப்போன அமெரிக்கர்கள்
1940கள் முதல் அமெரிக்க அரசு இடதுசாரிய கம்யூனிச சிந்தனைகளை ஒழித்திடும் நடவடிக்கையின் விளைவாக அடுத்து வந்த தலைமுறையைகளிடையே கம்யூனிச சிந்தனை முற்றிலும் நீக்கம்பெற்றது. 1920கள் முதலே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதற்கு எதிரராக சில கம்யூனிச சிந்தனை படைப்புகளும் வெளியாகின. ஆனால், 1947ல் வந்த அரசாணைக்கு பிறகு கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்டும் “மெக்கார்தியிசம்” தீவிரமடைந்து ஹாலிவுட்டில் இருந்து கம்யூனிச சிந்தனையாளர்கள் முழுவதும் புறக்கணிக்கப்பட்டனர்.
சோவியத் உடைந்த பிறகும் 1990களில் ஹாலிவுட் திரைப்படங்கள் பெருவாரியாக கம்யூனிஸ்டுகளை மனித குல விரோதிகளாக சித்திரப்பதை நிறுத்திடவில்லை. அன்றைய “ஜேம்ஸ் பாண்டு” படங்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள உருவாக்கப்பட்டவையே! மேலும், தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்த சோவியத்துடன் போட்டியிட முடியாத மேற்குலக நாடுகள் தங்களிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இருப்பதாக “ஜேம்ஸ் பாண்டு”, “ஸ்டார் வார்ஸ்” போன்ற திரைப்படங்கள் மூலம் உலக நாடுகளிடையே பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
ஹாலிவுட் ஆங்கில படங்களின் கவர்ச்சியில் மயங்கிய சர்வதேச சமூகம் இந்த திரைப்படங்களில் வரும் தொழில்நுட்பங்கள் உண்மையென நம்பி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உளமார ஏற்றுக்கொண்டன. இன்றுவரை அமெரிக்கா தனது சர்வதேச மேலாதிக்கத்தை ஹாலிவுட் திரைப்படங்கள் மூலமாக வெகுமக்களின் சிந்தனையில் நிலைநாட்டி வருகின்றது.
வெள்ளை பேரினவாதம், முதலாளித்துவ சுரண்டல், தனியார் வணிக லாப நோக்கில் இயங்கிடும் மக்களின் அடிப்படை தேவைகள் என்று அமெரிக்க சமூகம் முதலாளித்துவத்தின் சீரழிவுகளுக்கான சரியான எடுத்துக்காட்டு. பெரும்பான்மை அமெரிக்கர்கள் தங்கள் உயர்கல்வி, மருத்துவ சேவைகளை பெற்றிட வாழ்நாள் கடனாளிகளாக மாற்றப்படுகின்றனர். மாணவர் கடன் பெற்று கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை கடன் அடைப்பதிலேயே கழிக்கின்றனர். மேலும், மருத்துவ செலவிற்காக தங்கள் வீடு, உடைமைகளை எல்லாம் இழக்கும் அவலநிலையில் வாழ்கிறார்கள். இதன் காரணமாக, எளிய நடுத்தர குடும்ப அமெரிக்கர்கள் உயர்கல்வி படிப்பது, மருத்துவ சிகிச்சை பெறுவது போன்றவற்றை பெரும்பாலும் தவிர்த்துவிடுகின்றனர்.
தொழில் சட்டங்கள் அனைத்துமே முதலாளிகளின் லாப குவியலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒப்பந்த பணியில் அமர்த்தப்படுவதால் உழைப்பு சுரண்டலுக்கு ஏதுவாக உள்ளது. அமெரிக்கா பணக்கார நாடாக நமக்கு தென்பட்டாலும் பெரும்பான்மை அமெரிக்கர்கள் சாதாரன பொருளாதார சூழலிலே வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் பொருளாதார சமமின்மை மிக மோசமாக உள்ளது.
