நாடற்ற ஏதிலிகளின் ஒலிம்பிக் கனவு

நாடற்ற ஏதிலிகளின் ஒலிம்பிக் கனவு

ஏஜியன் கடலின் உறைய வைக்கும் குளிர். துருக்கி நாட்டிலிருந்து கிரீஸ் நோக்கி வந்துகொண்டிருந்த படகின் இயந்திரம் பழுதாகி நின்றது. ஆறேழு பேர் மட்டுமே செல்லமுடிந்த அந்த படகில் இருந்த 20 பேரும் சற்றே திகைத்துப் போயிருந்தனர். அந்தத் தருணத்தில் தன் தங்கை சாராவுடன் கடலில் குதித்த மார்தினி, அந்தப் படகை கிரீஸ் நாட்டின் லெஸ்போவின் கரையை நோக்கித் தள்ளிக் கொண்டே நீந்திச் சென்றார். மூழ்கும் நிலையிலிருந்த படகை மூன்று மணி நேரத்திற்கும் மேல், மிரட்டிக் கொண்டிருந்த கடலலைகளிடம் போராடி கரை சேர்த்தவர் தான் யுஸ்ரா மார்தினி (Yusra Mardini).

தனது 3 வயதிலேயே நீச்சல் பயிற்றுனரான தந்தை எஸ்ஸாட்டிடமிருந்து நீச்சல் பயின்ற மார்தினியின் கனவு முழுவதும் நீச்சலிலேயே அமைந்திருந்தது. 2012 FINA நீச்சல் உலகப் போட்டியில் தனது தாய்நாடான சிரியாவின் சார்பில் கலந்து கொண்டபோது அதுவே தனது தாய்நாட்டிற்காக விளையாடப்போகும் முதலும் கடைசியுமான நிகழ்வு என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.

ஆம், 2011-இல் தொடங்கிய பஷர் – அல்-அசாத் தலைமையிலான சிரிய பாத் அரசை (Ba’ath Syrian Regional Branch) எதிர்த்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் குழுக்களால் நடத்தப்பட்டுவரும் உள்நாட்டுப் போரே அதற்கான காரணம். அப்படியான ஒரு குழுவான ISIL (Islamic State of Iraq and Levant) குழுவை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அமெரிக்காவின் தலைமையிலான பன்னாட்டுக் கூட்டமைப்பு 2014-இல் சிரியப் போரில் நுழைந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ஆனால், ISIL படைகளுக்கெதிராக மட்டுமின்றி, சிரிய அரசான அசாத்தின் படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியது. இது மேலும், 2015-இல் ரஷ்யா, இரான் மற்றும் லெபனானின் ஹெஸ்பொல்லா குழு ஆகியோரை அல்-அசாத்திற்கு ஆதரவாக சிரியப் போரில் குதிக்க வைத்தது. இதன் விளைவாக 2015-இல் மட்டும் நாடற்றவர்களான சிரிய ஏதிலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 இலட்சம் பேர். அதிர் ஒருவர்தான் இந்த யுஸ்ரா மார்தினி.

யுஸ்ரா மார்தினி

சிரிய உள்நாட்டுப் போரில் தங்கள் வீட்டை இழந்த யுஸ்ராவும் சாராவும் ஆகத்து 2015-இல் சிரியாவிலிருந்து லெபனான் சென்றவர்கள், அங்கிருந்து துருக்கியை அடைந்தனர். துருக்கியிலிருந்து க்ரீஸிற்கு சாகசப் பயணம் மேற்கொண்டு, கடைசியாக செப்டம்பர் திங்கள் 2015, ஜெர்மனியின் பெர்லின் நகரில் தஞ்சமடைந்தனர். இப்பயணத்தைக் குறித்து மார்தினி கூறும்போது, “நான் அணிந்திருந்த செருப்பு உட்பட எனது உடமைகள் அனைத்தையும் அந்த பயணத்தில் இழந்தேன். ஆனால் என் கனவுகளை அல்ல! போர் முடிந்து எனது தாய் நாட்டிற்கு நான் திரும்பும்போது அனுபவங்களுடன் செல்ல விரும்புகிறேன்.”  என்றார். ஜெர்மனியை அடைந்தவர் இச்சம்பவத்தின் பேரதிர்ச்சியால் துவண்டுவிடாமல், ஒலிம்பிக் கனவுடன் நீச்சல் பயிற்சியை தொடர்ந்தார்.

மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்திய வெறிக்கு உலகின் பல நாடுகளை சேர்ந்த தனித்திறமை வாய்ந்த நபர்கள் நாடற்ற ஏதிலிகளாக மாற்றப்பட்ட வேளையில், 2016 ரியோ (பிரேசில்) ஒலிம்பிக்கிற்கு ஏதிலிகளுக்கான தனி அணி உருவாக்கப்படுவதாக ஒலிம்பிக் சம்மேளனம் 2015 அக்டோபரில் அறிவித்தது. எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் காங்கோ நாடுகளிலிருந்து ஏதிலிகளாக வெளியேறிய 10 பேர் கொண்ட அணி, பிற நாடுகளை சேர்ந்த 11,000 பேருடன் கலந்துகொண்டது.

ஜூன் 2016 ஏதிலிகள் ஒலிம்பிக் குழுவின் (Refugee Olympic Team) பத்து பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் யுஸ்ரா மார்தினி. சிரிய ஏதிலிகளான யுஸ்ரா மார்தினி மற்றும் ரமி அனீஸ் நீச்சலிலும், தெற்கு சூடான் ஏதிலிகளான ஏஞ்சலினா லொதாவித், ரோஸ் லோகன்யன், ஜேம்ஸ் சீன்ஞ்ஜெய்க், பவுலோ லோகரா, யீஸ் பியல் மற்றும் எத்தியோப்பிவின் ஏதிலியான யோனஸ் கின்டே ஆகியோர் தடகளத்திலும், காங்கோ மக்களாட்சிக் குடியரசின் ஏதிலிகளான பொபோல் மிசெங்கா மற்றும் யோலண்டே மபிகா ஜீடோவிலும் ஏதிலிகள் ஒலிம்பிக் குழுவின் சார்பில் கலந்துகொள்ள தேர்வானவர்கள். மேற்கண்ட பத்து பேரின் கதைகளும் மார்தினியின் கதையை ஒத்தவையே. பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடந்த 2016 ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் நால்வரை வீழ்த்தி வென்ற யுஸ்ரா மார்தினியை உலகம் அன்று திரும்பிப் பார்க்காமல் இல்லை.

முதன்முறையாக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற 10 பேர் கொண்ட ஏதிலிகள் அணி

இவ்வாண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் 2020-இல் கலந்துகொள்ளும் 29 பேர் கொண்ட ஏதிலிகளின் ஒலிம்பிக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார் மார்தினி. இவர் ஜெர்மனியின் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதால் இதுவே அவரது கடைசி ஒலிம்பிக்காக இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான அமைப்பாகிய ‘ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR)’ யுஸ்ரா மார்தினியை தனது தூதராக அறிவித்துள்ளது. நாடற்றவர்களின் வாழ்க்கைக்காக தனது வாழ்க்கையை வாழ விரும்பும் மார்தினி, பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளார்.

பல்வேறு நாடுகள் பல கோடிகள் செலவு செய்து தங்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வருகிறது. ஏனெனில், அவர்களுக்கு இது தங்கள் நாட்டின் கௌரவப் பிரச்சனை. ஆனால், மார்தினி போன்ற ஏதிலிகளுக்கு இது தங்கள் இருப்பினை உலகிற்கு பறைசாற்றும் போராட்டம். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் பன்னாட்டு அரங்கிற்கு யுஸ்ரா மார்தினி சொல்ல விழைவது, “இன்னும் பலர் அங்கே இறந்து கொண்டிருக்கின்றனர், மட்டுமன்றி இன்னும் உலகில் பல ஏதிலிகள் வரவேற்கப்படாதவர்களாகவே உள்ளனர்.”

இந்தியாவில் ஏதிலிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் இதற்கொரு சான்றாதாரம். மணிப்பூரின் மகள் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கத்தை வாங்கித் தந்ததை எண்ணி பூரிப்படையும் இந்தியா, தனது அண்டை நாடான ஈழத்து ஏதிலிகளை என்று சக மனிதராக மதிக்க போகின்றது? உலகளவில் இப்படி அரசுகளால் ஏதிலிகளாக ஆக்கப்பட்டவர்களுக்கென்று ஐநா 1951 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் சட்டங்களை வரையறுத்தது. அதில் இந்தியா இன்று வரை கையெழுத்திடவில்லை. இதனால் இந்தியாவில் குடியேறியவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்ற வகைப்பாட்டில் கொண்டுவந்து தனது அரசியலுக்கு உகந்தவர்களை சிறப்பாக நடத்துவதும், இல்லையென்றால் கீழாக நடத்துவதுமான இரட்டை நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது.

அதன்படி தான் தனது பிராந்திய எதிரியான சீனாவை மிரட்டுவதற்காக திபெத் ஏதிலிகளுக்கு எலலாவித சலுகைகளும் கொடுக்கப்பட்டு இந்தியாவில் வாழவைக்கப்படுகிறார்கள். ஆனால் ஈழத்தமிர்களையும் மியான்மரிலிருந்து வரும் ரோக்கிங்கியா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின ஏதிலிகளை ஏதிலிமுகாமில் அடைப்பதும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிசெய்யாமல் இருப்பதும், கல்வி உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் கிடைக்காதபடி செய்திருக்கிறது.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஏதிலி அணியினர்

இதில் உச்சம் தான் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில், பாகிஸ்தான் பாங்களேதேஷ் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து இங்கு வாழும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை கிடையாது என்றும், அவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது, மீறி இருந்தால் சட்டவிரோத குடியேறிகள் என்று வரையறுக்கப்பட்டு நாடுமுழுவதும் கட்டப்படும் சிறப்பு முகாமில் அடைக்கப்படுவார்களென்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஒரு சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. மேலும் இதிலுள்ள பல்வேறு சரத்துகளால் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் சட்டவிரோத குடியேறிகளாக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதை எதிர்த்து இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள், தேசிய இனங்களை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர்.

இப்படி ஏதிலிகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சூழலில் நாடற்றவர்களின் என்ற வரிசையில் ஒலிம்பிக் போன்ற போட்டியில் ஏதிலிகள் கலந்துகொள்வதும், அதில் பரிசுபெறுவதும், ஏதிலிகள் மீதான இரக்கமில்லாத அரசுகளின் மனதை உருக்கட்டும்.

நாடற்ற ஏதிலிகளுக்கு அங்கீகாரமும், பாதுகாப்பும் அளிக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகத்திற்கு இருந்தாலும், மேற்குலக நாடுகளின் எதேச்சாதிகார போக்கினால் ஏற்படும் போர்சூழல் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி நாடற்றவர்களாக மாறுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். 2016 ரியோ ஒலிம்பிக்கில் 10 பேருடன் பங்கேற்ற அணி, இன்று 29 பேராக டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல், அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்து, ஏதிலிகளற்ற சூழலை சர்வதேச சமூகம் உருவாக்கப்படுவதன் மூலம் ஏதிலிகளுக்கான ஒலிம்பிக் அணி கலைக்கப்பட வேண்டும் என்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »