காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்
காலநிலை செயல்பாட்டில் மனிதர்களின் தலையீட்டால் நிகழ்கின்ற காலநிலை மாற்றம் என்பது இயற்கை வளங்களை சுரண்டுவதனாலேயே ஏற்படுகின்றது. உலக வல்லரசு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகள் இதுபோன்ற செயற்கை பேரிடரை தடுத்து நிறுத்தி தொலைநோக்கு பார்வையுடன் செயல்திட்டங்கள் வகுக்காமல் “உலகமயமாக்கல்” என்ற பெயரில் கார்ப்பரேட் இலாபத்திற்காக இயற்கை வளங்களையும், ஏழை எளிய மக்களையும் பாதுகாக்க தவறுகிறது. இந்திய ஒன்றியத்தில் நிலவும் சாதி, மத பாகுபாடு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இடையே காலநிலை மாற்றத்தால் விளிம்பு நிலை மக்களும் பூர்வக்குடி மக்களும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதே உண்மை.
வாழ்விட இழப்பு:
ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள வனவிலங்குகள், தாவரங்கள், மண், நீர்வளம் ஆகிய வளங்களை ஆட்படுத்தி “வளர்ச்சி” என்ற பெயரில் நகரமயமாக்கல், தொழிற்சாலை உருவாக்குதல் ஆகிய மனித செயல்பாடுகளால், மனிதர் அல்லாத பிற உயிரினங்களின் வாழிடத்தை அழிப்புக்குள்ளாக்குவதே வாழ்விட இழப்பு. இத்தகைய கார்ப்பரேட் இலாபத்திற்காக வளங்கள் சுரண்டப்படுவதால் விளிம்பு நிலை மக்களும், பூர்வக்குடி மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள்.
வறட்சி மற்றும் வெள்ளம்:
IPCC ன் அறிக்கையின்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை காட்டுத்தீ, வெப்ப அலை, வறட்சி ஆகியவற்றால் கிட்டத்தட்ட 14% மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தில் 2020-ல் 48%-க்கும் மேல் வெப்பநிலை அதிகரித்து சுமார் ஒரு கோடி மக்கள் ஒரு மாத காலம் தண்ணீர் பற்றாக்குறையால் அவதியுற்றனர். வறட்சி ஒரு பக்கம் ஏற்பட்டாலும் அதீத கனமழையும் பொழிந்தது. இதனால் குறிப்பாக இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் பாதிப்படைந்தது.
வெள்ளத்தினால் மணிப்பூர், மிசோரம், மேகாலயா ஆகிய பகுதிகளில், குறிப்பாக 2018 வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு 28% முதல் 38 % வரை நிலங்கள் சீரழிந்துள்ளன். அதீத கனமழை பொழிந்ததால் மண்ணில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற உலோகத் தாதுக்கள் அழிந்து ஹைட்ரஜன் அயனி மட்டுமே எஞ்சிய நிலையில் மண்ணில் அமிலத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது. ISRO அறிக்கையின் படி, குறிப்பாக நாகலாந்தில் 7.5 இலட்சம் ஹெக்டேர் நிலம் அமிலத்தன்மை கொண்டதாக மாறியது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவு தான் வறட்சியும் வெள்ளமும்.
விளிம்பு நிலையில் விவசாயிகள்:
இந்திய ஒன்றியத்தில் 60% விவசாயம் மழைநீரை சார்ந்து நடைபெறுகிறது. கங்கை , பிரம்மபுத்திரா ஆகிய பகுதிகளில் அதிக வளம் கொண்ட வண்டல் மண் சுரண்டப்படுகிறது. இதேபோன்று அசாமில் வண்டல் மண் சூறையாடப்படுவதால் நெல் உற்பத்தி குறைந்தது. அசாமில் சமீபத்தில் நடந்த ஆய்வில் 88% தேயிலை தோட்ட மேலாலாளர்கள் மற்றும் 97% தேயிலை தோட்ட சிறுதொழிலாளர்கள் மிகவும் நம்பியிருக்கும் தேயிலை உற்பத்தியில் கால நிலை மாற்றம் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடினர். அப்போது எடப்பாடி அரசு மற்றும் ஒன்றிய அரசின் காதுகளுக்கு விவசாயிகள் குரல் கேட்கவில்லை. இந்திய ஒன்றியம் முழுவதும் சிறுகுறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்ற அச்சுறுத்தலாலும் முதலீடு செய்ய இயலாத நிலையில், இலாபகரமான பயிர்களிலிருந்து குறைவான இலாப பயிர்கள் உற்பத்தி செய்ய பெரும்பாலானோர் விவசாயம் செய்தனர். இதனால் ஒரே வகையான பயிர்கள் அதீத உற்பத்தியால், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கி பதுக்கி வைத்து அதீத விலைக்கு விற்றனர் .
மண் அரிப்பு, அசாதாரண வானிலை, வறட்சி, வெள்ளம் ஆகிய காரணிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு எந்த ஒரு வழிவகையோ செயல் திட்டமோ ஏற்படுத்தவில்லை. மாறாக விவசாயிகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டி கார்ப்பரேட் இலாபத்திற்காக விவசாய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு.
கடற்கரை பகுதியில் ஏற்படும் பேரழிவு:
IPCC-ன் அறிக்கையின்படி உலகளவில் மற்ற கடற்பகுதியை விட ஆசியாவை சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனை NASA-வும் காட்சிப்படுத்தியுள்ளது. IPCC அறிக்கையில் கடல் மட்டம் 1901 முதல் 2018 வரை 0.20 மீ வரை உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 2020-ல் உள்ள நிலவரப்படி, 2040-ல் மும்பை 0.4 மீ லிருந்து 0.12 மீ ஆகவும், சென்னை 0.3 மீ-லிருந்து 0.10 ஆகவும் கொச்சி 0.6 மீ-லிருந்து 0.15 மீ ஆக உயரும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது. கடல் மட்டம் உயர்வால் கடற்கரை பகுதியில் உள்ள எளிய மக்கள் வாழ்வாதாரம் இழக்கும் அபாயமும் உள்ளது.
இச்சூழலில் தான் சாகர் மாலா போன்ற காலநிலை மாற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தும் நாசகார திட்டத்தை ஒன்றிய அரசு வகுக்கிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்திய ஒன்றியத்தில் பேரழிவை ஏற்படுத்தும். அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை இப்பகுதியில் நாம் அனுமதிக்கும் பட்சத்தில் மீனவ மக்களின் வாழ்வாதாரம் இழக்கும் அபாயமும், இயற்கை சுரண்டல்களால் பேரழிவும் ஏற்படும்.
இடப்பெயர்வுகள்:
Climatic Action Network South Asia (CANSA) and Action Aid International ஆகிய அமைப்புகள் தனது ஆய்வு அறிக்கையில் 2050-ல் உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஆசியா கண்டத்தில் தான் சுமார் 62 இலட்சம் மக்கள் கடல் மட்டம் உயர்வு, அசாதாரண காலநிலையால் ஏற்படும் விவசாய உற்பத்தியின்மை, வாழ்விட இழப்பு, வெள்ளம், வறட்சி ஆகிய காலநிலை மாற்றத்தால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இடப்பெயரப்படுவர் என்று எச்சரித்துள்ளது. உலக வங்கியின் Groundswell அறிக்கையில் ஆப்ரிக்கா, தெற்காசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெருமளவு உள்நாட்டில் இடம்பெயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பொது மக்களை அகதிகளாகக் கருதி பாதுக்கும் பொருட்டு ஐ.நா சபை UNHCR என்ற அமைப்பை உருவாக்கியது. இவ்வமைப்பின் கீழ் உள்ள மக்களில் பல இலட்சக்கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர் காரணமாக இடப்பெயர்ந்தனர். UNHCR அமைப்பு அவர்களை அகதி என்ற நிலையை இழந்துவிட்டதாக இன்று வரை “Climatic Migration”என்று கருதுவதால் வீடற்றவர்களாக இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம்:
டிசம்பர் 2019-ல் சீனாவில் உருவான கொரோனா தொற்று இன்று வரை உலகளவில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதைவிட மிகவும் அதிக அச்சுறுத்தலை காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா போன்ற சமூக வளர்ச்சியற்ற, ஏற்றத்தாழ்வு உள்ள நாடுகளில் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் ஏழை எளிய மக்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. கார்ப்பரேட் முதலாளித்துவ கொள்கை உடைய அரசு தனியாரின் இலபவெறிக்காக பொது மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும். ஆம், கொரோனா பேரிடர் காலத்தில் தான் அம்பானியின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதானி ஆசியாவில் இரண்டாவது இடத்திற்கு பணக்காரப் பட்டியலில் முன்னேறியுள்ளார்.வெள்ளப் பெருக்கின் போதும் பூர்வக்குடிகளே வெளியேற்றம் செய்யப்படுகின்றனர். நீர்நிலைகளையும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் கல்லூரிகளோ, தனியார் மருத்துவமனைகளோ, ஹோட்டல்களோ, வணிக வளாகங்களோ அரசால் கார்ப்பரேட் முதலாளிகளை வெளியேற்ற இயலவில்லை.
இந்தியாவில், கிட்டத்தட்ட 75 சதவிகித தொழிலாளர்கள் வெப்பம் தொடர்பான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 2030-ல் பகல்நேரத்தில் வேலை நேரத்தின் சராசரி இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5% முதல் 4.5% வரை ஆண்டுதோறும் குறையும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தவறும் பட்சத்தில் 2100-ல் 3° செல்சியஸ் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனால் இந்திய ஒன்றியத்தின் GDP 10% மேல் வரை குறைய வாய்ப்புள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மேலும் தற்போது உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது மட்டும் தான் ஒரே தீர்வு.