அமெரிக்காவின் 5% பணக்காரர்கள் நாட்டின் 67% சொத்துக்களை வைத்துள்ளனர். அமெரிக்காவின் 75% கடன்களை அந்நாட்டின் ஏழை எளிய நடுத்தர மக்கள் சுமந்து வாழ்கின்றனர். வெறும் மூன்று அமெரிக்கர்களிடம் அந்நாட்டின் 50% ஏழை மக்களைவிட அதிக சொத்து குவிந்துள்ளது. 2019 தகவல் படி சுமார் 3.4 கோடி (11%) அமெரிக்கர்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்கர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள அவர்கள் சிந்தனை பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் “உயர்கல்வி, மருத்துவம், போக்குவரத்து” போன்ற கொள்கை திட்டங்களை சராசரி அமெரிக்கர் “அவை மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் தவறான கொள்கை” என்றே இன்றும் எதிர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பெரும்பான்மை சமூகமும் இன்றுவரை முதலாளித்துவத்திலேயே “தேங்கி” போயுள்ளது.
சாப்ளினுக்கு தடை
ஒருமுறை, சாப்ளின் தனது ஐரோப்பிய பயணத்தின் போது “ஏழைகள் தங்கள் பிரச்சனைக்கான தீர்வை தேசிய வாதத்திலும், ஆரிய பேரினவாதத்திலும் அடைய முடியும் என்று பாசிசம் நம்ப வைத்துள்ளதை” கண்டு அதிர்ந்து போனார். நாஜிக்களின் பிரச்சார திரைப்படங்களின் தாக்கத்தை நன்கு உணர்ந்த சாப்ளின் பாசிசத்திற்கு எதிராக “தி கிரேட் டிக்டேட்டர்” என்கிற படத்தை தயாரித்து நடித்தார்.
இவரது படைப்புகளில் மிக முக்கியமானதாக 1940ல் வெளியாகிய “தி கிரேட் டிக்டேட்டர்” திரைப்படம் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் மூண்ட வேளையில் ஹிட்லரின் பாசிசத்திற்கு எதிராக இந்த திரைப்படம் சாப்ளின் சொந்தமாக தயாரித்தார். ஹிட்லரை கேலி செய்து நடித்து, பாசிசத்தின் கொடூரத்தையும், ஏழை மக்களை அது ஏமாற்றிடும் முறைகளையும் நக்கல் நையாண்டி தனம் கலந்து சாப்ளின் நடித்திருப்பார்.
இத்திரைப்படத்தின் நிறைவு பகுதியில் சர்வாதிகாரத்திற்கு எதிராக சார்லி சாப்ளின் ஆற்றிய நெகிழ்ச்சியான உரை திரையுலக வரலாற்றில் சிறப்புமிக்க ஒன்றாகும்.
பாசிசத்தையும், வலதுசாரி தேசியவாதத்தையும் “இயந்திர மனிதன், இயந்திர மூளை, இயந்திர இதயம்” கொண்ட மனிதர்களின் பிதற்றல் என்று சாடினார். சமூகத்தின் இன்றைய தேவை “அன்பு, மனிதம், சகோதரத்துவம்” என்று உரையாற்றி இருப்பார்.
“நான் கம்யூனிஸ்டு அல்ல. ஆனால், நான் கம்யூனிஸ்டு ஆதரவாளர். அவர்கள் ஆட்சியமைக்க தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளுடன் முரண்படுகிறேன்.” என்று சாப்ளின் கம்யூனிசத்தை குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பிறகும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான வேட்டையை அமெரிக்கா கைவிடவில்லை.
அமெரிக்கா முழுவதும் இடதுசாரி சிந்தனையுடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் குறிவைத்து தனிமைப்படுத்தப்பட்டனர். தாங்கள் கம்யூனிச சிந்தனைகளை கைவிட்டதாக ஒப்புக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஆனால், தங்கள் அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த 10 பிரபலங்கள் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவித்தனர். இதில், அமெரிக்காவில் புகழ் பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அடங்குவார்கள்.
இப்படியாக சிறைப்பட்ட கலைஞர்களுக்கு வழக்கு செலவுகளை சார்லி சாப்ளின் ஏற்று நடத்தினார். இதன் காரணமாக, பிரிட்டன் குடிமகனான சார்லி சாப்ளின் தனது நாட்டினுள் நுழைந்திட அமெரிக்க அரசு 1952ல் தடை விதித்தது.
அமெரிக்க சமூகத்தில் “கம்யூனிச நீக்கம்” வரலாறை புரிந்துகொண்டால் மோடியின் இந்துத்துவ அரசு தனது சட்டதிருத்தங்கள் மூலம் இந்திய சமூகத்தில் நிகழ்த்திட விழையும் அடிப்படை மாற்றங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி, “தலைமுறைகளை மாற்றிடும் சினிமா” என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது.